Feb 19, 2017

அம்மாவும் மகனும்

கடந்த வாரம் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு நிகழ்ச்சி. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதின் நாவல் குறித்தான உரையாடல் நிகழ்ந்தது. பால நந்தகுமார், தீபலட்சுமி, ஷான் கருப்பசாமி உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இன்னமும் சிலரும் பேசினார்கள். ஆனால் இவர்கள் மூவரும் பேசியதைத்தான் கேட்க முடிந்தது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேட்டிலிருந்து பெங்களூருக்கு பேருந்து பிடிப்பது பெரும்பாடாக இருக்கிறது. முந்நூற்று அறுபது ரூபாய் டிக்கெட். ஆனால் பெரும்பாலான பேருந்துகள் நிரம்பிவிடுகின்றன. ‘நானூறு கொடுங்க சார்...ஆனா பின்னாடி சீட்தான்’ என்று சில நடத்துநர்கள் கேட்பார்கள். நாற்பது ரூபாய் அவர்களுக்கு. ‘லஞ்சமெல்லாம் கொடுக்க மாட்டேன்’ என்று வீராப்பு பேசினால் பல பேருந்துகள் கழித்துதான் ஏதாவது சிக்குகிறது. அதனால் என்ன வேலை இருந்தாலும் எட்டு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு ஓடி வந்துவிடுகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து மீது எப்பொழுதும் ஆர்வம் இருந்து கொண்டேயிருக்கிறது. நெடுங்குருதி, இடக்கை, சஞ்சாரம் போன்றவை கட்டிப் போடுகின்ற எழுத்துக்கள். அவரது புத்தகம் குறித்தான கூட்டம் எனத் தெரிந்தவுடனயே எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தேன். பதின் நாவலை இன்னமும் வாசிக்கவில்லை. பதின்பருவத்தில் நடைபெறுகின்ற சம்பவங்களின் கோர்வைதான் இந்த நாவல் என்று உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது. 

மலைச்சொல் இலக்கிய அமைப்பை நடத்துகிற ஊட்டிக்காரரான பாலநந்தகுமார் அருமையாகப் பேசினார். நாவலைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப்பார்வையையும் தமது பால்ய அனுபவங்களையும் கோர்த்து சுவாரசியமாக பேசிக் கொண்டே போனார். அவர் எப்பொழுதுமே அப்படித்தான். பேசிக் கொண்டேயிருப்பார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்திருந்த போது பால நந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டேயிருந்தார். அவர் மட்டும்தான் பேசினார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். 

நேற்று பரப்பன அக்ரஹாராவிற்குச் சென்றிருந்தேன். கரைவேட்டிகள் நிறைந்திருப்பார்கள் என்றுதான் எதிர்பார்ப்பிருந்தது. ம்ஹூம். காக்கா குருவியைக் கூட காணவில்லை. சரி அதைத் தனியாகப் பேசிக் கொள்ளலாம்.

பாலநந்தகுமார் சிலாகித்த நாவலின் சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒரு பையனுக்கு முதல் பெண் ஸ்பரிசம் என்றால் அது அம்மாவிடம் இருந்துதான்’ என்றார். அது தவறான அர்த்தத்தில் இல்லை. புரியாத புதிர்தானே பதின்பருவம் என்பது?  காமமும் உடல் கிளர்ச்சியும்  விழித்துக் கொள்கிற வயது அது. ஏதோ பரபரப்பும் குழப்பமும் மனம் பூராவும் வியாபித்துக் கிடக்கும். உடல் பற்றிய அவனது கேள்விகள் அலை மோதிச் சிதறுகிற தருணம் அது. அப்பாவிடமும் இருக்கும் வாசனைதான் அவன் உணர்கிற முதல் ஆணின் வாசனை என்றால் அம்மாவின் வாசனைதான் அவன் உணர்கிற முதல் பெண்ணின் வாசனை. அம்மாவுக்கும் பதின்பருவ மகனுக்குமான பந்தம் விசித்திரமானது. அதை அழகாகச் சுட்டிக்காட்டினார்.

பதின் நாவலில் ஓரிடம் வருகிறது- அம்மாவின் அருகாமையில் படுத்துக் கொண்டிருக்கும் மகனின் பரிதவிப்பும் அதை லாவகமாகத் தடுக்கும் அம்மாவும்தான் அந்தக் காட்சி. சில வருடங்களுக்கு முன்பாக மிகுபோதையிலிருந்த கவிஞர் ஒருவர் இத்தகைய மனநிலை பற்றி பேசினார். நான் எதுவும் பேசவில்லை. ஆனால் இதையெல்லாம் தமிழ் இலக்கியத்தில் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

நாவலின் ஒரேயொரு காட்சிதான் இது என்றாலும் பதின் கூட்டத்தில் பாலா பேசி முடித்த பிறகும் இந்தக் கேள்விதான் மனதுக்குள் குடைந்து கொண்டேயிருந்தது. அதற்கு சமீபத்தில் பார்த்த திரைப்படமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். Labor day. அடிக்கடி திரைப்படங்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் எழுதுவதில் ஒரு மிகப்பெரிய சாதகம் இருக்கிறது. ‘இவனுக்கு இதுல இண்டரஸ்ட் போலிருக்கு’ என சிறந்த படங்களையும் புத்தகங்களையும் யாராவது அடையாளம் காட்டிக் கொண்டேயிருப்பார்கள். சங்கர் என்பவர் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார். 

அம்மாவும் மகனும் தனியாக இருக்கிறார்கள். பையனுக்கு பதின்பருவம். அவனது வாலிபம் விழிக்கத் தொடங்கியிருக்கிறது. அம்மா, தனது மகனுக்கு உடல், ஸ்பரிசம் பற்றியெல்லாம் வெளிப்படையாகச் சொல்லித் தருகிறாள். அவளைத் தனிமை வாட்டுகிறது என்பதை மகன் புரிந்து வைத்திருக்கிறான். அவளை டேட்டிங் கூட அழைத்துச் செல்கிறான். அவள் அவனுக்கு நடனம் கற்றுத் தருகிறாள். ஆனால் தனது போதாமையை அவன் உணர்ந்து கொள்கிறான்.

ஒரு நாள் அம்மாவும் மகனும் கடைக்குச் செல்லும் போது ஒரு முரட்டு ஆடவன் அவர்களுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறான். தனது மனைவியைக் கொன்றதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறவன் அவன். சிறையிலிருந்து தப்பித்திருக்கிறான். அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயங்குகிறார்கள். ஆனால் அவன் மிரட்டுகிறான். ஒத்துக் கொள்கிறார்கள். அங்கே அவளுக்கும் அவனுக்குமான காதல் பூக்கிறது. அவனும் அவளும் படுக்கையறையில் முயங்கும் போது முனகுவதைக் மகன் கேட்கிறான். அவன் மனம் அலை மோதுகிறது. முதலில் அம்மா சற்றே தயங்குகிறாள். ஆனால் அவர்கள் இருவரும் அந்நியோன்யமாகிறார்கள்.  ‘செக்ஸ் கண்ணை மறைச்சுடும்..உன்னை விட்டுட்டு போய்டுவாங்க’ என்று மகனை அவனது வகுப்புத் தோழி பயமூட்டுகிறாள். அவன் கசிகிறான்.

இப்படியானதொரு எமோஷனல் படமொன்றை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. அம்மாவுக்கும் மகனுக்குமான பந்தம், அம்மாவின் தனிமை, அவளுக்கு வேறொருவனுடன் உண்டாகும் காதலும் ஸ்பரிஸமும், அதை எதிர்கொள்ளும் மகன், மகனை எதிர்கொள்ளும் அம்மா என்று எல்லாவிதத்திலும் சென்ஸிடிவான ஆனால் அதே சமயம் அவ்வளவு நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார்கள். கேட் வின்ஸ்லெட்தான் நாயகி. பட்டையைக் கிளப்புகிறார்.எவ்வளவு அழகு?


பதின் நாவல் பற்றிய உரையாடலும் Labor day படத்தை பார்க்கும் வாய்ப்பும் அடுத்தடுத்த சில நாட்களில் அமைந்தன. ஏதோவொரு வகையில் இரண்டுக்கும் சம்பந்தமிருப்பதாகத் தோன்றியது. 

நம்மால் சொல்ல முடியாததை அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றை நாசூக்காகவும் அழகாகவும் பதியச் செய்கிற ஒரு படைப்பு வாசகனையும் பார்வையாளனையும் வென்றுவிடுகிறது. லேபர் டே வென்றுவிடுகிறது. பதின் நாவலை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

லேபர் டே படம் பற்றிய உரையாடல்கள் இணையத்தில் இருக்கின்றன. வாசித்துப் பார்க்கலாம்.

உரையாடலின் காணொளிகள் இணைப்பில் இருக்கின்றன.

2 எதிர் சப்தங்கள்:

Udayashankar said...

மணி, ஜெயகாந்தனின் ரிஷி மூலம் படித்திருப்பீர்கள் அல்லவா ? அவர் இந்த 'subject' -ஐத் தொட்டிருப்பார்.

Karthik.vk said...

வெளிப்படையாக பேசுகின்ற சமூகமே தன்னை மறு பரிசீலனை செய்து கொண்டிருக்கும் சமூகம்...இதனை வாசிக்கின்ற போது சுந்தர ராமசாமி எங்கோ " சினிமா வார்த்தையை தமிழுடன் சேர்த்தால் தீக்குளிப்பேன் என்று சொல்லும் வாசகர்கள்" என்று சொன்னது நினைவிற்கு வருகிறது..வாழ்த்துகள் அண்ணா...