Aug 17, 2017

எஸ்.ராவும் மார்க்ஸூம்

கடந்தவாரம் திருப்பூரில் நிறைய இடங்களில் கார்ல் மார்க்ஸ் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் பேசப் போவதாக சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். ‘இவர் கம்யூனிஸ்ட்டா?’ என்று ஒரு கணம் அபத்தமாக யோசித்தேன். அவர் பேசியதன் காணொளியை நேற்று சில நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சு. அவரது வழமையான தங்கு தடையில்லாத பேச்சில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது நண்பர் ஏங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸின் மனைவி ஜென்னி பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, சித்தாந்தங்கள் குறித்துப் பேசிய காணொளி இது.

நான் கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிஸ சித்தாந்தங்களில் பெரிய நம்பிக்கையுடையவனுமில்லை. ஆனால் தன்னை மார்க்சியவாதி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். மார்க்ஸூம் அவரது சிந்தனைகளும் பலரைத் தாக்கியிருக்கின்றன. உலகை புரட்டிப் போட்ட சிந்தனையாளர்கள் என்ற பட்டியலைத் தயாரித்தால் கார்ல் மார்க்ஸை முதல் இடத்தில் வைக்க முடியும் என நம்பலாம். 

‘அப்படி என்னய்யா மார்க்ஸ் சிந்திச்சுட்டான்?’ என்று கேட்கிறவர்களுக்கு எஸ்.ராவின் இந்தப் பேருரை முக்கியமான திறப்பாக இருக்கும். இந்தப் பேச்சுக்காக எஸ்.ராவின் உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. உரையின் தொடக்கத்திலேயே ‘கம்யூனிஸ்ட் மார்க்ஸ் பத்திப் பேசறது முக்கியமில்லை; எழுத்தாளன் பேசறது முக்கியம்’ என்று சொல்லித்தான் தன்னை தோழர் எஸ்.ஏ.பெருமாள் அழைத்ததாக எஸ்.ரா குறிப்பிடுகிறார். ‘இவர் கம்யூனிஸ்ட்டா?’ என்ற என் கேள்விக்கான பதில் இது.

கம்யூனிஸத்தை நம்புகிறோம்; நம்பவில்லை என்பது இரண்டாம்பட்சம். கோடிக்கணக்கானவர்கள் நம்புகிற சித்தாந்தத்தை உருவாக்கிய மனிதனைப் பற்றிய அடிப்படையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். புத்தகங்களை வாசிப்பது, இணையத்தில் துழாவுவது போன்றவற்றைச் செய்யலாம்தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதைச் செய்வோம்? ‘அதெல்லாம் போரடிக்கும்’ என்ற மனநிலைதான் இருக்கும்.

நேற்றிரவு ஒருவர் அழைத்திருந்தார். ‘என்ன செஞ்சுட்டிருக்கீங்க?’ என்ற வழக்கமான கேள்விக்கு ‘கார்ல் மார்க்ஸ் பற்றிய பேச்சைக் கேட்டுட்டு இருக்கேன்’ என்றேன்.

‘தூக்கம் வருமே’ என்றார். இணைப்பை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். இன்று காலை ‘அட்டகாசம்’ என்று பதில் அனுப்பியிருந்தார். ஒன்றிரண்டு தகவல் பிழைகள் இருக்கின்றன. உதாரணமாக மார்க்ஸ் இறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இது இயல்பானதுதான். குறிப்பேயில்லாமல் இரண்டு மணி நேரம் பேசுவது சாதாரணக்காரியமில்லை. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓர் ஆளுமையைப் பற்றிப் பேச வேண்டுமானால் கூட ஒரு மணி நேரமாவது தயாரிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் பேச வேண்டுமானால்? 

எஸ்.ராவையும் ஜெயமோகனையும் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள், தூற்றுகிறவர்கள், வசைபாடுகிறவர்கள் ஒரு விஷயத்தை கோட்டைவிட்டுவிடுகிறார்கள். இவர்களின் உழைப்பை லாவகமாகத் தவிர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு அவர்கள் சேர்ந்திருக்கும் இடமானது சாதாரணமாக அடையக் கூடியதில்லை. கடும் வாசிப்பின் வழியாகவும், எழுத்தின் வழியாகவும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கூட அவ்வளவு அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ராவின் இந்த உரையைக் கேட்கிறவர்களுக்கு அதன் பின்னால் இருக்கக் கூடிய உழைப்பு புரியும். எஸ்.ரா மாதிரியான ஆளுமைகள் பேசும் போது கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த உரையும் அப்படியானதொரு உரைதான். 

இரவில் கனவு முழுக்கவும் எஸ்.ராவும் மார்க்ஸூமாகவுமே இருந்தார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், அற்புதமான உரை நிகழ்த்திய எஸ்.ராவுக்கும், பதிவு செய்த ஸ்ருதி டிவிக்கும் நன்றி.

நிறையப் பேர் இந்தக் காணொளியைப் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்களுக்காக இந்த இணைப்பு-

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

மேடைப் பேச்சை விரும்புபவர்கள் அரசியல் இல்லாத வைகோ வின் இந்த உரையை கேட்டு பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=CrBuoa6j8X4&t=361s
ஏற்புரையில் இளையராஜா சொல்வது போல் இவருக்கு அரசியல் எதற்கு என நினைப்பீர்கள்