கடலூர் சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளம் வந்த போது தன்னார்வக்குழுக்கள் நிறைய களமிறங்கின. வாழை அமைப்பும் ஒன்று. வாழை பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தில் மிக நேர்மையாகச் செயலாற்றக் கூடிய தன்னார்வக் குழுக்களில் முதன்மையானது. பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளில் தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வழிகாட்டியை நியமிக்கிறார்கள். வழிகாட்டிதான் மாணவனின் வளர்ச்சிக்குப் பொறுப்பு. பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் இதைச் செய்து வருகிறார்கள். குவாரிகளில் கல் உடைக்கிறவர்களின் பிள்ளைகள், பிழைப்புக்காக வெகுதூரம் சென்றவர்களின் குழந்தைகள் என தேர்ந்தெடுத்து படிப்பைத் தொடரச் செய்து பலரையும் சரியான இடத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதில் வாழையின் பங்கு மிக முக்கியமானது.
நம் ஊரில் ஊடகங்களுக்கும் அதிகாரமட்டத்தில் கோலோச்சுகிறவர்களுக்கும் வாழை மாதிரியான அமைப்புகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஜிகினா வேலை செய்கிறவர்களைத்தான் மேடையேற்றி புகழ்வார்கள். வசூலித்த பணத்தை சப்தமில்லாமல் சுருட்டிக் கொள்கிறவர்கள்தான் இங்கே தன்னார்வலர்களாக கொடி பறக்கவிடுவார்கள். ஆனால் வாழை அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. தமது சாதனைகளை அவர்கள் சாதனைகள் என்று கூடக் கருதுவதில்லை. ‘நம்ம சமூகத்திற்கு செய்ய வேண்டியது நம் கடமையில்லையா?’ என்று கேட்டுவிட்டுக் கடந்து போய்விடுகிற தங்கங்கள். புகழ்ச்சிக்காக இந்தச் சொற்களைச் சொல்லவில்லை. அவர்களை வெகு அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். மனப்பூர்வமாகப் பாராட்டலாம்.
நிசப்தம் சார்பில் தற்சமயம் ஆரம்பித்திருக்கும் ‘Mentoring' என்ற செயல்பாடு கூட வாழை அமைப்பின் செயல்பாட்டினை பார்த்து உண்டான உந்துதல்தான். ஒன்றிரண்டு முறை அவர்களோடு முகாமுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் அளவுக்கு இயலாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவுக்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும் என அப்பொழுது தோன்றிய எண்ணம் இப்பொழுதுதான் மெல்ல செயல்வடிவத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
வாழை அமைப்பினர் வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வசூல் செய்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் பெருந்தொகை கிடைத்திருக்கிறது. பெயர் சொல்ல வேண்டியதில்லை- இப்படி வசூலான தொகையில் சொற்பத்தைச் செலவு செய்துவிட்டு மிச்சத்தையெல்லாம் வழித்து வாயில் போட்டுக் கொண்டு மூச்சு கூட விடாத தன்னார்வக் குழுக்கள்தான் இங்கே அதிகம். வாழை அப்படியில்லை. ஏற்கனவே சொன்னது போல வாழை அப்படியில்லை. ‘இதை ஏதாச்சும் உருப்படியா செய்வோம்’ என்று யோசித்ததன் விளைவாக நாஞ்சலூர் என்ற கிராமப் பள்ளியை அடையாளம் கண்டறிந்திருக்கிறார்கள்.
மேற்கூரையும் சுவரும் பழுதாகி இடிந்து விழுந்துவிடக் கூடிய சூழலில் இருந்த ஆதி திராவிடர் அரசுப் பள்ளி அது. பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடமாகவே கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திட்ட மதிப்பீடு பதினான்கு லட்சம். வசூலில் மீதமாகியிருந்த எட்டு லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டார்கள். திரு.பத்மநாபன் என்கிற நல்லவர் இரண்டு லட்சத்தைக் கொடுத்திருக்கிறார். அப்படியும் நான்கு லட்சம் தேவைப்படுகிறது அல்லவா? அதற்கும் அவர்களே ஒரு தன்னார்வலரைக் கண்டுபிடித்துவிட்டார்கள். திரு.பாபு பத்மநாபன். அவரே மொத்தமாக நான்கு லட்சத்தைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தச் செயல்பாட்டில் வாழை அமைப்பினரைத்தான் முழுமையாகப் பாராட்ட வேண்டும். இவ்வளவு நேர்த்தியான திட்டமிடலும் செயல்படுத்துதலும் வியக்க வைக்கிறது. வாழை மாதிரி இன்னும் நூறு அமைப்புகள் தமிழகத்தில் உருவாக வேண்டும். ஆயிரக்கணக்கானவர்களுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். இத்தகைய தன்னலமில்லாத இளைஞர்கள் திரண்டு அடுத்த தலைமுறையைக் கைபிடித்து மேலே தூக்கிவிட வேண்டும். இனி வருங்காலத்தில் உருவாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
திங்கட்கிழமையன்று (14.02.2016) அரசியல் நிலவரத்தின் காரணமாக தமிழகமே திமிலோகப்பட்டுக் கொண்டிருக்க சப்தமேயில்லாம பாபு நிசப்தம் அறக்கட்டளைக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். ‘பணம் வந்துடுச்சா’ என்று கூட கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு பக்கம் பணம் குறித்தான அற்பமான காரணங்களுக்காக மனிதர்கள் எலியும் பூனையுமாக மாறி பற்களை இளித்து பழிப்புக் காட்டிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்?
உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.
இத்தனைக்கும் நாஞ்சலூருக்கும் இவர்களுக்கும் சம்பந்தமேயில்லை. பணம் இருக்கிறது; சரியான இடம் வேண்டும்- இது மட்டும்தான் எண்ணமாக இருந்திருக்கிறது. தேடிப் பிடிக்கிறார்கள். அரசிடம் முறையாக அனுமதி வாங்குகிறார்கள். அரசு அனுமதி தந்துவிட சரியான ஒப்பந்ததாரரைக் கண்டறிந்து அவரிடம் ஒரு ஒப்பந்தம் எழுதி முறைப்படி கையொப்பம் பெற்றுவிட்டு வேலையைத் தொடங்குகிறார்கள். நான்கு லட்சம் வேண்டும் என்றவுடன் நன்கொடையாளரைத் தேடுகிறார்கள். ‘நல்ல காரியத்துக்குத்தானே? தந்துவிடுகிறேன்’ என்று அள்ளிக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலை இன்று வாழை அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். கனவேகத்தில் பள்ளி வேலை நடைபெறுகிறது. விரைவாக முடித்து ஒப்படைத்துவிடுவார்கள். வாழைக்கு வாழ்த்துக்கள். வாழைக்கு உறுதுணையாக நிற்கும் பத்மனாபன், பாபு பத்மனாபன் உள்ளிட்ட நன்கொடையாளர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும். உங்களைப் போன்றவர்களுக்காகவாவது தமிழகத்தில் மழை பெய்து வறட்சி நீங்கட்டும்!
6 எதிர் சப்தங்கள்:
இது போன்ற செய்திகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது..உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
வருத்தம் என்னவென்றால்... இதுபோன்ற அரசு பள்ளிகளை புதுபிக்க தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் மட்டுமே முயற்சி செய்கின்றனர்..அரசு மற்றும் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்.....தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் இல்லையென்றால் இதுபோன்ற பள்ளிகளின் நிலைமை என்னாகும்...? இதுபோன்ற பள்ளிகளை நம்பியுள்ள குழந்தைகளின் படிப்பு என்னாகும் ...? இதையெல்லாம் நினைக்கும்போது மிகவும் வருத்தமாகஉள்ளது!
திருமாறன்
வாழையடி வாழையென தொடரட்டும் மனித நேயம்.
http://www.vazhai.org/
https://www.youtube.com/watch?v=xTl6MJTzWlY
உணவு பழக்க வழக்கம், இயற்க்கை மருத்துவம் மற்றும் விவசாயம் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது மிக மிக அவசியம்.
குறந்தபட்சம் அவர்களுக்கு இந்த அறிமுகத்தை / அறிவை கொடுத்துவிட்டால் என்றேனும் அவர்களுக்கு அது பயன்படும்.
தற்போதுள்ள கல்வி முறையினால் ஒவ்வொரு வகுப்பை கடக்கும் போதும் மாணவர்கள் வேர்களை விட்டு விலகி செல்லும் படியான சூழ்நிலையே உள்ளது.
இதுபோன்ற அறிய பல சேவைகளை செய்யும் வாழை அமைப்புக்கும் இதற்க்கு உதவி செய்யும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கும் எனது மகிழ்ச்சியுடன் நன்றி கலந்த பாராட்டுகளும் வணக்கங்களும்.
மகத்தான பணி வாழை மற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள் ..
Post a Comment