Feb 20, 2017

பரப்பன அக்ரஹாரா- பார்ட் 2

பரப்பன அக்ரஹாராவுக்கு நேற்று மாலை சென்றிருந்தேன். தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வண்டியாக இருந்தால் உள்ளேயே விடமாட்டார்கள். என்னிடம் இருப்பது கர்நாடகா வண்டி. நிறுத்த மாட்டார்கள். அப்படியே நிறுத்தினாலும் தத்தகப்பித்தக்கா கன்னடத்தை வைத்து ஒரு காரணத்தைச் சொல்லி உள்ளே நுழைந்துவிடுவேன். என்ன காரணம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. கம்பெனி சீக்ரெட். கடந்த முறை ஜெயலலிதா உள்ளே இருந்த போது கூட்டம் நிரம்பிக் கிடந்தது. தள்ளுவண்டிக் கடையெல்லாம் புதிது புதிதாக முளைத்திருந்தன. எம்.எல்.ஏ, எம்.பிக்களும் தள்ளுவண்டிக் கடைகளில் கடலைக்காயும் நெல்லிக்காயும் வாங்கிக் கொறித்துக் கொண்டிருப்பார்கள்.

நேற்று ஈயாடவில்லை. 

‘உண்மையிலேயே உள்ளேதான் இருக்கிறார்களா?’ என்று சந்தேகமாகத்தான் இருந்தது. சிறை வளாகத்துக்குள் குன்ஹா தீர்ப்பளித்த செசன்ஸ் நீதிமன்றம், பரப்பன அக்ரஹாரா காவல் நிலையம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி ஐநூறு மீட்டர் சென்று இடது பக்கமாகத் திரும்பினால் காவலர் குடியிருப்பு உண்டு. அதுவரைக்கும் சென்று பார்த்தாலும் கூட ஒரு கரைவேட்டியும் கண்ணில்படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. வீட்டிற்கு வந்து சொன்னேன். ‘ஞாயிற்றுக்கிழமையன்று பார்வையாளர்களை அனுமதிப்பார்களா?’ என்று கேட்டார்கள். தர்க்க ரீதியான கேள்வி. ஆனால் கடந்த முறை ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டமிருந்தது. மற்ற நாட்களிலாவது வேலைக்குச் செல்ல வேண்டுமே என்கிற எண்ணம் எனக்கு இருக்கும். சனி, ஞாயிறுகளில் அப்படியில்லை. காலை உணவை முடித்துவிட்டு வளாகத்திற்குள் சென்றால் மாலை வரை அங்கேயேதான் குடியிருப்பேன். 

வீட்டிலிருந்து அழைத்து ‘சாப்பிட வரலையா?’ என்பார்கள். சிறை வளாகத்திற்குள்ளேயே கட்சிக்காரர்களுக்கு உணவு வழங்குவார்கள். ‘ஜெயில்லையே சாப்பிட்டுட்டேன்’ என்று சொல்லி அதிர்ச்சியெல்லாம் கொடுத்திருக்கிறேன். மாலை ஆறு மணிக்கு காவலர்கள் விசிலடித்து எல்லோரையும் துரத்திவிடுவார்கள். அத்தனை வெள்ளையும்சுள்ளையும் வெளியேறிய பிறகு கடைசியாக வெளியேறுவதுதான் என்னுடைய வழக்கமாக இருந்தது. 

நேற்று அப்படியில்லை. சென்ற வேகத்தில் திரும்பிவிடலாம். யாருமில்லாத டீக்கடையில் நமக்கு என்ன வேலை? உடனடியாக வீடு திரும்ப மனமே இல்லை. ஆனால் வேறு வழியில்லை. 

இன்று காலையிலும் சென்றிருந்தேன். பத்தரை மணி இருக்கும். நேற்றைய தினமாவது காவலர் குடியிருப்பு குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இன்று மயான அமைதி. சற்றே ஓங்கிக் கத்தினால் சிறைக்குள் இருப்பவர்களுக்கு காது கேட்டுவிடும். ‘நிஜமாவே சின்னம்மா உள்ள இருக்காங்களா?’ என்று கேட்கலாம் என்றுதான் தோன்றியது. எதுக்கு வெட்டி வம்பு என்று அமைதியாக இருந்து கொண்டேன். ஊடகவாசிகளும் யாருமில்லை. தடுப்பரண்களைப் போட்டு பத்து காவலர்கள் நிழலில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அநேகமாக இன்னமும் சில தினங்களில் அவரை தமிழகச் சிறைச்சாலைக்கு மாற்றிவிடுவார்களாம். அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள். அப்படி தமிழகச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு ஒருவேளை ஆட்சிக்கலைப்பு என்று ஏதாவது எசகுபிசகாக நடந்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் வம்பாகப் போய்விடக் கூடும். ‘இங்க வந்து சிக்கினதுக்கு பதிலா கர்நாடகாவிலேயே இருந்திருக்கலாம்’ என்று நினைக்க வைத்துவிடுவார்கள்.  ஆனால் இப்போதைக்கு ஆட்சியைக் கலைப்பார்களா என்று தெரியவில்லை- ஓபிஎஸ்ஸின் பின்னணியில் பாஜக இருந்தது என்று நாம் நம்புவதற்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. அவருக்கு அவகாசமும் கொடுத்துப் பார்த்தார்கள். அவரால் இன்னமும் பத்து அல்லது இருபது எம்.எல்.ஏக்களை இழுக்க முடிந்திருந்தால் திமுகவின் ஆதரவுடன் அடுத்த சில மாதங்களுக்கு ஆட்சியை நீட்டி அவரை நாயகனாக்கி அதிமுகவை அவர் வசம் கொண்டு போயிருக்கக் கூடும். அவரால் முடியவில்லை. கைவிட்டுவிட்டதாகத்தான் தோன்றுகிறது. இப்போதைக்கு ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடந்தால் முடிவு என்னவாக இருக்கும்? திமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று அவர்களுக்கும் தெரியாதா என்ன? திமுக ஆட்சியமைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த பலனும் இருக்காது என்பதால் இந்த ஆட்சியே தொடரட்டும் என்றுதான் டெல்லிவாலாக்கள் விரும்புவார்கள். இனி சாம, பேத, தான தண்ட அடிப்படையில் பேரங்கள் நடக்கக் கூடும். 

ஜெயலலிதா சிறையில் இருந்த போது அலைமோதிய கட்சிக்காரர்கள் ஏன் பரப்பன அக்ரஹாராவை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று புரியவில்லை. வந்து போய்க் கொண்டிருந்தால்தானே என்னை மாதிரியான சில்லுண்டிகளுக்கு பொழுது போகும்?

சசிகலா சரணடைய வந்த போது வாகனங்கள் தாக்கப்பட்டது கூட காரணமாக இருக்கலாம் அல்லது இனி அங்கே சென்று காத்திருப்பது பலனில்லை என்று நினைத்திருக்கக் கூடும். கடந்த முறை சிறை வளாகத்திற்குள் தமிழக உளவுத்துறை காவலர்கள் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். யார் வந்து போகிறார்கள் என்று தீவிரமாகக் கண்காணித்தார்கள். ‘நாம் வந்திருப்பது அம்மாவுக்குத் தெரிய வேண்டும்’ என்பதற்காகவே பலரும் பெங்களூரில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் ‘பக்கத்துல வீடு வாடகைக்கு கிடைக்குமா?’ என்று கூட சிலர் கேட்டது நினைவில் இருக்கிறது. அப்படி வெறித்தனமாக விசுவாசத்தைக் காட்டியவருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளித்தார்கள். 

சசிகலாவுக்கு நான்காண்டுகள் சிறைத்தண்டனை. விடுமுறை, நன்னடத்தை என்று பல காரணங்களால் தண்டனைக்காலம் குறைக்கப்பட்டுவிடக் கூடும் என்றுதான் சொல்கிறார்கள். மூன்றாண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். மூன்றாண்டு காலம் என்பது அரசியலில் பெரிய இடைவெளி இல்லை. அவர் வெளியே வரும்போது ஆட்சி அவர்களின் வசமிருக்குமானால் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள். அவர் சிங்கம்தான் என்பதை மக்கள் நம்பியே தீர வேண்டும் அல்லது நம்புவது போல நடிக்க வேண்டும். இன்றைக்கு சிதறியவர்களில் பலரும் வந்து ஒட்டிக் கொள்ளக் கூடும். ஸ்டாலின் Vs சசிகலா என்ற அரசியல் களம்தான் நமக்கு முன்பாக விரிந்திருக்கும்.

ஸ்டாலின் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்? பாஜக எப்படி காய் நகர்த்தப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் களம் மாறக் கூடும். ஆனால் சசிகலா தரப்பும் லேசுப்பட்டவர்கள் இல்லை என்று நமக்குக் காட்டியிருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போன வேகத்தில் வெளியே வந்தவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ‘ஏனாயித்து?’ என்றார். 

‘இன்ஸ்பெக்டர் மத்தியானம் பரக்கே ஹேலித்ரு’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். 

உள்ளே நுழையும் போது பரப்பன அக்ரஹாரா இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சொல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தேன். இன்ஸ்பெக்ட்ரையும் காணோம்; கரைவேட்டியையும் காணோம்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பாஜக எப்படி காய் நகர்த்தப் போகிறது//
அதிமுக கூட்டணிக்கு ஒத்துக் கொள்ளும். கொள்ளாவிட்டால் ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப் படலாம்.பாராளுமன்ற தேர்தலின் போது வீடியோக்கள் கூட வெளிவரலாம்.

சேக்காளி said...

பரப்பன அக்ரஹாராம் பார்ட்-2
நீங்க காட்டு ராசா கூட்டத்தை சேந்தவரா?.

Sundar said...

Sasikala siraiyil irukkumvarai vaaraavaaram angu senru katturai ezhuthungal, Manikandan.