Mar 10, 2017

கேன்சர்

இந்தியாவில் இப்பொழுது மிகப்பரவலான வியாதி என்றால் புற்று நோயாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. மிகச் சமீபத்தில் வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து மின்னஞ்சல்களில் ஏழு புற்று நோய் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. பதறாமல் இல்லை. குழந்தைகள், சிறு குழந்தைகளின் பெற்றோர், இளைஞர்கள் என்று வகைதொகையில்லாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. வாயில் நுழையாத பெயர்களைச் சொல்கிறார்கள். எளிமையாகச் சொன்னால்- கேன்சர்.

இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இவ்வளவு புற்றுநோய் நோயாளிகள் இருந்தார்களா? இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏன் இவ்வளவு பரவலாக இவ்வளவு பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எந்தவொரு பெரிய மருத்துவமனையிலும் புற்று நோய்க்கு என தனிப்பிரிவை உருவாக்கியிருக்கிறார்கள். oncologist எனப்படும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்களிடம் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்கிறது. பயமாக தொற்றிக் கொள்கிறது. இந்நோய் ஏன் வருகிறது? எப்படித் தடுப்பது? எளிய மருத்துவம் என்று ஏதாவது இருக்கிறதா என்று குழம்புகிறது. 

ஏழு வயதுக் குழந்தை. கடந்த வாரம் வரைக்கும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று கீழே விழுந்த பிறகுதான் காலில் வலி என்று சொல்லியிருக்கிறான். தடவிப் பார்த்த போது காலில் ஏதோ கட்டி மாதிரி தட்டுப்பட்டிருக்கிறது. வீக்கமாக இருக்கும் என்று தைலம் பூசி, எண்ணெய் தேய்த்து ஒன்றுமே ஆகவில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் வேலூர் கிறித்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே நோய்தான். நோயின் நான்காவது கட்டம் அது. இனி எந்த மருத்துவமும் பலனளிக்காது என்று சொல்லிவிட்டார்கள். பையன் மயக்கமடைவதோ அல்லது காய்ச்சல் உண்டாவதோ இறுதிக்கட்டமாக இருக்கும். அதுவரைக்கும் அவனைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியனுப்பிருக்கியிருக்கிறார்கள். செத்துப் போய்விடுவான் என்பது தெரிந்து எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

‘அந்த நடிகரோட ஃபேன் சார் அவன்...பார்த்துப் பேச வெச்சா சந்தோஷப்படுவான்’ என்று கேட்டார்கள். எனக்குத் தெரிந்த எல்லாவகையிலும் முட்டி மோதிப் பார்த்தாயிற்று. இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள் என்று தட்டாத கதவுகள் இல்லை. நடிகருக்கும் தகவல் சென்றுவிட்டது. ‘இப்படியான குழந்தையைப் பார்த்தா பல நாட்களுக்கு அந்த நினைப்பாவே இருக்குது’ என்று நடிகர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதும் சரிதான். மின்னஞ்சல்களைப் படித்தாலே கூட பசியாவது நின்று போகிறது. சாகப் போகிற குழந்தையை அருகில் நிறுத்திப் பேசி அனுப்பி வைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் மனம் உழப்பத்தான் செய்யும். 

பொதுவாகவே அறக்கட்டளையிலிருந்து உதவி கோரி வரக் கூடிய விண்ணப்பங்களை மருத்துவ நண்பர்களிடம் அனுப்பி வைப்பது வழக்கம். புற்று நோயாளிகள் பல லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறவர்களாக இருப்பார்கள். ‘இது சிரமம்’ ‘இனி கஷ்டம்’ என்று நோயாளிகளின் நிலைமையை வைத்து மருத்துவர்கள் சொல்வதுண்டு. அவர்களுக்கு பணம் தேவை. இவர்கள் சிகிச்சை செய்தாலும் பலனில்லை என்பார்கள். என்ன காரணத்தைச் சொல்லி மறுக்க முடியும்? நடுவில் சிக்கி மனம் கொந்தளித்துவிடுகிறது. உதவி கேட்கிறவர்களிடம் ‘பிழைக்கமாட்டார்’ என்று எதிர்மறையாகச் சொல்லவும் முடியாது. இவருக்கு உதவ முடியாது என்று சொல்ல முடியாத வகையில் அவரது குடும்பத்தில் எல்லாவிதமான சூழலும் நிலவிக் கொண்டிருக்கும். உதவி செய்தாலும் பிழைக்க மாட்டார் என்கிற சூழலில் அந்தப் பணத்தை வேறொருவருக்காவது கொடுக்கலாம் என்று அறிவு சொல்லும். மனம் கேட்காது. பெருஞ்சுமை இது.

மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு மனம் கெட்டுப்பட்டுக் கிடக்க வேண்டும். கருணையே இல்லாமல் வெறும் காதில் வாங்கி முடிவெடுக்கிற மனோதைரியம் வேண்டும். மருத்துவ உதவிகளைச் செய்யத் தொடங்கிய ஆரம்பத்தில் முதலில் திகிலாக இருக்கும் என்றும் காலம் செல்லச் செல்ல இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்துப் போய்விடும் என்று நம்பியிருந்தேன். மார்ச்சுவரியில் வேலை செய்கிறவனின் மனநிலை வந்துவிடும் என்று உறுதியாகத்தான் இருந்தேன். ஆனால் அப்படியில்லை. மனம் மேலும் மேலும் நெகிழ்ந்து போகிறது. குழந்தைகள் குறித்து வருகிற மின்னஞ்சல்களை வாசிக்கும் போதும் அலைபேசியில் விவரங்களைக் கேட்கும் போதும் இளகிப் போகிறது. பல சமயங்களில் பயந்தும் நடுங்கியும் கண்ணீர் சொரிகிறது. கொடுங்கனவுகள் வருகின்றன. யாரிடம் சொல்லவும் முடிவதில்லை. தனிமனிதர்களிடம் புலம்பினால் ‘இதையெல்லாம் விட்டுவிடு’ என்று சொல்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். 

இப்பொழுதும் கூட புலம்ப வேண்டும் என்பதற்காகக் எழுதவில்லை. எங்கேயாவது கொட்டிவிட வேண்டும் எனத் தோன்றியது. மனதுக்குள் சேகரமாகிக் கொண்டேயிருப்பது நல்லதில்லை. கோரிக்கைகளை அனுப்பி வைத்துவிட்டு ‘என்னாச்சு?’ ‘எப்பத் தருவீங்க?’ என்று தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டேயிருப்பவர்களிடம் என்ன பதிலைச் சொல்வதென்றே தெரியாமல் மனதைப் பிசைந்து கொண்டேயிருக்கும் போது எங்கே கொட்டுவது என்று தெரியாமல் தவித்துப் போகிறேன் என்பதுதான் உண்மை. 

நம்மைப் போன்ற சாமானியர்களும் எளிய மனிதர்களும் பயப்படுவதும் பதறுவதும்தானே இயல்பு? அடுத்தவர்களின் பெருந்துன்பங்களைத் தேக்கித் தேக்கி தாங்கிக் கொள்கிற வலிமையில்லை என்று புரியும் தருணம் உடைந்துவிடுகிற குமிழியைப் போலாகிவிடுகிறது உடலும் மனமும்.

பிற நோய்களைவிடவும் கேன்சர்தான் வெகுவாக பதறச் செய்கிறது. வேறு எந்த நோய்க்கும் தோற்றுவாய் குறித்த புரிதல் நம்மிடம் உண்டு. இதனால் வருகிறது. இப்படித்தான் சிகிச்சை என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறோம். கேன்சர் எதனால் வருகிறது என்று தெளிவாகச் சொல்கிற ஒரு மருத்துவரையும் கேள்விப்பட்டதில்லை. சூழலியல் காரணங்கள், வேதிப் பொருட்கள், ப்ளாஸ்டி, மாசு, உடற்கூறு என்று பொதுவான பதில்களைத்தான் சொல்கிறார்கள். இவ்வளவு ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நோயின் தோற்றுவாயைத் துல்லியமாகக் கண்டறிகிற எந்த ஆராய்ச்சியும் இல்லையா என்று தெரியவில்லை.

இது நோயே இல்லை; புற்று நோய் என்பதே மருத்துவ வணிகம் என்றெல்லாம் சிலர் பேசும் போது நம்புகிற மனநிலை இல்லை. நோயே இல்லை என்றெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. துல்லியமாகக் கணித்துவிடுகிறார்கள். அவ்வளவுதான் ஆயுள் என்று நாள் குறித்தால் சற்றேறக்குறைய அதுதான் முடிவு தினமாக இருக்கிறது. 

ஏனோ எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன். மனம் கெட்டிப்பட்டுப் போகட்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. 

8 எதிர் சப்தங்கள்:

Subramanian said...

அன்புள்ள மணிகண்டன்,
டாக்டர் மனு கோத்தாரி,டாக்டர் லோபா மேத்தா ஆகியோர் எழுதிய "The Other Face Of Cancer " என்ற இவர்களது ஆங்கில நூலின் தமிழாக்கமாக "கவலைப்படாதே சகோதரா"என்ற நூல் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து நலம்"பிரிவில் 2007ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
படித்துப் பாருங்கள்.

குணமே செய்ய முடியாத நோய் எதுவென்று கேட்டால் கேன்சர் தான்.என் மனைவியை இந்த நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தேன்.முடியவில்லை.அவர் மரணிக்கும் தருவாயில் தான் டாக்டர்கள் சொன்னார்கள்,"Cancer is THE discease which can not at all be cured.

என் மனைவி காலமான பின்பே இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு வாங்கிப் படித்தேன்.
முன்னரே தெரிந்திருப்பின் டாக்டர்களிடம் போய் இருந்திருக்க மாட்டேன்.ஏழு ஆண்டுகள் அனுபவித்த
வலி,துன்பம்,துயரம்,வேதனை அனைத்திலும் இருந்து ஓரிரு ஆண்டுகளிலேயே போய் சேர்ந்திருப்பார்.
என்ன செய்வது?!விதி வலியது.


அன்புடன்
திண்டுக்கல் சர்தார்

Unknown said...

Please chk google : Shimoga cancer cure – Vaidya Narayana Murthy’s herbal cancer treatment.

சேக்காளி said...

//இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இவ்வளவு புற்றுநோய் நோயாளிகள் இருந்தார்களா? இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது//
+ + + + + +
//சூழலியல் காரணங்கள், வேதிப் பொருட்கள், ப்ளாஸ்டி, மாசு, உடற்கூறு என்று பொதுவான பதில்களைத்தான் சொல்கிறார்கள்.//
இந்த இருபதாண்டுகளில் பிளாஸ்டிக் கின் பயன்பாடு எந்தளவிற்கு அதிகரித்திருக்கிறது.குறிப்பாக உணவு பொருட்கள் சம்பந்தமாக.அல்லது நேரடியாக உடலினுள் செல்லும் விசயங்களில்.நிலத்தில் விதைக்கும் விதைகளின் பாக்கிங் லிருந்து உடனடியாக அருந்தும் குடிதண்ணீரின் பாட்டில்கள், பாக்கெட்டுகள் வரை.இந்த செயல்பாடுகளில் பிளாஸ்டிக்கை தொடாத ஏதாவது ஒரு நிகழ்வை கூற முடியுமா நம்மால்?.

Unknown said...

உங்கள் எழுத்துக்களை 2013 முதல் வாசித்து வருகிறேன் உங்களது பழைய இடுகைகளையும் படித்துள்ளேன் என்ற முறையில் சொல்கிறேன் உங்கள் மனம் கெட்டிப்பட்டு போக வாய்ப்புகள் மிக குறைவு ....

காப்பாற்ற முடியாமல் போனவர்களைவிட உங்கள் உதவிபெற்று பலனடைந்தவர்களை எண்ணிப்பாருங்கள் .....

ஷிண்ட்லர்லிஸ்ட் திரைபடத்தின் கடைசியில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது .......
"ஒரு உயிர்ஐ காப்பாற்றுவான் படைத்த கடவுளுக்கு நிகரானவன் " 2013

அன்பே சிவம் said...

Why Dont, We CAN SERVE.

ர. சோமேஸ்வரன் said...

சித்த மருத்துவர்களை ஆலோசித்தீர்களா? "மனசு ஒரு மந்திர சாவி மாதிரி நம்பினால் எந்த அதிசயத்தையும் நடத்திக் காட்டும்" இது ஒரு படத்தின் punch வசனம். ஒரு குழந்தைக்கு நமக்கு தெரிந்திருப்பது போல பயம், பதட்டம், சோகம் இருக்காது. அந்த நிமிடத்தில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பை விளக்காமல் பாதிப்பேதும் இல்லாதது போல பராமரித்து உணவு பழக்கத்தை மாற்றி நல்ல சூழ்நிலையில் வளர்த்தால் ஒரு வேலை சுகம் கிடைக்காவிடினும் சற்று அதிக நாள் வாழலாமே. முழு மருத்துவ செலவிற்க்கு பணம் கொடுப்பதற்க்கு பதிலாக அவர்கள் வாழப்போகும் காலத்திற்கான செலவை ஏற்க்கலாம். அல்லது இதுபோல கடைசி கட்டத்தில் உள்ள வர்களுக்காக ஒரு அமைப்பை துவங்கி மாற்று மருத்துவ முறைகளை முயற்சி செய்யலாம். கீழ் உள்ள தளத்தில் உள்ள Chris என்பவர் cancerஆல் பாதிக்கப்பட்டு உணவு பழக்கத்தை மாற்றி மருத்துவர் குறித்த தேதியை தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார். http://www.chrisbeatcancer.com/ அதோடில்லாமல் தான் பின்பற்றிய உணவு முறையை அனைவருக்கும் கற்று தருகிறார். எந்த அளவிர்க்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் வேறு வழி இல்லாத போது நம்பிக்கை உள்ள ஒன்றை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. நேரடி அனுபவமோ, மனிதர்களையோ சந்தித்ததில்லை எல்லாம் வாசிப்பில் இருந்து பெற்ற தகவல்கள்தான், ஆனால் புற்று நோய்க்கு தீர்வு உள்ளது என்று திடமான நம்பிக்கை உள்ளது.

Jasper said...

மன நல மருத்துவர்கள், உடல் நோய் சார்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் பிறர் சோகங்களைக் கேட்கும் போது இந்த நிலைமை தான் வரும். அதுவும் நம்மை அந்த இடத்தில வைத்துப் பார்த்துப் பிறரை அணுகும்போது நிச்சயம் வலிதான். முடியாது என மருத்துவர்கள் கை விரித்து விட்டால் அதைப் பக்குவமாக நம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் , அதை விட நாம் பெற்றக் குழந்தைகளிடம் சொல்வது போல் வாஞ்சையுடன் பக்குவமாக சொல்லி விட்டு , எளியவர்கள் என்றால் அவர்கள் இருக்கும் வரை வலி நிவாரண மருந்துகள் , பழங்கள் , மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சத்து பானங்கள் ,dry fruits & nuts க்கு மட்டும் சிலரை அணுகி sponsorship கேட்டு வழங்குங்கள். அனைத்திற்கும் மேலாக ஆண்டவனிடம் அவர்களுக்காக வேண்டுங்கள். அவர்கள் நிம்மதியாக கடைசி வரை (எவ்வயதினராக இருந்தாலும் அறுவை சிகிச்சை இல்லாமல்) அவர்களை அனுப்பி வைப்பதே எல்லோரின் கடமை.

amma said...

God bless