மூன்றாம் நதி நாவல் இரண்டாம் பதிப்புக்காக அச்சுக்குச் செல்கிறது. அதற்காக முன்னுரை இது. புத்தகத்தை வாங்கி, வாசித்து, அது பற்றி உரையாடிய அனைவருக்கும் நன்றி.
***
மூன்றாம் நதி நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகிறது.
முதற்பதிப்பு வெளியான போது விழா எதுவும் நடத்தவில்லை. பதிப்பாளரும் வலியுறுத்தவில்லை. நாவலை ஏலம் விடுவதாகவும் யார் வேண்டுமானாலும் முதல் சில பிரதிகளை ஏலம் கூறி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தோம். இங்கிலாந்தில் வசிக்கும் திரு. சார்லஸ் ஒரு லட்ச ரூபாய்க்கு முதல் பிரதியை எடுத்துக் கொண்டார். இரண்டாம் பிரதியை காங்கோவில் வசிக்கும் திரு.சந்தானராமன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும், மூன்றாம் பிரதியை திரு. அருண்குமார் பத்தாயிரம் ரூபாய்க்கும் ஏலம் கோரினார்கள். திரு.அம்ஜத் சந்திரன், திரு. ஹரிஹரன், திரு. துரைமுருகன் ஆகியோர்களின் ஏலம் காரணமாக மொத்தமாக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மொத்தத் தொகையையும் பல ஏழை மாணவிகளின் கல்வித்தொகைக்கு வழங்கினோம்.
மிகத் திருப்தியளித்த செயலாக அது அமைந்தது. புத்தகத்தை எழுதிய பிறகு கூட்டங்கள் நடத்துவது, பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் வெளியாக பிரயத்தனப்படுவது என்பதையெல்லாம் விடுத்து எழுத்து வழியாக மேற்சொன்ன காரியங்களைச் செய்வதைத்தான் எழுத்துச் செயல்பாடாகக் கருதுகிறேன்.
இலக்கியவாதிகள், அறிவுஜீவிகளின் அங்கீகாரங்களைவிடவும் எளிய வாசகர்களின் அங்கீகாரங்கள்தான் உவகை கொள்ளச் செய்கின்றன. நாவல் வெளியான சமயத்தில் வாசகர்களிடமிருந்து நிறை குறைகளைத் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்தன. அத்தகைய கடிதங்களையும், தமது இல்லத்தின் புதுமனைப் புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பிரதிகள் வாங்கிய திரு. பிரகாஷ் ராஜமாணிக்கம் அளித்த முக்கியத்துவத்தையும் இந்நாவலுக்கான அங்கீகாரங்களாக எடுத்துக் கொண்டேன்.
எழுத்து வழியாக அடுத்தவர்களைச் செதுக்குவதைவிடவும் எழுதுகிறவன் முதலில் தம்மைச் செதுக்கிக் கொள்வது அவசியம். எழுதுகிறவன் எழுத்தில் ஒரு மாதிரியும், நிஜ வாழ்வில் இன்னொரு மாதிரியும் வாழ்ந்தால் அவனை ‘போலி’ என்று சொல்லிவிடுவார்கள். எழுத்து என்பது எப்பொழுதும் எழுதுகிறவனின் கண்ணாடியாக இருக்க வேண்டும். தம்மை இந்தச் சமூகத்தில் புத்திமானாகவும் ஆளுமையாகவும் காட்டிக் கொள்வதற்காக எழுத்தைப் பயன்படுத்தாத மனநிலைதான் பெரும் பேறு. தம்மைத் தாமாகவே எழுத்தில் காட்டும் போது, அது நமக்கான இடத்தை ஸ்திரமாக்கிக் கொடுத்துவிடும் என்று உறுதியாக நம்பலாம்.
நாவலின் நாயகி பவானியை மையமாக வைத்து இந்த நாவலின் இரண்டாம் பகுதியை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மனதுக்குள் குதப்பிக் கொண்டிருக்கிறேன். எப்பொழுதாவது சரியான வடிவம் கிடைக்கும் போது எழுதிவிட வேண்டும்.
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகுடீஸ்வரன் அழைத்து மூன்றாம் நதி நாவலை முதலாமாண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. அவருக்கும் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் நன்றி.
பலரும் நினைப்பது போல எழுத்து ஒன்றும் அகப்படாத வஸ்து இல்லை. பலதரப்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் வழியாக நம்முடைய எழுத்தும் வடிவம் பெறுகிறது. பயணங்கள் மற்றும் மனிதர்களின் சந்திப்பிலிருந்து அனுபவங்கள் சேகரமாகிறது. தொடர்ச்சியான பயிற்சியின் வழியாக நாம் எழுதுவதும் உருவேறுகிறது. இப்படி வாசிப்பின் வழியாகவும், அலைதலில் பெறுகிற அனுபவங்களினூடாகவும், பயிற்சியின் காரணமாகவும் நமக்கு வசப்படுகிற எழுத்தானது சமூகத்திற்கானதாகவும் சாமானியர்களுக்கானதாகவும் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் உடன் பயணிக்கும் நிசப்தம்.காம் வாசகர்களுக்கும், யாவரும் பதிப்பகத்திற்கும் அன்பு.
மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்.
14-மே, 2017.
1 எதிர் சப்தங்கள்:
இரண்டாம் பதிப்பு காணும் "மூன்றாம் நதி" நாவலின் எழுத்தன் வா(வ்) மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment