Jan 31, 2017

ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா?

ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். கன்னடக்காரர். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுவார். அவ்வப்போது பேசிக் கொள்வதுண்டு. அவர்தான் ‘குரு..நீங்க ஒருத்தரை சந்திச்சே தீரணும்’ என்றார். அவர் சொன்னது சிந்து என்கிற தெலுங்குப் பெண்ணை. உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியாளர். அவர் மூன்று மாதங்களுக்கு ஜெர்மனி செல்லவிருப்பதாகவும் அதற்கு முன்பாக அவரிடம் பேசச் செல்வதாகவும் சொன்னார். தொற்றிக் கொண்டேன். ராஜராஜேஸ்வரி நகரில் சிந்து தங்கியிருக்கிறார். அவரோடு இன்னும் சிலரும் தங்கியிருக்கிறார்கள்.

சிந்துவுக்கு ஐந்து வயது இருக்கும் போதே பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அந்தக் காலத்து பஜாஜ் வண்டியில் அம்மா பின்னால் அமர்ந்து கொள்ள, சிந்துவை முன்பக்கமாக நிறுத்தி அப்பா ஓட்டிச் சென்றிருக்கிறார்.  சென்று கொண்டிருந்த போது ஒரு வாகனம் வேகமாக வந்து அடித்து வீசியிருக்கிறது. அப்பா அதே இடத்திலேயே நசுங்கிவிட அம்மாவுக்கு தலையில் அடி. ஒன்றிரண்டு நாட்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவர் இறந்து போய்விட்டார். சிந்துவுக்கும் சாதாரணக் காயமில்லை. அந்த வாகனம் இழுத்துச் சென்றிருக்கிறது. இரண்டு கால்களும் நசுங்கி வலது கையும் இல்லை. வெறும் இடது கையோடு உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு நினைவு தெரிந்து கண்விழித்த ஐந்து வயதுக் குழந்தைக்கு உலகமே இருண்டு கிடந்திருக்கிறது. பெற்றவர்கள் இல்லை; கால்கள் இரண்டுமில்லை; ஒரு கையுமில்லை.

உறவினர்கள் சிலர் தங்கள் வீடுகளில் தங்க வைத்திருக்கிறார்கள். ‘இவளுக்கு ஊழியம் செய்ய முடியாது’ என்று முடிவெடுத்தவர்கள் மெல்ல மெல்லத் தள்ளி கடைசியில் ஒரு விடுதியில் கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கொடூரமான விடுதி அது. சரியான உணவு, பராமரிப்பு என எதுவுமே இல்லாத இருள் சூழ் உலகத்திலிருந்து வெளியே வர வழியே இல்லாமல் இரண்டு மூன்று வருடங்கள் கழித்தவர் எதையுமே படிக்கவில்லை. தன்னைச் சுற்றி எல்லாமே பொய்த்துப் போனதாக நினைத்துக் கொண்டிருந்த சிந்து அந்த வயதிலேயே தற்கொலைக்குக் முயன்று தோற்றிருக்கிறார். எப்படி தற்கொலை செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத வயது அது. எப்படிச் சாக முடியும்?

ஏழு வயது இருக்கும் போது ஒரு கன்னட தம்பதியினர் தமது குழந்தையின் பிறந்தநாளுக்காக உணவளிக்க வந்திருக்கிறார்கள். விடுதியில் சிந்துவையும் பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு சிந்துவை கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டார்கள். வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் வேறொரு நல்ல விடுதிக்கு இடம் மாற்றிக் கொடுத்து அவரது படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பணமும் வசதியும் மட்டுமே மனிதர்களை உருவாக்கிவிடுவதில்லை. சொல்- அதுதான் மனிதர்களை உருவாக்குகிறது. அப்படியான சொற்களைச் சொல்வதற்கு சிந்துவுக்கும் ஒருவர் வந்து சேர உருவேற்றி மெருகேற்றியிருக்கிறார். விடுதிக் காப்பாளர் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ள சிந்து இருளிலிருந்து வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

சிந்துவைச் சந்தித்தோம். ஜெர்மனி கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அறிமுகத்திற்குப் பிறகாக சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். புதிய மனிதர்களைப் பார்க்கிறோம் என்ற எந்தத் தயக்கமும் இல்லாத பேச்சு அது. அவ்வளவு தன்னம்பிக்கை அவருக்குள் இருந்தது. 

‘எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?’ என்றார். மெளனமாக அமர்ந்திருந்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு ‘Achievable targetன்னு ஒண்ணு வெச்சுட்டு அதுக்கு வேலை செஞ்சா மத்த எல்லாத்தையுமே மறந்துடுவோம்’ என்றார். வார்டன் சொன்ன வார்த்தைகளாம் இது. நாம் கீழே கிடக்கும் போது பரிதாபப்படுகிறவர்கள்தான் அதிகம். கை தூக்கிவிடுகிறார்களோ இல்லையோ- உச்சுக் கொட்டுவார்கள். அப்படி உச்சுக் கொட்டுவதில் மனித மனத்திற்கு ஒரு ஆசுவாசம் கிடைக்கிறது. நமக்கு நடக்காதவரைக்கும் தப்பித்தோம் என்கிற ஆசுவாசம் அது. அதைத்தான் சிந்து மாதிரியானவர்கள் தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். ‘அதை உடைச்சுட்டாவே போதும்’ என்றார். ‘உன்னை தேத்திக்கிறதுக்காக என்னைப் பார்த்து நீ ஒன்னும் பரிதாபப்படத் தேவையில்லை’என்று முகத்தில் அறைவது போலச் சொன்னாலே பாதி வெற்றியடைந்த மாதிரிதான்.

அப்படி அறைவதற்குத்தான் படிப்பு. ‘என்கிட்ட ரொம்ப தாழ்வுணர்ச்சி இருந்துச்சு சார்...தாழ்வுணர்ச்சியைப் போக்காம என்னதான் செஞ்சாலும் வெறும் கோபமாத்தான் மிஞ்சிப் போகும்’என்றார். மனிதர்களை, அவர்களின் மனநிலையை, தன்னை என முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறார். நிறைய வாசிக்கிறார். புத்தகங்கள் அவருக்கு உலகின் பெருவெளியைக் காட்டியிருக்கின்றன். காஃப்கா பற்றியும் மார்க்வெஸ் பற்றியும் இயல்பாகப் பேச முடிந்தது. காஃப்காவின் விசாரணை நாவலில் வரும் க குறித்து பேசினார். அவர் பேசும் போது பெரும்பாலும் கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தேன். இத்தகைய மனிதர்களைப் பேசவிட்டு கேட்பதுதான் சரியானதும் கூட.

‘மனுஷனை மனுஷனா நினைக்கிறதுதான் பெரிய மரியாதை....நாம உசத்தின்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு யாரைப் பார்த்தாலும் அவங்களை அவமதிக்கிற மாதிரிதான்’என்று அவர் சொன்ன போது ஓங்கி அறைந்தது போல இருந்தது. மனதுக்குள் எவ்வளவு பெரிய கொம்பை வளர்த்துக் கொண்டு திரிகிறேன்? எவ்வளவு பெரிய உண்மையை இந்தப் பெண் மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்? அவரது வார்த்தைகளும் பேசுகிற தொனியும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருந்தன.  பி.டெக் முடித்துவிட்டு எம்.டெக் படித்துவிட்டு ஜெர்மனி செல்கிறார். இதோடு படிப்பு அவ்வளவுதானாம். ‘இதிலேயே குப்பை கொட்டமாட்டேன்’என்றார். தெளிவாக இருக்கிறார். தன்னாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே படித்திருக்கிறார். ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்து முழுமையாக சமூகப் பணிகளுக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னார். பெங்களூரிலிருந்து கிளம்பி கிராமப்புறங்களில் தங்கி குழந்தைகளுக்கான கல்வி, முன்னேற்றத்திற்காக வேலை செய்வதைத்தான் திட்டமாக வைத்திருக்கிறார். திருமணம் என்பதையெல்லாம் கிஞ்சித்தும் நினைக்கவில்லை போலிருக்கிறது.

‘மீடியா வெளிச்சம் இல்லாம...நேரடியான ரோல்மாடலா இருக்கணும்...பத்து பேரை மேலே கொண்டு வந்துவிட்டாலும் போதும்..சிந்து அக்கா மாதிரி இருக்கணும்ன்னு அந்தக் குழந்தைகளை நினைக்க வைக்கணும்’ என்றார். வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வெளியே வந்த பிறகு வழக்கறிஞர் ‘எப்படி குரு?’ என்றார். எனக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை. அப்படியான மனநிலையில் இருந்தேன்.  இந்த மாதிரியான பெண்கள் குறித்து வெளியே தெரிய வேண்டும். லட்சக்கணக்காணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் அவரிடம் பேசும் போது எதுவும் சொல்லவில்லை. நம்மைவிடவும் அவர் தெளிவானவர் என்ற சிந்தனையே எதையும் பேச அனுமதிக்கவில்லை. ஆளுமை என்பது இதுதான். நாம் சொல்வதுதான் சரி என்று எதிராளியை மனப்பூர்வமாக நம்ப வைத்துவிட வேண்டும். சிந்து அப்படியான ஆளுமை.

8 எதிர் சப்தங்கள்:

Subramanian Vallinayagam said...

நாம் சொல்வதுதான் சரி என்று எதிராளியை மனப்பூர்வமாக நம்ப வைத்துவிட வேண்டும். சிந்து அப்படியான ஆளுமை.

very true!

Vinoth Subramanian said...

இந்த பின்னூட்டத்தை இப்படி எழுத நினைக்கிறேன். இந்த வருடம் முடியும்போது நிசப்தம் இணைய தளத்தின் சிறந்த 10 பதிவுகளில் இதுஇருக்கும். குறைந்த பட்சம் 7 பதிவுகளுக்கு முன்னால்.

Anand Viruthagiri said...

அருமையான பதிவு !!!

Unknown said...

thanks for reveal such a inspiring and honorable personality
நிச்சயமா சிரந்த ாலுமை.

Karthik.vk said...

நன்றி அண்ணா...நானும் உயர்வேதியியல் தான் படிக்கிறேன்..உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது என்பதே இதைப் படித்த போதுதான் உள்ளுக்குள் தெரிகிறது..she is a best roll model for me

சேக்காளி said...

//ஓங்கி அறைந்தது போல இருந்தது. மனதுக்குள் எவ்வளவு பெரிய கொம்பை வளர்த்துக் கொண்டு திரிகிறேன்? எவ்வளவு பெரிய உண்மை//
சும்மா சொல்லாதீங்க. அப்டி பட்டவராயிருந்தால் இப்படி ஒரு கட்டுரை யை எழுதவே முடியாது

சேக்காளி said...

//‘Achievable target//
உண்மைதான்.அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறேன்.

GANESAN said...

" இந்த பின்னூட்டத்தை இப்படி எழுத நினைக்கிறேன். இந்த வருடம் முடியும்போது நிசப்தம் இணைய தளத்தின் சிறந்த 10 பதிவுகளில் இதுஇருக்கும். குறைந்த பட்சம் 7 பதிவுகளுக்கு முன்னால்" நானும் அப்படிதான் நினைக்கிறேன் திரு . மணிகண்டன் .