Aug 9, 2017

நாங்க லஞ்சம் வாங்கறதில்லைங்க

ஒரு காலத்தில் சிறப்பான அரசுக் கல்லூரி. இன்றைக்கும் பெரும்பாலும் அதே பேராசிரியர்கள்தான். அதே வசதிகள் இருக்கின்றன. ஆனால் வேலை வாய்ப்பு மட்டும் அடிவாங்கியிருக்கிறது. சமீபகாலமாக தமிழகத்தில் இப்படி வலு குன்றிய கல்லூரிகள் ஏகப்பட்டவை இருக்கின்றன. பொறியியல், கலை, அறிவியல் என்று கலவை.

எனக்குத் தெரிந்த ஒரு கிராமப்புற கலை அறிவியல் கல்லூரியில் எம்.சி.ஏ பாடப்பிரிவு இருக்கிறது. வருடாவருடம் நாற்பது அல்லது ஐம்பது பேர்கள் படித்து முடிக்கிறார்கள். ஏதேனும் நிறுவனங்களில் பேசி அந்தக் கல்லூரிக்கு வளாகத் தேர்வு (Campus Interview)க்கு அழைத்துச் செல்ல முடியுமா என வருடத் தொடக்கத்திலிருந்து தெரிந்த வழிகளில் எல்லாம் முயன்று கொண்டிருக்கிறேன். இரண்டு பேர்களை வேலைக்கு எடுத்தாலும் கூட அடுத்தடுத்த மாணவர்களுக்கு பெரும் உத்வேகமாக இருக்குமல்லவா? ம்ஹூம். அப்படியான முயற்சியின் போதுதான் கட்டுரையின் முதல் வரியைத் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேர்ந்தது. 

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வைஸ் பிரெசிடெண்ட்டிடம் பேசுகிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ‘நல்ல காலேஜ் சார்..வேலைக்கு எடுக்கல்லைன்னாலும் பரவாயில்லை..ஒரு தடவை இண்டர்வியூக்கு போகச் சொல்லுங்க...பசங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றேன். இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் இலாபம் எதுவுமில்லை. தமிழ்நாடு முழுக்கவும் பரவலாகவே நிறைய நல்ல கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு கல்லூரிகளுக்காவது இப்படியான தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்கிற முயற்சிதான். பெங்களூரிலேயே இருப்பதால் சட்டென்று நிறுவனத்திற்கே நேரடியாகச் சென்று பேசி விட முடிகிறது.

அப்படித்தான் அந்த வைஸ் பிரெசிடெண்ட்டைப் பார்க்கச் சென்றிருந்தேன். ‘நமக்குள்ளேயே இருக்கட்டும்..சிஸ்டம் ரொம்ப கரப்டட் ஆகிக் கிடக்கு’ என்றார். ரஜினி மாதிரியே பேசினார். இத்தனைக்கும் அது தனியார் நிறுவனம்தான். அவர் நினைத்தால் களையெடுத்துவிட முடியும். ஆனால் அவரே ஏன் அப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. ஒரு கல்லூரியிலிருந்து ‘இவ்வளவு ஆட்களை எடுக்க இவ்வளவு ரேட்’ என்று பேசிக் கொள்கிறார்கள். தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரைக்கும் ‘ரேட்’ என்பது பிரச்சினை இல்லை. இரண்டு மாணவர்களின் பணத்தை விட்டெறிந்தால் இருபது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட முடிகிறது. ஏதாவதொரு வகையில் வளைத்து வருடத் தொடக்கத்தில் ‘எங்கள் கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூ வந்த நிறுவனங்கள்’ என்று கொட்டை எழுத்தில் பதாகைகளை வைக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.

உளவுத்துறையிலும் காவல்துறையிலும் ரகசிய நிதி என்று ஒன்றை வைத்திருப்பார்களாம். அந்தப் பணத்துக்கு கணக்கு வழக்கு கிடையாது. அவர்களின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வார்கள். தனியார் கல்வி நிறுவனங்களிலும் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். வளாக நேர்முகத் தேர்வை நடத்துவதற்காக வந்து போகிறவர்களின் சொகுசிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. ‘கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவதற்காக இத்தனை லட்சம் ஒதுக்கினோம்’ என்றால் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் அரசுக் கல்லூரிகளால் பல நிறுவனங்களை ஈர்க்க முடிவதில்லை. இப்படியே வருடந்தோறும் வேலை கிடைக்காமல் கல்லூரியில் தேங்குகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

சமீபத்தில் ஓர் அரசு உதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியின் ப்ளேஸ்மெண்ட் அலுவலர் அழைத்திருந்தார். அவ்வப்பொழுது பேசிக் கொள்வோம். வேலைச் சந்தை, சந்தையில் என்ன மாதிரியான தேவைகள் இருக்கின்றன போன்றவைதான் உரையாடலில் முக்கியமாக இருக்கும். அந்தக் கல்லூரியில் நாற்பது எம்.சி.ஏ மாணவர்கள் இருக்கிறார்கள். விபியிடம் பேசிவிட்டு வந்தது குறித்துச் சொல்லிவிட்டு ‘பணம் இருந்தால்தான் நகர்த்த முடியும் போலிருக்கு சார்’ என்றேன். அவர் சற்றே விழிப்படைந்திருக்கிறார். ‘ஒவ்வொரு மாணவரிடமும் ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறோம்’ என்றார். மொத்தம் நாற்பதாயிரம் ரூபாய். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். நான் எதுவும் சொல்லவில்லை. முகம் வாடிவிடக் கூடும். நேரில் பார்த்தால் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

பச்சையான ஊழல் இது. ஆனால் என்ன செய்ய முடியும்? யாராலும் கேள்வி கேட்க முடியாது. 

‘அந்தக் கல்லூரியில்தான் நாங்கள் எதிர்பார்க்கிற தரம் இருக்கிறது என்று அவர்கள் சொன்னால் நம்மால் வேறு என்ன பேச முடியும்? அரசுக் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இடம் கிடைத்தால் கட்டணம் குறைவு என்று மாணவர்கள் செல்கிறார்கள். அங்கே இப்படி அடி வாங்குகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி மாதிரியான முதல்நிலைக் கல்லூரிகள் தப்பித்துவிடுகின்றன. அடுத்த நிலையில் வரக் கூடிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடு திண்டாட்டம்தான். பேராசிரியர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றாம் தேதியானால் வங்கிக் கணக்கில் விழுந்துவிடும். மாணவர்கள்தான் பாவம்.

தனியார் நிறுவனங்களில் ஊழலே இல்லை என்று யாராவது கொடி பிடித்துக் கொண்டு வருவார்கள். இதற்கு என்ன பெயர்? 

அயோக்கியத்தனம்.

அரசு நிறுவனங்களில் யாராவது சம்பளத்தைத் தாண்டி கிம்பளமாக வாங்கினால் போட்டுக் கொடுக்கலாம். ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய தண்டல்காரர் கைது என்று தினத்தந்தியில் செய்தி வரும். தனியார் நிறுவனங்கள் செய்கிற ஊழல்கள் வெளியிலேயே தெரிவதில்லை. கல்வி நிறுவன முதலாளிகள் லட்சங்களில் வாங்கி கோடிகளில் லஞ்சமாகக் கொடுத்து சொத்து மீது சொத்தாகச் சேர்த்துக் கொண்டிருக்க அதில் ஒரு பகுதியைத் தயக்கமேயில்லாமல் இத்தகைய பன்னாட்டு நிறுவன எச்சில் பொறுக்கிகளுக்கு வீசுகிறார்கள். அதை வாங்கிக் கொண்டு அரசுக் கல்லூரிகளையும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் யோசனையே இல்லாமல் தவிர்க்கிறார்கள்.

பெரும் நிறுவனங்களை விட்டுவிடலாம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதையாவது பிடிக்கலாம் என்று பார்த்தால் இதுவரை ஒன்றும் சிக்கியபாடில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல கல்வித்தரம் மட்டுமே இங்கு பிரச்சினையில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொரு அடுக்கிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. வல்லவன் மட்டும் வென்று கொண்டேயிருக்கிறான். வழியில்லாதவன் வீழ்ந்து கொண்டேயிருக்கிறான். 

4 எதிர் சப்தங்கள்:

Alad said...

This is a old problem.
Mostly all the top colleges doing this.
This is also reason for the fall of Indian IT firms.
No quality employees, No quality works
No overseas order as in 2000s
It is India...

Anonymous said...

// அரசுக் கல்லூரிகளையும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் யோசனையே இல்லாமல் தவிர்க்கிறார்கள். // இன்னொரு பக்கமும் இருக்கிறது ( ஊழல் வாதிகளை நியாயப்படுத்தாத வகையில் )
நல்ல மதிப்பெண்கள் என்ற தகுதி அரசு /அரசு உதவி கல்லூரிகளில் இடம் பெரும் மாணவர்களிடையே உள்ளது என்றாலும் , நான்கு ஆண்டுகள் பாடத்தை தவிர வேறு எதுவும் போதிக்கப்படுவதில்லை. வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சம்பளத்துக்கோ நிர்வாகத்துக்கோ எந்த பிரச்சினையுமில்லை. அட்மிஷன் நிச்சயம் பாதிக்கப்படாது. ஆனால் தனியார் கல்லூரிகள் வேலை வாய்ப்பு பயிற்சிக்காக ஏகப்பட்ட பணம் செலவழிக்கின்றனர்... ஊழியர்களை கசக்கிப் பிழிந்து ட்ரைனிங் புரோகிராமக்கள் நடத்தப்படுகின்றன. பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், அனலிடிக்ஸ், ஐ ஓ தி முதலான எமெர்ஜிங் ட்ரெண்ட் மட்டுமல்லாது , அடிப்படை நிரல் எழுதும் ஆற்றலை ஹெஏக்கர் ரேங்க், கோட் செஃப் முதலான பல இணைய தளங்கள் மூஉலமாக மேம்படுத்தும் பயிற்சியும் நடக்கிறது ..(பல கல்லூரிகளில்) . இந்தத் திறன் வளர்ப்புக்கு மெனக்கெடாத கல்லூரிகள் கம்பெனிகளுக்கு பணம் கொடுத்து வரவழைப்பது ஓரிரு வருடங்கள் கூட உதவாது.

Amanullah said...

இதன் மறுபக்கம் வேறு மாதிரியானது. பிரபலமாகதா நிறுவனம் அல்லது சிறிய
நிறுவனங்களை தனியார் கல்லூரிகள் மதிப்பதில்லை. அரசு கலைக் கல்லூரிகளும் மதிப்பதில்லை. என் நண்பர் மகளுக்கு பெங்களூரில் பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைத்த்து.(அவர் தனியார் கல்லூரியில் படித்தவர்). சம்பளம் 25000/- இதில் தங்கும் இடம் மற்றும் சாப்பாட்டுக்கு அவர்களே விடுதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அதற்க்கு 15000/- கழித்துக் கொண்டார்கள். நண்பர் இருப்பது கோவையில் மாதம் இருமுறை வந்து செல்ல 4000/- மாதம் இருமுறையாவது வெளியில் சாப்பிட்டால் ஆகும் செலவு- 1000/- ஆக மீச்சம் 10000/- . உள்ளூர் நிறுவத்தினர் அக்கல்லூரியை அணுகிய போது கல்லூரி நிறுவத்தினர் உங்கள் நிறுவனம் பிரபலமாகதத்து, எனவே அனுமதிக்க முடியாது. மேலும் நீங்கள் தரும் 15000/- குறைவாக உள்ளது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதற்கு என்ன செய்வது.

Asok said...

A corporate company cannot grow in short period without corruption, they maintained this corruption only in the top level and make sure they are legal in many countries. When it becomes legal, individual can do the corruption without any fear and individual would push the blame on companies. Now, it is spreading to the bottom level.