Feb 2, 2017

லாரன்ஸூகளும் பாலாஜிகளும்

ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாகத் தொடங்கப்பட்ட இளைஞர் போராட்டமானது கடைசியில் ஊசி குத்தப்பட்ட பலூனைப் போல காட்சியளிக்கச் செய்ததில் ஹிப்ஹாப் ஆதி, ராகவா லாரன்ஸ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டவர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. முதல்வர் டெல்லியிலிருந்து திரும்பியவுடன் போராட்டம் முடிவுற வேண்டும் என்றுதான் பலரைப் போலவேதான் நானும் விரும்பினேன். ஆனால் அதன் மாண்பைக் குலைத்ததில் குபீர் தலைவர்கள்தான் முன்னணியில் நின்றார்கள்.  ஆதியையும், லாரன்ஸையும், பாலாஜியையும்தான் ஊடகங்கள் முன்னிறுத்தின. இவர்கள்தான் தலைவர்கள் என்பது போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. இவர்களே முடித்து வைத்தது போன்று காட்டிக் கொண்டார்கள். 

சினிமாக்காரர்கள் மீது தனிப்பட்ட விரோதமெல்லாம் எதுவுமில்லை. பங்காளித் தகராறுமில்லை; வாய்க்கால் தகராறுமில்லை. உண்மையிலேயே சமூகம் குறித்தான ஆர்வம் இருப்பின் களமிறங்கட்டும். தலைவர்களாகக் கூட தலையெடுக்கட்டும். தவறேதுமில்லை. ஆனால் சற்றேனும் நம் மண் குறித்தும், மக்கள் குறித்தும், சமூகத்தின் இண்டு இடுக்குகள் குறித்தும் அடிப்படையான புரிதல் இருக்க வேண்டும். இங்கே நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய தெளிவு வேண்டும். அதெல்லாம் எதுவுமில்லாமல் அரைவேக்காட்டுத்தனமான சினிமாக் கவர்ச்சியையும் நாயக பிம்பத்தையும் உணர்ச்சியூட்டும் வார்த்தைகளையும் வைத்துக் கொண்டு தம்மால் புரட்சியை உண்டாக்கிவிட முடியும் என்று லாரன்ஸூகளும் பாலாஜிக்களும் நம்புவதையும் அதை வெட்கமேயில்லாமல் வெளிப்படையாகப் பேசுவதையும்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது சித்தார்த்தும் ஆர்.ஜே.பாலாஜியும் களமிறங்கி வேலை செய்தார்கள். நம்முடைய இணைய சமூகம் அடுத்த தலைமுறையின் விடிவெள்ளிகளாக இவர்களைப் பார்த்தது. மைக்ரோ சென்னை என்ற அந்த அமைப்புக்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் நிதி வந்ததாகச் சொன்னார்கள். இது துல்லியமான கணக்கு இல்லை. ஏறக்குறைய இருக்கலாம். அந்தத் தொகையில் வெள்ள நிவாரணத்துக்கு என எவ்வளவு செலவிடப்பட்டது? மிச்சமான தொகை எவ்வளவு? அதை என்ன செய்தார்கள் என்ற கணக்கு ஏதேனும் இருக்கிறதா? 

இதை எழுதவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ‘இவன் யோக்கியமாம்..அதனால அடுத்தவனைக் கேள்வி கேட்கிறான்’ என்றோ ‘இவனுக்கு பொறாமை’ என்றோ விமர்சனங்கள் எழக் கூடும். ஆனால் இப்படியெல்லாம் கண்டதையும் யோசித்து மனதில் பட்டதை கேட்காமல் இருக்க வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது.

இவர்களைப் போன்ற ஊடகச் செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் அறக்கட்டளை ஆரம்பித்து பணத்தை வசூலித்து செலவு செய்துவிட்டு மறந்தும் போய்விடுவார்கள். ஆனால் அதன் பிறகு வருகிற எளிய மனிதர்கள் மனப்பூர்வமாக ஓர் அறக்கட்டளை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால் நொந்து போய்விட வேண்டும். வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குக் கூட விழி பிதுங்கும். ‘முக்கால்வாசி ட்ரஸ்ட்டு ஃப்ராடுதான் சார்...இன்கம்டாக்ஸ்ல எங்களை குடைவாங்க’ என்று சொல்லாமல் முகத்தைச் சுளிக்காமல் வங்கிக்காரர்கள் கணக்குத் தொடங்க அனுமதிப்பதேயில்லை. சித்தார்த்-பாலாஜியின் செயல்பாடுகள் மீதும் கணக்கு வழக்கு மீதும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் வெளிப்படையாகச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த களத்திற்கு வாருங்கள் என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. சித்தார்த் போல அமைதியாக இருந்தால் கிளற வேண்டியதில்லை. அவர்களை நம்பி யாரோ பணம் கொடுத்தார்கள். கொடுத்தவர்கள் கேட்டுக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மைக் பிடித்து நம் இளைய சமூகத்துக்கு லாந்தர் விளக்கே நான்தான் என்று பாலாஜி பேசும் போது ‘அண்ணே சந்தேகத்தை தீர்த்துட்டு விளக்கை பிடிங்கண்ணே’ என்று கேட்பதில் தவறில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பாலாஜி அப்படியென்றால் லாரன்ஸ் வியாபாரப் புலி. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவதாக’ எழுதியிருக்கிறார். யாருடைய தேவைக்கு என்றுதான் தெரியவில்லை. அரசியலுக்கு வந்து இளைஞர்களுக்கு முதுகெலும்பாக இருப்பாராம். நல்லது. ஆனால் நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வந்து சேரவில்லை. அப்துல்கலாமின் அடிச்சுவட்டில் என்று நூறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து சமூகப் பணிகளுக்குச் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். வாரம் பத்து இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விகடனில் நான்கைந்து பக்கங்களை ஒதுக்கினார்கள். விகடனில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்ய எவ்வளவு பணம் தர வேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை. பத்து வாரங்கள்- கிட்டத்தட்ட நாற்பது பக்கங்கள். இது தவிர திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் அட்டையைக் கூட லாரன்ஸ்தான் அலங்கரித்தார். வெறும் ஒரு கோடி ரூபாய்க்காக எதற்காக இவ்வளவு பெரிய விளம்பரம்?

நிறையச் சினிமாக்காரர்கள் நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அமைதியாக இருக்க ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி பத்து வாரங்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்தியதன் உள்நோக்கம் என்ன என்று சந்தேகம் வரத்தானே செய்யும்? ‘தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன்’ என்று இன்று எழுதுகிற வரிகளுக்கான அச்சாரமாகத்தான் அந்த பத்து வார விளம்பரத்தைப் பார்க்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு இளைஞர்களில் சிலருக்கு பணம் கொடுத்தார்கள். பலருக்கும் பணம் வழங்கப்படவில்லை என்று உறுதியாகத் தெரியும். எப்படித் தெரியுமென்றால் நூறு பேரில் நானும் ஒருவன். ஏன் இவ்வளவு விளம்பரம் செய்தீர்கள்? பிறகு ஏன் பணம் குறித்தும், ஒரு கோடி ரூபாய்க்கு செய்யப்பட்ட காரியங்கள் குறித்தும் வாயே திறக்கவில்லை? 

தம்மை நல்லவர் என்றும் புனிதர் என்றும் விளம்பரம் செய்து கொள்வது அவரவர் உரிமை. செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நூறு இளைஞர்களை வைத்து விளம்பரம் தேடும் போது கணக்கை சரியாகக் காட்டுங்கள் என்று கேட்கத்தான் தோன்றும். நீங்கள் ஏறிச் செல்வதற்கு எங்கள் முதுகுகளை ஏன் படிக்கட்டுக்களாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றுதான் கடுப்பில் கேட்கிறேன்.

தன்னெழுச்சியாக மாணவர்களும் இளைஞர்களும் கூடி நடத்திய போராட்டத்தில் அழையா விருந்தாளிகளாகக் கலந்து கடைசியில் யாருக்கோ கைப்பாவையாக மாறி மொத்தப் போராட்டத்தின் நோக்கத்தையும் போக்கையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டு இன்று ‘முதல்வரைப் பார்த்தேன்’ ‘அரசியலுக்கு வருவேன்’ என்று ரஜினி கணக்காகப் பேசிக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டுப் புனிதர்களைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. வெகுகாலமாக சுரணையே இல்லாத சமூகம் என்று பெயர் எடுத்திருந்த எம் இளைஞர்கள் முறுக்கேறி நின்ற போது தமது அரசியல் அரிப்புகளைச் சொறிந்து கொள்ள நுழைந்தவர்கள் திடீரென்று தாமே தலைவன் என்பதான பாவனையை உருவாக்கிய போது அதையும் வெட்கமில்லாத ஊடகக் கழுகுகள் ஒத்து ஊதி உசுப்பேற்றுகையில் சலனமடையாமல் என்ன செய்வது?

இவர்களைக் குறை சொல்லவில்லை. நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் அணுகுமுறைகளில் சினிமாத்தனம் நிறைந்திருக்கிறது. கனவுகளில் மிதக்கிறார்கள். இளைஞர்களை மழுங்கச் செய்கிறார்கள். மயில்சாமி மாதிரியான சமூக ஆர்வமிக்க நடிகர்கள் சப்தமில்லாமல் தமது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளடி அரசியலைச் செய்துவிட்டு இன்று வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் லாரன்ஸூகளையும் பாலாஜிக்களையும்தான் இன்னமும் பல இளைஞர்கள் நம்புகிறார்கள். ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆதி மட்டுமே மோசம் என்றும் மற்றவர்கள் நல்லவர்கள் என்றும் பவுடர் பூசிக் கொண்டார்கள்.

ஆரம்பத்திலேயே சொன்னது போல இவர்கள் தலைவராக வருவதில் எந்த ஆட்சேபணையுமில்லை. ஆனால் முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பாகவே அரசியல் கனவுகளோடு விளம்பர வெறியர்களாகத் திரிவதைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பணத்தை இறைப்பதாகச் சொல்லி புனிதர்கள் ஆவதற்கு முன்பாக வெளிப்படையாக கணக்கு வழக்குகளை முன்வைக்கட்டும். ஒருவேளை முன்பே அதையெல்லாம் செய்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அடுத்தவர்கள் அதை சரி பார்ப்பதற்கு ஏதுவாக கண்படும் இடமாக வைக்கட்டும். இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ளாமல், இங்கே நிலவுகிற வெக்கையை உணராமல், எமோஷனலாகவும் செண்டிமெண்டலாகவும் பேசியும் படம் எடுத்தும் மட்டுமே இளைஞர் சமூகத்தை ‘ஹைஜாக்’ செய்வதை நிறுத்தட்டும். 

இழவு வீட்டில் அரிதாரம் பூசியவர்களாக அலைவதை நிறுத்தினாலே சமூகம் மதிக்கத் தொடங்கிவிடும். ஆனால் அப்படித்தான் அலைகிறார்கள். அருவெருப்பாக இருக்கிறது.

10 எதிர் சப்தங்கள்:

Unknown said...

இளைஞர்களும், பொதுமக்களும் திரைத்துறையினரை விடுத்து மற்ற துறையினர் சொல்பவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து சிந்திக்க வேண்டும். வெற்று விளம்பரங்களை விடுத்து சிறப்பான செயல்பாடுகளை ஆராய்ந்து நம்ப வேண்டும். அதற்கு உங்களை போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் உதவுவீர்கள் என நம்புகிறோம்!

ADMIN said...

நல்லா சொல்லியிருக்கீங்க.. வெளிப்படைத் தன்மையைப் பத்தி பேச உங்களுக்கு என்ன யோக்யதை இருக்குன்னு, மடைய உங்க பக்கமா மாத்தினாலும் மாத்திடுவாங்க. ஏன்னா காலம் அப்படிதான் கெட்டு கெடக்கு...!

sivaraman said...

you missed gvp, simbu in this list

Paramasivam said...

உங்கள் கருத்துகளுடன் மாறுபடுகிறேன். இளைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஆதியின் பங்கு உள்ளது. மீடியா மூலமும் தனது பேச்சாலும் பாலாஜி இந்திய அளவில் இதை எடுத்துச் சென்றார். போராட்ட ஆரம்ப காலத்தில், லாரன்ஸ் பண உதவி செய்தார். இவர்களை இழுக்காக இப்போது பேச வேண்டாமே. 4 நாட்களுக்குப் பின் இணைந்தவர்களால் போராட்டம், திசை திரும்ப ஆரம்பித்தது--குறைந்த பட்சம், மெரினாவில். 5ம நாளிலிருந்து, உணவுப் பொட்டலங்கள் வழங்கியவர்கள், தங்கள் அஜெண்டாவையும் சேர்த்தும் கொண்டார்கள். போராட்டம் முடிவு பெறுவதை விரும்பாதவர்கள் 6ம் நாள் முதல் போராட்டத்தை தன்வசப் படுத்திக்கொண்டார்கள். ஆனால், போராட்டத்தை தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள், அரசியல்வாதிகளையும் மதசார்பு உதவிகளை ஒதுக்கி முதல் 4 நாட்கள் நடத்தியவர்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். குறைந்த பட்சம் தவறாக பேச வேண்டாம்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மனதில் பட்டதை வெடிக்க வைத்து விட்டீர்கள் .லாரன்ஸ் இன்னும் ஒரு படி மேலே போய் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்துதான் உணவுக்கான பணம் கொடுத்தேன் என்று சொன்ன போது லேசாக இல்லை பலமாக இடிக்கிறது .ஒருவேளை ஆரம்பத்தில் இந்த நோக்கத்துடன் அவர் கலந்துகொள்ளாது இருந்திருப்பார்.இதன் ரீச் புரிந்த பிறகு பலன்களை அனுபவிக்க கொடி நாட்டலாம் .
இருந்தாலும் ஜல்லிக்கட்டு பேரவை சின்னமாவுக்கு நன்றி தெரிவிக்க சந்தித்த அபத்தம் இன்னும் தாங்க முடியவில்லை .இவர்கள் இல்லாது போயிருந்தால் இன்னும் சிறப்பாக நடந்து இருக்கலாம் .இவர்களைத் தவிர உணவுக்கு காசு கொடுத்த எவரும் சொல்லிக்கொள்ளாமல் போயிருக்கலாம் !

Unknown said...

லாரன்ஸ் அறிவித்த அன்று விகடன் ஒருகோடி என்னாசிச்சு என்று முகநூல் பக்கத்தில் எழுதியதை பார்த்தவர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என என்னை கேட்டார்கள் .
விகடன் ஒருகோடி பற்றிய உங்களது பதிவை முன்பே படித்ததால் எனக்கு உடனே சந்தேகம் வந்தது
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் மணி சாத்தியமான வார்த்தைகள் ஒருபோதும் தோற்காது

சக்திவேல் விரு said...

சினிமாக்காரன் எப்பவுமே அரசாங்கத்தின் ஸ்லீப்பர் செல்.... அது இன்றும் என்றும் நடக்கிறது. இதில் லாரன்ஸ் பாலாசி எல்லேருமே அடங்குவார்...அப்போ லாரன்ஸ் சோறு போட்டு எல்லோரையும் காப்பாத்துனாதா சொல்லும் அப்பரசிண்டுகள் நடுக்குப்பம் மீனவர்கள் சோறையும் போட்டு இன்னைக்கு கோர்ட்டு கேஸுன்னு வாழ்வாராதரம் தொலைச்சு நடு தெருவில் நிக்கிறார்கள் அவர்கள் இந்த வெத்து வேட்டு கும்பலுக்கு தேவலாம் ...இங்கே முகம் தெரியா அவர்களது தியாகம் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை ...ஏனென்றால் அவர்களை பற்றி பேசினால் யாருமே கவனிக்க மாட்டார்கள் என்பதாலா ??

Unknown said...

after a long time i visited your page---reason for silence-i was having some health issues.
but i was watching the marina outburst.as you said--all actors have a clische for politics--right from the days of mgr and sivaji. sivaji,bakyaraj,t.r,and vijaykant burnt thir fingers and staged a walk out.poor vijaykant does not know what to do right now.but he need not worry. the party will vanish like how it emerged.
we ,tamils have a rave and craze for these film people.they should be kept in the drawing hall-if we take them seriously,people like balaji and lawrence will think no end of themselves.aadhi is another one film wonder who makes hay while the sun shines.
students should certainly avoid such craving people and also some dangerous comperes like RANGARAJ PANDEY.HE WAS GOOD IN THE START.BUT NOW,HE LOOKS BLUNTLY BIASED.NICE READING YOUR WRITE-UPS,MANIKANDAN

சேக்காளி said...

விடுங்க மணி. சட்டசபையில எதிர்கட்சி தலைவராயிருந்த விஜயகாந்துக்கே அல்வா குடுத்து ஆனந்தப் பட்டவங்க நம்மாளுங்க. இந்த ஜூஜுபி களுக்கு ஜிலேபி குடுப்பாங்க.

சேக்காளி said...

//இழவு வீட்டில் அரிதாரம் பூசியவர்களாக அலைவதை நிறுத்தினாலே சமூகம் மதிக்கத் தொடங்கிவிடும்//
அரிதாரம் பூசுனவங்க காலுல தமிழக அரசியலே விழுந்து கெடக்கு. பாக்கலையாக்கும்?