Dec 19, 2016

என்னய்யா உங்க திட்டம்?

கடந்த வாரத்தின் இறுதியில் வெளியூர்களில் வேலை எதுவுமில்லை. அப்பாவும் அம்மாவும் ஊரில் இருக்கிறார்கள். பார்த்து வருவதற்காகச் சென்றிருந்தோம். இரண்டு நாட்களை வேலை எதுவுமில்லாமல் கழிப்பது சாதாரணக் காரியமில்லை. 

தலைமையாசிரியர் அரசு தாமஸிடம் பேசிய போது ‘ஒரு பயிற்சி வகுப்புக்குத் தயாராகுங்க...நமது பள்ளியிலேயே நடத்தலாம்..மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார். ஞாயிற்றுக்கிழமை பயிலரங்கு. எதையெல்லாம் சொல்லித் தர வேண்டும், எப்படிச் சொல்லித் தருவது என்று யோசித்து, விவரங்களைச் சேகரித்து சனிக்கிழமையைத் தீர்த்திருந்தேன். மூன்று காலனிகளிலிருந்து இருபது மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் கூட சயின்ஸ் க்ரூப் மாணவர் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களைத்தான் காலனி மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறார்கள். 


தாமஸ் அவர்களின் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைதான் மாணவர்கள் படிக்கிறார்கள். ப்ளஸ் டூ மாணவர்கள் பற்றியெல்லாம் அவர் கவலையே பட வேண்டியதில்லை. ஆனால் களப்பணியாளர். சனிக்கிழமையன்றே காலனிக்குத் தகவல் சொல்லி மாணவர்களைத் திரட்டி வந்து, பள்ளியைத் திறந்து வைத்துக் காத்திருந்தார். தேனீரிலிருந்து அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்து பயிற்சி வகுப்பு முழுமைக்கும் கூடவே இருந்தார். அவர் மாதிரியான ஆசிரியர்களும் களப்பணியாளர்களும் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்தால் போதும். கனவேலையைச் செய்யலாம்.

காலனியிலிருந்து ஒரு சுமைதூக்கும் வண்டியைப் பிடித்து மாணவர்கள் வந்திருந்தார்கள். ‘நாற்காலி வேண்டாங்கண்ணா..கீழேயே உட்கார்ந்துக்கலாம்’ என்றார்கள். நல்லதாகப் போய்விட்டது. அப்பொழுதுதான் இயல்பாக இருக்கும்.

வகுப்பு ஆரம்பித்தவுடன் தமது நீண்டகால இலக்கு என்ன என்பதை தாள் ஒன்றில் எழுதச் சொன்னேன். ‘ஐபிஎஸ் அதிகாரி ஆவது’ ‘ஆசிரியர் ஆவது’ என்று எழுதினார்கள். அடுத்தகட்டமாக குறுகியகால இலக்கு என்னவென்பதை எழுத வேண்டும். இப்போதைக்கு அவர்கள் முன்பாக இருக்கக் கூடிய குறுகியகால இலக்கு என்பது ப்ளஸ் டூ தேர்வுதான். இன்னமும் இரண்டரை மாதங்களில் தேர்வு தொடங்குகிறது. அதைச் சுட்டிக் காட்டி பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண்களைத் தம்மால் பெற முடியும் என்று எழுதச் சொன்னேன். 550, 600, 610 மதிப்பெண்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள். அவ்வளவுதான் அவர்களது நம்பிக்கை. Longterm and Shortterm goal ஆகியவற்றை எழுதிய பிறகு, இந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு தமது நீண்டகால இலக்கை அடைய முடியுமா என்று சுய கேள்வி கேட்க வேண்டும். அத்தனை பேரும் புரிந்து கொண்டார்கள். இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. நீண்டகால இலக்குக்கும் குறுகிய கால இலக்குக்கும் இடைவெளி பெரிதாகப் பெரிதாக நீண்டகால இலக்கு என்பது வெறும் ஆசையாக மட்டுமே தேங்கிவிடும். அதை அடையவே முடியாது.

இதை உணர்த்துவதுதான் நோக்கம். அப்படியென்றால் 550 மதிப்பெண்கள் என்ற நிலையிலிருந்து 1000 மதிப்பெண்கள் என்ற நிலைக்கு மாற வேண்டும். கூடுதலாகப் பெற வேண்டிய 450 மதிப்பெண்கள்தான் அவர்களுடைய குறுகிய கால இலக்காக இருக்க வேண்டும். இதை அடைந்துவிட்டால் அவர்களது நீண்டகால இலக்கை அடைந்துவிட முடியும் என்பதைப் புரிய வைப்பதற்காக முதல் அரை மணி நேரம் தேவைப்பட்டது.

மாணவர்களில் சிலர் பொறியியல் படிக்கப் போவதாக எழுதிக் கொடுத்தார்கள். கலைப்படிப்பு படிக்கிற ப்ளஸ் டூ மாணவனால் பொறியியல் படிப்பில் சேர முடியாது என்கிற புரிதல் கூட இல்லாமல் அரையாண்டுத் தேர்வு வரைக்கும் வந்துவிட்டார்கள் என்பதுதான் கிராமப்புற பள்ளி மாணவர்களின் அவலம். கல்வித்துறை வெறும் புள்ளி விவரங்களைக் கோரிக் கோரியே ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ‘தேர்ச்சி’ மட்டும்தான். நூறு சதவீதத் தேர்ச்சி என்பதை மட்டும்தான் கருத்தில் வைத்திருக்கிறார்களே தனிப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள், கல்வி அறிவு, சமூக அறிவு, எதிர்காலம் குறித்தான விவரங்கள் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை.

ஒரு பள்ளியில் கணக்குப்பதிவியலில் ‘ஏழு பாடங்களை மட்டும் படிங்க..பாஸ் பண்ணிடலாம்’ என்று சொல்லிவிட்டு மீதமிருக்கும் மூன்று பாடங்களை டீலில் விட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தப் பாடங்களையும் இதுவரை மூன்று நான்கு முறை படித்துத் தேர்வு எழுதிவிட்டார்கள். அரசுப் பள்ளி மாணவன் இன்னமும் மூன்று பாடங்களைத் தொடாமலேயே வைத்திருக்கிறான். அப்புறம் எப்படி தனியார் பள்ளிகளோடு போட்டியிட முடியும்? அரசும் கல்வித்துறையும்தான் யோசிக்க வேண்டும்.

களத்தில் இறங்கும் போதுதான் அவலட்சணம் தெரிகிறது. நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இலக்கை நிர்ணயித்த பிறகு திட்டமிடல்-

மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இன்றிலிருந்து பிப்ரவரி கடைசி வரைக்கும் 72 நாட்கள் இருக்கின்றன. ஒரு தேர்வுக்கு சராசரியாக 12 நாட்கள். ஏதாவது காரணங்களால் இரண்டு நாட்களைக் கழித்துவிட்டாலும் கூட ஒரு தேர்வுக்கு பத்து நாட்கள் என்ற கணக்கில் கைவசம் இருக்கிறது. இருக்கிற பாடங்களைப் பத்தாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவைப் படிக்க வேண்டும். படித்து முடிக்க முடிக்க டிக் அடித்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் படிக்க முடியாமல் விடும் போது அடுத்த நாளின் நேரத்தில் கடன் வாங்கி முந்தைய நாளில் விட்ட பாடத்தைப் படிக்க வேண்டும். இந்தத் திட்டமிடலுக்காக ஒரு முக்கால் மணி நேரம் பிடித்தது. ஒவ்வொரு மாணவனும் அவரவராகவே திட்டமிட்டனர்.

அதன் பிறகு எப்படிப் படிப்பது என்று ஒரு மணி நேரம் என்று பேச வேண்டியிருந்தது. 

ஒரு நாளைக்கு படிப்பதற்கென ஏழு மணி நேரங்களை ஒதுக்குவது, சரியாக உறங்குவது, சரியான உணவு, படிக்கும் போது ஒரு துண்டுச்சீட்டில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது, செல்போன், டிவியைத் தவிர்ப்பது, படிக்கும் போது எடுத்து வைத்தக் குறிப்பை அவ்வப்பொழுது திரும்ப வாசிப்பது, ஒவ்வொரு முறையும் வாசித்து முடித்த பிறகு எழுதிப் பார்ப்பது, பழைய வினாத்தாள்களை எடுத்து விடை எழுதிப் பார்ப்பது என்று படிப்பதற்கு நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இவையெல்லாம் ஒவ்வொரு மாணவனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான நுணுக்கங்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட அத்தனை பள்ளிகளிலும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்றைக்கு பல பள்ளிகளில் இதையெல்லாம் சொல்லித் தருவதேயில்லை போலிருக்கிறது.

திட்டமிடல், நேர மேலாண்மை, எப்படி படிப்பது என்பதற்குப் பிறகு தேர்வு எழுதும் கலை. அதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. 

ஒவ்வொரு விடையை எழுதி முடித்த பிறகு அடிக்கோடிடுங்கள் என்று சொன்னதைக் கூட ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தேர்வுக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாக இதற்கென தனியாக ஒரு வகுப்பு நடத்துவதாகச் சொல்லியிருக்கிறோம். இப்போதைக்கு முழுமையாகவும் தெளிவாகவும் படித்து முடிக்கட்டும். இன்னமும் நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது. தேர்வு முடியும் வரைக்கும் தொடர்ந்து தொடர்பில் இருக்கச் சொல்லியிருக்கிறேன். அடுத்த வருடத்திலிருந்து இன்னமும் வேகமாக, இன்னமும் பரவலாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் சமூகத்தின் மிக முக்கியமான இருண்ட பக்கமாக என் சிற்றறிவுக்குப் படுகிறது.

அரசு தாமஸ் இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, வணக்கம்.

தாங்கள் ஆற்றி வரும் கல்வி, மருத்துவம் தொடர்பான தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை நன்கு அறிந்தவன் நான். 
இவைகளைத் தாண்டி, கழைக் கூத்தாடி மக்கள் வாழும் கரட்டுப்பாளையம், எம்ஜிஆர் காலனி மக்களுக்காக விருப்பத்துடன் தொடர்ந்து செய்து வரும் பணிகளையும் அறிவேன்.

நேற்றைய நாளில் (17.12.16ஞாயிறு) அந்தக் காலனியைச் சார்ந்த மேனிலைக் கல்வி (+2) பயிலும் 17 மாணவியருக்கு தாங்கள் நடத்திய " பயிலரங்கு" மிகப் பெரிய அளவில் பயனளிக்கும் நிகழ்வாகும்.

தேர்வு எழுத இன்னும் 72 நாட்களே உள்ளதென்பதைக் கூட உணர்ந்திராத......

கலைப் படிப்பு படிக்கின்ற மாணவன் நான், +2 க்குப் பின் பொறியியல் படிப்பேன் என்று சொல்லுகிற......

மிகச் சாதாரண நிலையில் இருந்த அவர்களுக்கு,
👆 இலக்கு என்ன? (குறுகிய | நீண்ட கால )
👆 எப்படித் திட்டமிடுவது?
👆 எப்படித் தயாரிப்பது?
👆 நேர நிர்வாகம்?
👆 படிப்பதற்கான நுணுக்கங்கள் (எப்படி? எப்போது?)
👆 தேர்வுத் தாளில் எப்படி எழுதுவது? 
👆 வெற்றி நிச்சயம் 

என்ற அளவில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகமூட்டிய தங்களின் பணியை வெறும் அறிவார்ந்த பணி என்றல்ல, அக்கறையுள்ள பணி என்றே சொல்ல வேண்டும்.

அண்ணா! அண்ணா! என்று உங்களைச் சுற்றிச் சுற்றி வந்த அவர்கள், தங்களிடம் உறுதியளித்தபடி, ஆயிரம் ஆயிரம் பெறுகின்றார்களோ இல்லையோ, குறிப்பிட்ட அளவு விழுக்காடு வளர்ச்சியை உறுதியாக எட்டுவார்கள் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை!

வெற்றி நிச்சயம், மணி!

தொடரட்டும் ஏழை மாணவர்களுக்கான தங்களின் பணி!

இனி அடுத்த 72 நாட்களில் மாணவர்கள் படிப்பதற்கானத் திட்டம், அதை அவர்கள் செயல்படுத்தும் பாங்கு ஆகியவற்றைத் தான் கண்காணிப்பதாக அய்யா சொல்லியிருக்கிறார். அவருக்கு மனப்பூர்வமான நன்றி. 

பவர் பாய்ண்ட்டை மொத்தமாக இங்கே பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் சேமித்து வைத்திருந்த பென் ட்ரைவில் வைரஸ். சாம்பிள் காட்டுவதற்காக என்னையும் சேர்த்து எடுக்கப்பட்ட நிழற்படத்தை பிரசுரிக்க வேண்டியதாகியிருக்கிறது. பொறுத்தருள்க!

6 எதிர் சப்தங்கள்:

Bala K A said...

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்பது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும்! ஆனால் இந்த அவசர உலகத்தில் இதை எல்லாரும் மறந்து நாளாகிவிட்டது. இன்னும் மறக்காமல் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் பலர் தேவை நம் நாட்டுக்கு. அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்கு மட்டும் உங்கள் வழிமுறைகள் உதவலாம் என்பதை விட திட்டமிடல் என்றால் என்ன எனபதையும் அதன் அவசியத்தையும் நன்றாகவே அவர்களுக்கு இப்போது உங்கள் வழிமுறைகள் உண்ர்த்தியிருக்கும். Its important to have an awareness about how to learn rather than what to learn. Good luck with all your efforts.

Ram said...

சமூக நீதி என்பது, இவ்வாறான, வாழ்க்கையில் தாமே சுயமாய் உயர துணையாய் இருப்பதன்றி, வெற்றிக்கனியையே (ஒரு சாராருக்கு வயிற்றெரிச்சல் வரும் அளவுக்கு) நேரடியாய் வழங்குவதல்ல.

Nandha said...

வாழ்த்துக்கள் ஜி.. வருங்காலத்தில் இதுபோன்ற களப்பணியில் ஏதேனும் ஒரு கருவியாய் நானும் இருக்கமுடியுமெனில் நிச்சயமாக உடனிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பேசலாம்.. 9663069926 purpleclipfilms@gmail.com

Paramasivam said...

அருமை. வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்

D. Sankar said...

Congratulations. I wish all students to score marks and get admission in good college. All the best.

Anonymous said...

Hi! I just wanted to ask if you ever have any problems with hackers?
My last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work
due to no data backup. Do you have any methods to protect against hackers?