ஒரு கல்லூரியில் அழைத்திருந்தார்கள். பெங்களூரு கல்லூரிதான். ஆயிரம்தான் சொல்லுங்கள். பெங்களூரு பெங்களூருதான். சீதோஷ்ண நிலையைச் சொல்கிறேன். நாற்பது மாணவர்கள் இருந்தார்கள். எம்.சி.ஏ. வருடம் தொடங்குகிறது என்பதால் உற்சாகமாகப் பேசித் தொடங்கி வைக்கச் சொன்னார்கள். இந்த வருடத்தில் இதுவரை நான்காவது கல்லூரி. ‘எவ்வளவு சார்ஜ் பண்ணுறீங்க?’ என்றார் அந்தக் கல்லூரியின் பேராசிரியர். இப்படித்தான் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியிலும் கேட்டார்கள். ‘பணம் எல்லாம் வேண்டாங்க’ என்றேன். பெங்களூரு திரும்புவதற்கு பயணச்சீட்டு போட்டுக் கொடுத்து ஆயிரம் ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள். சோனா கல்லூரியில் பயணச்சீட்டு தவிர நான்காயிரம் ரூபாய்க்கு காசோலையும் கொடுத்து அனுப்பினார்கள். பேச அழைக்கும் முன்பாகவே ‘இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம்’ என்று மனதில் ஒரு தொகையை முடிவு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
பேராசிரியரிடம் ‘ஒரு சமோசா வாங்கிக் கொடுங்க’என்றேன். சிரித்தார். கல்லூரிகளில் பேச அழைக்கப்படுவதெல்லாம் நல்ல வாய்ப்பு. விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதாக இருந்தாலும் கூட யோசிக்கலாம். உள்ளூர் கல்லூரிதானே? எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி காலை ஒன்பது மணிக்குக் கல்லூரியை அடைந்தால் ஒன்றரை மணி நேரம். மீண்டும் கிளம்பி பதினோரு மணிக்கெல்லாம் அலுவலகத்துக்கு வந்துவிடலாம். மாணவர்களிடம் பேசும் போது நிறையக் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக் கொள்வதென்றால் பாடமும் தொழில்நுட்பமும் இல்லை. தலை முடியில் இன்றைய ட்ரெண்ட் என்ன என்பது கூட கற்றுக் கொள்வதுதான். இல்லாதவனுக்குத்தானே அருமை தெரியும்?
சமீபத்தில் சிவசுப்பிரமணியன் குறள்பாட் ஒன்றை ஃபேஸ்புக்கில் உருவாக்கியிருக்கிறார். ரோபோட் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் பாட். bot. சிவாவின் பாட் திருக்குறளுக்கானது. 1330க்குள் ஒரு எண்ணைச் சொன்னால் அது திருக்குறளை அர்த்தத்தோடு சொல்லித் தரும். இதனை மகிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அறத்துப் பாலிலும் பொருட்பாலிலுமாகச் சேர்த்து மொத்தமாக நூறு குறட்பாக்களை தமது வாழ்நாளில் ஒரு மனிதன் தெரிந்து வைத்திருந்தால் கூட போதும். அதில் பத்தே பத்து குறட்பாக்களின் சொல்படி வாழ்க்கையில் நடந்தால் அதுவே சமூகத்திற்கு ஏற்ற மனிதனை உருவாக்கிவிடும் என நம்புகிறேன- நிறைய வேண்டியதில்லை. ஏதேனும் பத்துக் குறட்பாக்கள். ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே’ ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்’ ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ என்பனவற்றைப் பின்பற்ற வேண்டும் என நினைப்பதுண்டு. நூறு சதவீதம் சாத்தியமாகிறதா என்ன? சாத்தியமாகும் போதெல்லாமாவது நடந்து கொள்ள வேண்டியதுதான்.
நிறைய நிறுவனங்கள் பாட்களைத் தயாரித்து உலவ விட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லும். ‘இப்படித்தான் கேட்பார்கள்’ என்று கணித்து அதற்கேற்ற பதில்களை உள்ளீடு செய்து வைத்திருப்பார்கள். ‘பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா? எத்தனை மணிக்கு சார் கடையைத் திறப்பீங்க?’ என்றால் ‘பனிரெண்டு ஆகும்ப்பா’ என்று பதில் சொல்லும். அவர்கள் கணிக்காத கேள்வியைக் கேட்டால் காறித் துப்பவும் வாய்ப்பிருக்கிறது. இதில்தான் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸை உள்ளே நுழைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கையான அறிவு. அறிவு என்பதே self learning தான். சுயமாகக் கற்றல். உதாரணமாக குழந்தை ஒரு முறை தீக்குச்சியில் சூடு வைத்துக் கொண்ட பிறகு எந்த வகையான சூடாக இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பும் அல்லவா? அதேதான். அது இயற்கையான அறிவு. Natural Intelligence. AI ரோபோவின் குறுக்காக ஒரு கல்லை வைத்தால் முதல்முறை தடுக்கிவிழும். அதிலிருந்து கற்றுக் கொண்டு இரண்டாவது முறை கல்லை வைத்தாலும் சரி, தடியை நீட்டினாலும் சரி- உஷாராகிக் கொள்ளும். இப்படியான சுய கற்றலை செயற்கையாக உருவாக்குவது ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்.
சமீபத்தில் ஒரு செய்தியை தி டெலிகிராப் முதலிய பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஃபேஸ்புக் இரண்டு பாட்களை உருவாக்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவை இரண்டும் தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு தமக்குள் உரையாடத் தொடங்கியதாகவும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியாமல் இரண்டையுமே வலுக்கட்டாயமாக நிறுத்தியதாகவும் அந்தக் கட்டுரை இருந்தது.
உண்மையா பொய்யா என்பது ஒரு புறம்- சுவாரசியமான விவகாரம் இது. சாத்தியம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. இது அதற்குச் சொல்லித்தர, அது இதற்குச் சொல்லித் தர என இரண்டும் ஜகஜ்ஜாலக் கில்லாடி ஆகி படைத்தவனையே படுகுழிக்குள் தள்ளி மண்ணை மூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விடிவதற்குள்ளாக ஃபேஸ்புக்கின் மொத்தக் கட்டுப்பாட்டையும் கையில் எடுத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டிவிட முடியும். ஃபேஸ்புக்குடன் நின்று கொண்டால் பரவாயில்லை. எல்லாமே ப்ரோகிராமிங்தானே? எந்திரன் சிட்டி மாதிரி தங்களையே பிரதியெடுத்து இணையம் முழுவதுமாகக் கூட அலைய விடலாம்.
மாணவர்களிடம் சிவா தயாரித்திருக்கும் குறள் பாட் பற்றிப் பேசினேன். இண்டர்நெட் பாட் என்பது பற்றியே பலருக்குத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் காலத்தைக் கரைக்கும் போது இதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம். பாட், app என இப்படியான சில முயற்சிகளைச் செய்யும் போதுதான் புதுப்புது நுட்பங்களைப் பற்றி கவனம் திரும்பும். கணினித்துறையில் இத்தகைய முயற்சிகள்தான் நம்மை வலுப்படுத்திக் கொள்ள உதவுகிற வாய்ப்புகள். வெறுமனே சி,சி++ படிப்பதோடு நின்றுவிடுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் எல்லையற்ற வாய்ப்புகள் இருக்கின்றன.
இணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. படிப்படியாகச் சொல்லித் தருகிற வீடியோக்கள் வரை உண்டு. பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எலெக்ட்ரானிஸ் படிப்பை படிக்கிற மாணவர்கள் Electronics For You சஞ்சிகையைப் படித்து சிறு சிறு சர்க்யூட்களை வடிவமைப்பது, மெக்கானிக்கல் படிக்கிற மாணவர்கள் சிறு சிறு எந்திரங்களை வடிவமைப்பதும் போலத்தான் இதுவும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே எதையுமே முயற்சிப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை. தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தயங்குகிறார்கள். நகர்ப்புற மாணவர்கள் வாயிலேயே வடை சுடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
6 எதிர் சப்தங்கள்:
இதோ இன்னொரு சிவப்பு ..தன்
Hi Mani,
Please detail about some learning courses in the field of AI, Machine Learning, IoT, DevOps, Cloud etc. I'm from Legacy systems background. Which one would be easy learning, adaptive from my current experience over 11 years. Would be helpful from your guidance. Even it would be much helpful for many like me - TIA!
அன்பின் மணி...
எனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
இதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம் “பறித்து” என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றும் யாவரும் கூறுகின்றனர்.
ஆனால் இது எந்த வகை இலக்கணம் என்று எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. கிறு கின்று ஆநின்று என்ற வகையில் இது வருவதாக ஒரு யூகம் உள்ளது! உண்ணாநின்றான் என்பது உண்ணுகிறான் என்ற பொருளே தரும். ஆனால் ’பறியா நகும்’ என்பது அவ்வகையில் சேராது என்பதே என் கருத்து. வள்ளுவன் இங்கு பறியா என்பதை பறிக்காமல் சிரித்தான் என்ற பொருளிலேதான் கூறினார் என்பது என் யூகம். இதை யாரேனும் விளக்க முடியுமா?
நன்றி,
பாலா.
முகநூல் பக்கம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டதால் சாட் பாட் பற்றி தெரியவில்லை. முடியுமானால் இதுபற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கவும். உங்களது இந்த பதிவு மட்டுமின்றி எனது அலுவலக பயிற்சி வகுப்பின் போதும் இதைப்பற்றி குறிப்பிட்ட போது பிரமிப்பை ஏற்படுத்தியது. வருங்காலம் ரோபோக்கள் கையில் என்று நினைக்க தோன்றுகிறது.
Big data has a very big market. @Tamil - you can look at learning Hadoop/Hive if you have background on SQL. There are 6500+ jobs in Naukri site and 16800+ job openings in US. You can check learnhadoopfast.com for it. For learning AI, cloud and others, you can check coursera or udemy as there are lot of free courses as well.
@Mani, I am a regular reader of your blog. Please feel free to delete this if you find this not relevant.
This is an experimental bot on similar lines, try keying in any number between 1 to 1330
https://www.messenger.com/t/1711611205806737
Post a Comment