‘அறக்கட்டளையில் பங்களிக்க விரும்புகிறேன். எப்படிச் செய்வது?’என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப் போல ‘அதை நீங்கள்தான் கூற வேண்டும்’ என்று ஒற்றை வரியில் பதில் அளிப்பதுதான் சரியாக இருக்கும். ‘எதையாவது சாதிக்கணும்..ஆனால் என்ன சாதிக்கணும்ன்னு தெரியல’ என்பது மாதிரிதான் இது. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் பொதுவானது. கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் இருக்கும். எங்கே ஆரம்பிப்பது, எது தொடக்கப்புள்ளி என்பதுதான் குழப்பமே.
‘நீங்க இப்படி உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுச் சொல்வது சரியாகவும் இருக்காது. நம்முடைய சூழல், பொருளாதார வசதி, குடும்பத்தினரின் ஆதரவு, நமது வயது, உடல்திறன் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு எவ்வாறு அடுத்தவர்களுக்கு உதவிகரமாக இருக்க இயலும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் களத்தில் இறங்கிச் செய்வது சாத்தியமில்லை. அதற்காக அவர்கள் நிதியுதவி மட்டும்தான் செய்ய வேண்டும் என்றுமில்லை. ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து வழிகாட்டியாகச் செயல்பட முடியும். வாரத்தில் ஒரு முறை மட்டும் மாணவனை அழைத்துப் பேசினால் போதும். இதை ஆரம்பித்துப் பார்த்தோம். ஆனால் பல வழிகாட்டிகள் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகு சத்தமே இல்லை. புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான் என்கிற சொல்வடை மாதிரிதான். தொடக்கத்தில் இரண்டொரு முறை பேசிவிட்டு ‘போதும்’ என்று விட்டுவிடுவது. இந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே இந்த மாதிரியான விஷயங்களில் ஆழமான ஆர்வமும் தெளிவான திட்டமிடலும் வெகு அவசியம். மாணவனின் ஆர்வம் என்ன, நமக்கு என்ன தெரியும், அவனது ஆர்வத்திற்கு உதவும்படி நாம் எவ்வாறு தயாரிப்புகளைச் செய்ய வேண்டும், இருக்கின்ற கால அவகாசத்தில் அவனை எப்படித் தயார் படுத்துவது என்பதைப் பற்றிய தெளிவுக்குப் பிறகு திட்டத்திற்கு ஏற்ப செயல்படுகிறோமா என்கிற பின் தொடர்தலும் அவசியம். இதுவொரு பங்களிப்பு. நமக்கு எல்லாமே தெரியும் என்கிற எண்ணமும் வேலைக்கு ஆகாது. அந்த மாணவனுக்காக நாமும் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டும். ‘டைம் பாஸூக்காக’ செய்வதாக இருந்தால் தொடவே கூடாது.
சென்னை, பெங்களூரு மாதிரியான ஊர்களில் வசிக்கிறவர்கள் ஒரு குழுவாக இணைந்தும் செயல்பட முடியும். ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் மாணவர்களுடன் முழுமையாகச் செலவிடலாம். இந்தப் பணிக்கும் அர்ப்பணிப்பும் திட்டமிடலும் வெகு அவசியம். எந்தத் தயாரிப்புமில்லாமல் வெறுமனே சென்று வந்தால் மாணவர்களின் ஒரு நாளை வெட்டியாக முழுங்கியது போலாகிவிடும்.
கல்வி சார்ந்து மட்டுமில்லை- மருத்துவம், சமூகம், இயற்கை என ஒவ்வொரு பிரிவிலும் நம்முடைய பங்களிப்புகளைச் செய்ய இயலும். உதாரணமாக இயற்கை சார்ந்த செயல்பாடு என்பது மரம் நடுதல் மட்டுமேயில்லை- ப்ளாஸ்டிக் ஒழிப்பு, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை உண்டாக்குதல், மரம் வெட்டுதலைத் தடுப்பதற்கான பின்னணி வேலை, சட்ட உதவிகள் என்று எத்தனையோ இருக்கின்றன.
நம்மவர்கள் ஆரம்பத்தில் வெகு தீவிரமாக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள் பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள் என்பதுதான் தனிப்பட்ட அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது. குழுவாக இணைந்து செயல்படுகிறோம் என்று யாராவது சொல்லும் போது மனதுக்குள் உறுத்தக் கூடியதும் இதுதான். ஒருவர் ஆர்வத்தை இழக்கும் போது இயல்பாகவே மீதமிருப்பவர்களும் ஆர்வத்தை இழந்துவிடுகிறார்கள். ‘மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையாக’ ஒரு ஆள் மற்றவர்களைக் காலி செய்துவிடுகிறார்.
அடுத்தவர்களுக்கு உதவுகிற விவகாரத்தில் தனியாகவே இறங்கிவிடுவதுதான் நல்லது. நாம் முன்னே செல்கிற ஏராக இருக்கும்பட்சத்தில் நம்மையொத்த மனநிலை கொண்டவர்கள் நமக்கு உதவத் தொடங்குவார்கள். யாருமே உதவவில்லையென்றாலும் கூட நம்மால் இயன்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கலாம்.
ஒரு மிக முக்கியமான அம்சத்தையும் குறிப்பிட வேண்டும்-
நம்முடைய காரியத்தைச் செய்யும் போது நமக்கு ஓர் இலக்கு இருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கான பணிகளைச் செய்யும் போது அது இருக்காது. அடுத்தவர்களுக்கான பணிகளில் நம்மை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. இந்த அலட்சியம்தான் பெரும்பாலான சமூகம் சார்ந்த ஆர்வங்கள் வீணாகப் போய்விடுவதற்கான காரணம். தொடக்கத்தில் இருக்கும் உற்சாகம் வடிந்து விட்டவுடன் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவதுண்டு. பொதுக்காரியங்களில் ஈடுபடும் போதும் குறைந்தபட்ச அர்ப்பணிப்பு (minimum commitment) என்பது பற்றி நம்மிடம் திட்டமிருக்க வேண்டும். ஒரு வருடம் தொடர்ச்சியாகச் செய்ய முடியுமெனில் அதற்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆறு மாதம் என்றால் அதற்குரிய செயல். பலருக்கு fire and forget தான். ‘இப்போ செய்ய முடியும்...அடுத்த மாசம் செய்ய முடியுமான்னு தெரியாது’. இதில் எதுவுமே தவறில்லை- ஆனால் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். நமக்கு எது ஒத்து வருமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது உசிதம்.
மேற்சொன்னவற்றை மனதில் போட்டுக் குழப்பியபடியிருந்தால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். அப்படி முடிவுக்கு வந்துவிட்டால் ‘இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்..நீங்களும் சேர்ந்துக்குங்க’ என்று வெளிப்படையாக யாரையும் கேட்க வேண்டாம். இங்கே அவ்வளவு சீக்கிரம் யாரும் யாரையும் நம்புவதில்லை. வெளியில் சிரித்துப் பேசினாலும் உள்ளுக்குள் ஏதோ துருத்திக் கொண்டு நிற்கும். நம் மீது நம்பிக்கை வந்து சேர்ந்தால் சேரட்டும். அதே போல பெரும்பாலானவர்கள் claim செய்வார்கள். ‘இதை நான்தான் செய்தேன்’ என்று அறிவித்துக் கொள்கிற தன்மை. அது நம்மைத் தொந்தரவு செய்யும் வாய்ப்பிருக்கிறது.
அடுத்தவர்களின் தொந்தரவும் இடையூறுமில்லாமல் ஐநூறு ரூபாயோ அரை மணி நேரமோ- அந்தப் பங்களிப்புதான் உண்மையான ஆத்மதிருப்தியளிக்கக் கூடியது. மற்றபடியான அனைத்து படோபங்களும் வெட்டி பந்தாவுக்கானது. நம் பிம்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்கானது. நமக்கு எது தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.