Aug 22, 2017

நிசப்தம் App

நிசப்தம் வலைத்தளத்துக்கான இன்னுமொரு App தயார்.

சிவராஜ் என்ற நண்பர் உருவாக்கியிருக்கிறார். பெங்களூருவாசி. குட்டிப்பையன். சமீபத்தில்தான் கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறார். பொழுது போக்காக இந்தச் செயலியை வடிவமைத்திருக்கிறார். மிகச் சிறப்பு.


நிசப்தம் தளத்துக்கென ஏற்கனவே சிவசுப்பிரமணியன் ஒரு மொபைல் செயலியை உருவாக்கியிருந்தார். இது இரண்டாவது செயலி. தொழில்நுட்ப ரீதியாக செயலி குறித்தான நிறையச் செய்திகளை சிவராஜ் அனுப்பியிருந்தார். ஆனால் உண்மையில் அவை தலைக்கு மேலாக இருக்கின்றன. என் குருவி மண்டைக்குப் புரியவில்லை.

நிறைய உழைத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

சோனா கல்லூரியில்தான் படித்தாராம். எனக்கு ஜூனியர். முன்பின்னாக பார்த்தது கூட இல்லை. செயலியின் விவரங்களை அனுப்பி வைத்த போதுதான் ‘நானும் உங்க காலேஜ்தான்’ என்று அனுப்பியிருந்தார். சமீபத்தில் இப்படியான சூரப்புலிகள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படியாக நான்கைந்து தம்பிகள் இருந்தால் ‘நானெல்லாம்....’ என்று சட்டைப் பொத்தானைக் கழற்றி அருவாளை முதுகுக்குப் பின்னால் செருகிக் கொண்டு திரியலாம் போலிருக்கிறது. 

இனிமேல் அப்படித்தான் திரியப் போகிறேன். 

ரோபோஜாலம் புத்தகத்துக்கு என முத்து கெளசிக் பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். நூறு பிரதிகள். அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அரிவாளை ஏன் தூக்கக் கூடாது சொல்லுங்கள்! எடை மட்டும் அறுபது கிலோவைத் தாண்டிவிட்டால் அரிவாளைத் தூக்குகிற பலத்தை பெற்றுவிடுவேன். அதுதான் சாத்தியமே ஆவதில்லை. ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதானே வைப்பான்? பெரிய டான் ஆகிவிடக்கூடும் என்று அவனுக்குப் பொறாமை.

அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இந்தச் செயலியில் தேடல், பதிவுகளின் பிரிவுகள், எழுத்துரு மாற்றம் என தூள் கிளப்பியிருக்கிறார். 


செயலியைத் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இது

தரவிறக்கிப் பார்த்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

முத்துக் கெளசிக் வாங்கியிருக்கும் ரோபோஜாலம் நூறு பிரதிகளில் பத்துப் பிரதிகளை சிவாவின் உழைப்புக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். இந்தச் செயலியைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பத்துப் பேருக்கு தலா ஒரு பிரதியை அனுப்பி வைத்துவிடலாம் என்றிருக்கிறேன். ஒருவேளை நிறையப் பேர் கருத்துக்களை அனுப்பினால் சிவாவே தமக்குப் பிடித்த பத்துக் கருத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கட்டும். பாராட்டுரையாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. மேம்படுத்துவதற்கான கருத்துக்களாகவும் இருக்கலாம். அவரைப் போன்ற இளம் மென்பொறியாளர்களுக்கு இத்தகைய ஊக்கம் அவசியமானது எனக் கருதுகிறேன்.நன்றி சிவா!

ஆண்ட்ராய்ட்டுக்கான செயலி இது. iOS க்கு இல்லையா? என்று கேட்பார்கள். விரைவில் அதற்கான ஒன்றையும் வெளியிட்டுவிடுவார்.

ஆயிரத்து முந்நூறு ரூபாய் ஃபோனாக இருந்தாலும் சரி முப்பதாயிரம் ரூபாய் அலைபேசியாக இருந்தாலும் சரி. ஆளுக்கு ஒன்றை தரவிறக்கம் செய்து சர்வரை முடக்கவும். ‘அது என்ன நிசப்தம்’ என்று அகிலமே ஸ்தம்பிக்கட்டும். சுந்தர் பிச்சையே கதறட்டும்.

sivarajng@gmail.com
vaamanikandan@gmail.com

10 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

மொதல்ல மீன் புடிச்சது நானாக்கும். அந்த மீன் படமே இருக்கட்டும். நல்லாருக்கு.

Umaganesh said...

வணக்கம் மணிகண்டன். இது அந்த பழைய செயலி போல் இல்லாமல் புதிதாய் இருக்கிறது.வாழ்த்துக்கள் அந்த மாணவனுக்கு.ஆப்பில் படிப்பது எளிதாய் இருக்கும் என நினைக்கிறேன்.நிசப்தம் சப்தமாகட்டும்.

ADMIN said...

தற்பொழுது என்னத் தேவையோ அதை முழுமையாக, நேர்த்தியாக செய்திருக்கிறார் சிவா. வாழ்த்துகள் அவருக்கும் உங்களுக்கும்...!

=======================

அரிவாள் வீசத் தேவையில்லை. நீங்கள் அறிவால் வீசுகிறீர்கள். இப்பொழுதும் எப்பொழுதும் நீங்கள் "டான்" தான்..!

=======================

Kalyankumar said...

மிகவும் நன்றாக இருக்கிறது. நிச்சயம் அந்தப் பையன் மிகவும் திறமைசாலி. அவரின் கனவுகளும் வெற்றியடைய நிசப்தம் தளத்தோடு நானும் வாழ்த்துகிறேன்!!!(இது கூகுள் பேச்சு செயலியில் எழுதியது இல்லை பேசியது நன்றி)

Anonymous said...

இது பார்க்க அழகாக இருக்கிறது
படிக்க தெளிவாக இருக்கிறது
வடிவமைப்பு வண்ணமாக இருக்கிறது
பார்க்கப் பாந்தமாக இருக்கிறது
மொத்தத்தில் மணிமணியாக இருக்கி றது .

yogesh said...

சிவராஜூக்கு வாழ்த்துக்கள்.

செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்த்தேன்,வழக்கம்போல பழைய பிடித்த பதிவு ஒன்று கண்ணில்பட அதை மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
பிறகு மீண்டும் செயலியை ஒருமுறை முழுமையாக பயன்படுத்திப்பார்த்தேன்.

நிறைகள் :
1. பயன்படுத்த இலகுவாக எளிமையாக இருக்கிறது.
2. விருப்ப நிறங்கள் ஆப்ஷன் பலருக்கு பயன்படும்.
3. பகல், இரவுக்கான செட்டிங் மாற்றம் மிகவும் அவசியமான ஒன்று.
4. செயலியை வடிவமைக்கும் முன் நல்ல கிரவுண்ட் வொர்க் செய்து பல செயலிகளை பார்த்து ரெவ்யூ செய்து நிசப்தம் செயலியை உருவாக்கியிருப்பது தெரிகிறது.
5. அர்ப்பணிப்போடு செய்திருக்கிறார்.

மேம்படுத்த பரிந்துரைகள்:
6. நிசப்தம் தொடர்பு மின்னஞ்சல் எங்கும் இடம்பெறவில்லை."தொடர்புக்கு" என்று தனிமெனு வைக்கலாம்.
7. "நிசம்தம் அறக்கட்டளை" மிக முக்கியமாக சேர்க்கவேண்டிய மெனு.மணி நிச்சயம் இதனையோசித்திருப்பார், இடம்பெறாததற்க்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உண்டா?
8.அமைப்புகள் மெனுவில் எழுத்துரு அளவு மாற்றினால் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறள் அதற்கேற்றாற்போல் மாறுகிறது. ஆனால் முகப்பு பக்கம் வந்தால் மாற்றம் தெரிவதில்லை.
9.செயலியின் முதல் பக்கத்தில் "வா.மணிகண்டன் எழுதும் நிசப்தம்" என்று இருக்கிறது.மணி பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்."வா.மணிகண்டனின் நிசப்தம்" என்று இருக்கலாம்.

Unknown said...

Hi,
Just now installed and started using it. But to my surprise my mobile got stuck, started behaving totally different - Phone applications start opening one by one continuously and phone calls made to the recently dialled numbers automatically. Could not control that activity somehow so had to turn-off internet, switch-off the phone and then restart. After switch on again same issue started so had to switch off the phone again. Then I had uninstalled the app. Unsure about others of the similar experience that I had.

Sivaraj has to check this .

Thanks
Tamil

அன்பே சிவம் said...

இவுரு பெரிய எழுத்தாளாராமாம். நாலு முடி கூட இல்லைன்னாலும். 😡

Kumar said...

We can use the Feedlyhttps://play.google.com/store/apps/details?id=com.devhd.feedly&hl=en app and subscribe to http://www.nisaptham.com/feeds/posts/default to have a app version of nisaptham.

Abul said...

Very nicely developed App. What I liked most is the option to read and write the comments from the App itself. Look and feel also superb.
Kudos to Sivaraj!