Nov 7, 2016

தல Vs தளபதி war

தல Vs தளபதி War என்று பத்திரிக்கையின் போஸ்டர் அடித்து ஊர் முழுக்கவும் ஒட்டியிருந்தார்கள். இந்தியா பாகிஸ்தான் போரைவிடவும் இவர்களின் போர் பெரும் போராக இருக்கும் போலிருக்கிறது. அவர்கள் போரிடுகிறார்களோ இல்லையோ- பத்திரிக்கையின் அக்கப்போர். binary என்பது நம் ஜீனிலேயே ஊறியதுதான். ஒன்று பூச்சியமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் ஒன்றாக இருக்க வேண்டும். கறுப்பாக இருக்க வேண்டும் அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலுமே இரட்டை நிலைதான். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என ஆரம்பித்து சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி வரைக்கும் யாராவது இருவரை அடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதில்தான் சுவாரஸியம் இருக்கிறது. சினிமா மட்டுமில்லை அரசியலிலும் இப்படித்தான். விளையாட்டிலும் கூட அப்படித்தான். மோடி என்றால் ராகுல். ஜெ என்றால் கருணாநிதி. சச்சின் என்றால் கங்குலி.  

நம்முடைய மனநிலையே அப்படித்தான். 

நம்மைப் பொறுத்தவரையிலும் ஒருவன் நல்லவனாக இருப்பான் இல்லையென்றால் கெட்டவனாக இருப்பான். அதுவும் சமீபமாகத்தான் இப்படித் தீவிரமாக மாறிவிட்டோமோ என்று தோன்றுகிறது.‘ஊரு உலகத்துல நாலும் இருக்குமப்பு’ என்று சொன்ன கிழங்கட்டைகளையெல்லாம் தாண்டி வந்துவிட்டு நாம் சொல்வதுதான் மந்திரம் என்று குத்தீட்டியாக நின்று கொண்டிருக்கிறோம். பன்முகத் தன்மை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தானோ என்னவோ ஒன்று இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று இறுகப்பற்றிக் கொண்டு யார் சொன்னாலும் எதையும் கேட்பதில்லை. மூன்றாவது எதுவும் எட்டிக் கூட பார்க்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

தலக்கும் வாலுக்கும் தளபதிக்கும் தலைவலிக்கும் சண்டை நடப்பது பற்றியெல்லாம் பெரிதெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லைதான். அவனவன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் அரிதாரம் போடுகிறார்கள். பத்திரிக்கை நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அவனைக் காட்டி காசு பார்க்கும் வழியைப் பார்க்கிறான். நமக்குப் பிடித்தால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இல்லையென்றால் தள்ளிப் போய்விடுவதுதான்.

ஆனால் சில சூழல்கள் நம்மை அப்படி இருக்க முடிவதில்லை. ஏதோ சுள்ளென்று குத்துகிறது. வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஊரில் கடும் வெயில். காடும் வெளியும் காய்ந்து கிடக்கின்றன. வறட்சி தாண்டவமாடுகிறது. மழை முற்றாகப் பொய்த்துப் போயிருக்கிறது. ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள். ஆனால் வெயில்தான் தாளிக்கிறது. மேட்டூரில் நீர் மட்டம் குறைந்து நந்தி சிலையும் சர்ச்சும் தெரிகிறது. பவானிசாகர் அணையிலும் நீர் இல்லை. கீழ்பவானி ஆற்றில் ‘உயிர்த்தண்ணீர்’ என்று விட்டிருக்கிறார்கள். பத்து நாட்கள் விடுவார்கள். குடிநீருக்கான தண்ணீர் அது. இந்நேரம் வடகிழக்குப் பருவமழை வலுத்து நிலங்களை நனைத்திருக்க வேண்டும். ம்ஹூம். எந்தக் காலத்திலும் காயாத கிணறுகள் கூட காய்ந்து கிடக்கின்றன. எந்தக் காலத்திலும் பச்சை மாறாத பகுதியிலேயே ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு போய்க் கிடக்கின்றன.

உள்ளூர் நண்பரிடம் ‘என்னங்கண்ணா? ஊரு இப்படி ஆகிடுச்சு’என்றேன்.

விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டுவிட்டார்கள். பண்டபாடிகளுக்கு குடிநீர் இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். விவசாயக் கூலிகளின் நிலைமை இன்னமும் மோசம். வேலையே இல்லை. வருமானமும் இல்லை, சோற்றுக்கும் வழியில்லை. கட்டிட வேலை கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். அந்த வேலையும் இல்லாதவர்கள் நெஞ்சுருகிக் கிடக்கிறார்கள். ஐப்பசியிலேயே வறட்சி தாண்டவமாடுகிறது. கார்த்திகை காப்பாற்றினால் பரவாயில்லை. இல்லையென்றால் சித்திரை வைகாசியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இயற்கை பொய்த்துவிட்டது என்று வெற்று ஜம்பம்தான் பேசிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே இயற்கைதான் பொய்க்கிறதா?

இதைப் பற்றியெல்லாம் எதுவுமே நடிகர்களுக்குள்ளான சண்டைகளை எழுதி, நடிகைகளின் திறந்த மார்புகளைக் காட்டி காசு சம்பாதிக்கும் போது வயிறு எரியத்தான் செய்கிறது. நாம் இழந்துவிட்ட பண்பாடு, இயற்கை, சூழலியல் குறித்தெல்லாம் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிற பத்திரிக்கைகள் ஏன் அருகிப் போய்விட்டன.  ஒரு தலைமுறையே வெறும் சினிமா மட்டுமே பற்றுதலாக மழுங்கிக் கிடக்கிறது என்பதுதான் நிதர்சனம். பத்திலிருந்து இருபத்தைந்து வயதிலிருக்கும் பெருங்கூட்டம் சினிமாவைத் தாண்டி எதையும் யோசிப்பதில்லை.

பல்லடம் பகுதி மக்களிடம் பேசினால் ‘காற்றாலைகள்தான் காற்றின் திசையை மாற்றி மழையைக் குறைத்திருக்கின்றன’ என்கிறார்கள். அவர்கள் பகுதியில் காற்றாலைகள் அதிகம். அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது. செல்போன் டவர்கள்தான் சிட்டுக்குருவியை அழித்தன என்கிறாரகள். சரியா தவறா என்கிற நிரூபணப்பூர்வமான விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை. 

அங்கலாய்ப்பாக இருக்கிறது. 

மனிதர்களிடம் இது குறித்தெல்லாம் குறைந்தபட்ச புரிந்துணர்வாவது வரவில்லையென்றால் எதையும் காக்க முடியாது. உலகமே இப்படித்தான் இருக்கிறது என்று சப்புக் கொட்டலாம்தான். குறைந்தபட்சம் நம் மக்களிடமாவது நமக்கான புரிதலை உண்டாக்க வேண்டியதில்லையா? ஏன் ஊடகங்கள்- பெரும்பாலான ஊடகங்கள்- கண்களை மூடிக் கொள்கின்றன? இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரில் நாம் அழித்துக் கொண்டிருக்கும் இயற்கையையும் புவியையும் பற்றி மக்கள் மேம்போக்காகவாவது வருத்தப்பட வேண்டுமானால் அது ஊடகங்களால்தான் சாத்தியம். அதை ஏன் இவர்கள் மறந்து போகிறார்கள் என்று யோசிக்கும் போது சுள்ளென்றுதான் இருக்கிறது.

வள்ளலார் நெகிழச் சொல்கிறார். நெகிழ்வதுதான் மனிதம். அதுதான் மனிதத்தன்மை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடாவிட்டால் தொலைகிறது. சக மனிதன் வறப்பட்டினி கிடக்கும் போதாவது யோசிக்க வேண்டாமா? அப்பொழுதும் கூட நடிகனும் நடிகையும்தான் நமக்கு முக்கியமென்றால் எழுத்தை ஏன் தொழிலாகச் செய்ய வேண்டும்?

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கவே முடியவில்லை. கூளமூப்பனூர் வரைக்கும் சென்றிருந்தேன். ஆயாவொன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தது. வறட்சி, மழை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். ஏதோ பேசிவிட்டு ‘மழ பெய்யுங்களாய்யா?’ என்றேன். அதுவரை பேசிக் கொண்டிருந்த அந்த ஆயாவுக்கு பொசுக்கென்று அழுகை வந்துவிட்டது. ஏழெட்டு மாடுகள் வைத்திருந்தாராம். நீர் இல்லை. மேவு இல்லை. வழியில்லாமல் ஐந்தாறைக் கொடுத்துவிட்டார். இப்பொழுது ஒன்றிரண்டு வைத்திருக்கிறார். பையனும் மருமகளும் திருப்பூர் பனியன் கம்பெனிக்குச் சென்றுவிட்டார்கள். இப்பொழுது ஆயா மட்டும்தான். பிழைக்க வழியில்லாமல் பஞ்சம் பிழைப்பதற்காக இந்த மண்ணையும் மனிதர்களையும் விட்டுச் செல்கிற வலி அந்த ஆயாவுக்குப் புரிந்திருந்தது. ‘தெரியல கண்ணு...பெஞ்சுதுன்னா தப்பிச்சுடலாம்...இல்லன்னா மாடுகளுக்கு உட்ட வழிதான் எனக்கும்..இங்கேயே செத்துப் போயிருவேன்’ என்றார். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கிளம்பி வந்துவிட்டேன். 

14 எதிர் சப்தங்கள்:

Akil Ravi said...

செல்போன் டவருக்கும் சிட்டுக்குருவி இனம் குறைவதற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மாகடி ரோட்டில் உள்ள தாவரகெரேயில் 2 வருடங்கள் இருந்தபோது கவனித்தேன், அந்த சிறிய ஊரில் அத்தனை செல்போன் டவர்கள்.. ஆனால் சிட்டுக்குருவிகளுக்குப் பஞ்சமில்லை. சாலையில் செல்லும் போது நமக்கு முன்பாக அத்தனை சிட்டுகள் எதையாவது கொத்திக்கொண்டிருக்கும்.. கவனித்தபோது தான் புரிந்தது, சின்னச் சின்ன மளிகைக்கடைகள் அங்கு நிறைய இருந்தன.. அவற்றின் முன்பகுதியில் தானிய மூட்டைகள். சிதறும் தானியங்கள் அவற்றுக்கு உணவாகிக் கொண்டிருந்தது. அந்த மக்கள் ராகியை முக்கிய உணவாகக் கொண்டிருந்ததால் மொட்டை மாடிகளில் காய வைத்து அரைத்துப் பயன்படுத்துவார்கள். அதைத் தின்ன எப்போதும் மாடிகளில் புறாக்கூட்டம் இருக்கும்.. அரவை எந்திரங்கள் இருக்கும் இடங்களிலும் சிட்டுகள் நிறைய இருந்தன. நான் புரிந்து கொண்டது, வயல்களில் ஒரு தானியம் கூட சிந்தாமல் இயந்திரங்களால் அறுவடை நடப்பதும், சிறு மளிகைக் கடைகளை அகற்றி பாலிதீன் தானிய பைகளால் நிரம்பிய மால்கள் வந்ததும் கூட சிட்டுகளின் அழிவுக்குக் காரணமாயிருக்கலாம்.

சக்திவேல் விரு said...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வறட்சியா தெரிகிறது ...மனிதன் இன்னும் அதிலிருந்து பாடம் கட்க வில்லையெனில் இயற்கை அன்னையும் அவனை கைவிட போவதை தவிர்க்க இயலாது .....நானும் என் விவசாயி அப்பாவிடம் தினம் பேசும் போது மழை பெய்ததா என்ற கேள்வியை மாற்றி பேயுமா என்று என்று கேக்க ஆரம்பித்துவிட்டேன் அவர் இன்னும் நம்பிக்கை இருப்பதா சொல்லுகிறார் ..... இயற்கைக்கு தான் வெளிச்சம் ..

Kumar said...

All official media barons and businesses are controlled nowadays. Whistle blowing articles or events are SUPPRESSED or SETTLED. We are heading into a very diffcult age of life.

அன்பே சிவம் said...

எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவதும் எட்டி நின்று வேடிக்கை பார்பதும் நம் தேசிய குணமாச்சே!

Sundar Kannan said...


I agree with you Mani.

We're heading towards a disaster. We need to think about our wards and save not only money but also nature for them.

GANESAN said...

உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன் திரு .மணி . இன்று நிலவி வரும் அத்தனை சீர்கேடுகளுக்கும் முறைகேடுகளுக்கும் கரணம் ஊடகங்ளின் பொறுப்பற்ற அல்லது இயலாமை அல்லது வேறு எதுவோதான் காரணம் . இதற்கு
தீர்வு என்ன என்பதை நோக்கி நம்முடைய செயலகலை செய்ய வேண்டும் . என்ன தீர்வு என்பதை முதலில் முடிவு செய்வோம்மே நாம் அனைவரும் .

Aravind said...

sivakasi crackers factory owners were very happy that rain didn't come upto diwali. atleast from here on, rain should come.

சேக்காளி said...

//விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிற பத்திரிக்கைகள் ஏன் அருகிப் போய்விட்டன//
வேண்டாம் என்று நாம் மறுக்கும் வரை அவர்கள் தொடரத்தான் செய்வார்கள்.

Paramasivam said...

உண்மை. இயற்கையை மனிதன்மறந்தான். இப்போது இயற்கை மனிதனை மறந்தது. மரங்களை புதிதாக வைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கும் மரங்களை அழிப்பது தான் இப்போது எல்லா அரசுகளும் செய்யும் வேலை. நடிகர்களாக மனது வைத்து, இதுபற்றி தன் ரசிகர்களிடம் சொன்னால், மாற்றம் வரலாமோ என்னவோ. ஆனால் அதற்குள் மழை, தண்ணீர் போன்றவை அரிதாகி விடுமோ என பயமாக உள்ளது.

சேக்காளி said...

1.//கறுப்பாக இருக்க வேண்டும்//.கருப்பாக
2.//பெரிதெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லைதான்.// பெரிதாக அல்லது பெரிதாகவெல்லாம்
3.//ஆனால் சில சூழல்கள் நம்மை அப்படி இருக்க முடிவதில்லை.//
சூழல்களில் நம்மால் அல்லது இருக்க விடுவதில்லை.
4.//எதுவுமே நடிகர்களுக்குள்ளான//. இரண்டு வார்த்தைகளுக்குமிடையே "எழுதாமல்" என்பது காணாமல் போயிருக்கிறது.
5.//புவியையும் பற்றி மக்கள் மேம்போக்காகவாவது// மக்களை
6.//‘மழ பெய்யுங்களாய்யா?’ //. பெய்யுங்களாம்மா?
சனாதிபதி தேர்தலை நெனைச்சு இவ்ளோ தடுமாற்றமா?

Vaa.Manikandan said...

1. கறுப்பு, கருப்பு - இரண்டுமே சரியான சொற்கள்தான்.எங்கள்
கறுத்த மாரியின்பேர் - சொன்னால் காலனும்...என்பது பாரதியின் வரிகள்.

2,3,4 பிழைகள்தான்.

6. மழை பெய்யுங்களா ஆயா? என்பதை மழ பெய்யுங்களாய்யா என்றுதான் கேட்டேன். அது சரியான வழமைதான்.சேக்காளி said...

மழை பெய்யுங்களா ஆயா? என்பதை மழ பெய்யுங்களாய்யா என்றுதான் கேட்டேன். அது சரியான வழமைதான்.

சேக்காளி said...

//கறுத்த மாரியின்பேர் - சொன்னால் காலனும்...என்பது பாரதியின் வரிகள்//
ஏற்றுக் கொள்வதற்கு இன்னும் உதாரணங்கள் தேவை.

சேக்காளி said...

https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1217125938325893