Dec 13, 2016

வீட்டில் எப்படி விடுறாங்க?

‘உன்னையெல்லாம் வீட்டில் எப்படி விடுறாங்க?’ என்ற கேள்வியை எளிதாகக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு பதில் சொல்வதன் பெரும்பாடு எனக்குத்தான் தெரியும். உதாரணமாக டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு வேலை இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே சொல்லி வைத்திருப்பேன். 29 ஆம் தேதியன்று பையைத் தூக்கித் தோளில் மாட்டுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒன்று அவர்கள் மறந்திருப்பார்கள் அல்லது நான் சொல்லாமல் கோட்டைவிட்டிருப்பேன். ‘இதோட கடைசி...இனிமேல் முன்னாடியே சொல்லாம ஏதாச்சும் ஒத்துக்கிட்டீங்கன்னா பாருங்க’ என்ற எச்சரிக்கையைச் சமாளித்து, சமாதானப்படுத்தி, இனிமேல் வீட்டில் முன் அனுமதி வாங்கிக் கொள்வேன் என்று சத்தியம் செய்து வண்டியேறுவதற்கு ஒரு மணி நேரம் பிடித்துவிடும். 

இது வழமைதான் என்றாலும் வேணி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறாள். விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும்தான். ஆனால் உருப்படியான வேலையைத்தான் செய்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. மெல்ல மெல்ல அலைவரிசைக்கு வந்து இப்பொழுதெல்லாம் சலித்துக் கொள்வதில்லை. பிறந்தநாள், திருமண நாள் மாதிரியான நாட்களிலாவது வீட்டில் தங்கச் சொல்லிக் கேட்கிறாள். இந்த வருடம் அதுவும் இயலாமல் போய்விட்டது. அவளுடைய பிறந்த நாளன்றுதான் எங்கள் ஊருக்கு கவிஞர் அறிவுமதி வந்திருந்தார். வேணியும் மகியும் முன்பே அவளது அப்பா வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அறிவுமதியுடன் எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கடைசிப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். முடியாமல் போய்விட்டது. அடுத்த ஐந்தே நாட்களில் திருமண நாள். அதற்கடுத்த நாள்தான் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பயிலரங்கை ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். அதன் காரணமாக திருமண நாளன்றும் வீட்டில் இல்லாமல் இருந்தேன். வருத்தம்தான் என்றாலும் பெரிய எதிர்ப்பு இல்லை.

எனக்கும் கூடச் சந்தோஷமாக இருந்தது.

நாம் ஒன்று நினைக்க சிலர் வேறொன்று நினைப்பார்கள். அன்றைய தினம் சில பெரியவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நல்ல மனிதர்கள்தான். அக்கறை கொண்டவர்கள். ஆனால் அறிவுரை செய்கிறோம் என்ற பெயரில் எதையோ கொளுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த போது நான் வீட்டில் இல்லை. வீடு திரும்பிய போது யாருமே முகம் கொடுத்துப் பேசவில்லை. ஒன்றும் புரியவில்லை. வெகு குழப்பம். இப்பொழுதெல்லாம் வீட்டில் நடப்பது குறித்தெல்லாம் மகிதான் தகவல் தருகிறான். அவனை அழைத்து ‘அப்பாவை உன் கூடவே வெச்சுக்க...பிழிஞ்சு எடுத்துடு...வெளியேவே விடாத’ என்று சொன்னார்களாம். சங்கடமாக இருந்தது. இதை அவர்கள் அவனிடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை.

வேணியிடம் ‘எதுக்கு கல்யாண நாளன்னைக்கு வெளிய அனுமதிக்கிற?’ என்று கேட்கவும் அவளுக்கும் தப்பு செய்து கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட உறுத்தியிருக்கிறது. ‘இருபத்தஞ்சு வருஷமா வீடு படிப்புன்னுதான் இருந்தான்..கையில் கொடுத்தாச்சு..இனி இவதான் பொறுப்பு’என்றிருக்கிறார்கள். எந்த மனைவியாக இருந்தாலும் சலனமுறத்தான் செய்வார்கள். இவ்வளவு நடந்த பிறகு வீட்டில் எப்படி முகம் கொடுத்துப் பேசுவார்கள்?

வாரத்தில் ஐந்து நாட்களையும் வீட்டுக்காகத்தான் செலவிடுகிறேன். எப்பொழுதுமே ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களுக்கு உழைக்கிறோம் என்ற பெயரில் குடும்பத்தைக் கைவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையின் காரணமான பயம் அது. சம்பளத்தை குடும்பத்திடம் ஒப்படைப்பதிலிருந்து மகனுக்குச் சொல்லித் தருவது, அவனோடு விளையாடுவது வரை நிறைய நேரம் செலவழிக்கிறேன். அப்படியிருந்தும் திரைப்படங்களுக்குச் செல்வது, வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு வெளியில் செல்வது போன்ற சிலவற்றைச் செய்ய முடிவதில்லை. அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் முடிந்த வரை இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் உண்டு நம் வேலையுண்டு என்று குடும்பத்தோடு மொத்த நேரத்தையும் செலவழித்தபடியே காலத்தை ஓட்டிவிடலாம்தான். ஆனால் அப்படியிருப்பதில் இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எதுவுமேயில்லை. வாழ்ந்ததற்கான சிறு அர்த்தமாவது இருக்க வேண்டுமல்லவா?

குடும்பம், குழந்தை, மனைவி, வீடு, சம்பாத்தியம் எல்லாமே முக்கியம்தான். இல்லையென்றல்லாம் சொல்லவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்திற்கென எதையாவது நம்மால் செய்ய முடியும். யாருக்காவது கை கொடுக்க முடியும். நாயும்தான் பிழைப்பை ஓட்டுகிறது.  நரியும்தான் பிழைக்கிறது. பிழைப்பதற்கும், வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? நாயும் நரியும் பிழைக்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும். 

சம்பாத்தியம், குண்டுச்சட்டி வாழ்க்கையிலிருந்து சற்றேனும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்தல் சாத்தியமேயில்லை. ஒன்றேயொன்று- நம்மைச் சார்ந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இப்பொழுதுதான் வீட்டிலிருப்பவர்கள் ஓரளவுக்கு புரிந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாராவது வந்து பானையை உடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். 

பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது மகியிடம் கேட்டேன். அவன் விவரங்களைச் சொன்னதும் எனக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு பேச்சு வரவில்லை. அவன் மனதில் அது கிட்டத்தட்ட நஞ்சை விதைப்பது மாதிரிதான். எந்தத் தந்தையும் தனது மகனுக்கு எல்லாவிதத்திலும் ரோல்மாடல் ஆகிவிட முடியாது. ஆனால் குழந்தைகள் அப்பனைத்தான் பின் தொடர்வார்கள். அப்பன் செய்கிற செயல்களையே தாமும் செய்வார்கள். அதுதான் ஒவ்வொரு அப்பனுக்கும் பெருமையும் கூட. ஒருவேளை தனது அப்பா செய்வது சரியில்லை என்கிற எண்ணம் மட்டும் உண்டாகிவிட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு தலைகீழாக நின்றாலும் அவர்கள் நம்மை பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அப்பன் ஆகாவழியாக இருந்தாலும் கூட ‘உங்கப்பன் செய்யறது சரியில்லை’ என்று குழந்தையிடம் சொல்வதைப் போன்ற பாவம் எதுவுமேயில்லை. அப்படிச் சொல்ல விரும்பினால் அப்பனிடம் சொல்ல வேண்டுமே தவிர குழந்தையிடம் சொல்லக் கூடாது. ஒருவேளை அப்படிச் சொன்னால் அந்த அப்பனின் மொத்தக் கனவையும் அடித்து உடைப்பது மாதிரிதான்.

பெங்களூரு வீட்டிற்கு வந்த பிறகும் கூட மனது ஒரு வகையில் பிசைந்து கொண்டேயிருந்தது. 

கடந்த வார இறுதியிலும் கூட அவர்களை பெங்களூரிலேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தேன். அவனுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. எங்களது திருமண தினத்துக்கான வாழ்த்துமடல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தான். அதை என்னிடம் கொடுக்கவில்லை. வேணியிடம்தான் கொடுத்திருக்கிறான். அதை வாசித்துவிட்டு அவள் வருந்தக் கூடும் என்று திரும்பத் திரும்ப ‘அப்பா செய்யறது சரிதானங்கம்மா...அதான் இப்படி எழுதியிருக்கேன்..உங்களையும் பிடிக்கும்’ என்று சொன்னானாம்.

திங்கட்கிழமை அதிகாலை பெங்களூர் வந்து  சேர்ந்த போது வாழ்த்துமடல் கண்ணில்படும்படி வைத்துவிட்டுத் தூங்கியிருந்தான். அதைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. 

அவர்கள் அவனிடம் சொன்ன வார்த்தைகளும், அதைக் கேள்விப்பட்ட போது என் முகம் வாடியதும் அவனை வருத்தியிருக்க வேண்டும். ஒரு வாரம் யோசித்திருக்கிறான். திருமண நாள் முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகாக இதைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்.

வாழ்த்து மடலில் கீழேயிருப்பதை எழுதியிருந்தான் -

'My Name is Mahinandhan. I am proud of my father & my mother but I am more proud of my father than my mother because he helps people'

பல சமயங்களில் இரவு நேரங்களில் மகியிடம் விளையாட்டாகக் கேட்பதுண்டு. வேணி அருகாமையில் இருந்தால் கேட்பேன். இல்லையென்றால் கேட்க மாட்டேன். ‘நீ அம்மா பையனா? அப்பா பையனா?’ என்று கேட்ட ஒவ்வொரு முறையும் ‘எனக்கு ரெண்டு பேரையும்தான் பிடிக்கும்’ என்பான். ஒரு முறை கூட அம்மா பையன் என்றோ அப்பா பையன் என்றோ தனித்துச் சொன்னதேயில்லை.  இப்பொழுதுதான் அவனது சங்கல்பத்தை மீறியிருக்கிறான்.

சந்தோஷத்தைவிடவும் நெகிழ்வாக இருக்கிறது.

இதை எழுதலாமா என்று கூட யோசனை இருந்தது. ஆனால் எழுதுவதில் தவறேதுமில்லை. பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள். என்னால் முகத்துக்கு நேராக இதைச் சொல்ல முடியாது. ஆனால் எழுத்து வழியாக சொல்லிவிட முடியும். 

முந்தைய தலைமுறை ஆட்களைவிடவும் இன்றைய தலைமுறைக் குழந்தைகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். என்னிடமிருந்து ஏதாவதொரு நல்ல குணத்தை அவன் பின்பற்றுவதாக இருந்தால் இதைப் பின்பற்றட்டட்டும். வாழ்தலின் அர்த்தம் அது மட்டும்தான்.

17 எதிர் சப்தங்கள்:

Bala said...

Very nice anna ...enna sollurathunu therilana...please take care of the young heart n ur better half....intha mattulum support pannurathe periyar Visayan
..

Malar said...

நெகிழ்வான பதிவு!

சேக்காளி said...

//மகியிடம் விளையாட்டாகக் கேட்பதுண்டு.//
தயவு செய்து இனி விளையாட்டாக கூட கேக்காதீங்க மணி.

Anonymous said...

பலமுறை நான் உங்களிடம் கேட்க துடிக்கும் கேள்வி தான் இது.
ஆனால் இந்த பதிவை படித்த பின்பு என்னையும் அறியாமல் கண்ணீர்...

அருமை...

kasivel said...

உங்கள் மகன் வளர்ந்த பின்பு அவனாக, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஓடத்தின் முடிவில் உங்களின் எந்த சக மனிதர்களுக்கு உதவுதல் என்ற செய்யலை நிச்சியம் தேர்ந்து எடுப்பான். நல்ல விதையை விதைத்து விட்டிர்கள். நிச்சியம் நல்ல ஆழமரமாக வளர்ந்து நிற்பான். பலறுக்கு நிழல் கொடுப்பான். அந்த வாழ்த்து மடலை ஒரு பிறேம் போட்டு எப்போதும் அவன் கண்களில் படும் படி மாட்டிவையுங்கள்.

ADMIN said...

எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடும் குணம் உங்களிடம் உண்டு. பின்பற்றுங்கள். எந்நிலையிலும் தளந்துவிட வேண்டாம். உங்களை உற்சாகபடுத்திய மகிக்கு வாழ்த்துகள்..!

Swamy said...

My name is Srinivasan. I am proud of my friend Manikandan and my other friends but I am more proud of Manikandan than my other friends because he helps people and practice transparency, ethics and honesty. We need such qualities for the mankind. Thank you

நானும் உண்மையிலே உணர்ந்து எழுதிப்பார்த்தேன். நன்றிகள் பல மணி!

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி.....

amma said...

God Bless :)

Sathya said...

Great Mani... Keep it up...

Unknown said...

Nice

urangapuli said...

superb bro

thiru said...

//அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை // ?? !! ??

Unknown said...

அன்புள்ள மணிகண்டன், நீங்கள் உங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டீர்கள். மகனை உச்சி முகர்ந்து வாழ்த்த வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது. - கணேசன்

anujanya said...

எல்லாருக்கும் மனதில் ஆசையாகவும் ரகசியமாகப் பொறாமையாகவும் வளர்ந்து நிற்கும் கேள்விக்கு நெகிழ்ச்சியான பதிவின் மூலம் பதில் அளித்திருக்கிறீர்கள்.

மஹிக்கு என் ஆசிகள்.

Paramasivam said...

பெரியவன் ஆனதும் மகி உங்களைவிட சமுதாயப் பணியில் இன்னும் சிறப்பாக வருவான். எனது ஆசிகள்.

Unknown said...

My daughter wrote a essay on what she wants to be ... School work.. Wherein she wrote , I want to be doctor and after few lines. It was written, I will serve the poor with less fees. When I asked , why so., she said, initially I wrote , I will serve them free., but that's not fair an., so changed it..