Feb 8, 2017

ஓ.பன்னீர்செல்வமாகிய நான்...

ஜா-ஜெ பிரிவினால் முடக்கப்பட்டு பிறகு மீட்கெடுக்கப்பட்ட சின்னமும் கட்சியும் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சலனத்தைச் சந்தித்திருக்கின்றன. அதிமுகவை எஃகு கோட்டை என்றும் முனகல் கூட வெளியே கேட்காது என்று கேள்விப்பட்டு, நேரில் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு இது மிகப்பெரிய ஆச்சரியம். நேற்றிரவு பனிரெண்டு மணியைத் தாண்டியும் உறக்கம் வரவில்லை. ஓபிஎஸ் தனது தியானத்துக்குப் பிறகு எதுவுமே பேசாமல் எழுந்து போய்விடுவார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பட்டாசைக் கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.


அவர் பேசிவிட்டுச் சென்ற பிறகு ஓபிஎஸ் பக்கமாக ‘அந்த எம்.எல்.ஏ வந்துட்டார்; இந்த எம்.எல்.ஏ சேர்ந்துட்டாரு’ என்று ஆளாளுக்குக் கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தார்கள். சசிகலாவை எந்த நேரத்திலும் கைது செய்துவிடுவார்கள் என்றும் வதந்திகள் கொடிகட்டின. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இப்போதைய நிலவரம் வரைக்கும் எம்.எல்.ஏக்கள் மத்தியில் சசிகலாவின் பலம் சிதையாமல்தான் இருக்கிறது. பயம், பணம், விசுவாசம், எதிர்காலம் குறித்தான குழப்பம் என்று எந்தக் காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் பின்னால்தான் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் நிற்கிறார்கள். இதை நிரந்தரம் என்று சொல்ல முடியாது. நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

அரசியலில் அனுமானங்களைச் செய்யலாம். ஆனால் கணிப்பது சாத்தியமில்லை. 

ஓ.பி.எஸ் இப்படி சிலிர்ப்பார் என்று யாருக்குத் தெரியும்? கனவு கூட கண்டிருக்கமாட்டோம். ஆனால் வந்து நின்றிருக்கிறார் அல்லவா? அப்படித்தான். இங்கே நடந்து கொண்டிருப்பது வேட்டை. ஆளாளுக்கு கத்திகளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரை வெட்டப் போகிறார்கள், யாரைக் காக்க யார் வீசுகிறார்கள் என்றெல்லாம் நாமாக புனைந்து கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் அவை அவ்வளவு சுவாரஸியமான புதிர்களாக இருக்கின்றன. ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வெறியெடுத்துத் திரியும் அரசியல்வாதிகளின் கண்களில் தெரியும் வேட்கையும் பிரமிப்பும் குழப்பமும் நமக்கு விதவிதமான புதிர்க்கதைகளை உண்டாக்குகின்றன.

நேற்றைய தாண்டவத்தை ஓபிஎஸ் தன்னிச்சையாகச் செய்தார் என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது. பின்னணியில் வலுவானவர்கள் இருக்கிறார்கள். ‘இதைச் செய்யுங்கள்’ என்று அவர்கள் துணைக்கு நின்றிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாகவே ஓபிஎஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் என்று யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்கிறார்கள். அவரது அலுவல் ரீதியான அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் உலவுகிறது. இரண்டு நாட்களாக மண்டையைக் குழப்பியிருப்பார். இப்படியொரு முடிவை எடுத்தால் தம் பின்னால் எத்தனை பேர் வருவார்கள், ஒருவேளை யாருமே வரவில்லையென்றால் விளைவுகள் என்னவாகும், அதன் பிறகு எப்படிச் செயல்பட வேண்டும் என்று எல்லாவற்றையும் கணித்துத்தான் அவர் களத்துக்கு வந்திருப்பார். தனது அரசியல் வாழ்வு அஸ்தமித்துப் போவதற்கும் எல்லாவிதமான சாத்தியங்கள் இருப்பதையும் அவர் உணர்ந்தேயிருக்கக் கூடும்.

மிக்சர் மாமா என்று கலாய்க்கப்பட்டவர் மேற்சொன்ன விபரீதங்களையெல்லாம் யோசித்தப் பிறகும் மெரினா கடற்கரையில் கன தைரியமாக ஏன் பேசுகிறார் என்பதைத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

முதல்வர் மெரீனாவில் வந்து அமர்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. வந்து அமர்கிறார். ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். தமிழகமே திரும்பிப் பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் நாற்பது நிமிட அவகாசம் கொடுக்கிறார். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எல்லோரும் கவனத்தைக் குவித்திருக்கும் போது மெதுவாக, யோசித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கோர்த்து அணுகுண்டுவாக்கி வீசுகிறார். தேவையற்ற சொல் என்று எதுவுமேயில்லை. சரியாகப் பேசிவிட்டுக் கிளம்பிச் செல்கிறார். பக்காவான திட்டமிடல் இருக்கிறது. மிக நேர்த்தியாகச் செயல்பட்டிருக்கிறார். 

அதன்பிறகு சமூக ஊடகங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. எல்லோருக்குமே ஒருவித உற்சாகம் பற்றிக் கொள்கிறது. நம்மவர்களுக்கு எப்பொழுதுமே புதிய எழுச்சியின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. துணிந்து ஒருவன் களமிறங்கும் போது அவனுக்கு ஹீரோவுக்கான அந்தஸ்தைக் கொடுத்து தோள் மீது தூக்கி வைத்துக் கொள்வோம். நேற்றைய நிகழ்வின் மூலம் தம் மீதான எல்லாவிதமான டம்மி முத்திரைகளையும் துடைத்துவிட்டு ஹீரோவாக உருமாறி நிற்கிறார் ஓ.பி.எஸ். 

பன்னீர்செல்வமும் உத்தமரில்லைதான். கடந்த பல வருடங்களாக கட்சியிலும் ஆட்சியிலும் அவர்கள் நடத்தி வந்த அராஜகங்கள் தெரியாதா என்ன? இல்லை கக்கனைப் போலவும் காமராஜரைப் போலவும் இதுவரைக்கும் பதவியில் இருந்தாரா? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இன்றைக்கு தம் பதவிக்கு பங்கம் வருகையில் முயன்று பார்க்கிறார். ஒரே ஆசுவாசம்- அதிமுகவினரிடம் நாம் எதிர்பார்க்காத துணிச்சலை அவர் காட்டியிருக்கிறார்.

இன்றைய சூழலில் இத்தகையதொரு சலனம் அவசியம் எனப்படுகிறது. 

ஆட்சிக்கும் கட்சிக்கும் அவரால் எந்த அளவு சேதாரத்தை உண்டாக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கதுமையான கத்தியைக் கொண்டு பிசிறில்லாமல் வெட்டியெடுக்கப்பட்டது போல மன்னார்குடியின் ஆளுகைக்குள் தமிழகம் செல்வதைச் ஒத்துக் கொள்ள முடியவில்லை. முப்பதாண்டு காலம் ஜெவின் நிழலிலிருந்தபடியே தமிழகம் முழுக்கவும் அதிகாரத்தைச் செலுத்தியவர்கள் இப்பொழுது நேரடியாகக் களமிறங்க விரும்புகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனக்கு எல்லாவிதத்திலும் சகுனியாக இருப்பதை சசிகலா தரப்பு உணர்ந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் ஓ.பி.எஸ் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வார் என்று அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர் இடத்தைக் காலி செய்ய வேண்டிய அவசரம் அவர்களுக்கு. அப்படியே சசிகலா பதவி விலக வேண்டிய சூழல் வந்தாலும் திவாகரனுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ பதவியை கை மாற்றிக் கொடுத்துவிட்டு போய்விட வசதியாக இருக்கும். ஓ.பி.எஸ்ஸை விட்டுவிட்டு சிறைக்குச் சென்றால் கட்சியும் கைவிட்டுப் போய்விடும்; ஆட்சியும் கைவிட்டுப் போய்விடும்.

இன்னமும் சில நாட்களுக்கு இந்தக் கலவரங்கள் தொடரக் கூடும். எம்.எல்.ஏக்களை வளைத்து வைத்துக் கொண்டு ஆளுநரைத் தேடிச் சென்று கதறுவார்கள். குடியரசுத்தலைவரிடம் முறையிடுவார்கள். ஆரம்பத்தில் சைகை காட்டிய காங்கிரஸூம் இப்பொழுது அமைதியாக இருக்கிறது. இவர்களால் நினைத்ததை அவ்வளவு சீக்கிரமாகச் செய்து விட முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை ஆட்சியமைத்தாலும் கூட நடுக்கத்துடனயேதான் இருப்பார்கள். ஆட்சியும் கட்சியும் கிடைத்த உற்சாகத்தில் அதிரடியாக துள்ள முடியாது. இந்தச் சலனமெல்லாம் இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.

அந்தவிதத்தில் ஓ.பி.எஸ் மீது மிகப்பெரிய மரியாதை உண்டாகியிருக்கிறது. துணிந்து நின்றமைக்காக ஒரு மானசீகமான வணக்கம்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஓ.பி.எஸ் மீது மிகப்பெரிய மரியாதை உண்டாகியிருக்கிறது. துணிந்து நின்றமைக்காக//
என்னிடமிருந்தும் ஒரு மானசீகமான வணக்கம்.

அன்பே சிவம் said...

pala perriya kappalgal moozhgiya nilaiyil kidaiththiruppathu Siriya "thudupputhaan" eppdiyaavathu nan maklalin Nanmaiyai kurithu sinthippom,

சிங்கம் said...

//சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால்// இவ்வளவு நடந்தபிறகும் தீர்ப்பு அவருக்கு எதிராகத்தான் வருகிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அன்பே சிவம் said...

ஓ +