Apr 3, 2017

தோரணை

வார இறுதியில் சென்னையிலும் வேலூரிலும் வேலைகள் இருந்தன. சென்னை கூட பரவாயில்லை. வேலூர் எப்பவுமே எண்ணெய் கொப்பரைதான். மட்ட மத்தியானத்தில் அலைய வேண்டியிருந்தது. அந்த ஊரில் அறக்கட்டளை சம்பந்தமான வேலை ஒன்றிருந்தது. ஒரு குழந்தைக்காக உதவி கேட்டிருந்தார்கள். சில தகவல்களைச் சேகரித்துவிட்டு சென்னைக்கு கிளம்புகிற திட்டத்தில் இருந்தேன்.

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் - சிகாகோ நண்பர்கள் குழுமம் குறித்து எழுதிய பிறகு கடந்த இரு தினங்களாக வெளிநாட்டிலிருந்து சில குழுக்களின் சார்பாக அழைத்துப் பேசினார்கள். பேசியவர்களில் முக்கால்வாசி பேருக்கு நிசப்தம் என்பது என்.ஜி.ஓ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்பது போலக் கேட்டார்கள். ஒருவர் பணம் அனுப்புகிறோம் என்றார். ‘பணத்தை நீங்க உள்ளூர்காரர் யாருக்காவது அனுப்புங்க...நான் ஒருங்கிணைப்பாளராக மட்டும் இருக்கிறேன்... நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பினால் அதை வாங்கி அங்கே கொடுத்து, அவர்களிடம் ரசீது வாங்கி, அறக்கட்டளையிலிருந்து உங்களுக்கு ரசீது கொடுத்து என எனக்குத்தான் வேலை அதிகம்’ என்றேன். ‘இலட்சக்கணக்குல பணம் கொடுக்கிறோம்..நீங்க வேலை செய்ய முடியாதா?’ என்றார். சுள்ளென்று ஆகிவிட்டது. ஆகத்தானே செய்யும்? இவர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். வாங்கி மகிக்கு பங்களா கட்டிக் கொண்டிருக்கிறேன். இல்லையா?

முதல் பத்தியில் சொன்னது போல இந்த வாரமும் கூட சனி, ஞாயிறு இரண்டு நாட்களுமே வீட்டில் இல்லை. மகிக்கு சனிக்கிழமையிலிருந்துதான் கோடை விடுமுறை தொடங்கியிருக்கிறது. கிளம்புகிறேன் என்று சொன்ன போது அழுது விட்டான். ஆனால் செல்லாமல் இருக்க முடியாது. குடும்பத்தை, வேலையை, அறக்கட்டளையை என எல்லாவற்றையும் சமாளித்துத்தான் ஆக வேண்டும். அவன் அழுதது சற்றே பாரமாகத்தான் இருந்தது. சங்கடம்தான். பேருந்தில் அமர்ந்து இதையெல்லாம் மனதில் போட்டுக் கொண்டு குதப்பிக் கொண்டிருந்த போதுதான்  அந்த வெளிநாட்டு நண்பர் அலைபேசியில் அப்படி கேட்டார். 

இப்படி பேசுகிற குழுக்களின் பிரதிநிதிகளுக்கு நிசப்தம் தளத்தை வாசிக்கிறவர்கள் யாரோ ஒருவர் நண்பராக இருக்கிறார். அவர் ‘நீங்க அவன்கிட்ட பேசிப் பாருங்க’ என்று அலைபேசி எண்ணைக் கொடுத்துவிடுகிறார். ‘நாம் லட்ச ரூபாய் கொடுக்கிறோம் இவனிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம்’ என்ற நினைப்பிலேயே பேசுகிறார்கள். அதுவும் எல்லாம் தெரிந்த ஆல்வே அண்ணாசாமி கணக்காக. இத்தகைய மனிதர்களிடம் என்னைக் கோர்த்துவிடுகிறவர்கள் தமது கால்களை நீட்டினால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவேன் - தயவு செய்து அறக்கட்டளை, செயல்பாடுகள் குறித்தான குறைந்தபட்ச விவரங்களையாவது அவர்களிடம் கொடுத்து பிறகு பேசச் சொல்லுங்கள். 

பணம் வேறு; களம் வேறு. பணம் கொடுப்பதால் நாம் களப்பணியாளர்கள் என்று அர்த்தமில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய உதாரணமாக வேமாண்டம்பாளையம் பணியைச் சொல்லலாம். அங்கேயிருக்கும் விவசாயிகளிடம் பேசும் போது அவர்கள் பேசுகிற விஷயங்களில் பெரும்பாலானவை தர்க்க ரீதியாக சரியாக இருக்கும். ‘இந்த வேலையை இப்படி செஞ்சீங்கன்னா அந்த பிரச்சினை வரும்’ என்றால் அது அப்படியேதான் நடக்கும். அவர்கள் அனுபவசாலிகள். மண்ணுடனும் ஊருடனும் தொடர்பில் இருப்பவர்கள். அவர்களிடம் சென்று ‘நாங்க சொல்லுற மாதிரி செய்யுங்க’ என்று நாம் பேசினால் அவர்களது ஈகோவை தொட்டது போலத்தானே இருக்கும்? ‘நீயே செஞ்சுக்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்பதால் மட்டுமே நாம் அவர்களுக்கு மேலாகிவிட்டோம் என்று அர்த்தமில்லை. நமக்கு என்ன தெரியும் என்று யோசிக்க வேண்டும். 

நேற்று சென்னையில் இன்னொரு வேலை இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா?

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு குழந்தை. ஸ்ரீ குமரன் என்று பெயர். பிறந்து ஆறு மாதம்தான் ஆகிறது. அப்பா புருஷோத்தமன் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக இருக்கிறார். ஏற்கனவே அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு காரணமாக இறந்துவிட்டது. இரண்டாவது குழந்தைக்கும் அதே பிரச்சினை. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என பல தாக்குதல்கள். உள்ளூரில் காட்டி அங்கே கை விரிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். கடந்த மாதமே உதவி கேட்டு விண்ணப்பம் வந்திருந்தது. வருமான வரித்துறையில் பணியாற்றும் திரு.சுந்தர்தான் அறக்கட்டளையின் சார்பில் அவர்களுடன் தொடர்பில் இருந்தார். அவர்கள் சென்னை வரும் போதெல்லாம் நேரில் சந்திப்பதும் ஆறுதல் தெரிவிப்பதுமாக அவர்களின் குடும்ப நண்பரைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு எளிய குடும்பத்துக்கு உணர்வுப் பூர்வமாக இவ்வளவு ஆறுதலாக சுந்தர் இருப்பது வெகு சந்தோஷமாக இருந்தது.

சனிக்கிழமையன்று அழைத்து ‘குழந்தை இனி தாங்காது...மருத்துவமனையிலேயே வைத்திருந்தால் செலவுதான் அதிகமாகும்..எடுத்துட்டு போய்டுங்க’ என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார். கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்களது அம்மாவையும் அப்பாவையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வார இறுதியில் கூரியர் விடுமுறை. அனுப்பினால் காசோலை சென்று சேராது. ஞாயிறன்று சென்னை வருவதாகச் சொல்லியிருந்தேன். பணத்தைக் கட்டிவிட்டு மருத்துவமனையிலிருந்து கிளம்ப வேண்டும். பணம் புரட்டிக் கொண்டிருப்பதாக சுந்தர் சொன்னார். சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் யதேட்சையாக அங்கேயிருந்தார். இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொன்னோம். நேற்று மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டார்கள். மீதமிருக்கும் தொகைக்கு ஜவாப்தாரியாக சுந்தர் தன்னுடைய பணம் இருபத்தைந்தாயிரத்தைக் கட்டியிருக்கிறார். நேரத்தை ஒதுக்கி அலைவதே பெரிய காரியம். தன்னுடைய பணத்தைக் கட்டி உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு என்ன தேவை? இப்படித்தான் நிசப்தம் செயல்படுகிறது.


இது சந்தோஷமான செய்தி இல்லை. குழந்தைக்காக நாம் பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. 

நிசப்தம் என்பதன் நோக்கமே இதுதான் - எளிய மனிதர்களுக்காக சப்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். மிகப்பெரிய நெட்வொர்க் அமைக்க வேண்டும் என்பதோ, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி இயக்கமாக மாற வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் கிஞ்சித்தும் இல்லை. அது நமக்கு தேவையில்லாத வேலையும் கூட. இணைந்து செயல்படுகிறவர்கள் அத்தனை பேருமே எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் எளிமையான மனத் திருப்திக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம். அது நன்கொடையாளர்களாக இருந்தாலும் சரி; தன்னார்வலர்களாக இருந்தாலும் சரி. ஓர் எளிய நம்பிக்கை எல்லோரிடமும் ஊடுருவியிருக்கிறது. 

இப்படியேதான் இனியும் தொடர்வோம்.

என்னவிதமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். செய்கிற வேலைகளின் நிறை குறைகளைப் பொறுத்து திட்டமிடல்களிலும் செயல்பாடுகளிலும் மெல்ல மெல்ல ட்யூன் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் செய்கிற வேலைகளில் இணைந்து செயல்படுவதானால் தொடர்பு கொள்ளலாம். மற்றபடி அதிகாரமிடல், தாம் சொல்கிற வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்கிற வெளிநாட்டு தோரணையுடன் பேசுவதாக இருந்தால்...ப்ளீஸ்! சரிப்பட்டு வராது.

இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் இந்தப் பதிவையாவது வாசித்துவிட்டு பேசட்டும் என்பதற்காக எழுத வேண்டியதாக இருக்கிறது. அறக்கட்டளையின் கடந்த நான்கைந்து மாத வரவு செலவுக் கணக்கையாவது ஒரு முறை பார்த்துக் கொண்டால் இன்னமும் சிறப்பு. சமூக நோக்குடன் இருப்பவர்கள் யாருடனும் இணைந்து செயல்படுவதில் தயக்கமேதும் இல்லை. ஆனால் குறைந்தபட்ச புரிதலாவது இருக்க வேண்டும். ஆர்வக் கோளாறில் அழைத்து ‘நான் பணம் அனுப்பறேன்..அதுவும் ஒரே கட்டமாகவெல்லாம் தர முடியாது..நீ வேலையைச் செய்...ஒழுங்கா செஞ்சீன்னா மிச்சத்தை அனுப்பறேன்’ என்கிற ரீதியில் பேசுவதாக இருந்தால் தயவு செய்து அழைக்கவே வேண்டாம். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு இழுக்க முடியாமல் வண்டியை இழுக்கும் பொதி எருதுவாக மாற வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

4 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

Anbin Mani
Thanks for the timely help to the needy parents of the bereaved family. god assigned me to took the responsibility of Cheque encashment and i am just cog in the wheel in the entire process of admission to discharge (10 days), both MORALLY and financially. baby was admitted at child trust and mother was admitted at another nearby pvt hospital. kindly imagine the agony of the family head. shuttling between 2 hospitals, arranging funds...so pitiful situation. last week when they need blood platelets, they had money but nisaptham arranged and thanked the blood donor called vishnuvardhan and yesterday informed the sad news to him as an update. so volunteership is important and needful at one point of time. Throughout the hospital stay MORAL SUPPORT IS VERY VERY MUST AND Money also needed in between and at the end. "jawabdari' and all are big words whereas i consider the crux of the issue is to showcase the work of devoted volunteers of nisaptham (clearly pointing nisaptham need these type of volunteers in both education and medical help. well said mani # JIPMER, SCHOOLS, LAKES etc.., )and not asking numerous questions only because of donating funds. Both Finance and Field work are important in their own ways and one must understand these fine nuances and right proportion to balance it properly. Those who understand these things and nisaptham activities are always welcome whereas considering us as NGO and I am giving money and will ask questions and you have to report me attitude is not fit for our style of volunteering work. # you may remember the story why iruttu kadai halwa has not expanded their business. time being nisaptham focuses on deepening the way we organise and function and when more volunteers join we shall widen the charitable volunteering service. hope THEY WILL UNDERSTAND US. Thanks for the opportunity to explain our way of volunteering. "we are not doing any BUSINESS to widen or expand and hence we are not approaching anybody for want of funds for the work. those who are donating are the ones who understood us and have faith in our work and the way their money has been properly utilised. # Monthly Statement transparent cash flow. " we are "JAWABDARI" for those kind of empathetic souls and still they feel nisaptham is going in the right proper way and thats the main task ahead of us. # Happy volunteering
anbudan
Sundar G Chennai.

ANAND said...

Well Said Mani......

Mohamed Ibrahim said...

Dear Manu it seems you are moving in right and steady. Same to be continued. Please spare some time for family.

ss said...

தெளிவான பதில் ....அன்பால் ,ஆதரவால் ,பணி செய்ய வேண்டும்...அதிகாரத்தால் சேவை செய்ய முடியாது என்பதை வலிமையோடு சொல்லி உள்ளீர்கள் ... இது ஒரு மௌனப் புரட்சி ...பணம் என்னும் ஜடப் பொருளோடு பழகும் மனிதர்களுக்கு .....உயிர்ப் பொருளின் வலி தெரியாது ....நீங்கள் செய்வது ஆத்மா வின் ஓசை ...விரைவில் உங்களின் நிசப்தம் அறக்கட்டளையில்...முகம் காட்டாமல் இணைய உள்ளேன்