Mar 6, 2017

சில கேள்விகளும் பதில்களும்

மணிகண்டன்,

1. நன்கொடையாளர்களின் விவரங்களைக் காப்பதற்காக வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்களை Bank Statement இல் மறைத்துவிடவும்.

2. நிரந்தர வைப்புநிதியில் பதினேழு லட்சங்களை வைப்பதற்கான காரணம் என்னவென்று தெரியப்படுத்த இயலுமா? பணத்தைச் செலவு செய்யவே நன்கொடை வழங்குகிறார்கள். நிறைய செலவு செய்யச் செய்யத்தான் அதிகமாக பணம் வரும். 

3. வடிவேலு காமெடியில் வருவது போல ஒரு போலியான நபருக்கு அறக்கட்டளை விவரங்கள் குறித்து சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இனி அவர்கள் யாராவது சிலரை ஏமாற்றக் கூடும். இப்படி யாராவது  இழுக்கும் போது உங்களால் நிராகரிக்க முடியாத அளவுக்கு அன்புமிக்கவராக இருக்கிறீர்கள்.

நன்றி,
செந்தில்.

அன்புள்ள செந்தில்,

வணக்கம்.

தங்களின் கேள்விகளுக்குரிய பதில்களை ஏற்கனவே நிசப்தத்தில் எழுதியிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவ்வப்பொழுது எங்கேயாவது குறிப்பிடுவதுண்டு. தொகுப்பாக பதில் சொல்வது நிறையப் பேருக்குத் உதவும் என்பதால் விரிவாகவே பதில் எழுதிவிடலாம்.

1. ‘எங்கள் கணக்கு விவரங்களை மறைத்துவிடுங்கள்’ என்று யாராவது நன்கொடையாளர் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் மட்டுமே மறைக்கிறேன். இல்லையென்றால் அது அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. அறக்கட்டளையின் விவரங்கள் எதிலுமே ஒளிவு மறைவு இல்லை. நன்கொடையாளர்களின் பெயர்களை மட்டும் ஏன் மறைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? நானே நினைத்தாலும் கூட தொண்ணூறு சதவீத நன்கொடையாளர்களின் விவரங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் நிஜம். ஒவ்வொரு மார்ச் மாதமும் ‘ப்ளீஸ்...PAN எண்ணை அனுப்புங்கள்’ என்று எவ்வளவு முறை கெஞ்சியிருக்கிறேன். ம்ஹூம். நான்கு பேர் மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். அதற்கு மேல் திரட்டவே முடிவதில்லை. மற்றபடி Bank statement இல் இருக்கும் நன்கொடையாளர்கள் விவரங்களை வைத்துக் கொண்டு எந்தப் பயனுமில்லை. எத்தனை நாளைக்குத்தான் நம்மவர்கள் பணமே தரமாட்டார்கள் என்று சொல்கிறவர்களை அனுமதிப்பது? கொடுக்கிற கைகளை உயர்த்திக் காட்டுவோமே!

2. அறக்கட்டளைகளுக்கான விதியின் படி ஒரு நிதியாண்டில் சேருகின்ற வருகின்ற தொகையில் எண்பது அல்லது எண்பத்தைந்து சதவீதத்தை வருட இறுதிக்குள் செலவு செய்தாக வேண்டும். உண்மையில் அது சாத்தியமே இல்லை. அப்படிச் செலவு செய்ய முடியவில்லையெனில் மீதமிருக்கும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். 

எனக்கும் செலவு செய்துவிட வேண்டும் என்று ஆசைதான். 

ஆனால் அறக்கட்டளையின் விதிகளுக்குட்பட்டு சரியான பயனாளிகளைக் கண்டறிவதுதான் இருப்பதிலேயே வெகு சிரமம் என்பது தனிப்பட்ட அனுபவம். அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் சிலருக்குத் தெரியும்- உதவுவதற்கும், நிராகரிப்பதற்கும் வெகுவாக யோசிப்பதுண்டு. வருமான வரித்துறையின் விதிகளுக்காக  பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக கேட்கிறவர்களுக்கெல்லாம் கொடுக்க முடியாது அல்லவா?  வெகு தீவிரமாக வடிகட்டுகிறோம். அப்படிச் செய்வதால் பரிந்துரை செய்கிறவர்களிடம் சில சமயங்களில் திட்டு வாங்க வேண்டியிருந்தாலும் கூட இதைத் தொடர்ந்து செய்வதாகவேதான் உத்தேசம். மெதுவாகச் செலவு செய்வோம். பொறுமையாகவே செய்வோம். நமக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அளவும் இருக்கிறது. அள்ளி வீசிவிட முடிவதில்லை என்பதுதான் நிஜம்.

ஒருவேளை எண்பது சதவீதத் தொகையைச் செலவு செய்ய முடியாவிட்டால் அறக்கட்டளைகளுக்கு ஒரு சலுகையும் கொடுத்திருக்கிறார்கள். நிதியை நிரந்தர வைப்பு நிதியில் வைத்து அடுத்த நிதியாண்டுக்குள் செலவு செய்துவிடுவோம் என்ற உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும். நிசப்தம் அறக்கட்டளை கடந்த வருடத்தில் கூடுதலாக பனிரெண்டு லட்ச ரூபாயைச் செலவு செய்திருக்க வேண்டும். அதைவிடக் கூடுதலாக ஐந்து லட்ச ரூபாயை நிரந்தர வைப்பு நிதியில் வைத்திருக்கிறோம். உறுதிமொழியும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். பனிரெண்டு லட்ச ரூபாயைச் செலவு செய்தாகிவிட்டதா என்று இன்னமும் கணக்குப் பார்க்கவில்லை. ஒருவேளை செலவு ஆகியிருக்காவிட்டால் என்ன செய்வது என்பதை ஆடிட்டரிடம் கேட்க வேண்டும். ஆனால் இவ்வருடம் ஜூன் மாதவாக்கில் நிறைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைச் செய்யும் திட்டமிருக்கிறது. ஐந்தாறு லட்சங்கள் வரை கரையும். விரிவாக எழுதுகிறேன்.

3. முதல் கேள்விக்குச் சொன்ன அதே பதில்தான் செந்தில். பொதுப்பண விவகாரத்தில் எதையுமே யாரிடமும் மறைக்க வேண்டியதில்லை. நாம் ஒன்றை மறைத்துச் சொல்ல அவர் வேறொருவரிடம் ‘அப்படியாமா’ என்பார். அந்த வேறொருவர் நிசப்தம் வாசிக்கிறவராக இருந்தால் ‘அப்படியில்லையே’ என்பார். தேவையில்லாத சந்தேகங்களுக்கு நாமாகவே விதை போட்டது போல ஆகிவிடும். வெளிப்படையாகவே இருப்போம். ஆனால் ஒன்று- இணையத்தில் நன்கொடை பெறுவது சாதாரணமில்லை. ‘ஃபேஸ்புக்கில் எழுதினோம். நிறைய ஷேர் ஆச்சு..ஆனா பணம் வரலை’ என்று வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். நாம் சொல்லாமல் மறைப்பதால் மட்டும் ஒருவன் ஏமாற்றாமல் விட்டுவிடுவான் என்றில்லை. ஏதாவது வழிகளை யோசித்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஏமாறுகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். எல்லாவற்றையும் மீறித்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. சூதானமாக இருப்பதாக நினைத்து எதையாவது மறைத்து வைப்பது பெரிய தலைவலி. நிதி விவகாரத்தில் நிர்வாணம்தான் மிகப்பெரிய சுதந்திரம். நான் நிர்வாணமாகவே இருந்துவிடுகிறேன். இன்று கோவணம் உடுத்தினால் நாளைக்கு ஜீன்ஸ் அணியத் தோன்றும்.

சரிதானே?

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்

3 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

நிதி விவகாரத்தில் நிர்வாணம்தான் மிகப்பெரிய சுதந்திரம். நான் நிர்வாணமாகவே இருந்துவிடுகிறேன். இன்று கோவணம் உடுத்தினால் நாளைக்கு ஜீன்ஸ் அணியத் தோன்றும்.

நிதர்சனம். !

GANESAN said...

"நிதி விவகாரத்தில் நிர்வாணம்தான் மிகப்பெரிய சுதந்திரம். நான் நிர்வாணமாகவே இருந்துவிடுகிறேன். இன்று கோவணம் உடுத்தினால் நாளைக்கு ஜீன்ஸ் அணியத் தோன்றும்." மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் வாழ்க்கையிலும் நிர்வாணமாக இருப்பவர்களுக்கு இன்னல்கள் இல்லை அல்லது மிகவும் குறைவு .என்ன இளிச்சவாயன் என்பார்கள் .பரவாயில்லை .மனசாட்சிடம் சமரசம் செய்து கொள்ள தேவையில்லை .

RajalakshmiParamasivam said...

உங்கள் கருத்துக்கள் மிக மிக சரி.