Aug 18, 2017

அண்ணனுக்கு தலையிலும் தலைக்குள்ளேயும்...

சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய்யைப் பார்க்க வேண்டும் என ஒரு குழந்தை விரும்பியது. ஏன் பார்க்க வேண்டும் என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. இன்னொரு நாள் சொல்கிறேன். தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும் பிடித்துவிடலாம். திரைப்பிரபலங்களை நெருங்குவதுதான் வெகு கடினம். பலவிதங்களில் முயற்சித்த பிறகு அவரைப் பிடித்துவிட்டோம். ‘மெர்சல் படத்துல வேற கெட்டப்ல வர்றாராம்..அதனால ஃபோட்டோ வெளியாகிடக் கூடாதுன்னு யோசிக்கிறாரு’ என்றார்கள். அவர் அதைவிட வலுவான காரணம் ஒன்றைச் சொன்னார். நெகிழக் கூடிய காரணம் அது. ஆனால் அது வேண்டாம்.‘கெட்டப்’ என்பதை மட்டும் பிடித்துக் கொள்வோம். நானும் கூட என்னவோ ஏதோ என்று நினைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆராவது மச்சம் வைத்திருந்தார். இவர் மச்சம் கூட வைக்கவில்லை. தாடி வைப்பதெல்லாம் புது கெட்டப் போலிருக்கிறது. 

பொதுவாகவே விஜய், அஜீத் பற்றியெல்லாம் மூச்சுவிடக் கூடாது. ‘கெட்டப்பா முக்கியம்?’ என்று பள்ளிக்கூடத்துப் பையன்கள் கிளம்பி வந்துவிடுவார்கள். 

பொடியன்கள் செய்கிற அழிச்சாட்டியம் இருக்கிறதே- தல பாய்ஸ், தளபதி வெறியன்ஸ் என்று அஞ்சும் பத்துமாகச் சேர்த்து பதாகை வைத்துவிடுகிறார்கள். எங்கள் ஊரிலும் கன கூட்டம். எனக்குத்தான் எட்டாமிடத்தில் சனி உச்சம் அல்லவா?. சில மாதங்களுக்கு முன்பாகத் தார் ரோட்டில் ‘தலக்கு மனசு வெள்ளை..எங்களை எதிர்த்தவனெல்லாம் தறுதலை’ என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரம் அது. சோடியம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பைக்கை நிறுத்திவிட்டு ‘தலக்கு தலையும் வெள்ளை...மனசும் வெள்ளைன்னு எழுதுங்க தம்பி’ என்றேன். உண்மையில் நம்முடைய கவித்துவத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னேன். நக்கலுக்குச் சொல்வதாகப் புரிந்து கொண்டவர்கள் செமக்கடுப்பு ஆகிவிட்டார்கள். உள்ளூர்க்காரனாகப் போய்விட்டேன் என்பதால். பொறுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. அதன்பிறகு அங்கே நிற்பது நல்லதுக்கில்லை என்று அசிரீரி ஒலித்தது. கிளம்பிச் சென்றுவிட்டேன்.

விடிந்து பார்த்தால் என்னைக் கடுப்பேற்றியிருந்தார்கள். வீட்டுச் சுவரில் ‘அண்ணனுக்கு தலையிலும் ஒண்ணுமில்லை...தலைக்குள்ளேயும் ஒண்ணுமில்லை’ என்று காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். கிராதகப்பாவிகள். நல்லவேளை வீட்டுக்கு முன்னால் இருக்கும் ரோட்டில் எழுதாத வரைக்கும் சந்தோஷம். எத்தனை பேர் படித்தார்களோ! அவசர அவசரமாகக் கிழித்து வீசிவிட்டு வேறு எங்காவது ஒட்டியிருக்கிறார்களா தேடவே கால் மணி நேரம் பிடித்தது. ஒட்டிச் சென்றவர்கள் யாரென்று தெரியும்தான். என்ன செய்ய முடியும்? அதனால்தான் அஜீத் படம் வெளியாகும் போது ‘எனக்கு அஜீத்தைப் பிடிக்கும்’ என்று எழுதிவிட வேண்டும். விஜய் படம் வெளியாகும் போது ‘விஜய் நல்லவர்’ என்று சொல்லிவிட வேண்டும். அவர் பிரியாணி செய்வார். இவர் நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார் எக்செட்ரா, எக்செட்ரா.

விஜய் அஜீத்தை விடுங்கள்- சிவகார்த்திகேயனுக்கு எத்தனை ரசிகர்கள்? கண்ணைக் கட்டுகிறது. சென்னை கடலூர் வெள்ளத்தின் போது சிவ கார்த்திகேயன் படம் என்னவோ ஒன்று வெளியாகியிருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு கடலூரில் பேருந்து ஏற வேண்டியதுதான். அந்த இடத்தில் இருந்த திரையரங்கில் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.‘அவன் ஜனவரி ஒண்ணாம்தேதி ஆனா ஜெயில்ல சாப்பாடு பரிமாறுவான்’ என்று முன்னாள் சிறைத்துறை அலுவலர் சொன்னது நினைவுக்கு வந்தது. சிவாவின் அப்பா சிறைத்துறையில் பணியாற்றியவர். அங்கே ஜனவரி ஒன்றில் பணியாளர்களுக்கு விருந்து கொடுப்பாராம். சிவாவும் அவரது சகோதரிக்கும்தான் பந்தி பரிமாறுகிற வேலை. கெட்டப் மாறிவிட்டது. அங்கே ஏதாவது வாயைக் கொடுத்தால் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்துவிடுவார்கள். அது ஒரு தனி உலகம்.

திரை யாரைப் பெரியளாக்கும் என்று கணிக்கவா முடியும்?

யாஷ் என்றொரு கன்னட நடிகர். இன்றைக்கு கன்னடத்தில் வெற்றிகரமான நடிகர். பின்னணி எதுவுமில்லை. கையூன்றி கர்ணமடித்து ஸ்டாராகிவிட்டார். சமீபத்தில் ஓர் இயக்குநர் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் தமிழர். ஆனால் கன்னடப் படம் ஒன்றை இயக்கி அது ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டது. ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். யாஷ்ஷுடன் சினிமா பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை. அவரும் பெரிய அளவில் கெட்டப் எதுவும் மாற்றாமலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் கேட்டேன். ‘உங்க ஹீரோஸ் கூட அப்படித்தானே இருக்காங்க?’என்றார். சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ்ராஜ்குமாரும் நரைமுடியோடு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கெட்டப் மாற்றுகிறவர்தான் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை விட கமலும், விஜய் அஜீத்தைவிட விக்ரமும்தானே முன்னணியில் இருக்க வேண்டும்? யாஷ் டிவி சீரியல்களில்தான் நடித்துக் கொண்டிருந்தாராம். பிறகு துணைப் பாத்திரங்கள். இப்பொழுது ஹீரோ.

சொன்னால் நம்பமாட்டீர்கள்தான்- 

சதுரங்கவேட்டை-2 கதை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு பாத்திரத்தின் வசனத்தைச் சொல்லி ‘இதை நீங்க பேசிக் காட்டுங்க’ என்றார் இயக்குநர். எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. ‘அடச் சும்மா பேசுங்க’ என்றார். கடைசி வரைக்கும் தவிர்த்துவிட்டேன். எதற்காகப் பேசச் சொன்னார் என்று பேருந்தில் திரும்ப வரும்போது யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருவேளை எனது வசன உச்சரிப்பு பிடித்துப் போயிருந்து அந்தப் பாத்திரத்தை என்னையே நடிக்கச் சொல்லியிருந்தால் அடுத்தடுத்த படங்களில் நட்சத்திரமாகி தலையில் விக் ஒன்றை மாட்டிக் கொண்டு ஏழெட்டு மாதங்களில் டூயட் ஆடியிருக்கலாம் என்று தோன்றியது. அஜீத் வெள்ளைத் தலையோடு நடிப்பது மாதிரி நாம் சொட்டைத் தலையோடு நடித்தாலும் கோடானு கோடி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைத்த போது வெட்கத்தில் கன்னம் சிவந்துவிட்டது.

ஹீரோ மட்டும் ஆகியிருந்தால் ‘அண்ணனுக்கு தலையிலும் ஒண்ணுமில்லை; தலைக்குள்ளேயும் ஒண்ணுமில்லை’ என்று எழுதியவனை இழுத்து வந்து கும்மியிருக்கலாம். தப்பித்துவிட்டான்.

8 எதிர் சப்தங்கள்:

Muthu said...

Naan than rasigar mandra thalivar :)

Pradeep said...

//அவர் அதைவிட வலுவான காரணம் ஒன்றைச் சொன்னார்//

Ji, நீங்க அந்த காரணத்தை ஏற்கனவே சொல்லிவிட்டீர் in an another post

Unknown said...

அப்போ அந்த அமெரிக்க ஜனாதிபதி போஸ்ட் ??

Anonymous said...

அப்போ அந்த அமெரிக்க ஜனாதிபதி போஸ்ட்?

ABELIA said...

நீங்க எப்பவும் ஹீரோதான். ரியல் ஹீரோ. அரிதாரம் பூசாத ஹீரோ.

சேக்காளி said...

//அப்போ அந்த அமெரிக்க ஜனாதிபதி போஸ்ட் ??//
அதானே.
மனக்குரல்: நாமளும் சனாதிபதிக்கு அல்லக்கை யா ஆயிரலாம் ன்னு கனவுல இருந்தா ஏற்கனவே ரெண்டு பேரு (Anushanth Ramanathan, Anonymous ) துண்டு போட்டு வச்சிருக்காங்களே. என்ன செய்ய

அன்பே சிவம் said...

வருங்கால அமேரிக்க சனாதிபதிய அறிமுகப் படுத்துன அல்வா வாசுக்கு ஆழ்ந்த இரங்கல்.
:-(

Jaikumar said...

//ஒருவேளை எனது வசன உச்சரிப்பு பிடித்துப் போயிருந்து அந்தப் பாத்திரத்தை என்னையே நடிக்கச் சொல்லியிருந்தால் அடுத்தடுத்த படங்களில் நட்சத்திரமாகி தலையில் விக் ஒன்றை மாட்டிக் கொண்டு ஏழெட்டு மாதங்களில் டூயட் ஆடியிருக்கலாம் என்று தோன்றியது.//
ஆசை தோசை அப்பளம் வடை