Aug 8, 2017

பலமும் பலவீனமும்

எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு ஏரி இருக்கிறது. இப்பொழுதுதான் பராமரிப்புப் பணியை முடித்திருக்கிறார்கள். தண்ணீர் இல்லை. அந்த ஏரிக்கு எப்பொழுதாவது ஒரு சிறுவனை அவரது அப்பா அழைத்து வருவார். மகிழ்வுந்தைக் கொண்டு வந்து நிறுத்தி அதிலிருந்து தள்ளுவண்டியில் மகனை இறக்குவார். அவனால் அசைய முடியாது. இருவருமாக நிறையப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தப் பகுதி, ஏன் இங்கே வருகிறார்கள், அம்மா இல்லையா என்றெல்லாம் தெரியாது. அவர்களிடம் பேசி நம் பரிதாபத்தைக் காட்டிவிடக் கூடாது என்று கண்டுகொள்ளாதது போல இருந்துவிடுவதுண்டு. இந்த வாரம் ஏனோ பேச வேண்டும் எனத் தோன்றியது. 

‘நீங்க எந்த ஊரு?’ - இப்படி ஆரம்பிப்பதுதான் சுலபம். பெரும்பாலானவர்கள் இந்த ஊருக்கு அந்நியமானவர்களாகத்தான் இருப்பார்கள். 

‘மாண்டியா பக்கம்’ என்று சிரித்தார். மென்பொருள் துறையில் இருக்கிறார். வீடு சற்றுத் தள்ளியிருக்கிறது. நேரம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்குமான அந்நியோன்யத்தை இந்த ஏரியும் அதன் காற்றும் வழங்குகிறது போலிருக்கிறது. 

பையனால் தெளிவாகப் பேச முடியும் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. ஏழாம் வகுப்பு படிக்கிறான். சி.பி.எஸ்.ஈ. எங்கள் மூவருக்கும் இடையில் சில கணங்கள் வெறுமை நிலவியது. அவர்களிடம் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்று தெரியவில்லை. ‘இவனுக்கு ஏன் இப்படி ஆச்சு?’ ‘எப்படி சமாளிக்கிறான்?’ என்றெல்லாம் அபத்தமாகக் கேட்பது அப்யூஸ் செய்வது போல. ஆனால் என்ன பேசுவதென்று தெரியாமல் வெறுமனே இருப்பதும் கூட சங்கடமானதுதான். 

‘ஸாரி...குறுக்க புகுந்துட்டேன்...நீங்க பேசுங்க’ என்றேன். அவர்கள் நான் இடையில் புகும் வரைக்கும் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். 

‘சும்மா பேசிட்டு இருந்தோம்’ என்ற படியே ‘ஸ்டீபன் என்ன படிச்சாரு?’ என்றார் அவனிடம். அவர்கள் இருவரும் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.


ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிக் கொஞ்சமாகத்தான் தெரியும். ஏதோவொரு உடல்நலக் குறைவினால் அவரால் நடக்க முடியாது என்பது வரைக்கும்தான் தெரிந்து வைத்திருந்தேன். அவரது ‘காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு’ பற்றிய புத்தகம் வீட்டில் இருக்கிறது. அதை வாசித்திருந்தாலும் அவரைப் பற்றி பெரிய அளவில் தெரிந்து கொள்ள எத்தனித்ததில்லை. பையன் அவரைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்து வைத்திருக்கிறான். 

மோட்டார் நீயூரான் டிஸீஸ் காரணமாக உடல் செயல்பாடு, பேச்சு என அத்தனையும் இழந்தாலும் அவரது சிந்தனையோட்டம் குறையாமலே இருப்பது பற்றியும் அவர் நினைப்பதையெல்லாம் இன்னமும் எழுதிக் கொண்டேயிருப்பது பற்றியும் குறுக்குவெட்டாகச் சொன்னான். ஸ்விப்ட்கீ நிறுவனம் அவருக்கான பிரத்யேகமான கருவியை வடிவமைத்துக் கொடுத்தது வரையிலும் அவனுக்குத் தெரிந்தது. ஹாக்கிங்கால் நடக்க முடியாது என்பது அவரை எந்தவிதத்திலும் தடை செய்யவில்லை. அவரால் பேச முடியாது. கழுத்தைக் கூட அசைக்க முடியாதுதான் ஆனால் அவரது கட்டுரைகளும் ஆய்வுகளும் எந்தவிதத்திலும் தடைபட்டதில்லை. நம் வாழ்நாளில் பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய ஆளுமையென்றால் ஸ்டீபன் ஹாக்கிங். அவரைப் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள், அவரது கட்டுரைகள் என ஒரு வாரமாக மேய்ந்து கொண்டிருக்கிறேன்.

‘அவரை உனக்கு பிடிக்குமா?’- இந்தக் கேள்விதான் துருத்திக் கொண்டு நின்றது.

சிரித்துவிட்டு ‘ரோல்மாடல்’ என்றான். அவனது அப்பாவுக்கு ஒருவிதமான பெருமிதம் அது. 

‘அவரை ஏன் ரோல்மாடலா வெச்சிருக்க?’ என்று கேட்டுவிட்டேன்.

‘அவரால அசையக் கூடிய முடியாது..எவ்வளவோ செஞ்சிருக்காரு...என்னால அசைய முடியும், பேச முடியும்.. அப்படின்னா எவ்வளவு செய்ய முடியும்?’ என்றான். எவ்வளவு தெளிவுடன் இருக்கிறான்?

காய்ச்சல் வராத வரைக்கும் என்னால் எவ்வளவோ தெனாவெட்டாக நடந்து கொள்ள முடியும். வாயில் ஒரு புண் வந்தால் போதும். மனதுக்குள் என்னென்னவோ பயமெல்லாம் வந்துவிடும். சாதாரண உடல் நசிவுக்கெல்லாம் சுருண்டு பயந்திருக்கிறேன். உடல்நிலை நன்றாக இருக்கும் வரைக்கும் பெரும்பாலான மனிதர்கள் பலமானவர்களாக இருக்கிறார்கள். அதில் ஏதேனும் சிடுக்குகள் விழுந்தால்தான் பலம் பல்லிளித்துவிடுகிறது.

அவர்களிடம் ‘இன்னைக்கு என்னோட நாள் அர்த்தமுள்ளதா இருக்கு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

‘ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமில்லைங்க...இப்படி நிறையப் பேசுவோம்’ என்றார் அந்த அப்பா. 

‘அவரை மாதிரியே தன்னாலும் செயல்பட முடியாதுன்னு நினைக்கிறது அவனை தாழ்த்திக்கிற மாதிரி இல்லையா?’ என்றேன். சன்னமான குரலில்தான் கேட்டேன்.

‘அதுல என்னங்க இருக்கு? நம்ம பலத்தைத் தெரிஞ்சுக்கிறதைவிட பலவீனத்தைத் தெரிஞ்சுக்கிறது முக்கியம்’ என்றார். மிக இயல்பான வாக்கியம். ஆனால் அவ்வளவு வலுவான வாக்கியம்.

பையன் பிறக்கும் போது அமெரிக்காவில் இருந்தார்களாம். வயிற்றில் இருக்கும் போதே தெரிந்துவிட்டது. உடைந்து போனாலும் தெளிவாகவே இருந்திருக்கிறார்கள். அங்கேயொரு மனோவியல் நிபுணர்தான் சொல்லித் தந்திருக்கிறார். ‘இதுதான் நீன்னு அவனுக்குப் புரிய வெச்சுடுங்க..அது போதும்’ என்று. அதை அவனுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். அவையத்து முந்தியிருப்பச் செய்தல் இதுதானே!

நம் பலத்தைப் பற்றி மட்டுமே யோசித்து, அதைப் பற்றிப் பேசி பிரஸ்தாபித்து பலவீனங்களைக் கண்டு கொள்ளாமலேயே இருந்துவிடுவதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. சமூக ஊடகங்கள் வந்த பிறகு அது இன்னமும் அதிகம். நம்முடைய தாழ்வுணர்ச்சியை எல்லாம் மறைத்துக் கொண்டு அடுத்தவனைக் கலாய்த்துச் சிரித்து வெறுமனே எண்டர்டெயின்மெண்ட்டாக மட்டுமே வாழ்க்கையை முட்டுச் சந்துக்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். மெல்ல மெல்ல இதையெல்லாம் விட்டு தப்பித்து விட வேண்டும். பலம், பலவீனங்கள் என எல்லாவற்றையும் அப்பட்டமாகப் புரிந்து கொண்ட வாழ்க்கைதான் தேவையானதாக இருக்கிறது. குறைகளை மூடி மறைத்து வெறுமனே பலங்களை மட்டும் கடை விரிக்கிற அல்லது பலம் எனக் கருதி பாவனை செய்கிற வெர்ச்சுவல் உலகத்திலிருந்து விடுபடுவதுதான் சரி. 

அரை மணி நேரம்தான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் முக்கியமில்லை. நாம் எதிர்கொள்கிற மனிதர்களின் attitude முக்கியம். அது புதிய திறப்புகளை உருவாக்கிவிடும். இருவரையும் வீட்டிற்கு அழைத்தேன். இன்னொரு நாள் வருவதாகச் சொன்னார்கள். பையனிடம் கைகுலுக்கினேன். அவன் அவ்வளவு உற்சாகமாகச் சிரித்தான்- ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பைப் போல.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// பலம், பலவீனங்கள் என எல்லாவற்றையும் அப்பட்டமாகப் புரிந்து கொண்ட வாழ்க்கைதான் தேவையானதாக இருக்கிறது. குறைகளை மூடி மறைத்து வெறுமனே பலங்களை மட்டும் கடை விரிக்கிற அல்லது பலம் எனக் கருதி பாவனை செய்கிற வெர்ச்சுவல் உலகத்திலிருந்து விடுபடுவதுதான் சரி.//
உச்சம் தொட்ட பின் என்ன செய்ய ? என சிந்திக்க ஆரம்பித்தால் விடுபட்டு விடலாம்.

Anonymous said...

Some torture and work pressure at office past few days. Visited motivatingdaily.com before loging off and gained some confidence.. On top, your words in this article is further motivating... Continue
your service, simply salute.

Suresh Kumar KS said...

Hugs and kisses Mani. A wonderful motivated one. Enjoyed a lot.

Anonymous said...

நம் பலத்தைப் பற்றி மட்டுமே யோசித்து, அதைப் பற்றிப் பேசி பிரஸ்தாபித்து பலவீனங்களைக் கண்டு கொள்ளாமலேயே இருந்துவிடுவதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.-

மற்றுமொரு மிகச்சிறந்த பதிவு...