என்னய்யா உங்க திட்டம் என்ற கட்டுரையை வாசித்தவர்களில் சிலர் பவர் பாய்ண்ட் தேவை என்று கேட்டிருந்தார்கள். வைரஸ் தாக்கியிருந்த பென் டிரைவிலிருந்து தகவல்களை எடுக்க சிவக்குமரன் ஒரு உபாயத்தைச் சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி. மீட்டாகிவிட்டது.
பவர் பாய்ண்ட்டும் அதற்குரிய விளக்கமும் கீழே-
நமக்கான இலக்கு என்ன, அதை அடைவதற்கான திட்டம், அதற்கான நேர மேலாண்மை மற்றும் படிப்பதற்கும் தேர்வை எழுதுவதற்குமான நுணுக்கங்களைச் சொல்லித் தருவதுதான் இந்தப் பயிற்சி வகுப்பின் நோக்கம்...
ஒவ்வொருவருக்கும் நீண்டகால இலக்கு (Long term goal) இருக்க வேண்டும். அது என்ன என்பதை மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான பேச்சு இது. மாணவர்களிடம் ஒரு தாளைக் கொடுத்து அதில் எழுதச் சொன்னோம்.
குறுகிய கால இலக்கு (Short term goal) என்பது நம்முடைய நீண்டகால இலக்கை அடைய உதவுவதாக இருக்க வேண்டும். ப்ளஸ் டூ மாணவர்களின் இன்றைய குறுகிய கால இலக்கு என்பது மதிப்பெண்கள்தான். தங்களால் எவ்வளவு மதிப்பெண் வாங்க இயலும் என்பதையும் ஒரு தாளில் எழுத வேண்டும். இது அவர்கள் வாங்க விரும்பக் கூடிய மதிப்பெண்கள் இல்லை. எவ்வளவு தம்மால் வாங்க முடியும் என நம்புகிற மதிப்பெண்கள்.
தம்மால் வாங்க முடியும் என நம்புகிற மதிப்பெண்கள் தம்முடைய நீண்டகால இலக்கை அடைவதற்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை மாணவர்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும். நிச்சயமாக போதுமானதாக இருக்காது. அப்படியென்றால் எவ்வளவு மதிப்பெண்கள் தேவை என்பதைக் கண்டறிந்து அதை அவர்கள் குறுகிய கால இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். 700 மதிப்பெண்கள் வாங்க முடியும் என நம்புகிற மாணவன் ஆயிரம் என்பதை தம்முடைய இலக்காக முடிவு செய்ய வேண்டும். ‘என்னுடைய இலக்கு ஆயிரம் மதிப்பெண்கள்’ என்று எழுதி அதே தாளில் பாடவாரியாக தம்முடைய இலக்கு மதிப்பெண்களை எழுதி தமது கண் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இலக்கை முடிவு செய்தாகிவிட்டது. அதை எப்படி அடைவது? வடிவேலு உதவுவார். ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’
மார்ச் இரண்டாம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. அந்தத் தேதியின் அடிப்படையில் இன்னமும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பாடத்துக்கும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிட வேண்டும். இன்றைய தேதியிலிருந்து கணக்கிட்டால் ஒரு பாடத்துக்கு பனிரெண்டு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களைக் கழித்துவிட்டால் ஒவ்வொரு பாடத்துக்கும் பத்து நாட்கள் கிடைக்கும்.
ஒரு சில பாடங்கள் எளியதாக இருக்கக் கூடும். அத்தகைய பாடங்களை ஒன்றிரண்டாகச் சேர்த்து ஒரே நாளில் படித்துவிட முடியும். சில பாடங்கள் கடினமானதாக இருக்கக் கூடும். அதை ஒன்றரை அல்லது இரண்டு நாட்களுக்கு பிரித்து வைத்து படிக்க வேண்டும். இதை மாணவர்களே ஆலோசித்து முடிவு செய்து பாடங்களை க்ரூப் செய்ய வேண்டும். உதாரணமாக பொருளாதாரத்தில் பனிரெண்டு பாடங்கள் இருக்கிறதெனில் நம்மிடம் கைவசம் உள்ள பத்து நாட்களில் எப்படி படிக்கலாம் என்கிற திட்டமிடல் இது.
தெளிவாகச் சொன்னால் மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இனி 72 நாட்களுக்கும் ஒரு ஷெட்யூல் தயாரிக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமான பாடங்களைத் தொடங்க வேண்டும். நான்கைந்து நாட்களில் இந்த ஷெட்யூலின் படி படிக்க ஆரம்பித்துவிட்டால் மாணவர்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். பிறகு வேகமெடுக்கும். நாட்கள் ஆக ஆக படிக்கும் வேகம் கூடிவிடும். அநேகமாக ஐம்பது அல்லது அறுபது நாட்களில் முழுமையாக படித்துவிட முடியும். மீதமிருக்கும் நாட்களை திரும்பவும் படிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திட்டமிடுவதைக் காட்டிலும் நேர மேலாண்மை என்பது மிக முக்கியம். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பள்ளியில் கரைந்துவிடும். ஆக, பத்து மணி நேரம். மீதமிருக்கும் பதினான்கு மணி நேரத்தில் தூக்கத்திற்கு ஆறு மணி நேரம், பிற வேலைகளுக்கு ஒரு மணி நேரம் என்று ஒதுக்கிவிட்டு குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் படிக்க ஒதுக்க வேண்டும். சிரமம்தான். ஆனால் இன்னமும் எழுபது நாட்களுக்குத்தான் இதைச் செய்யப் போகிறோம் என்று வலியுறுத்த வேண்டும். டிவி, மொபைல் போன்றவற்றிற்காக பத்து நிமிடங்கள் ஒதுக்கலாம் முற்றாகத் தவிர்த்துவிட்டால் இன்னமும் நல்லது.
சபதமிட்டு வாசித்தல், திரும்பத் திரும்ப வாசித்தல். ஒரு தாளில் முக்கியமான வார்த்தைகளை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு அதை அவ்வப்போது எடுத்துப் பார்த்தல், படித்தவற்றை எழுதிப்பார்த்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். ஒரு மணி நேரம் படித்துவிட்டு ஐந்து நிமிடங்கள் காலார நடந்து வரலாம். அந்தச் சமயத்தில் மனதுக்குள் படித்தவற்றை ஓட்டிப்பார்க்க வேண்டும். பழைய கேள்வித்தாள்களை எடுத்து அவற்றுக்கு பதில் எழுதிப் பார்ப்பதை முழுமையாகப் படித்து முடித்த பிறகு செய்யலாம்.
தேர்வு எழுதுவதற்கான சில எண்ணப் பகிர்தல்கள் இவை. தேர்வுக்கு முன்பாக இது குறித்து விரிவாக மாணவர்களிடம் பேசுகிற திட்டமிருக்கிறது. அடிக்கோடிடுங்கள், வினா எண்ணைச் சரியாக எழுதுங்கள், எளிமையான கேள்விகளை முதலில் எழுதுங்கள் (படிக்கும் போது கடினமான பகுதிகளை முதலில் படிக்க வேண்டும்) என்பதையெல்லாம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.
நம்பிக்கையூட்டும் சில சொற்கள். எல்லோருக்கும் ஒரே அளவு மூளைதான். எல்லோருக்கும் ஒரே அளவு நேரம்தான். ஒருவன் வெல்கிறான் என்பதற்கும் இன்னொருவன் தோற்கிறான் என்பதற்குமான வித்தியாசம் வெறும் உழைப்புதான். எழுபது நாட்கள் கைவசமிருக்கிறது. உழைப்பு மட்டுமே உங்களை உயர்த்து.
கடைசி இருபது நிமிடங்கள் கலந்துரையாடல்.
குறிப்பு: இவை யாவும் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள், மாணவர்களுடனான உரையாடல், வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தயாரித்த உள்ளடக்கம். என்னைக் காட்டிலும் அனுபவமும் ஆற்றலும் உடையவர்கள் இதைக் காட்டிலும் சிறப்பாகத் தயாரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருவேளை இந்த உள்ளடக்கம் பயன்படும் என்று கருதுகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். இன்னமும் மெருகூட்ட முடியும் என்றாலும் மகிழ்ச்சி.
5 எதிர் சப்தங்கள்:
மணிகண்டன் அண்ணா, கன கச்சிதமான திட்டம் ,மாணவர்களின் நல்வாழ்விற்காக நீங்கள் தலைமை ஆசிரியர் தாமஸ் அவர்களுடன் சேர்ந்து எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ... தொடர்ந்து தங்களது இந்த சேவை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்...
என்னால் ஆனா செயல்களை செய்ய நானும் முயற்சிப்பேன் .. இந்த எண்ணத்தை தூண்டியதற்கு நன்றிகள் பல ...
√
மிக நன்றாக உள்ளது. நிச்சயம் மாணவர்களுக்கு உதவும்.
மிக முக்கியமான செயல்பாடு மணி. மனமார்ந்த பாராட்டுக்கள்.
Useful article for the students and others also
Post a Comment