Aug 24, 2017

எத்தனை? எவ்வளவு?

இரண்டரை வருங்களுக்கு முன்பாக எம்.ஜி.சாலையில் தற்போதைய நிறுவனத்தில் சேர்வதற்கான நேர்காணல் நடந்தது. பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர். எப்படியிருந்தாலும் ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தேன். எட்டரை மணி வரைக்கும் படித்துவிட்டு குளித்து சாமி கும்பிட்டுவிட்டு எட்டே முக்காலுக்கெல்லாம் வண்டியைக் கிளப்பினால் அன்றைய தினம் சகல துர்தேவதைகளும் வண்டிச்சக்கரத்தில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் ஆனது. அதுவும் சில்க் போர்ட் இருக்கிறதல்லவா? அதை ஏன் இப்பொழுது நினைக்க வேண்டும். சனியன்.

பதினோரு மணிக்கு முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு நுழைந்தது வருத்தம் தெரிவித்ததெல்லாம் தனிக்கதை. தேர்வாகி, வேலையில் சேர்வதற்கான கடிதத்தை வாங்கிக் கொண்டு முதல் நாள் வேலையில் சேரும் போதும் ஒன்பதரை மணிக்கு வரச் சொன்னார்கள். சூடுபட்டிருந்ததால் ஏழரை மணிக்கே கிளம்பினேன். வெறும் இருபதே நிமிடங்கள்தான். சில்க்போர்டாவது சிங்காரியாவது. நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம். வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷமாக பெங்களூரில் வண்டி ஓட்டியதே இல்லை. இப்பொழுது ஏழரையும் இல்லை- ஏழு மணிக்குக் கிளம்பினால்தான் கூட்டம் குறைவாக இருக்கிறது. போகப் போக என்னவாகுமோ?

தினசரி சென்று வரத் தொடங்கிய பிறகு புதுப்புது பாதைகளைக் கண்டறிந்தேன். குறுக்குவழி, சுற்றுவழியெல்லாம் அத்துப்படியானாலும் கூட ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. ‘இது குறுக்குவழி தப்பிச்சுடலாம்’ என்று போனால் அங்கே நமக்கு முன்பாக நூறு பேர் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டிருப்பார்கள். சந்து பொந்து என்று எதுவாக இருந்தாலும் அப்படித்தான்.

எங்கள் வீடு இருக்கும் பகுதி குடியிருப்புகளுக்கான லே-அவுட். அங்கே நுழைந்து பிரதான சாலையை அடைந்தால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. தினசரி ஆயிரம் இருசக்கர வாகனங்களாவது அந்த முப்படி சாலையில் ஓடுகின்றன.  அப்பொழுதுதான் கண் விழித்த பால்குடி மறவாத ஒரு நாய்க்குட்டியை அடித்துக் கொன்றார்கள். சில பாம்புகள் நசுங்கிச் செத்தன. ஒரு குழந்தை சக்கரத்தில் விழுந்து தப்பி எழுந்தது. குடியிருப்புவாசிகள் கற்களை வைத்து சாலையை மறைத்த போது ‘ங்கொப்பனூட்டு ரோடா’ என்று தண்ணீர் லாரிக்காரர்களும் இன்னும் சிலரும் சண்டைக்கு வந்தார்கள். வாகனங்களைக் குறைக்க முடியாது என்றும் வேண்டுமானால் நம் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்து சேர வெகுநாட்கள் ஆகவில்லை.

இதுவொரு பேய் நகரம்.  ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நேற்று ஒரு கூட்டத்தில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முன்பாக பேசியவர் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று ஆரம்பித்தார். அது எதையெல்லாமோ கிளறிவிட்டது. அடுத்து நான் பேச வேண்டும்.  அதுவரை யோசித்து வைத்திருந்ததையெல்லாம் ஒதுக்கிவிட்டு ‘எண்களில் என்ன இருக்கிறது?’ என்று தொடங்கினேன். யோசித்துப் பார்த்தால் எண்கள்தானே நம்முடைய அத்தனை சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது?

இரவானால் உறக்கம் விடிந்தால் உணவு தேடல் என்று இருந்த மனிதனை ஐந்து மணிக்கு அலாரம் வைக்கவிட்டு இரண்டு மூன்று முறை அதை அணைக்க வைத்து பதினாறு அல்லது பதினேழு வருடங்கள் படித்து லட்சக்கணக்கானவர்களுக்குள் வேலை தேடி பத்தாயிரமோ இருபதாயிரமோ சம்பளம் வாங்கி ஒரு வீடு கட்டி இரு சக்கர வாகனம் வாங்கி ஒரேயொரு மனைவி கட்டி இரண்டு குழந்தைகளைப் பெற்று நாற்பது வயதில் சர்க்கரை நூற்றைம்பதைத் தாண்டுகிறது அதனால் தினசரி பத்தாயிரம் எட்டுக்களாவது நடை பயில நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை என ஒடுக்கி ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் இன்றைக்கு அறுபத்தைந்து ரூபாயா எழுபது ரூபாயா என்று குழம்பச் செய்து தினசரி அலுவலகத்தில் இத்தனை மணி நேரம் இருக்க வேண்டும் என்றும் வருடாந்திர உயர்வு வேண்டுமானால் ஐந்து ரேட்டிங் வாங்க வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தப்பட்டு இவை தவிர அலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண், பான் நெம்பரில் தொடங்கி பங்குச் சந்தை எத்தனை புள்ளிகள் என்பது வரை இழுத்து போதாக்குறைக்கு ஆதார் எண்  வரைக்கும்- அடேயப்பா. எத்தனை எண்கள்?

0 வில் ஆரம்பித்து 1,2,3 என்ற எண்களே இல்லையென்றால் வாழ்க்கை எவ்வளவு ஆசுவாசமாக இருந்திருக்கும்?

தேவைப்படும் போது உணவு தேடி பசிக்கிற அளவுக்கு உண்டு இருள் கவியும் போது உறங்கி உணர்வு மேலிடும் போது இணை தேடி என்று இயற்கையோடு இயந்து கிடந்த மனிதன் எப்படி மாறியிருக்கிறான். ஆரம்பத்தில் பாதுகாப்புக்காக வீடு பிறகு செளகரியத்திற்காக வாகனம் என்று படிப்படியாக நகர்ந்து தமது தலைக்கு மேலாகப் பணம், தமக்குப் பிறகாக வாரிசுக்குச் சொத்து என்று ஓடத் தொடங்க அதைப் பார்த்து அடுத்தவர்களும் அவர்களைத் துரத்த, தடையாக எவன் தெரிந்தாலும் எதிரி என்று கருதி அவனை வீழ்த்துவதற்குத் துளியும் தயங்காத குரூர உலகம் இது. நாம் ஒவ்வொருவரும் அங்கம்தான். யாரும் யாரையும் கை நீட்ட முடியாது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்குக் கோடு. ஒவ்வொரு தேவைக்கும் ஓர் ஓட்டம். வெறித்தனமான ஓட்டம். சக மனிதர்களைப் பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. அதற்கு நேரமும் இல்லை. 

இன்று காலையில் பைக் பின்னால் வந்து இன்னொரு வண்டி இடித்தது. அதிர்ந்து திரும்பினால் ஐம்பது வயதுடைய மனிதர். வாகனத்தின் பின்னால் மகன் இருந்தான். இடித்ததும் இடித்துவிட்டு ‘ஏன் வண்டியை நிறுத்தியிருக்க?’ என்று திட்டினார்கள். சிவப்பு எரிந்து கொண்டிருந்தது. அதெல்லாம் பிரச்சினையில்லை. சென்று கொண்டேயிருக்க வேண்டும். எட்டரை மணிக்கு பையனை பள்ளியில் விட்டுவிட்டு ஒன்பது மணிக்கு அவர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கக் கூடும். அந்தப் பதற்றம். அவர்களைக் குறை சொல்ல முடியாது. அந்த நேரத்தில் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கவர்கள் யாரை நிறுத்தினாலும் ஒரு கோட்டை இலக்காக வைத்துக் கொண்டு ஓடுகிறவர்கள்தானே?

இப்படியே ஓடி ஓடி நமக்கான வாழ்க்கை என்று எதை வாழ்கிறோம்? யோசித்தால் கிர்ரென்றிருக்கிறது.

Detach yourself from numbers என்று எங்கேயோ படித்திருக்கிறேன். எண்களிலிருந்து விலகி இருக்க முடியுமா? அது சாத்தியமே இல்லாத காரியம். எண்களை விட்டு விலகும் போது நமக்கென்று இருக்கும் சில ஒழுங்குகள் (ஒழுக்கம் இல்லை) மாறும். ஏழு மணிக்கு வேண்டுமானாலும் எழுவேன்; எட்டு மணி என்றாலும் கேட்கக் கூடாது என்றால் வீட்டில் இருப்பவர்களே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உறக்கம் வரும் போதுதான் உறங்குவேன் என்றால் உடல்நிலை கெடும் என்பார்கள். முக்கால் வயிறுக்கு உண்கிறேன். இட்லி சப்பாத்தியின் எண்ணிக்கை பிரச்சினையில்லை என்றால் மருத்துவர் ஏதேனும் சொல்வார். 

ஸ்ஸ்ப்பா. தப்பிக்கவே முடியாது.

எண்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? அது நேரம், பணம் என்ற எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி விலகுவதாக அல்லது ஒதுங்குவதாக இருந்தால் எண்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் எந்தெந்தக் காரியங்களிலிருந்து விலகி இருக்க முடியும்? எவையெல்லாம் சாத்தியம்? யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

5 எதிர் சப்தங்கள்:

Vadielan R said...

எண்களில் இருந்து விடுபடுவது சாத்தியம் இல்லை நீங்கள் விடுபட்டாலும் நீங்கள் ஒரு தனி மனிதன் அதில் ஒரு என்பதும் ஒரு எண் தான் வாழ்த்துக்கள் பணி சிறக்கட்டும்

NAGARATHAN said...

அறை எடுத்து யோசிப்பீர்களா மணிகண்டன்- இப்படியெல்லாம் பதிவு எழுத. இதைத்தான் பெட்டிக்கு வெளியே யோசிப்பது (Thinking out of box) என்று சொன்னார்களா?

சேக்காளி said...

//எண்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?//
நிறைய யோசித்திருக்கிறேன். ஏனென்றால் எனது பணி காசாளர். மனதிற்குள் எண்ணாமல் எதையுமே செய்ய முடியாது.பின்பு ஞாபகத்தில் இருக்காது என்றாலும் கூட மனம் தானகவே எண்ணத் துவங்கி விடும்.
அந்த நேரத்திலும் கூட.

Paramasivam said...

படிப்பதற்கு நன்றாக உள்ளது. எண்களை விட்டு விலகி இருப்பது என்பது நினைக்கவே இனிமையாக இருந்தாலும், எண்ணிப் பார்க்கையில், எண்கள் தான் நமது வாழ்க்கையின் அங்கம் என்பது புரிகிறது.

Anonymous said...

உறக்கம் உதாசீனப் படுத்தப்படும்போது எண்கள் விலகும்