May 3, 2017

உங்களுக்கு என்ன தெரியும்?

பதினோரு மாணவிகளுக்கு அவர்களது எம்.சி.ஏ இறுதியாண்டு ப்ராஜக்டலிருந்து கேள்வி கேட்க வேண்டும். ஒரு மாணவி வரவில்லை. ஆக பத்துப் பேர்கள். அது பெங்களூரின் மிக முக்கியமான பெண்கள் கல்லூரி என்பதால் முன் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து சில நாட்கள் முன்பாகவே ப்ராஜக்ட்களின் சுருக்கத்தை அனுப்பச் சொல்லியிருந்தேன். படிக்கும் போதே தெரிந்துவிட்டது- பத்தில் ஏழு சொத்தை. வெறும் இணையத்தள வடிவமைப்புகளைச் செய்து வைத்திருந்தார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே இத்தகைய ப்ராஜக்ட்கள் காலாவதியாகிவிட்டன. இப்பொழுதும் எம்.சி.ஏ மாணவிகள் பராக்குக் காட்டிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் வடிவமைத்ததாகச் சொல்லும் தளத்தின் பயன்கள் மட்டும் வேறாக இருந்தன- ஒருவர் பெங்களூரில் நடைபெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் இணையத்தளத்தை வடிவமைக்க முயற்சித்திருந்தார். இன்னொருவர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கான இணையதளம். இப்படி ஏழு பேர்கள் மொக்கை போட்டிருந்தார்கள். 

தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளின் ஆசிரியர்களிடம் பேசும் போது ‘நம் மாணவர்களின் திறன் போதாமல் இருக்கிறது. நகர்ப்புறக் கல்லூரி மாணவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்’ என்று சொல்லியிருந்ததெல்லாம் நினைவுக்கு வந்து போயின. அந்தப் பெண்கள் கல்லூரியின் பேராசிரியை தமிழர். அவரிடம் சொன்னேன். ‘ஆமா சார்...வருஷா வருஷம் இப்படி கீழேயே போய்ட்டு இருக்காங்க’ என்றார். பத்துப் பேர்களுமே பவர்பாய்ண்ட்டில் படம் காட்டினார்கள். ஆங்கிலம்தான் அவர்களுக்கு அத்துப்படி ஆயிற்றே! வரிசையாக இருபது அல்லது முப்பது படவில்லைகளைக் (Slide)காட்டிவிட்டு ‘முடிந்தது’ என்றார்கள். அவர்களது நாவில் சொற்கள் நர்த்தனம் புரிந்தன.

‘நீங்க செஞ்ச ப்ராஜக்ட் எங்கே?’ என்று கேட்டால் ‘அது ஒரு நிறுவனத்துக்காகச் செய்தது...இங்கே எடுத்து வர முடியாது’ என்றார்கள். தலையில் மிளகாய் அரைப்பது இதுதான். இப்பொழுதெல்லாம் சில ஆயிரங்கள் கொடுத்தால் ப்ராஜக்டைச் செய்து தர நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. செய்து கூடத் தர வேண்டியதில்லை- நான்கைந்து படங்களைக் கொடுத்து, கல்லூரியில் எதைச் சொல்லி ஏமாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் அவர்களது வேலை முடிந்தது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு இருபது அல்லது முப்பது மாணவர்களை அமுக்கினால் போதும். சம்பாதித்துக் கொள்ளலாம்.அப்படித்தான் இந்தப் பெண்களும் செய்திருந்தார்கள். 

கல்லூரிகளுக்கும் இந்த தகிடுதத்தம் தெரிந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. ‘எங்கள் கல்லூரியில் இந்த வருஷம் கேம்பஸ் இண்டர்வியூவில் ஆட்களை அதிகமா எடுக்கல’ என்று புலம்பாத ஒரு கல்லூரி ஆசிரியரையாவது கண்டுபிடித்தால் குதிரைக் கொம்புதான். எப்படி எடுப்பார்கள்? உண்மையில் நிறுவனங்கள் அலறுகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு வெளியுலகத்தைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ‘அவங்களுக்கு exposure இல்லை’ என்கிறார்கள். நகர்ப்புற மாணவர்கள் இப்படி ஏமாற்றுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கல்லூரிக்குச் சென்றால் மாணவர்களை வழித்து எடுத்துக் கொள்வார்கள். இப்பொழுது வெகு தீவிரமாக வடிகட்டி தயவுதாட்சயண்மேயில்லாமல் நிராகரிக்கிறார்கள்.

தங்கள் கல்லூரிக்கு வேலைக்கு மாணவர்களை எடுக்க வரும் பெரும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆட்களுக்கு பல கல்லூரி நிறுவனங்கள் கையூட்டு கொடுத்துப் பழக்கின. ‘ஐநூறு பேர்களை வேலைக்கு எடுத்துக்குங்க..இவ்வளவு கொடுத்துவிடுகிறோம்’ என்று படியச் செய்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக இப்படி ஆட்களை எடுத்த பல நிறுவனங்கள் இன்றைக்கு திண்டாடிக் கொண்டிருக்கின்றன. இப்படியான மாணவர்களை வேலைக்கு எடுத்தது மட்டுமே நிறுவனங்கள் திண்டாடுவதற்கான காரணம் என்று சொல்லவில்லை. ஆனால் அதுவும் மிக முக்கியமான காரணம். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வெறுமனே ஆள் பலத்தைக் காட்டிச் சமாளிக்க முடியாது. சமீபகாலமாக நிறுவனங்கள் சற்று விழிப்படைந்திருக்கின்றன. அதனால்தான் குப்பை அள்ளுவதைப் போல வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. 

மாணவர்களின் தரம் வீழ்ந்து கொண்டேயிருப்பது குறித்து பெரும்பாலான கல்லூரிகள் அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த வருடத்திற்கு தமது கல்லூரியின் இடங்களை நிரப்புவதில்தான் குறியாக இருக்கின்றன. மாணவர்களும் கல்லூரிகளும் இப்படியென்றால் தேசிய அளவிலான கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான முடிவுகளில் அரசாங்கமும் பெரும் சுணக்கத்தைக் காட்டுகிறது. ‘இல்லை இல்லை...அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது’ என்று யாராவது வாதத்திற்காகச் சொல்லலாம். மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடி வாதத்திற்கு வருகிறவர்கள் புரிந்து கொண்டால் உசிதம். நவீன நுட்பங்களைப் பற்றிய மேலோட்டமான புரிதல் கூட இல்லை என்பதுதான் நிதர்சனம்.

மாணவிகளிடம் கேள்விகளைக் கேட்ட போது திணறினார்கள். வெறுமனே பாடங்களை மனனம் செய்வதைவிடவும் புத்தகங்களில் இருக்கின்ற பாடங்களை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் மாணவர்கள்தான் நிறுவனங்களுக்குத் தேவையானவர்களாக இருக்கிறார்கள். நிறுவனங்களுக்கு என்று மட்டுமில்லை சுயதொழில் தொடங்குவதென்றாலும் கூட அத்தகைய நடைமுறை அறிவுதான் வேலைக்கு ஆகும். பாடத்தை நடைமுறையாக்குவதற்காகத்தானே ப்ராஜக்ட் என்ற ஒரு வஸ்தே இருக்கிறது? அதிலேயே இப்படி ஏமாற்றி சமாளித்து போங்காட்டம் ஆடினால் என்ன பலன் கிடைக்கும்?

இன்றைக்கு ஐடிதுறை திணறிக் கொண்டிருக்கிறது. ஆட்களைக் குறைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். சி,சி++ சொல்லிக் கொடுத்தால் வேலைக்குச் சென்று இருபது வருடங்கள் சம்பாதித்து ஒரு ப்ளாட் வாங்கி இ.எம்.ஐயில் ஒரு காரும் வாங்கிக் கொள்வார்கள் என்கிற சூழல் வெகுவாகக் குறைந்து வருகிறது. படித்து வெளிவருகிற பல மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மீறிக் கிடைத்தாலும் சொற்ப வருமானத்தில்தான் பலரும் திணறுகிறார்கள். 

படிக்காதவர்கள் இரும்படிப்பார்கள், மிதிவண்டிக்கு டயர் ஒட்டுவார்கள், மூட்டை தூக்குவார்கள். படித்தவர்கள் அதையெல்லாம் செய்யத் தயங்குவார்கள். ஐந்தாயிரம் ரூபாய்க்கு துணிக்கடையில் அளவெடுக்கத்தான் செல்ல வேண்டும் அல்லது அதே சம்பளத்துக்கு ஏதேனும் நிறுவனத்தின் கதவைத் தட்டலாம்.

சிடிஎஸ் தமது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. டிசிஎஸ்ஸூம் வெட்டத் தயங்குவதில்லை. இன்போசிஸ் அமெரிக்கர்களையே நேரடியாக வேலைக்கு எடுப்பதாக அறிவிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக இருந்த மாதிரியான நிலைமை இன்றில்லை. வேலைகளை அள்ளி வழங்கிய மென்பொருள் நிறுவனங்கள் சூடு வாங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், கல்லூரிகளும் அரசாங்கமும் நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மென்பொருள் நிறுவனங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் இன்னமும் சில ஆண்டுகளில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிடும். வேறு துறைகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதும், சுயதொழிலுக்கான அறிவை வளர்ப்பதும் என நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இறுதியாண்டுக்கான vivaவை நடத்திக் கொடுத்தற்காக மூன்றாயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்து காலிப்ளவர் சில்லியுடன் மதிய உணவும் கொடுத்தார்கள். காலையில் ஐந்து மாணவிகள் மதியம் ஐந்து மாணவிகள் ஜிகினா காட்டினார்கள். நன்றி வணக்கம் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டேன். 

3 எதிர் சப்தங்கள்:

இரா.கதிர்வேல் said...

கல்லூரிக்குச் சென்று VIVA செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுதற்கு நன்றி சார். அப்படியே நீங்கள் என்னென்ன கேள்விகள் மாணவிகளிடம் கேட்டீர்கள் அவர்கள் பதில் சொன்ன விதம், மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே தங்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ப தயாரித்துக்கொள்வது எப்படி என்று பதிவு செய்தீர்களென்றால் உதவியாக இருக்கும்.

இலக்கியத்திற்காக எக்கசக்கமாக எழுதிக்கொண்டேயிருக்கிறீர்கள், அப்படியே MCA, Engineering மாணவர்கள் படிக்கும் காலத்தில் எப்படி தங்களை தயார் செய்து கொள்வது என்று எழுதினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

Muralidharan said...

நன்றாக சொன்னிர்கள், இப்பொழுது உள்ள கல்லூரி ஆசிரியர்களின் அறிவே கம்மி (அனைத்து கல்லூரிகளும் அல்ல). பின்பு மாணவர்களின் அறிவு எப்படி இருக்கும்.

எங்கோ எப்போதோ கேள்விப்பட்டது - நாளைய ஆசிரியர் இன்றைய மக்கு மாணவன். இதை நான் என் நண்பர்களின் வாழ்கையுளும் பார்க்க முடிந்தது. இவை அனைத்துக்கும் ஆசிரியர்களின் சம்பளமும் இந்திய பொருளாதாரமுமே காரணம்.

சேக்காளி said...

// ஜிகினா காட்டினார்கள்//
ஜிகுனா மின்னிச்சா பாஸ்?