Feb 16, 2017

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்.

எங்களது தொகுதியைச் சார்ந்தவர் முக்கியமான  பள்ளிக்கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறைக்கு அமைச்சராக பதவியேற்பது குறித்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். வாழ்த்துகள்.

தங்களின் நீண்ட அரசியல் அனுபவத்தின் காரணமாக இனிவரும் காலத்தில் இத்துறையில் தேவையான சீரமைப்புகளைத் தங்களால் துரிதமாகச் செயல்படுத்த இயலும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தங்களின் துறையின் அமைச்சராக இருந்தவரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். அவரிடம் சில கோரிக்கைகளையும் முன் வைத்திருந்தேன். அதே கோரிக்கைகளையே தங்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன்.

கோரிக்கை 1 - பள்ளிக்கல்வித்துறை.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படுகிற நீட் தேர்வு குறித்தும் அதற்கான பயிற்சிகள், பயிற்சி வகுப்புகள் குறித்தும் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நிறையக் குழப்பங்களும் கேள்விகளும் இருக்கின்றன. நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசு தலையிட்டால் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு உதவியைச் செய்ய முடியும். 

அவசரகாலத்தில் செயல்படுத்த வேண்டிய பரிந்துரைகளாக பின்வருபனவற்றைச் சொல்லலாம்-
 1. குறைந்தபட்சம் மூன்றாண்டு காலத்திற்கு நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற உறுதியைப் பெற்றுத் தர வேண்டும்.
 2. தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை வகுப்பதையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தயார்படுத்துதலையும் இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் செயல்படுத்துவதற்கான உறுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 3. நீட் மாதிரியான தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும் போது கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளையும் அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளையும் குறித்தும் விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க உடனடியாக ஒரு குழுவை அமைக்கப்பட வேண்டும்.
 4. ஒருவேளை நீட் கட்டாயம் நடத்தப்படுமானால் பள்ளிகளின் பங்களிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி, பயிற்சி மையங்களின் தர நிர்ணயம், கட்டணத்தொகை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.
கோரிக்கை 2 - விளையாட்டு.

விளையாட்டைப் பொறுத்த வரைக்கும் தமிழகம் இன்றைக்கு இருப்பதைவிடவும் பன்மடங்கு திறமையை வெளிக்காட்டுவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் சூழலும் இங்கே இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தாங்கள் ஆய்வு நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
 1. தமிழகத்தின் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு ஒதுக்கப்படும் நேரமும் நிதியும் மிகக் குறைவானதாக இருக்கிறது.
 2. பெரும்பாலான அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, கல்வியியல் அதிகாரிகளுக்கும், DSO எனப்படும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
 3. மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, இலக்குகளை நோக்கிய பயணம் குறித்தான உரையாடலை மாதம் ஒருமுறையாவது அமைச்சர் நடத்தி முன்னேற்றங்களைக் கண்டுணர வேண்டும். இத்தகைய உரையாடல்களுக்கு காணொளிக் காட்சி வசதியை (video conferencing) பயன்படுத்தலாம்.
 4. இளம் வயது விளையாட்டு வீரர்களைக் கண்டறிதல், அவர்களுக்கான பயிற்சி ஆகியவற்றில் நாம் இன்னமும் மிகப்பெரிய இடைவெளிகளைக் கொண்டிருக்கிறோம் என்பதனை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இதில் சரியான பரிந்துரைகளைச் செய்யும் திறன் வாய்ந்த குழுவை அமைப்பது அவசியமாக இருக்கிறது.
கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்து நிறையைக் கோரிக்கைகள் இருக்கின்றன என்ற போதிலும் இவையிரண்டையும் மிக முக்கியமான கோரிக்கைகளாகக் கருதுகிறேன். இவை தவிர்த்து தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் உள்ளூர் சம்பந்தமான கோரிக்கை ஒன்றும் இருக்கிறது.

கோரிக்கை 3: உள்ளூர்.

கோபிச்செட்டிபாளையம் தொகுதி கரட்டுப்பாளையம் என்ற சிற்றூரில் தோராயமாக முந்நூறு கழைக்கூத்தாடிகள் வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகள் ஜிம்னாஸ்டிக்கில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு அனுமதிப்பதில்லை. பெற்றோர்களைச் சம்மதிக்க வைப்பதற்காகவும், அந்தக் குழந்தைகளை ஜிம்னாஸ்டிக்கில் சிறப்பாகச் செயல்படச் செய்வதற்காகவும் நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் வெவ்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் ‘க்ரூப் இன்சூரன்ஸ்’ எடுத்துக் கொடுப்பதிலிருந்து, வெளி மாநிலப் போட்டிகளுக்குச் சென்று வருவதற்காக ஸ்பான்சர்ஷிப் வழங்குவது வரையிலும் பல பணிகள் நடைபெறுகின்றன. அவர்களை ஒலிம்பிக் வரை கொண்டு செல்வது என்பது அடிப்படையான லட்சியமாக இருக்கிறது. அரசாங்கமும் கரட்டுப்பாளையத்தில் ஒரு பயிற்சியாளரை நியமித்து பயிற்சி வழங்குகிறது. ஆயினும் மேற்கொண்டு ஒன்றிரண்டு உதவிகளைச் செய்து கொடுத்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
 1. மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான சில கருவிகள் இல்லாமல் இருக்கின்றன.
 2. உள்ளூரில் தரமான உள்ளரங்கம் இல்லை.
 3. தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் சொற்பமான ஒரு நாள் படியை சற்றே அதிகப்படுத்தித் தர இயன்றால் பயனுடையதாக இருக்கும்.
இன்னும் சற்றே முயற்சித்தால் தமிழகத்திலிருந்தும் ஒலிம்பிக் வெற்றியாளர்களை உருவாக்கிவிட முடியும். நம்பிக்கை இருக்கிறது. முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் திரு.கந்தசாமி அவர்களின் வழியாக தங்களைச் சந்தித்து கரட்டுப்பாளையம் குறித்தான கோரிக்கை குறித்து விரிவாகப் பேசுகிறேன்.

செயல்படக் கூடிய அதிகாரிகளையும் சிறப்பான ஆலோசனைகளைச் சொல்லக் கூடிய அறிவுஜீவிகளையும் தமிழகம் கொண்டிருக்கிறது என்பதில் மறுப்புக் கருத்து ஏதுமில்லை. ஆனால் மேற்சொன்ன ஆலோசனைகளை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இவற்றை சாமானிய மனிதனின் குரலாக ஏற்றுக் கொண்டு ஆவன செய்யும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளின் நகல்கள் தமிழக முதல்வருக்கும், மாநில தலைமைச் செயலாளருக்கும் தூதஞ்சலில் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகம் கல்வியிலும், விளையாட்டிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த தனிப்பட்ட பலன்களையும் இந்த விண்ணப்பத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முன்வைக்கவில்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களிடம் இந்த கோரிக்கைகளை பணிந்து முன்வைக்கிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
வா.மணிகண்டன்.

(பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பதவியேற்கும் மாண்புமிகு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு இந்தக் கோரிக்கை மனுவை அனுப்பி வைக்கிறேன்)

3 எதிர் சப்தங்கள்:

Senthil Prabu said...

முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Pari said...

இது அனேகமாக புதிதாக பதவியேற்றுள்ள அரசு எதிர்கொள்ளும் முதல் கோரிக்கை மனுவாக இருக்கலாம். அதற்காகவேனும் இது முக்கியத்துவம் பெற வேண்டும். வேகமாக செயல்பட்டமைக்கு வாழ்த்துக்கள்:)

இம்மாதிரி எவ்வித தனிப்பட்ட எதிர்பார்ப்புமில்லாத நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் அதிகாரத்தின் மனசாட்சியை தொட்டுப் பார்க்கும் என்கிற நம்பிக்கை மனுவை படிக்கும்போதே வருகிறது.

இன்றைக்கு சாமானியனுக்கு அரசின்மீது இருக்கும் முக்கியமான விமர்சனம், தன்குரல் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படுவதில்லை என்பதே. இம்மாதிரி கோரிக்கைகளை சரியாக பரிசீலிப்பதன் மூலம் அவ்விமர்சனத்தை ஓரளவேனும் போக்கிக் கொள்ள புதிய அரசு முயலும் என எதிர்பார்க்கிறேன்.

அன்பே சிவம் said...

தங்கள் நம்பிக்கை வென்றிட வாழ்த்துகள். இது போல அனைத்து துறை அமைச்சர்களுக்கும் நமது கோரிக்கைகளை பதிந்து நம் பணியாளர்களை பணி 'பு ரி ய' சொல்வோம்.