May 11, 2017

பாலியல் வக்கிரங்கள்

‘பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களை முற்றாக ஒழிக்க வேண்டும்’ என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். டவுன்ஹாலில் ஏதோவொரு போராட்டம். நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆதரித்தும் பதாகைகளைத் தாங்கியிருந்தார்கள். வண்டியை நிறுத்தாமல் வந்துவிட்டேன். பெங்களூரில் ஒரு தோழி இருக்கிறார். அறுபதுகளைத் தாண்டியவர். எம்.ஜி.சாலையில் செயல்படுகிற பன்னாட்டு நிறுவனமொன்றுக்கு மொத்தமாகச் சம்பள விவகாரங்களை கவனித்துக் கொள்கிற பெரும் பதவி. அநேகமாக இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார்.

நேரம் கிடைக்கும் போது அவரது அலுவலகத்துக்குச் சென்று உரையாடுவதுண்டு. அறுபதுகளில் பெங்களூரு மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரியில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். பழங்கதைகளை யாராவது பேசினால் கேட்க சுவாரஸியமாக இருக்கும். ‘அப்போ பெங்களூரு எப்படி இருந்துச்சு?’ ‘ஆண்களும் பெண்களும் எப்படி இருந்தார்கள்?’ என்றெல்லாம் கேட்டுக் கொள்வது வழக்கம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ‘எம்.ஜி.ரோட்டுக்கு போறேன்’ என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரது அம்மா துடைப்பக்கட்டையில் சாத்தியதாகச் சொன்னார். அப்பொழுதே எம்.ஜி.சாலை அப்படி. ஆனால் அவருடைய நல்ல நேரம் பாருங்கள். தமது இருபத்தியிரண்டு வயதிலிருந்து இன்று வரை அதே சாலையில்தான் அலுவலகம். தினசரி வந்து போகிறார்.

அந்தக் காலத்தில் ‘பெங்களூர் நகரில் ஈவ் டீஸிங் இருந்ததா’ என்பது என் கேள்விகளில் ஒன்று. கன்னிங்காம் சாலையில் ஆள் நடமாட்டமே இருக்காது என்றும் அந்த வழியாகக் கல்லூரி மாணவிகள் வரும் போது தமது அந்தரங்க உறுப்பை எடுத்துக் காட்டுவதற்கென்றே அவ்வப்போது சில சில்லுண்டிகள் சுற்றுவார்கள் என்றும் சொன்னார். அந்தச் சாலையில் இருந்த கோவிலுக்குள் பெண்கள் பதறியடித்து ஓடிச் சென்று அடைக்கலமாவார்களாம். Dick flashing. அறுபதாண்டுகளுக்கு முன்பு என்றில்லை- திருவள்ளுவர் காலத்திலேயே கூட இருந்திருக்கும். யாருமற்ற வெளியில் குரங்குகள் நம்மைப் பார்த்து செய்யக் கூடிய சேட்டைகளைக் கவனித்ததுண்டா? பாலியல் வக்கிரங்களைப் பொறுத்த வரையில் சிலரது செயல்கள் வெளியில் தெரிகின்றன. மற்றவர்களது செயல்கள் தனிமனிதர்களுக்கிடையில் புதைந்து போகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்.

பாலியல் சார்ந்தும் காமம் சார்ந்து இதையெல்லாம் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது பொதுப்புத்தியில் என்று நிறைய வரையறுத்து வைத்திருக்கிறோம். வெறுமனே வரையறைகள்தான். மனக்கோடுகள். ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தருணத்தில் ஏதாவதொரு காரணத்திற்காக வரையறைகளை மீறியிருப்பான். மீறிக் கொண்டிருக்கிறான். அப்படி வரையறையை மீறிய எந்தச் செயலுமே வக்கிரம்தான். இல்லையா? செய்கிற மனிதனையோ அல்லது அவன் செய்கிற செயலையோ விரும்புகிற மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லது சகித்துக் கொள்கிறார்கள். விரும்பாதவர்களில் பலரும் தாண்டிச் சென்று விடுகிறார்கள். எதிர்க்கிறவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம்.

முதிர்ந்து பக்குவப்பட்ட சமூகத்தில் வேண்டுமானால் தனிமனிதர்கள் ஓரளவுக்குத் தமக்கான சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாமே தவிர முழுமையாகவே பாலியல் வக்கிரங்களை ஒழிப்பதெல்லாம் சாத்தியமில்லாத காரியம். அதுவும் நவீன இந்திய/தமிழ் சமூகத்தில் மனிதர்கள் அப்படியான சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பது சாத்தியமா என்பது முக்கியமான கேள்வி. ஊடகங்களும் இணையமும் சகமனிதர்களும் நம் மனதின் மேலடுக்கிலிருந்து கீழடுக்கு வரை கீறிக் கொண்டேயிருக்கிறார்கள். கீறல்களிலிருந்து காமமும் வேகமும் பொங்கிப் பிரவாகமாகிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றுக்கான போக்கிடங்கள் இருக்கின்றனவா என்ன? போக்கிடமில்லாத காமமும் பாலியல் இச்சைகளும் வக்கிரமாகத்தான் மாறும். மேற்பூச்சு பூசி, நகைத்து, நாகரிக உடையில் அலைகின்றவர்கள் தமது வக்கிரங்களை எல்லோரிடமும் காட்டவில்லையென்றாலும் ‘வக்கிரமே இல்லாத மனிதன்’ என்று நமக்கு நாமே சான்றிதழ் கொடுத்துக் கொள்வது இயலக்கூடிய காரியமில்லை.

தமது பிம்பத்தை வெளியுலகத்தில் காட்டிக் கொள்வதற்கும் சுயத்திற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடானது குறிப்பாக நம் சமூகத்தில் அதிகம். உள்ளுக்குள் ஆயிரம் கயமைத்தனமிருந்தாலும் வெளியுலகுக்குத் தம்மை உத்தமனாகக் காட்டுவதற்காக வேடமிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகிறது. இவ்வேறுபாட்டின் காரணமாக உள்ளுக்குள் புதைத்து வைக்கப்படுகிற கயமைத்தனங்களும் கள்ளத்தனங்களும் வெளியில் எட்டிப்பார்ப்பதற்கான தருணங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. அவை புதிய மனிதர்களிடமும்(Strangers) தம்மை அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்கிற பகுதிகளிலும் வக்கிரங்களாகத்தான் வெளிப்படுகின்றன. நாம் வெளியில் எப்படி இருக்கிறோம் என்பதற்கும் சுயத்தில் எப்படி இருக்கிறோம் என்பதற்குமான இடைவெளியைக் குறைத்துக் கொள்வது என்பதுதான் பக்குவமடைதல் என்பது. ஆனால் அதை நோக்கி நகர எத்தனை பேருக்கு இயல்கிறது?

‘பாலியல் வக்கிரமே இல்லை’ என்பது கூட ‘எனக்கு கோபமே வராது’ என்பது போலத்தான். வரும். சிலர் தமக்குள்ளேயே அடக்கிக் கொள்கிறார்கள். சிலர் சிலரிடம் மட்டும் காட்டுகிறார்கள். சிலர் எல்லோரிடமும் காட்டுகிறார்கள். இது தனிமனித பக்குவத்தைப் பொறுத்து ஆளாளுக்கு மாறுபடுகிறது. சமூகத்தில் கோபமே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பது எப்படி அபத்தமோ அப்படித்தான் பாலியல் வக்கிரமே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதும். 

வக்கிரங்களை ஒழிக்கிறோம் என்பதைவிடவும் தம் மீதாக நிகழ்த்தப்படும் தமக்கு விருப்பமில்லாத வக்கிரங்களை எதிர்கொள்ளும் முறைகளைச் சொல்லித் தருவது அவசியமான காரியம். அதற்கான உபாயங்களைக் கற்றுத் தருவதுதான் முக்கியமான செயல். எத்தனை கல்வி நிறுவனங்களில் இது குறித்துப் பேசுகிறார்கள்? எங்கேயெல்லாம் சொல்லித் தருகிறார்கள்? இதையெல்லாம் சங்கடமில்லாமல் பேசுகிற அளவுக்கும் சொல்லித்தருகிற அளவுக்கும் பெரியவர்களில் எத்தனை பேருக்கு முதிர்ச்சி இருக்கிறது?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கூட்டம் அதிகம். என்னை ஒட்டி நின்றிருந்த இளைஞனொருவனை நாற்பது வயதுகள் மதிக்கத் தகுந்த ஒருவர் ஓங்கி அறைந்தார். ஒரு வினாடி பேருந்தே ஸ்தம்பித்தது. ‘என்றதை ஏண்டா புடிக்கிற? ஊர் உலகத்துல வேற ஒருத்தன்கிட்டையும் இல்லையா? வேணும்ன்னா சொல்லு எடுத்துக் கொடுத்துடுறேன்..கைல புடிச்சுட்டு நின்னுக்க’ என்றார். இளைஞர் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் சத்தமில்லாமல் இறங்கிக் கொண்டார். தம்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வக்கிரங்களை (ஆண் மீது ஆணே கூட செலுத்தலாம்) எதிர்ப்பது என்பது ஆண்களுக்கே சிரமம்தான். பெண்களின் நிலைமை இன்னமும் மோசம். பெருநகரத்தில் கூட சில பெண்களால் எதிர்த்துவிட முடிகிறது. சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலான பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். 

‘நிர்வாணக் கடற்கரையில் சுற்றினேன்’ என்பதை ஆண் ஒருவனால் யாரிடமும் சொல்ல முடியும். அதை பெண்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிற மனநிலை இருக்கிறதா? ஆண் என்றால் எப்படியும் இருக்கலாம்; பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்பு இன்னமும் வலுவானதாகத்தான் இருக்கிறது. அதை பெண்கள் நெகிழ்த்தும் போது எரிச்சல் வருகிறது. சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதை ஏதாவதொரு விதத்தில் அவளிடம் காட்டுகிறோம். அவள் பயப்பட்டு ஒடுங்கிக் கொள்கிறாள். தம் மீதான உடலியல் தாக்குதல்களை பெருநகரங்களில் எதிர்க்கும் ஒன்றிரண்டு பெண்களை வைத்து ‘பெண்கள் அத்தனை பேரும் தைரியசாலிகள்’ என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான்.

பைக்கை நிறுத்திவிட்டு அவர்களிடம் ஒலி வாங்கியை வாங்கி இதையெல்லாம் பேசலாமா என்று கூடத் தோன்றியது. எல்லோரும் பெண்ணியவாதப் போராளிகளாகத் தெரிந்தார்கள். ‘உனக்கு ஏண்டா இதெல்லாம்?’ என்று யாரோ சொன்னது போலக் கேட்டது. யோசித்துக் கொண்டே வந்து எழுதிவிட்டேன். 

வக்கிரங்களை ஒழிப்பது இரண்டாம்பட்சம். புரிதலை உண்டாக்குவதும் தம்மை பாதுகாத்துக் கொள்ளத் தெரிவதும்தான் முக்கியம். 

4 எதிர் சப்தங்கள்:

கோவை செந்தில் said...

மிக சரியான பார்வை.....

Unknown said...

//ஆண் என்றால் எப்படியும் இருக்கலாம்; பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்பு இன்னமும் வலுவானதாகத்தான் இருக்கிறது//கசப்பான மாற்றமுடியாத உண்மை

சேக்காளி said...

இதே போன்று முன்பே ஒரு கட்டுரையை படித்த ஞாபகம். பெண்களுக்கு மனதளவில் தைரியத்தை உண்டாக்கினால் தான் இதற்கு தீர்வு.
ஆனால், "கையை மட்டுந்தான் புடிச்சானாம். வேற ஒண்ணுஞ் செய்யலையாம் ன்னா நம்புறா மாதிரியா இருக்கு" ங்கற சமுதாயத்துல (அதுவும் பெண்களாலேயே சொல்ல படுவது) பகிரங்கமாய் சொல்வதென்பது கடினமாது தான்.அப்படி சொல்லப் படாத வரை அதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்வார்கள் பாக்கியவான்கள்.

Paramasivam said...

ஆம். சரியான விழிப்பணர்வை கொணருவோம் முதலில்.