Feb 9, 2017

நம் வேலையைப் பார்க்கலாம்

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக வேமாண்டம்பாளையம் பஞ்சாயத்து ஆட்களிடம் சொன்ன விஷயம் இது. ஒரு லட்ச ரூபாய் கிடைக்கவிருக்கிறது எனவும் அதை கிராமப்புற மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தேன். அவர்களும் நம்பி அளவுகள் எடுத்து எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் கணித்து வைத்திருந்தார்கள். ராகவேந்திரா லாரன்ஸ் கொடுப்பதாகச் சொன்ன தொகை அது. வந்து சேரவில்லை. அதைப் பற்றி மீண்டும் மீண்டும் விலாவாரியாக எழுத வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தின் வறட்சி மிகுந்த பகுதிகளின் பட்டியலை எடுத்தால் நம்பியூரும் வரும். ஓணான் கூட முட்டையிடத் தயங்கும் வறக்காடுகள் நிறைந்த பூமி அது. முன்னொரு காலத்தில் நெல்லும் கரும்பும் விளைந்த பூமிதான். நில மட்டத்தில் நீர் நிறைந்து கிடந்த பூமிதான். பார்த்திருக்கிறேன். ஆனால் மழை மட்டுமே ஆதாரம். நீர்ப்பாசன வசதி என்று எதுவுமில்லாத பகுதி. கடந்த முப்பதாண்டுகளில் நீராதரம் முற்றாக பொய்த்துப் போய்விட்டது. குளம் குட்டைகள் வெடித்துப் பிளந்து பனைகள் காய்ந்து கிடக்கும் பாலையாகிவிட்டது. 

மேய்ச்சலுக்கும் வழியில்லாத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் சில பகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதுமே வறட்சி நிலவுகிறது. ஆனால் இன்றைய தமிழக அரசியல் பிரச்சினைகளின் பிரம்மாண்ட வெளிச்சத்திலும் விளம்பரத்திலும் வறட்சி தனக்கான முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. அரசு மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க எலிகளை வாயில் கடித்தபடி அரை நிர்வாணமாக நின்று போராடுகிற விவசாயிகளுக்கு செய்தித்தாள்கள் ஏதாவதொரு மூலையில் கால் பக்கத்துக்கும் குறைவாக ஒதுக்குகின்றன. அரசாங்கம் ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்தத் தருணத்தில் அதிகாரவர்க்கம் விவசாயிகளையும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் கண்டு கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

இன்னமும் பங்குனி சித்திரையின் கோடைத் தாக்கமே ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாகவே தண்ணீர் பஞ்சம் பரவலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மழையும் இல்லை. வருடம் ஒரு முறையாவது ஈரம் காணும் குட்டைகள் காய்ந்து கிடக்கின்றன. சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் இல்லை. நீர் இறைத்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆழ்குழாய் கிணறுகளும் நின்றுவிட்டன. குடிநீருக்கும் கால்நடைகளுக்குமே நீர் பற்றாக்குறை. எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் சலித்துப் போய்விட்டார்கள். நீர் இருப்பு குறித்துப் பேசினாலே வருந்துகிறார்கள். நிலைமை விபரீதமாகியிருக்கிறது. கடந்த முறை ஈரோடு மாவட்ட ஆட்சியர்- மருத்துவர். பிரபாகர் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிற மாவட்ட ஆட்சியர்களில் ஒருவர்- வறட்சி நிலவரம் குறித்தும் எதிர்காலத்திற்கு தயாராவது குறித்தும் பேசியிருந்தோம். 

‘என்ன ஹெல்ப் வேணும்ன்னாலும் சொல்லுங்க...எப்போ வேணும்ன்னாலும் வர்றேன்’ என்றார். அவர் வந்தால் போதும்.

நம்பியூர் வட்டாரத்தில் இருக்கும் வேமாண்டம்பாளையம் பஞ்சாயத்துதான் இலக்காக இருந்தது. கிராமத்தின் சுற்றுவட்டாரத்திலும் குளம் குட்டைகளிலும் நிறைந்திருக்கும் அத்தனை வேலிக்காத்தான் முட்களையும் (சீமைக்கருவேலம்) அழித்து வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் செடிகளை நட்டு பாதுகாப்பு வளையம் செய்து நீர் ஊற்றிப் பராமரித்து பசுமையைக் கொண்டு வருவதுதான் கனவுத்திட்டம். சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க அரசின் உதவி தேவையாக இருக்கிறது. அதிகாரிகள், ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் அனுமதி வாங்குவது உட்பட நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆட்சியர் வந்தால் அரசு ரீதியிலான வேலைகள் அனைத்தும் தானாக நடந்துவிடும்.

கிட்டத்தட்ட இருநூறு மணி நேர வேலை இருக்கிறது. ஜேசிபி வைத்து ஒரு பஞ்சாயத்து முழுவதும் சீமைக்கருவேல மரம் அழிக்கப்பட வேண்டும். சில லட்சங்கள் தேவைப்படக் கூடும். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. பிற அமைப்புகள் பணம் சேர்த்துத் தருகிறார்கள். கூட்டு நடவடிக்கைதான் இது. சனிக்கிழமையன்று பணியைத் தொடங்குகிறோம். கடந்த திங்கட்கிழமையன்று ஆட்சியரைச் சந்தித்து அழைத்திருக்கிறார்கள். அவர் இன்று மாவட்டம் முழுக்கவும் இருக்கிற பிற தன்னார்வ அமைப்புகளை அழைத்துக் கூட்டம் நடத்துகிறார். ஒவ்வொரு அமைப்பையும் ஒரு கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளச் சொல்வார் போலிருக்கிறது. சீமைக்கருவேலத்தை ஒழித்து பசுமையாக்கம் குறித்துத்தான் முக்கியமாகப் பேசவிருக்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வந்து விவரங்களைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நம்முடைய நோக்கம் மிக எளிமையானது. 

நீர்நிலைகளை முன்னோர்கள் அமைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதில் நிரம்பிக்கிடக்கும் புதர்களை அகற்றி, நீரை உறிஞ்சும் வேலிக்காத்தான்களை அழித்து, நீர் தேக்கும் விதமான சூழலை உருவாக்கித் தந்தாலே போதும். மழை பெய்யும் போது நிலத்தடி நீர் பலம் பெற்றுவிடும். சொல்வதும் எழுதுவதும் எளிதுதான். ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. செயல்படுத்திய பிறகு நீண்டகாலத்திற்கு பிறகுதான் நம்முடைய முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தெரியும். 

திட்டம் மட்டும் சரியாகச் செயல்படுத்தப்பட்டு மழை காலத்தில் நீர் நிரம்புமானால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கக் கூடிய ஆழ்நிலைக் கிணறுகளில் நீராதாரம் வலுவாகிவிடும். சில நூறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு கிராமத்தையே செழிப்புறச் செய்ய முடியுமானால் அதைவிட பெரிய காரியம் என்ன இருந்துவிட முடியும்? ஷங்கர் படம் போல அடுத்த வருடமே பசுமை கொழிக்கும் என்றும் அதீதக் கற்பனையைச் செய்து கொள்ள வேண்டியதில்லைதான். சனிக்கிழமையன்று தொடங்கும் வேலையை உள்ளூர்காரர்கள் தொடர்ந்து கண்காணித்து விவரங்களைச் சொல்லிவிடுவார்கள். நான்கைந்து நாட்களில் சீமைக்கருவேலம் அழிப்பு வேலை முடிந்துவிடும். அடுத்த ஒன்றிரண்டு நாட்களும் மரம் நடுகிற பணி இருக்கும். எல்லாவற்றையும் முடித்துவிட்டு நிழற்படங்களோடு எழுதுகிறேன்.

சற்றே பெரிய பணிதான் இது. எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்துவிட்டு இந்தக் காரியத்தைத் தொடங்குகிறோம். நிச்சயமாக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் சனிக்கிழமை காலை பத்து மணிக்கு வந்து கலந்து கொள்ளுங்கள். களமிறங்கிப் பார்த்துவிடுவோம். 

5 எதிர் சப்தங்கள்:

Aravind said...

வாழ்த்துக்கள் சார். ஒரு பார்வைத்திரன் அற்றவனான என்னால் களப்பநி செய்வது கஷ்டம். வேருவழிகளில் என் பங்களிப்பை அளிக்க முயர்ச்சிக்கிரேன்.

shan said...

ஒரு சிறு சந்தேகம். மறுபடியும் சீமை கருவேல மரம் வராமல் தடுக்க முடியுமா?

Jaypon , Canada said...

அருமை. வாழ்த்துக்கள்.

செந்தில்குமார் said...

வாழ்த்துகள் மணி.ஆரம்பிப்பது தான் சிரமம்.முடிவு நன்றாகவே அமையும்.

சேக்காளி said...