May 3, 2017

வரமும் சாபமும்

இன்றைய தலைமுறையின் ஆகச் சிறந்த வரம், சாபம் இரண்டுமே தகவல்கள்தாம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் தெரிய வேண்டும். இந்த சூட்சமத்தைச் சரியாக அறிந்தவர்கள் பணம் படைக்கிறார்கள்; வேறு சிலர் பதவியைப் பிடிக்கிறார்கள். ஜோதி பன்சாலில் ஆரம்பித்து அமித் ஷா வரை இதற்கு உதாரணங்கள் கொடுக்க முடியும் என்றாலும், இங்கு விசயம் அதுவல்ல. 

தலைவலி கட்டுரையை வாசித்தேன். சாதாரண தலைவலியை கண்ட, கேட்ட, அறிந்த விசயங்களோடு ஒப்பிட்டுப் பயந்து போயிருந்தது அழகாகச் சொல்லியிருந்தீர்கள். இது போன்று நானும் பலமுறை பயந்து போயிருக்கிறேன். இப்போதும் கூட இதிலிருந்து முழுவதுமாக விடுபட இயலவில்லை என்பதுதான் உண்மை. 

சில மாதங்களுக்கு முன்னர் இங்கு(ஆஸ்திரேலியா) பருவநிலை மாற்றம் காரணமாக எனக்கு ஜலதோசம் பீடித்துக் கொண்டது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்துவிட்டு ஓடிப் போய்விடும் என்பதால் ஜலதோசத்தையெல்லாம் நான் பெரிதாக பொருட் படுத்துவதில்லை. ஆனால், இந்த முறை கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாகியும் விடுவதாக இல்லை.  சிட்னியைப் பொறுத்தவரை எய்ட்ஸ் நோயாளி என்றாலும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாலும் கொடுப்பார்கள். ஆனால் ஜலதோசம் என்று வந்துவிட்டால் காத தூரம் ஓடிவிடுவார்கள். மெட்ரோவில் பயணம் செய்யும் போது பக்கத்து இருக்கையில் யாராவது தும்மினால், முன்னால் இரண்டு இருக்கைகளில் ஆட்கள் காலியாவதை கண்கூடப் பார்த்திருக்கிறேன். அதனால் வேறு வழியில்லாமல் அலுவலத்துக்கே இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்குமாறு ஆகிவிட்டது. அப்போதும் கூட ஏனோ மருத்துவரிடம் போகத் தோன்றவேயில்லை. (அப்படியெல்லாம் நினைத்தவுடன் மருத்துவரைப் பார்த்துவிட முடிவதில்லை. குறைந்தது இரண்டு நாட்கள் முன்னரே நேரம் வாங்கி வைத்திருக்க வேண்டும். இது போன்ற நடைமுறைச் சிக்கலும் கூட ஒரு காரணம்)

ஒரு வழியாக பத்து  நாட்களில் சரியாகிவிட்டது. ஆனாலும் அதன் பின்னர் கூட தலை கொஞ்சம் பாரமாக இருப்பது போலவே இருந்தது. ஆவி பிடிப்பதிலிருந்து ஆட்டுக்கால் சூப்பு வரை எல்லாவற்றையும் முயற்சித்தும் கூட பெரிய பலனேதும் இல்லை. அப்போதுதான் இன்னொரு பிரச்சனை ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது நீண்ட நேரம் சோபாவில் அமர்ந்து எழும்போது லேசாக ஓரிரு நொடிகள் கண்ணை இருட்டியது. தலை பாரம், கண் இருட்டுதல் எல்லாம் சேர்ந்து ஆட்டிப் படைக்க நேராக மருத்துவரிடம் போய் நின்றேன். அவர் ஒரு இலங்கைத் தமிழர். இரத்த அழுத்தம் சரி பார்த்தார். எல்லாம் சரியாகவே இருந்தது. இருந்தாலும் முழு இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். வந்த முடிவுகளில் பயப்படும் படியாக ஏதுமில்லை. இங்கே வெயில் குறைவு என்பதால்,  பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் வைட்டமின் டி எனக்கும் குறைவாக இருந்தது. கூடவே வைட்டமின் B12-ம் குறைவாக இருந்தது. எல்லாம் குறையாக இருந்தால் எப்படி. கொழுப்பு மட்டும் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

இதுவரை பிரச்சனையில்லை. ஹெ.டி.எல், எல்.டி.எல் அளவுகளைப் பார்த்துவிட்டு, 'இந்த வயசுக்கு இது அதிகம். கொழுப்பை குறைக்க வேணும். காலையும் மாலையும் ஓடுங்கள்' என்று மருத்துவர் அட்வைஸ் செய்தார். மாத்திரை எல்லாம் தேவையில்லை என்றார். அதோடு நிறுத்தாமல், இப்படி கொழுப்பைக் கவனிக்காமல் விட்டுவிட்டுத்தான் சின்ன வயதுகளிலேயே மாரடைப்பு வந்து மாண்டு போகிறார்கள் என்றும் சொல்லிவிட்டார். மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போதே நான் பாதி இதய நோயாளியாகிவிட்டிருந்தேன்.

அடுத்து,  முந்தின நாள் ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்புக் கொடுத்த நண்பர் ஒருவரது டைம்லைனில் அடுத்த நாளிலேயே RIP பதிவுகளை அவரது நண்பர்கள் இட்டிருந்தார்கள். என் வயதுதான் இருக்கும். மாரடைப்பைக் காரணமாகக் கூறியிருந்தார்கள். 

ஃபேஸ்புக், வாட்சப், இணையதளங்கள் என்று அதுவரை வாசித்திருந்த அனைத்து இதய சம்மந்தமான விசயங்களும் அழுத்த எனக்கு இதய நோய் இருப்பதாகவே நம்பத் தொடங்கிவிட்டேன். தினமும் ஏறிவரும் ரயில் நிலையப் படிக்கட்டுகளில் ஏறும் போது அதிகம் இளைப்பதாய் உணர்ந்தேன். கூட்டம் அதிகம் இருந்தாலே மூச்சு திணறினேன். நிதானமாய் யோசித்துப் பார்த்தால், எல்லாம் எனது பிரம்மை என்பது எனக்கேத் தெரிகிறது என்றாலும் கூட இப்படி ஒன்றோடொன்றைத் தொடர்பு படுத்தி வருத்தம் கொள்வதிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அடுத்த முறை மருத்துவரைப் பார்த்த பொழுது மூச்சு திணறும் விசயத்தைக் கூறியதும் அவரே சிரித்துவிட்டார். 'பிரச்சனை உங்கட மண்டைக்குள்ளார இருக்கிறது' என்றார். உண்மைதான்.

இப்போது மறுபடியும் பருவ நிலை மாறியிருக்கிறது. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது இங்கு. இரண்டு நாட்களாக காது அடைத்ததைப் போல் இருக்கிறது. ஒழுங்காக கவனிக்காவிட்டால் கூகுள்-கடவுள் மூளைக் காய்ச்சல் வரக்கூடும் என்று சொல்லுகிறது. இப்போது எனக்கு லேசாகக் காய்ச்சலடிப்பது போல் இருக்கிறது. 

கார்த்திக் பாலசுப்ரமணியன்.

இன்றைய கட்டுரைக்கான எதிர்வினைகள் அதிகம். மாலையில் ஒரு நண்பர் தொலைபேசியிலும் அழைத்துப் பேசினார். சிங்கப்பூரில் இருக்கிறார். அவருக்கு உடலில் ஒரு வியாதி. சில மாதங்களுக்கு முன்பாக தனது பிரச்சினையை அவர் சொன்ன போது ‘நீங்க ஊருக்கு வரும் போது சொல்லுங்க...மருத்துவமனையில் பரிசோதனை செய்து அவர்களின் ஆலோசனையை வாங்கிக்கலாம்..அதன் பிறகு மருந்து பத்தி யோசிக்கலாம்’ என்று சொல்லியிருந்தேன். ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்தவரிடம் மருத்துவமனையைப் பரிந்துரை செய்திருந்தேன். மருத்துவர் அந்தத் துறையில் பிரசித்தி பெற்றவர். பரிசோதனையெல்லாம் முடிந்த பிறகு ‘வாழ்க்கை பூராவும் இந்த கிருமி உங்க உடலில் இருந்து கொண்டேயிருக்கும்...ஆனா பிரச்சினை எதுவுமில்லை’ என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குத் தூக்கமே வராமல் தவித்துவிட்டு சிங்கப்பூர் சென்றிருக்கிறார். 

‘மருந்து ஏதாச்சும் கொடுத்தாங்களா?’ என்றேன்.

‘அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க’ என்றார். 

‘அப்புறம் ஏன் பயப்பட்டீங்க?’ என்று கேட்டால் அவர் எதுவும் சொல்லவில்லை. 

நம்மைச் சுற்றிலும் நம் உடலிலும் பல்லாயிரக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன. இதில் முக்கால்வாசி கிருமிகளுக்கு பெயரே இல்லை என்பதுதான் உண்மை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிருமிகளுக்கெல்லாம் மருந்து தயாரித்து நம் உடலில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். பறவைக்காய்ச்சலுக்கு ஒரு வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு வைரஸ் என்று கண்டுபிடித்து பல கோடி டாலர்களுக்கு மருந்து வணிகம் நடைபெறுகிறது. கண்டுபிடிக்காத கிருமிகள் மூலம் வருகிற நோய்களுக்கு ‘வைரஸ் காய்ச்சல்’ என்று பெயர் வைத்து காய்ச்சல் தலைவலி சளி மருந்தைக் கொடுப்பார்கள். 

ஏதோவொரு வைரஸ் நம் உடலில் இருக்கிறது என்பதாலேயே நம் அந்திமக்காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தமில்லை. அது பாட்டுக்கு நம் உடலில் இருந்து கொண்டேயிருக்கும். எப்பொழுதாவது உடைந்து பெருகும் போது கவனித்து மருந்தை உட்கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட வைரஸ்கள் நம் உடலில் இருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வைரஸூக்காக பயப்பட வேண்டியிருக்கும்.

கார்த்தி பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டிருப்பதுதான் - இந்தத் தலைமுறையின் வரமும் சாபமும் தகவல்கள்தான். குவிந்து கிடக்கின்றன. முழுமையாக உள்வாங்காமல் கோழி கொத்துவது போல பொறுக்கி சேகரித்து வைத்துக் கொள்கிறோம். அந்த அரைகுறைத் தகவல்கள்தான் நம் நிம்மதியின் பெரும் வில்லனாக இருக்கின்றன. இன்றைய தலைமுறைக்கு உடலைப் புரிந்து கொள்வது என்பது நம் முன்னால் இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது.

0 எதிர் சப்தங்கள்: