Feb 17, 2017

இன்றைய சுதேசி

ஜீவகரிகாலனின்  ‘அது ஒரு கனவு மட்டுமே’ சிறுகதை கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரசுரம் செய்யப்பட்டது. அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்தக் கதையை சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதாகவும் அவை பிரசுரமாகவில்லை என்றும் சொன்னார். கதை எனக்கு பிடித்தமானதாக இருந்தது. பரீட்சார்த்தமான முயற்சி அது. ‘நிசப்தத்தில் பிரசுரிக்கட்டுமா?’ என்றேன். பல எழுத்தாளர்களுக்கும் தமது படைப்புகள் இணையத்தில் வெளியாவதைவிடவும் அச்சு ஊடகத்தில் வருவதுதான் பிடித்தமானதாக இருக்கும். அதனால் தயக்கத்துடனேயே கேட்டேன். அவர் சரி என்று சொல்லிவிட்டார்.

இன்று வரை அந்தக் கதைக்கு மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் கரிகாலனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். எழுதுகிறவர்களுக்கு அதுதானே பெரிய அங்கீகாரம்?

கதையைப் பிரசுரிக்கும் போது கேள்விகள், மாற்றுக் கருத்துக்கள், மறுப்புகள் என வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருந்தது. அவற்றுக்கு எழுத்தாளரையே பதில் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பாராட்டுகள்தான். இல்லையெனில் அவற்றையெல்லாம் பிரசுரம் செய்து கரிகாலனை பழிவாங்கியிருக்கலாம்.

ஜீவகரிகாலன் அறிமுகமான சமயத்தில் சுதேசி இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டவராக இருந்தார். அந்நியத் துணிகளை பகிஷ்கரிப்போம் என்று முழங்குகிற ஆளாக இருந்தார். இன்றைக்கு அதிலிருந்து பெருமளவில் விலகி தமிழ் தேசியம் பேசுகிறவராக உருமாறியிருக்கிறார். எழுத்து, வாசிப்பு என்று இயங்கிக் கொண்டிருக்கிறவர்கள் பல்வேறுவிதமான கருத்துக்களை உள்வாங்குவதும் அதன் வழியாக தம்மை மாற்றிக் கொள்வது இயல்பானதுதான். மனதளவில் மாறியிருந்தாலும் புற உலகில் தம்மை இறுக்கமானவராகக் காட்டிக் கொண்டு ‘நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்’ என்று வளையாமல் நிற்கும் போதுதான் எழுத்தாளனின் எழுத்து நீர்த்துப் போகிறது. 

கதைகள் குறித்தான கருத்துகளுக்கு கரிகாலன் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார். சுதேசி இயக்கம் குறித்தான விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். 

இனி தொடர்ச்சியாக பிறரது எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றை நிசப்தத்தில் பதிவு செய்யலாம் என்கிற யோசனையும் இருக்கிறது.

                                                          ***
‘அது ஒரு கனவு மட்டுமே’ கதை குறித்து வெளியாகியிருக்கும் கருத்துகளும் நீங்கள் அனுப்பி வைத்திருந்த மின்னஞ்சல்களும் மகிழ்வாக உணரச் செய்கின்றன.

இந்தக் கதையை நான் DEMONITISATION நடப்பதற்கும் முன்பாகவே எழுதியிருந்தேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகான காலத்தில் பார்த்தால், இத்தனை தொடர்ச்சியான குழப்பங்கள் கடந்த நவம்பருக்கு முன்பு வரைக்குமான காலகட்டத்தில் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு அரங்கேறிய இந்த குழப்பங்களுக்குள் என்னை நானே புகுத்திக்கொண்டது நிஜம். 

நான் சிறுகதைகள் எழுதியது கடைசியாக 2014. அதற்கடுத்ததாக எழுதிய கதை செப்டம்பர் 2016ல்- இந்தக் கதை. இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

அடிப்படையில் எழுத்து, வாசிப்பு என நான் உந்தப்பட காரணமாக இருந்தது ஒரு வலதுசாரி இயக்கத்தின் அங்கமான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகள்தான். அவற்றின் பால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் இணைந்து கொண்டேன். அப்போது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய செலவாணிக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து இயற்கை விவசாயம், தொழிற்சாலை கழிவுகளுக்கான எதிர்ப்பு, குடிநீர் உரிமை, புதிய தொழில்முனைவோர்கள் ஊக்குவிப்பு என்று சென்று கொண்டிருந்தது. 

பத்ரி ஷேசாத்ரி, ஜோ டீ க்ரூஸ், நம்மாழ்வார், ஜெயமோகன் என ஏற்கனவே அறியப்பட்ட பிரபலங்களோடு நானும் அவர்கள் நடத்திய இதழில் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இயங்கி வந்துள்ளேன். ஒரு கட்டத்தில் எனது சுதேசியக் கட்டுரைகளுக்கு வரவேற்புக் கிட்டவே, எனது வாழ்வியல் முறையும் அவ்வாறே இருந்தது, எனது நுகர்வுத்தன்மையே மாறியிருந்தது. அப்படி எழுதிய முக்கியமான கட்டுரைகளில் கவர் ஸ்டோரியாக வெளிவந்த ஆதார் கார்டு கட்டுரையும் இந்த கதைக்கு காரணமாக இருப்பதை நீங்கள் இப்போது உணரலாம்.

ஒரு கட்டத்தில் ஈழப்படுகொலை குறித்த தமிழர்களின் உணர்வுற்கு அவ்வியக்கம் எந்தவித மதிப்பும் தராமல் போகவே விலகிக்கொண்டேன். ஆனால் இன்றளவும் நான் மதிக்கும் மிக நல்ல மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். பலர் என்மீது கோபத்துடன் இருக்கிறார்கள். சிலர் எனக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட 2014ம் வருடத்தில் நான் கதைகள் எழுதுவதை நிறுத்தியது ஒரு தற்செயலான முடிவு. அதாவது என் புத்தகம் வெளிவரும் என்று ஆவலுடன் காத்திருந்த காலக்கட்டம். ஆனால் வெளிவந்தது 2016 ஆகஸ்ட்டில். அதற்குள் அகவெளியில் எனக்கு புதிய நட்புகள் கிடைத்து மறைந்தன. புதிய குருபீடம் ஏற்றுத் துரத்தியது. புதியவையாக இருந்தவை யாவுமே பழையதானது.

புற உலகில் – தற்செயலாக நான் கதைகள் எழுதுவதையும், பெரும்பாலும் மற்ற கட்டுரைகள் எழுதுவதைக் கூட பெருமளவு குறைத்துக் கொண்ட காலம் 2014 தான். மே மாதத்தின் இறுதியில் மத்திய அரசு மாறியது, அதை மாற்றமென நம்பியே நானும் வாக்களித்தேன். இதற்கு முன் பேசிய கொள்கைகள் implement செய்யப்படும் என்று நம்பினேன். அதற்கு முற்றிலும் 180 டிகிரி எதிர்புறம் நின்று ஆளும் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுடனும், பன்னாட்டு வணிகர்களுடனும் கைகோர்த்து நின்று செயல்பட ஆரம்பித்தது.

ஆதர்ஷமாக நான் நம்பிக்கொண்டிருந்த திரு.குருமூர்த்தி போன்றோர்கள் முதன்முதலாக மேற்குலக பொருளாதாரத்தின் சார்பாளராக மாறினார். அவருக்கும் எம்.எஸ்.ஸ்வாமிநாதனுக்கும் பெரிய வித்தியாசமற்றுப் போனது. ஒற்றை தேசிய அடையாளம் என்கிற குறியீடு கூட தமிழகம் மீது பாரபட்சம் காட்டிடவே செய்தது. சுதேசியம் என்ற பெயரில் நடைபெறுவது எல்லாமே மாயை என்று புரிந்துகொண்டேன். அதற்கு மாற்றாக வைக்கின்ற மற்ற சித்தாந்தங்களும் அந்த சித்தாந்தவாதிகளால் பிழைப்பிற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நான் ஒன்றும் முதலீட்டியத்திற்கு எதிரியல்ல என்றாலும், சூழலைக் கெடுக்கும், உள்ளூர் சந்தையை நசுக்கும், நுகர்வுத்தன்மையை போஷிக்கும், சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களை நசுக்கும் பெரு நிறுவனங்களுடன் உடன்போக்கிருந்தால் அதை எதிர்க்கவே செய்வேன். ஆனால் தனிமனிதனாக என்ன செய்ய முடியும், ஒரு கலைவடிவம் அதற்கான வடிகாலாய் இருக்கிறது. ஆனால் என் கதைகளை பிரசுரிப்பது என்பது வேறு ஒரு பிரச்சினையாகப் போய்விட்டது.

சில மாதங்களுக்கு முன்பே அந்த கதை வெளிவந்திருந்தால் நல்லா இருக்கும் என்று என் நண்பர்கள் சொல்லும்போது, தங்களிடம் இது பற்றித் தெரிவித்தேன். பிறகு நடந்தவை யாவும் சுபமே. 

2016ல் கதைகள் எழுதும்போது முழுமையாய் என்னுள் அரசியல் இருக்கின்றது, அழகியலுக்கான, ஆன்மீகத்திற்கான எனது சொந்த கருத்துகள் மாறிவிட்டன.

இந்தக் கதையில் வரும் கனவுப் பிரச்சினை எனது நெருங்கிய நண்பனுக்கு இருந்தது. செல்போன் உருவாக்கிய நட்புகளின் நெருக்கம் ஒரு கட்டத்தில் மிக மிக நெருக்கமாகும்போது பயத்தையும் உருவாக்கிறது. சமூகம், தொழிற்நுட்பம், உறவு, சித்தாந்தம், அழகியல் என்கிற எல்லாவற்றிலும் எழுகின்ற தனித்தனி பயங்கள் தான் இந்தக் கதையே.

கருத்திட்ட அனைவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
ஜீவகரிகாலன்.

1 எதிர் சப்தங்கள்:

Karthik.vk said...

I salute this article .becoz it provides board required knowledge about current politics and globalized world.I expect more these kind of article sir