Dec 12, 2016

ஸ்ரீனி

ரெட்டி ஒருவர் இருக்கிறார். ஸ்ரீனிவாசலு ரெட்டி. ஆந்திராக்காரர். ஒரு காலத்தில் வசதியாக இருந்த குடும்பம். அப்பா செல்லாக்காசான அரசியல்வாதி. என்.டி.ஆர் பிறகு சந்திரபாபு நாயுடு என தெலுங்கு தேசத்துக்காக வரிசையாகச் சொத்தை இழந்துவிட்டார்கள். இன்றைக்கு ஒன்றுமில்லை. வேலை கைவசமிருக்கிறது. எங்கள் அலுவலகத்தில்தான் பணிபுரிகிறார். பெங்களூரில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அதிகமாக பேசிக் கொள்வதில்லை. எப்பொழுதாவது பேசும் போது ஊருக்கு தான் செய்கிற காரியங்களைச் சொல்வார். வறிய மனிதர்களுக்காக தனது சம்பளத்தில் பெரிய ஓட்டையைப் போட்டுவிடுகிறார். இதெல்லாம் மனைவிக்கு தெரியாது போலிருக்கிறது. ‘நீ செய்யறதை யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை’ என்று ஸ்ரீனியின் அம்மா சொல்வாராம். மனைவிக்கு மட்டுமில்லை- யாருக்குமே சொல்வதில்லை. இத்தகைய வேலைகளை நானும் செய்வதால் தேநீர் அருந்தச் செல்லும் போது இது குறித்து மேம்போக்காக பேசிக் கொள்வோம். மக்களுக்கு எது தேவையானதாக இருக்கிறது, எங்கே சிரமப்படுகிறார்கள் என்பதெல்லாம் பேச்சில் வந்து போகும்.

கடந்தவாரத்தில் ஸ்ரீனியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. தொடர்ந்த காய்ச்சல். இப்பொழுது டெங்கு தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. பயந்து போனவர்கள் தூக்கிக் கொண்டு செய்ண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பிறகு அங்கேயிருந்து வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். அங்கேதான் ஸ்ரீனி சீனானைச் சந்தித்திருக்கிறார். சீனான் கட்டிடக் கூலி. தமிழகத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம். அப்பா துடைப்பம் விற்கிறார். அம்மா வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார். சீனான், அவரது மனைவி, சீனானின் சகோதரர் மூன்று பேரும் கட்டிட வேலைக்குச் செல்கிறார்கள். சொந்தமாகக் குடிசை கூடக் கிடையாது. யாரோ ஒரு மனிதரின் நிலத்தில் குடிசை போட்டிருக்கிறார்கள். மின்சாரம் வசதியெல்லாம் இல்லை. நிலத்தோடு ஒட்டிய குடிசை. குழந்தைகளோடு படுத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரு சீதோஷ்ண நிலைக்கு நிலத்தில் படுப்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

சீனானுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் மீனாட்சிக்கு மூன்று வயதாகிறது. கடந்த வாரத்தில் தீடிரென்று மூச்சுத் திணறல். கூடவே வலிப்பும் வந்திருக்கிறது. அதே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். முதுகெலும்பில் நீர் கோர்த்திருக்கிறது. அதை நீக்க சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பதினைந்தாயிரத்துக்கும் குறைவில்லாமல் செலவாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆறேழு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். சீனானிடம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் இருந்திருக்கிறது.

‘இல்லன்னா எடுத்துட்டு வேற ஆஸ்பத்திரிக்கு போய்டுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். சீனானுக்கும் அவரது மனைவிக்கும் எங்கே தூக்கிக் கொண்டு செல்வது என்று தெரியவில்லை. அவரும் அவரது மனைவியும் அழுது கொண்டிருந்த போது மருத்துவ நிர்வாகத்திடம் ஸ்ரீனி பேசியிருக்கிறார்.

‘இன்னைக்கு நான் கட்டிடுறேன்’ என்று சொல்லியிருக்கிறார். 

‘இன்னைக்கு நீங்க கட்டிடுவீங்க..நாளைக்கு?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீனி அழைத்திருந்தார். எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. மென்பொருள் துறையில் வேலை செய்கிறவர்களை அவ்வளவு எளிதில் நம்ப வேண்டியதில்லை என்று நினைப்பேன். நம்ப வேண்டியதில்லை என்றால் பொய் சொல்வார்கள் என்ற அர்த்தமில்லை. பொய் சொல்ல மாட்டார்கள். ஆனால் மிக எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள். இங்கே நெகிழ்ந்துவிடக் கூடிய ஆட்கள் அதிகம்.

‘யோசிச்சுட்டுச் சொல்லுறேன்’ என்று பதில் சொல்லியிருந்தேன். அந்தப் பதிலுக்கும் அவர் தயாராக இருந்தார். 

ஒருவேளை அறக்கட்டளையிலிருந்து பணம் கிடைக்கவில்லையென்றால் வெளியில் கடன் வாங்கி குழந்தையைக் காப்பாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். முடிவு செய்ததற்கு ஏற்ப ‘குழந்தையைக் காப்பாத்துங்க...நான் பார்த்துக்கிறேன்’ என்று மருத்துவமனைக்கு உறுதியளித்தவர் தனது பணம் பதினாறாயிரம் ரூபாயை உடனடியாகக் கட்டியும்விட்டார். அவர் பணம் கட்டிய பிறகுதான் மருத்துவமனைக்கே உறைத்திருக்கிறது. தனக்கு எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு குழந்தைக்கு கடன் வாங்கியாவது கட்டத் துணிந்த ஒரு ஆளை இந்தக் காலத்தில் அவர்கள் அவ்வளவு எளிதில் பார்த்திருக்க முடியாது. தமது மருத்துவமனையிலேயே  சமூகப் பணிகளுக்கு என ஒரு துறை இருக்கிறது எனச் சொல்லி அங்கே அனுப்பியிருக்கிறார்கள். 

ஸ்ரீனியிடம் ஒரு பலமிருக்கிறது. அவரால் யாரிடமும் பேரம் பேச முடியும். பொதுவாகவே ரெட்டிகளுக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய பலம் அது. influential characters. மருத்துவமனையின் பெருந்தலைகள் ஒவ்வொருவரையும் சனிக்கிழமையன்று பார்த்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்குச் செவி மடுத்திருக்கிறார்கள். ஸ்கேன், எக்ஸ்ரே என தம்மால் இயன்றக் கூடிய எல்லாவற்றையும் இலவசமாகச் செய்து கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். மருத்துவரும் தனக்குப் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

முதல் கையை வைக்கும் வரைக்கும்தான் தயங்கித் தயங்கி மனிதர்கள் நிற்பார்கள். நாம் துணிந்து கையை நீட்டிவிட வேண்டும். பிறகு பல கைகள் சேர்ந்துவிடும். 

சனிக்கிழமையன்று ஸ்ரீனி மீண்டும் அழைத்தார். ‘எல்லாம் பேசிட்டேன் மணி..இன்னுமொரு பதினோராயிரம் மட்டும் வேணும்’ என்றார். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. எங்கேயோ பார்த்த ஒரு குழந்தைக்காக நாய் மாதிரி அலைந்திருக்கிறார். மருத்துவமனை நிர்வாகங்களிடம் பேசிய அனுபவம் எனக்கும் இருக்கிறது. சாமானியத்தில் வளைய மாட்டார்கள். ஐந்தாயிரம் ரூபாயைக் குறைப்பதற்கே தாவு தீர்ந்துவிடும். ஆனால் ஸ்ரீனி சலிக்காமல் பேசியிருக்கிறார்.  பேசியதோடு நில்லாமல் வளைத்திருக்கிறார்.

ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் தான் பேசிய விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு, பேச்சுவாக்கிலேயே ‘எப்படி விட்டுட்டு வர்றது..என் குழந்தை மாதிரிதானே அதுவும்’ என்றார். சுளீரென்றிருந்தது. இப்படியெல்லாம் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் யோசிக்க மாட்டார்கள். அதுவும் இடையில் பணம் வந்து நிற்கும் போது சொந்தமே விலகிப் போய்விடுகிறது. பணத்தையும் கொடுத்து தனக்குச் சொந்தமாகவும் கருதுவது சாதாரணக் காரியமில்லை. ஸ்ரீனி மிகப்பெரிய மனம் படைத்தவர். நம்மைச் சுற்றிலும் நல்லவர்கள் இருப்பதுதானே நமக்கு பலம்? 

‘திங்கட்கிழமை பெங்களூரு வர்றேன்..கொடுத்துடலாம்’ என்று சொல்லியிருந்தேன்.

இன்று குழந்தையையும் அதன் பெற்றோரையும் பார்க்கச் சென்றிருந்தோம். சீனானுக்கு பேசக் கூடத் தெரியவில்லை. வெகுளி. அப்பாவி. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

வழக்கமாகக் கேட்பது போல ‘சாப்பிட்டீங்களா?’ என்றேன். 

முகத்தைச் சலனமே இல்லாமல் வைத்துக் கொண்டு ‘இல்லை’ என்றார். 

‘காலைல?’ என்றேன். 

அவர் கடைசியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்து. கையில் இருபது ரூபாயை வைத்திருந்தார். மனைவியும் அப்படித்தான். சாப்பிடவே இல்லை. அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரிய குழந்தைக்கு மருத்துவமனையில் கொடுத்த உணவையே இளையவனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுமே சோர்ந்து போய்க் கிடந்தார்கள். நாங்கள் சென்றிருந்த போது சீனானின் மனைவி கட்டிலிலேயே தலையைக் குத்தி அமர்ந்திருந்தார். இந்த நாட்டில் இதுவொரு சாபக்கேடு. விவரமேயில்லாத எளிய மனிதர்கள் அவர்கள். குழந்தைக்கு நோய் வந்தால் எங்கே செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள். சீனானுக்கு தன்னுடைய பெயரே சரியாகத் தெரியவில்லை. ஊரில் எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவார்களாம். அதே பெயராகிவிட்டது. எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பகீரென்றிருக்கிறது.

‘உங்க ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வர்றேன்’ என்று சீனான் கேட்டார். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கையைப் பிடித்து நிறுத்தினோம்.

‘போன வாரம் எந்தத் துணி போட்டிருந்தாங்களோ அதே துணியைத்தான் இப்பவும் புருஷனும் பொண்டாட்டியும் போட்டிருக்காங்க’ என்றார். சீனான் எங்களது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மருத்துவரைச் சந்தித்தோம். ‘இப்போதைக்கு பிரச்சினையில்லை...ஆனால் இவங்க எப்படி மெய்ண்டெய்ன் பண்ணப் போறாங்கங்கிறத பொறுத்து இருக்கு’ என்றார். அவர்களால் முடிந்ததுதான் முடியும். ஒற்றைக் குடிசை. அதற்குள் ஏழு ஜீவன்கள். குளிர்காலம். நினைத்துப் பார்க்கவே சில்லிடுகிறது. 


அறக்கட்டளையிலிருந்து பதினோராயிரத்து ஐநூறு ரூபாய்க்கான காசோலையை எழுதிக் கொடுத்தேன். ஸ்ரீனி என்னைக் கொடுக்கச் சொன்னார். ஸ்ரீனி மாதிரியான மனிதர்கள் முன்பாக நானெல்லாம் ஒன்றுமேயில்லை. அவரையே கொடுக்கச் சொன்னேன். கொடுத்தார். சீனானுக்கும் அவரது மனைவிக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஸ்ரீனி தனது சட்டைப்பையிலிருந்து முந்நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு சாப்பிடச் சொன்னார்.

எனக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. காற்று குளிரேறிக் கிடந்தது.

14 எதிர் சப்தங்கள்:

சுதா சுப்பிரமணியம் said...

இப்படி ஒரு மனிதர் எப்படி இருப்பார் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது ... இறுதியில் புகைப்படத்தைப் பார்த்தவுடன் மனது சற்றே ஆறியது... எப்பேற்பட்ட மனிதர்..இன்றைக்கு நடக்கும் அக்கிரமங்களையே படித்து படித்து வருந்திக் கொண்டிருந்த மனதிற்கு மிகுந்த ஆறுதலாய் இருந்தது இந்தப் பதிவு.

சேக்காளி said...


சக்திவேல் விரு said...

சீனிக்கும் உங்களுக்கும் ஒரு சலுயூட் .......தலை வணங்குகிறோம் மணி ....

Jaypon , Canada said...

What to write? My heart is melted for them. will sure send money to Nisaptam

Sasikumar said...

Salute tlboth of you. Immediate help after recovery would be offering sweaters and foam insulation for bed. There are lot of afforfable options for bed that people use in trekking like sleeping bag. Layers of clothes will help them to sustain.

Kiran said...

சொன்னால் கோபம் வரும். ஆனால் இவ்வளவு வறுமையிலும் எதற்கு எந்த தைரியத்தில் இரண்டு குழந்தைகள்?

Sundar Kannan said...

ரெட்டி என்று ஆரம்பித்ததும் , இன்னொரு
"நாக்கு நலபை, அயினுக்கு ஏபை" கதையாக இருக்குமென்று நினைத்தேன்.

Proved: எல்லா இடங்களிலும் எல்லா விதமான மனிதர்கள் உண்டு.

ஸ்ரீனி க்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Paramasivam said...

உங்கள் நண்பரும் உங்களைப் போலவே உள்ளார். நல்லவர் அணி. வாழ்க.

KRISH.RAMADAS said...

தலை வணங்குகின்றேன் ஸ்ரீனிக்கு. மனிதம் இன்னும் சாகவில்லை. ஸ்ரீனியின் செயல்பாடு கண்ணீரை வரவழைத்து விட்டது. சீனான் போன்ற எளிய மனிதர்களுக்கு ஸ்ரீனியைப் போன்று, உங்களைப் போன்று நல்லுள்ளங்கள் நாளும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்.
13.12.2016.

parasparam said...

.தலை வணங்குகிறோம்

Unknown said...

"அதுவும் யென் கொழந்த மாதிரிதானெ!!" எவ்வலவு பெரிய மனஸு.

Unknown said...

what a person!

Unknown said...

super

palanisamy said...

Salute Srini and Mani sir...