Nov 7, 2016

அக்டோபர் 2016

அக்டோபர் 2016 மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம்-1) வரிசை எண் 13: வருமான வரித்துறையின் விதிமுறையின்படி பதினேழு லட்ச ரூபாய் நிரந்தர வைப்பு நிதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மார்ச் 31, 2017க்குள் இந்த நிதியானது நிரந்தர வைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு குறைந்தபட்சம் பனிரெண்டு லட்ச ரூபாயாவது பயனாளிகளுக்குக் செலவிடப்பட்டுவிட வேண்டும்.

2) வரிசை எண் 15: வைபவ் கிருஷ்ணா என்கிற குழந்தையின் மாதாந்திர பராமரிப்புக்காக வழங்கப்படுகிற தொகை.

3) வரிசை எண் 20: எம்.ஜி.ஆர் காலனியைச் சார்ந்த நாடோடி மக்களின் குழந்தைகள் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்குச் செல்வதற்காக வழங்கப்பட்ட தொகை. ஐந்து மாணவர்களில் நான்கு மாணவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார்கள்.

4) வரிசை எண் 24: ஜனார்த்தனன் என்கிற மாணவருக்கு அம்மா இல்லை. அவர்தான் பூ விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அம்மா இறந்த சில மாதங்களிலேயே பூ வியாபாரத்திற்குச் சென்று திரும்புகையில் ஏதோ ஒரு வாகனம் இடித்து கீழே விழுந்த அவரது அப்பாவும் நடமாட்டமின்றி முடங்கிவிட்டார். காலையில் எழுந்து உணவு சமைத்து, அப்பாவின் கழிவுகளைச் சுத்தம் செய்து, அவருக்குக் குளிப்பாட்டி பிறகு கல்லூரிக்கு வருவது என ஒவ்வொரு நாளும் ஜனார்த்தனனுக்கு வேதனைதான். மாலையில் கோவில் வாசலில் பூ விற்கிறார். வாய்ப்பிருக்கிற பக்கமெல்லாம் கடன் வாங்கி ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் பணம் கட்டிப் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடம் படிப்பு முடிகிறது. இந்த வருடத்திற்கான கல்லூரித் தொகை அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

5) வரிசை எண் 25: தணிகைச் செல்வன் கைத்தறிக் கூலித் தொழிலாளியின் மகன். வசதி எதுவுமில்லை. நன்றாகப் படிக்கக் கூடிய தணிகை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டான். கல்லூரிக்கான தொகையைக் கட்டிவிட்டார்கள். விடுதிக்கான தொகையை அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

6) வரிசை எண் 26: பெண் குழந்தையின் தாயார் அவர். குழந்தைக்கு ஆறு வயது. அம்மாவுக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சினை. புற்றாக இருக்கும் என சந்தேகிக்கிறார்கள். முதற்கட்டமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். சில லட்சங்கள் தேவைப்படுகிறது. கணவருக்கு சென்னையில் சொற்ப சம்பளம். அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையில் சிறு பகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் இறுதியில் அறக்கட்டளையில் ரூ.10,53,681 (பத்து லட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு ரூபாய்) இருக்கிறது. இது தவிர நிரந்தர வைப்பு நிதி பதினேழு லட்சம். மொத்தமாக இருபத்தேழு லட்சத்து ஐம்பதாயிரத்துச் சொச்சம். 

வரவு செலவில், அறக்கட்டளையின் செயல்பாட்டில், விதிமுறைகளில் என சந்தேகங்களோ கேள்விகளோ இருக்குமெனில் தொடர்பு கொள்ளவும். நிசப்தத்தில் எழுதுகிற கட்டுரைகள் குறித்தெல்லாம் யாராவது ஏதாவது மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஆனால் நிசப்தம் அறக்கட்டளை குறித்து கேள்விகளும் வருவதில்லை. சந்தேகங்களும் எழுப்பப்படுவதில்லை. விரிவான உரையாடல்களே அறக்கட்டளையின் செயல்பாடுகளை இன்னமும் சீரமைக்க உதவும். எனவே எந்தவொரு சிறு கருத்தாக இருந்தாலும் தாராளமாகத் தெரியப்படுத்தவும். ‘ஒண்ணாரை ரூவா கணக்குல வரல’ என்றாவது கிளப்பிவிடவும். தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட விரும்புகிறவர்களும் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அன்பே சிவம் said...

சந்தேகம்?, இருந்தாத்தானே கேள்வி வரும். இங்க இருக்கிறதெல்லாம் சந்தோஷமே!..,