Jan 3, 2017

பச்சையைக் காக்க..

கடந்த திங்கட்கிழமையன்று (டிசம்பர் 26) ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகருக்கு மாவட்டத்தில் வெகு நல்ல பெயர். துடிப்பான மனிதர். நிறைய நல்ல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் வைப்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கோரிக்கைதான் இருந்தது. கிட்டத்தட்ட எட்டாயிரம் மரங்களைக் காப்பாற்றச் சொல்லியிருக்கிறோம்.

ஈரோடு மாநகரில் ஆரம்பித்து கோபி, சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை மொத்தம் 153 கிலோமீட்டர் தூரத்தை நான்கு வழிச் சாலையாக மாற்றுகிறார்கள். நகர எல்லைக்குள் எண்பது அடிகள், பேரூராட்சிப்பகுதிகளில் 106 அடிகள், கிராமப் பஞ்சாயத்து வழியாகச் செல்கையில் 116 அடிகள் என சாலையை விரிவாக்கம் செய்யப் போகிறார்கள். நூற்றைம்பது கிலோமீட்டருக்கும் கிட்டத்தட்ட ஒரு மரமும் மிஞ்சாது.

ஒரு காலத்தில் குளுமை கொஞ்சிய பகுதி இது. இப்பொழுதெல்லாம் வெயில் தாங்க முடிவதில்லை. கடந்த சில நாட்களில் நிறைய மனிதர்களிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பெரும்பாலானவர்கள் விவசாயிகள். அத்தனை பேரிடமும் இனம்புரியாத பதற்றம் தெரிகிறது. சுற்றுவட்டார அணைகளில் நீர் இல்லை. கிணறுகள் எப்பொழுதோ காய்ந்துவிட்டன. ஆழ்குழாய் கிணறுகள் ஒவ்வொன்றாய்க் காய்ந்து கொண்டிருக்கின்றன. பொங்கலுக்குப் பிறகு குடிப்பதற்கே நீர் இருக்காது என்கிறார்கள். அவர்களது பயத்தில் அர்த்தமிருக்கிறது. நிலைமை கை மீறிக் கொண்டிருக்கிறது. கால்நடைகளை மெதுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

யோசித்துப் பார்த்தால் ஒரேயொரு காரணம்தான் - மழை இல்லை. 

வளர்ச்சி, எதிர்காலப் போக்குவரத்து வசதிகள் என்பதெல்லாம் சரியான வாதங்கள்தான். ஆனால் மனித குலம் வாழ்வதற்கான எல்லாவிதமான அடிப்படைகளையும் உடைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டுத்தான் வசதிகளை அடைய வேண்டுமெனில் அத்தகைய வசதிகள் நமக்குத் தேவையா என்பதை யோசித்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். வெறும் ஆயிரத்துச் சொச்சம் மரங்கள் இந்த நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அரசாங்கம் கணக்கெடுத்திருக்கிறது. அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக ஆறு அல்லது ஏழு மரங்கள்தான் இருக்கின்றனவா என்ன? அவர்களிடம் கேட்டால் சில விதிமுறைகளைச் சொல்வார்கள். ‘இந்த வகையிலான மரங்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்வோம்; மரத்தின் விட்டம் இத்தனை அங்குலங்கள் இருக்க வேண்டும்’ என்று ஏதாவது சில விதிமுறைகள். தன்னார்வலர் குழுக்கள் கணக்கெடுத்து வைத்திருக்கின்றன. மொத்தம் எட்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் இருக்கின்றன. இவை தவிர சிறு செடிகள், நட்டப்பட்ட நாற்றுக்கள் என்று கூடுதலாக ஆயிரமாவது தேறும். எல்லாவற்றையும் வெட்டி ஏலம் விட்டுவிட்டுத்தான் சாலையை அகலமாக்கும் வேலையைத் தொடங்கப் போகிறார்கள்.

‘பத்தாயிரம் செடிகளை நட்டு வையுங்கள். அவை ஐந்து அல்லது ஆறடி உயரமாவது வளரட்டும். அதன் பிறகு இருக்கிற மரங்களை வெட்டுங்கள்’ என்ற போது ‘நல்ல ஐடியா’ என்றார். ஆனால் செயல்படுத்துவார்களா என்று தெரியவில்லை. மரத்தை வெட்டிவிட்டு பிறகு நாற்றுக்களை நடுகிறோம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. அரசு ஊழியர்கள் நட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். பத்து சதவீதம் கூட மேலே வராது. அதன் பிறகு எந்தக் காலத்திலும் பழைய பசுமை திரும்பவே திரும்பாது. சரியான இடங்களைக் கண்டறிந்து முதலிலேயே நாற்றுக்களை நட வேண்டும். நடும் போதே அவை ஓரளவு பெரிய நாற்றுக்களாக இருக்க வேண்டும். இனி அவை தப்பித்துவிடும் என்ற சூழல் வரும் போது மட்டுமே இருக்கிற மரங்களை வெட்டுவதற்கு அந்தந்தப் பகுதி மக்கள் அனுமதிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைக்கு கூட நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் பேசும் போது ‘இன்னமும் ஆறேழு மாதங்களில் மரங்களை வெட்டும் வேலைகளை ஆரம்பித்துவிடுவோம்’ என்றார். ஆறேழு மாதங்கள் என்பதை ஒரு வருடமாகத் தள்ளிப் போட்டு மரங்களை நடும் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என ஆட்சியர், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக மன்றாடுகிற யோசனை இருக்கிறது.

சிறு குழுக்களால் இதனைச் சாத்தியப்படுத்த முடியாது. மக்களிடம் விழிப்புணர்வு அவசியம். தன்னெழுச்சியாக ஒன்றிணைய வேண்டும். அரசு அதிகாரிகள் சற்றேனும் மெனக்கெட வேண்டும். தன்னார்வலர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். கோபியில் ஒரு குழு; சத்தியமங்கலத்தில் ஒரு குழு என்று ஊருக்கு ஒரு குழுவினரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் போதும். குழுவினருக்கு இரண்டாயிரம் மரங்கள் என்று இலக்கு நிர்ணயித்து அவர்களுக்கான இடங்களைக் காட்டுகிற வேலையை வருவாய்த்துறை, பஞ்சாயத்துகளிடமும், நாற்றுக்களை வழங்குகிற வேலையை வனத்துறையினரிடம் கையளித்துவிட்டால் பிற வேலைகளைத் தன்னார்வலர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

சாலையை அகலப்படுத்துகிற வேலையைக் கைவிடுங்கள் என்று கோரினால் செவிமடுப்பார்களா என்று தெரியாது. இந்த விரிவாக்கப் பணிகளுக்காக உலக நிறுவனம் தொண்ணூறு கோடி வழங்கவிருக்கிறது. தனியார் நிறுவனம் ஒன்று பெருந்தொகையைப் போட்டு சாலை அமைத்துக் கொடுத்துவிட்டு பிறகு சுங்கச்சாவடி வைத்து மக்களிடம் வசூல் செய்கிற திட்டமிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நல்ல வருமானம் இது. விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் மரங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சலாம். மாவட்ட ஆட்சியர் நல்ல மனிதர், திட்ட இயக்குநர் நேர்மையாளர் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சாலை விரிவாக்கத்தை முன் மாதிரியான வேலையாகச் செய்ய முடியும். இழந்த ஒவ்வொரு மரத்துக்கும் பதில் மரங்களைக் காட்ட முடியும். இந்த முன் மாதிரியான செயல்பாட்டை தேசத்தின் பிற பகுதிகளில் பின் தொடரட்டும்.

இப்போதைக்கு போராட்டம், சாலை மறியல் என்றெல்லாம் எதுவும் மனதில் இல்லை. ஒரே எண்ணம்- பசுமையைக் காப்போம் என்பதுதான். இழந்த பிறகு யோசித்து ஒன்றுமே ஆகப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம்தான் மழையின் அளவு வெகு குறைவு. கடந்த பல ஆண்டுகளில் இப்பொழுதுதான் வெப்பம் தறிகெட்டு எகிறுகிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணம் நாம் அறிந்ததுதான். எல்லாவற்றையும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமேயிருந்தால் பசுமையின் பரப்பு குறைந்து கொண்டேதான் இருக்கும். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் எத்தனை மக்களுக்கு இந்தச் சாலை விரிவாக்கப் பணி குறித்தும் மரங்களின் உயிரிழப்பு குறித்தும் தெரியும் என்று தெரியவில்லை. முடிந்தவரை தகவல்களைப் பரப்ப வேண்டியிருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸப் என்று ஆயுதங்கள் இருக்கின்றன. மக்களிடையே விழிப்புணர்வு உண்டாகட்டும். அவர்கள் வீதிக்கு வரட்டும்.

காலம் தவறிய பின் கதறி ஒன்றும் ஆகப் போவதில்லை. நீரையும் காற்றையும் இழந்துவிட்டு வெறும் வாகனங்களை வைத்துக் கொண்டு எந்தப் பயனுமில்லை. பசுமையைக் காக்க மனிதர்கள் எழுகிற தருணம் இது. துணிந்து குரல் எழுப்புவோம். இன்று இல்லை என்றால் என்றும் இல்லை. இன்றைய தினத்தைக் கைவிட்டால் நாளை நம் வசமில்லை.

9 எதிர் சப்தங்கள்:

நெய்தல் மதி said...

நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற துடிப்போடு மரம் நடுவதற்காக களம் இறங்கி அவமானமும் விரக்தியும் தான் மிச்சம். நம்மையும் எதுவும் செய்ய விடமாட்டார்கள், அவர்களும் செய்ய மாட்டார்கள். எதிர்மறையாக பேசுவதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள் என் சொந்த அனுபவம் அப்படி.

Jaypon , Canada said...

Best wishes for your endeavor.

senthilkumar said...

Hi Manikandan,

Strongly Agree. Lets show the action in ground. Please let me know how can i contribute myself for this move.

Trade said...

Thanks for the info Mani, As a little support, I have fwd this message to many whatsapp group. We definitely support this activity, please let me know further action on this so that we can join our hands.

kailash said...

In Tirupur for the past few years "Vanathukkul Tirupur" Project is being carried out successfully and lot of saplings planted and maintained for a minimum of two years . Through Tractors they are watering the plants and growth is being monitored by GPS Equipped Systems . This is done inside the Tirupur town and they have also started planting saplings inside the vacant plots in Tirupur after getting approval from land owners . Not sure about Highways . Its little easy to maintain in educational institutions.

Paramasivam said...

பசுமை பாதுகாப்பது நமது கடமை. நமது முன்னோர் நமக்கு அளித்தது.

moe said...

In Tirupur, they are replanting the trees. Uprooting and replanting in a different place. not sure how effective it is.
This will not get the commission people get for cutting trees and auctioning.

Instead of expanding the existing road, why dont they add a new road after the trees. And make the current one as one way.

Unknown said...

அன்பு மணி ,
நிச்சயமாக அரசு நினைத்தால் மரங்களை அழிக்காமல் மாற்று வழியில் இதை நிறைவேற்ற முடியும் அனால் குறுகிய நோக்கம் உள்ள அரசியல் மற்றும் அதிகாரிகளால் இது நிறைவேறது .

ABELIA said...

மாற்று வழியை நினைப்பதே இல்லை... மடையர்கள் !