Nov 16, 2016

வேண்டுமென்றே செய்வதில்லை

சில சமயங்களில் தன்னிலை விளக்கம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. இப்பொழுது அறக்கட்டளை சார்ந்து இரண்டு விஷயங்கள் கைவசமிருக்கின்றன.

முதலாவது-

தம்மிடம் பணம் இருப்பதாகவும் நிசப்தம் அறக்கட்டளையின் PAN எண்ணையும் ஸ்கேன் பிரதியையும் அனுப்பி வைத்தால் அறக்கட்டளையின் கணக்கில் செலுத்திவிடுவதாகவும் இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. தயவு செய்து அப்படிச் செய்ய வேண்டாம். தங்களுடைய கணக்கிலிருந்து ஆன்-லைன் பரிமாற்றம் செய்வதாக இருப்பின் பிரச்சினையில்லை. ஆனால் பரிமாற்றம் செய்ய இயலாமல் மீந்து போகிற ஐநூறு ஆயிரம் ரூபாய்த்தாள்களை அறக்கட்டளையின் கணக்கில் செலுத்துவதை தயவு கூர்ந்து தவிர்க்கவும். வேறு ஏதேனும் அறக்கட்டளையைப் பார்த்துக் கொள்ளவும். 

இரண்டாவதுதான் என்னளவில் முக்கியமானது-

அறக்கட்டளையிலிருந்து உதவி வேண்டும் எனக் கேட்டு வரும் எல்லோருக்கும் உடனடியாக பதில் சொல்ல முடிவதில்லை. உதாரணமாக கடந்த பத்து நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட நாற்பது பேர்களாவது அழைத்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு பேர். தினமுமே இவ்வளவு அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வருவதில்லை என்றாலும் சராசரிக் கணக்குப் போட்டால் மூன்று அல்லது நான்கை நெருங்கிவிடும். சிலர் அழைக்கும் போது ‘அப்புறமா பேசலாமா?’ என்பேன். அப்படிச் சொல்வதைத் தவிர்ப்பதாக நினைத்துக் கொள்கிற நிறையப் பேர் அழைப்பதேயில்லை. கெட்ட பெயர்தான். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

சமீபத்தில் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ஒரு நண்பர் அழைத்துக் கொண்டிருந்தார். அவரே தமக்குப் பிரச்சினையென்று நம்மை அணுகுகிறார். நம் பிரச்சினையை அவரிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று ‘மறுபடி பேசலாம்’ என்கிற ரீதியில் இரண்டு மூன்று முறை சொன்னேன். எனக்கே நன்றாக ஞாபகமிருக்கிறது. திரும்பவும் அழைத்துப் பேச வேண்டும் என்று கூட நினைத்ததுண்டு. ஆனால் அழைக்கவில்லை. தவறுதான். ஆனால் கோபித்துக் கொண்டார். ‘அவனவனுக்கு வந்தால்தான் வலி தெரியும்’ என்று எழுதியிருந்தார். வருத்தப்பட்டுத்தான் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இங்கு யாருக்குத்தான் வலி இல்லை? எல்லோருக்கும்தான் வலி இருக்கிறது. இருக்கிற வலியே போதும் என்றுதான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 

இன்னொரு நண்பர். அவரது நண்பருக்கு கண் பார்வை மங்குகிறது என்றும் ஏதேனும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கித் தரச் சொல்லிக் கேட்டார். நிறைய நண்பர்களிடம் விசாரித்தேன். ‘ப்ரோகிராமிங் கஷ்டம்..யாரும் தர மாட்டாங்க...ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் மாதிரி ஏதாவது சர்டிபிகேஷன் வாங்குங்க’ என்றார்கள். இதைத்தான் நண்பரிடம் தகவலாகச் சொன்னேன். அடுத்த சில நாட்களில் வந்து திட்டி எழுதியிருந்தார். என்னால் இயன்றளவுக்கு முயற்சிக்கிறேன். அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக இதை எழுதவில்லை. இப்படி நினைக்கிறவர்களும் புரிந்து கொள்ளட்டும். வேறு வழி தெரியவில்லை.

இன்று வரைக்கும் எப்படியும் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனாளிகளை நேரில் சந்தித்திருக்கிறேன். கடந்த முப்பது நாட்களில் மட்டும் ஒட்டப்பிடாரம், கம்பம், ஜலகண்டாபுரம் என்று நிறைய ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். சென்னை, கோபி பயணங்கள் தனிக்கணக்கு. இப்படிச் சென்றாலும் கூட முக்கால்வாசி கோரிக்கையாளர்களை நிராகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு கோபம்தான். ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. நிராகரிக்கப்படும் கோரிக்கைகள், உதவ இயலாத கோரிக்கைகள், பதில் சொல்லப்படாத கோரிக்கைகள் என்று பல தரப்பிலிருந்தும் அடி வாங்க வேண்டியிருக்கிறது.

பதில் சொல்ல முடியாததற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. வேண்டுமென்று செய்வதில்லை.

குடும்பமும் பிழைப்புக்கான வேலையும் பெங்களூரில் இருக்கிறது. அம்மாவும் அப்பாவும் ஊரில் இருக்கிறார்கள். இடையில் சென்னையிலும் வேலை இருக்கிறது. அவ்வப்போது இந்த மூன்றையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் அறக்கட்டளைக் காரியங்களுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். ‘இவ்வளவு அலைஞ்சு உடம்புல ஏதாச்சும் பிரச்சினையை வாங்கிக்காத’ என்று புலம்பும் அம்மாவுக்கும் வேணிக்கும் தெரியும். ‘சனி,ஞாயிறு ஆனா அப்பா வீட்டிலேயே இருக்க மாட்டாங்க’ என்று வருந்தாமல் வருந்துகிற மகிக்குத் தெரியும். இதையெல்லாம் எழுதவே கூடாது என்றுதான் நினைப்பேன். ஏதோ பிரமாண்டப் பணியைச் செய்து கொண்டிருப்பதான தொனி வந்துவிடக் கூடாது என்று கவனமாகத்தான் இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் எழுத வேண்டியிருக்கிறது.

ஒட்டப்பிடாரத்திலும் குமுளியிலும் பார்க்கிற மனிதர்களை அவசியமில்லாமல் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்றுதான் தோன்றும். அதனால்தான் எழுதுவதில்லை. அடக்கமாக இருந்து கொள்வோம் என்று ஏதோ அசிரீரி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இப்படி அலைவதாலும் ஊர் ஊராகச் செல்வதாலும் எனக்கான தனிப்பட்ட பலன் என்று எதுவுமில்லை. இயன்ற அளவுக்கு முழு உத்வேகத்துடன் செய்வோம் என்றுதான் செய்கிறேன். அதில் சிரமங்கள் இல்லாமல் இல்லை.

தன்னார்வலர்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். தன்னார்வலர்களாக இருக்க விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று கேட்டு இரண்டு மூன்று முறை எழுதியாகிவிட்டது. மூன்று அல்லது நான்கு பேர் அனுப்பியிருந்தார்கள். சென்னையில் வசிப்பவர்கள் அல்லது கோயமுத்தூரில் வசிப்பவர்கள். இவர்களில் யாரை தென் தமிழகத்திற்கு அனுப்ப முடியும்? ‘போய்ட்டு வர்றீங்களா?’ என்று கேட்கக் கூட சங்கடமாக இருக்கும். பையைத் தூக்கி தோளில் போட்டு நானே கிளம்பிவிடுகிறேன்.

உதவி கேட்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ‘இல்லை’ என்று பதில் சொல்லப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. பதில் சொல்ல முடியாமல் போகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. அவர்களின் வருத்தங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. எல்லாமும் எதிர்பார்த்ததுதான். உலகமகா காரியத்தைச் செய்வதாகச் சொல்வதற்காக இதை எழுதவில்லை. இயன்றளவுக்கு என் உழைப்பையும் நேரத்தையும் கொடுக்கிறேன், மீறி என்னால் செய்ய முடியாத உதவிகளுக்காகப் புரிந்து கொண்டு மன்னியுங்கள் என்று கேட்பதற்காகவே எழுதுகிறேன்.

யார் மீதும் குறையில்லை. யார் மீதும் வருத்தமுமில்லை. ஆத்மப்பூர்வமாகத்தான் இதைச் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் புலம்புவதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

வெளியிலிருந்து பார்த்து எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாம். சத்தியமாக ஒரு சதவீதம் கூட யாரையும் தவிர்க்கவும் புறக்கணிக்கவும் விரும்புவதில்லை. அப்படிச் செய்கிற உரிமையும் எனக்கு இல்லை என்று தெரியும்.

சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லிவிட்டேன்.

இப்போதைக்கு பாதை தெளிவாகத்தான் இருக்கிறது. இத்தகைய அடிகள்தான் புதிதாக இருக்கின்றன. 

நன்றி.

11 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஏதாவது supportive வா சொல்லணும்னு நினைக்குறேன்... என்ன சொல்லனு தான் தெரியல..கொஞ்சம் கொஞ்சமா பொது நலத்தை சிந்திக்கிற நண்பர்கள் உங்க கூட சேருவங்கங்குற நம்பிக்கைல தொடர்ந்து செய்யுங்க... All The Best!!!
-அருண்

சேக்காளி said...

மணி!எங்கூரு பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.
தனக்கு போகத் ( மீதம் இருந்தால்) தான் தானம் என்று.அதனால் நீங்கள் செய்வதை திருந்த செய்யுங்கள். செய்ய முடியாததை நினைத்து அலட்டிக் கொள்ளாதீர்கள்.
http://www.nisaptham.com/2016/10/blog-post_24.html
இந்த பதிவிற்கு
//மத்தேயு 7:8//
என ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்.அதில் தேடுகிறவன் கண்டடைகிறான் என்றொரு வசனம் வரும். அதனை குறிப்பிட மத்தேயு 7:8 என மறைமுகமாக குறிப்பிட்டிருந்தேன்.
அதனை தொடர்ந்து இன்னும் கொஞ்சம் வாசித்தேன். அதில் ஒரு இடத்தில் ஏசு பிசாசு பிடித்தவர்களுக்கு அதனை விரட்டுவார். அதனை பொறுக்காத அவரது எதிரிகள் "இவன் பிசாசுகளின் தலைவன். அதனால் தான் பிசாசுகள் தலைவனின் சொல் கேட்டு ஓடி விடுகிறது" என்று சொல்கிறார்கள். அதனை வாசிக்கும் போது மனித மனதின் துவேசங்கள் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என ஆழ்ந்து யோசித்தேன்.
அதனால் அவதூறு பரப்பு கிறார்களே, வார்களே என முடி இல்லாத மண்டையை குழப்பாதீர்கள்.
பெரியார் படத்தில் தன்னை விட அதிகமா யோக்கியதை இருக்குற யாருமே முன் வரவில்லை என்பதனாலேயே வெறும் நாலாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தான் ( ஈவெரா) இந்த சீர்திருத்தங்களை எல்லாம் செய்வதாக சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் சொல்லுவார்.
( https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM இடம் 01:41:00 to 01:41:43 )
அதே போன்று நாங்கள் செய்யாததை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

அன்பே சிவம் said...

தங்களுடன் தன்னார்வலராக வர அடிப்படை தேவை அ தகுதி என்ன என்பதை தாங்கள்தானே நிர்ணயிக்க வேண்டும்

Vinoth Subramanian said...

Don't worry. It happens.

Packirisamy N said...

தாங்கள் செய்யும் பணி சாதாரணர்களால் செய்ய இயலாது. தூற்றுபவர்கள் தூற்றட்டும். மனதுக்கு சரி என்று தோன்றும் வழியில் செல்லுங்கள். தனக்கு வலி என்று சொல்பவர்கள் செய்யட்டுமே, செய்து பார்த்தால்தான் வலியும் புரியும். குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்கள். வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!

Kannan said...

ஒண்டி ஆளாக செய்வது கஷ்டம்தான்..ஒரு volunteer குழு வைத்து கொண்டு எதாவது செய்ய முடியுமா என்று முயற்சியுங்கள். சென்னையில் இதற்கு ஒரு கூட்டம் கூட்டினால் நான் வர தயாராக இருக்கிறேன்..

வெங்கி said...

மணி, புரிகிறது. செய்வதை சுணக்கமில்லாது தொடருங்கள். எங்களின் அன்பு எப்போதும் உங்களுடன்.

சுதா சுப்பிரமணியம் said...

எல்லாருக்கும் நல்லவங்களா யாராலயும் இருக்க முடியாதுங்க மணிகன்டன்.நம்ம மனசாட்சிக்கு சரின்னு பட்டா போதும்...

அன்பே சிவம் said...

எந்த சூழலிலும் சிக்கிக்கொள்ளாமல் கையாள்கிறவனே, நல்ல நிர்வாகி. ஒரு நல்ல நிர்வாகி யார்?! இப்போது

Paramasivam said...

எனது அப்பா கூறுவார்: எல்லாருக்கும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது என்று. அதனை இப்போது நினைவு கூறுகிறேன். நாம் நம் வழியில் செல்லுவது தான் முக்கியம்.

ABELIA said...

எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. உங்களுடைய மனதிருப்திக்கு செய்யுங்கள். உங்களுடைய வெளிப்படைத்தன்மைதான் உங்களது வெற்றிக்கு காரணம். மற்ற எதுவும் மனதை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே போதும். !