பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த போது தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கமாக நிற்க ஒரேயொரு கன்னட சேனல் மட்டும் தனியாக சிறைச்சாலையின் வாயிலுக்கு நேரெதிரில் ஒரு குடிசை போட்டு இருபத்து நான்கு மணி நேரமும் காத்திருந்தார்கள். அவர்களுக்கும் அம்மாவுக்காகத்தான் நிற்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஜனார்த்தன ரெட்டிக்காக காத்திருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது. அது ஏன் ஒரேயொரு சேனல் என்று கேட்டால் அதற்கொரு கதையைச் சொன்னார்கள். அப்பொழுது ரெட்டிகாரு உள்ளே அடைக்கப்பட்டிருந்தார். ரெட்டிகாருவின் அருமை பெருமைகளையெல்லாம் வெளிக் கொண்டு வந்ததில் அந்தச் சேனலுக்கு முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. அதனால் அவருக்கு இந்தச் சேனல் மீது ஒரு கண். சேனலுக்கும் இவர் மீது ஒரு கண் என்றார்கள்.
‘அவர்தான் உள்ளே இருக்காரு...இவங்க 24 மணி நேரமும் தேவுடு காத்து என்ன செய்யப் போகிறார்கள்?’ என்று கேட்டதற்கு ‘ராத்திரியான்னா ஆம்புலன்ஸ் மூலமா வெளியே போய் தனது வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டு அதிகாலை உள்ளே வந்துவிடுவதாக ஒரு பேச்சு இருக்கு’ என்றார்கள். அதைக் கண்காணித்துக் மாட்டிவிடத்தான் சேனல்காரர்கள் காத்திருந்தார்களாம். அம்மாடியோ- வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லாத ஒரு பந்து உருளத் தொடங்கியது. அப்படியே திரும்பி உள்ளே வந்து கரை வேட்டிக்காரர்களிடம் நின்று கொண்டேன். நம்மாட்கள் எவ்வளவோ தேவலாம் என்றுதான் சத்தியமாக நினைத்தேன்.
இன்று ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்.
பெங்களூரு அரண்மணை மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று மாலை அந்த வழியாகச் சென்று வந்த போது மலைத்து மாளவில்லை. அந்த வட்டாரமே களை கட்டியிருக்கிறது. விசாரித்த வகையில் எப்படியும் ஐநூறு கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்கிறார்கள். செய்தித்தாள்களிலும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பீடாக்கடையிலிருந்து பீடாவை எடுத்து விருந்தினர்களிடம் விநியோகிக்க மட்டுமே ஐம்பது மாடல்களை நியமித்திருக்கிறாராம். ‘சொக்கா...சொக்கா’அவர்களைப் பார்ப்பதற்காகவே திருமணம் நடக்கும் போது உள்ளே எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்றிருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் பவுன்ஸர்களே பல ஆயிரம் பேர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறாரகளாம். தூக்கி வீசினால் சிங்கசந்த்ரா வீட்டிற்கே வந்து விழுந்துவிடுவேன்.
அழைப்பிதழ் கொண்டு போனால்தான் உள்ளே விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அழைப்பிதழ் டிவிப்பெட்டி போல இருக்கிறது. திறந்தால் படம் ஓடுகிறது. அதைத் தூக்கி வரச் சாத்தியமில்லை. யூடியூப்பிலேயே அழைப்பிதழை சலனப்படமாக எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.
இந்த பிரமாண்ட திருமணத்திற்கு அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வியாபாரிகள் என்று ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேராவது வரப் போவதாகக் கணித்திருக்கிறார்கள். லட்சத்தில் ஒருவனாக இருந்துவிட்டுப் போகிறேன். ‘எனக்கு சோறெல்லாம் வேண்டாங்கண்ணா..பொண்டாட்டியே தக்காளிக் குழம்பு செஞ்சு டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடுத்திருக்கா...வேடிக்கை மட்டும் பார்த்துட்டு போயிடுறேன்’எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன். அநேகமாக விட்டுவிடுவார்கள்.
ரெட்டிகாரு பரம்பரைப் பணக்காரர் எல்லாம் இல்லை. தெலுகுவாலுதான். ஆந்திராவில் உள்ள சித்தூர்தான் சொந்த ஊர். அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். நம் ஊரில் சொல்வார்களே? வாத்தியார் பையன் மக்கு. அந்த மாதிரி போலீஸ்காரர் பையன்கள். அண்ணன் தம்பிகள் மூன்று பேருமாக பெல்லாரிக்கு வந்து வட்டிக்கு விட்டுக் கொண்டிருந்தவர்கள் பல கோடிகளைச் சேர்த்தது 2004க்குப் பிறகுதான். அந்த ஆண்டில்தான் பெல்லாரியில் இரும்புச் சுரங்கம் அமைக்க அனுமதி வாங்கி வெட்டி வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். கோடிகள் குவிந்தன. சோனியாகாந்தி பெல்லாரியில் போட்டியிட்ட போது சுஷ்மா சுவராஜ் பெல்லாரியில் அவரை எதிர்த்து போட்டியிட்டார் அல்லவா? அப்பொழுது சுஷ்மாவுக்காக களப்பணியாற்றியதில் அவரது செல்லப்பிள்ளைகள் ஆகிப் போனார்கள். அதன் பிறகு அசுர வளர்ச்சி. வெறும் இருபதாண்டுகளில் சம்பாதித்ததுதான் பல்லாயிரம் கோடி ரூபாயும்.
பணம் சேரச் சேர பதவி மீதும் ஒரு மோகம் வர மூன்று வருடங்கள் எடியூரப்பாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அதன் பிறகு கைது, வழக்கு- வழக்கு நடத்தவே ஆயிரக்கணக்கான கோடிகள் செலவாகியிருக்கும் என்கிறார்கள். வெளியில் வந்து தனியாகவொரு கட்சி தொடங்கி அதற்கும் செலவு செய்தார். அத்தனை செலவுகளுக்குப் பிறகும் மகள் திருமணத்தை நடத்த ஐநூறு கோடி செலவு செய்கிறார் என்றால் எங்கேதான் இவ்வளவு பணமும் இருந்திருக்கும்?
நாம்தான் ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் கனரா வங்கியில் கூட்டமா, ஐசிஐசிஐயில் கூட்டமா என்று கவாத்து அடித்துக் கொண்டிருக்கிறோம். வலது கையில் மை வைப்பார்களா? இடது கையில் மை வைப்பார்களா அல்லது இருபத்தொன்றாம் விரலில் வைப்பார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். நேற்று பெல்லாரி செல்லும் வழியில் ஒரு காரை மடக்கி அறுபது லட்சம் ரூபாய்க்கான ஐநூறு ஆயிரம் நோட்டுக்களை வைத்திருந்ததாக இருவரைக் கைது செய்திருக்கிறார்கள்.‘நாங்க ரெட்டி ஆளுங்க’என்று சொல்லியிருக்கிறார்கள். செய்தி வெளியாகியிருந்தது. இதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை என்றுதான் தோன்றியது. அறுபது லட்சம் என்பதெல்லாம் இந்த மனிதருக்கு பிச்சைக்காசு. அதை மாற்றுவதற்காக யாரோ இருவரை அனுப்பி வைத்தார் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது.
எங்கேயிருந்துதான் சம்பாதிக்கிறார்கள்? இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி இருபதாண்டுகளில் கட்டியெழுப்ப முடிகிறது?
இப்படியொரு திருமணம் நடப்பது மோடிக்குத் தெரியும். அருண் ஜெட்லிக்குத் தெரியும். வருமான வரித்துறைக்கும் தெரியும். சித்தராமையாவுக்கும் தெரியும். தெரியும் என்றால் தெரியும். அவர்களுக்குத் தெரிவதைப் போலவே நமக்கும் தெரியும். அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை. ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் லட்சக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்கும் போது ஐநூறு கோடியில் திருமணம் நடத்துகிறார்கள் என்பதைப் பற்றி அவர்களும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். நாமும் அலட்டிக் கொள்ளக் கூடாது.
என் கையில் ஒரு ஐநூறு ரூபாய் இருக்கிறது. உண்மையாகவே அது மட்டும்தான் இருக்கிறது. எப்படியாவது மாற்றினால் ஒரு காபி குடித்துவிடுவேன்.
7 எதிர் சப்தங்கள்:
ரூபாய் நோட்டு பிரச்னையால் சென்னையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மற்ற பதிவர்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.. பெங்களூரில் என்ன நிலவரம் அந்த மாநில மக்கள் இந்த பிரச்னையை எவ்வாறு எடுத்து கொள்கிறார்கள்.. தமிழ்நாட்டை போன்ற பதட்ட சூழ்நிலை அங்கேயும் உள்ளதா.. மோடி ஆதரவு / எதிர்ப்பு நிலை எவ்வாறு உள்ளது...
/* இருபத்தொன்றாம் விரலில் வைப்பார்களா */
innikku poyi mai vachu paathuttu vandhu solren.
சுந்தர் கண்ணன் - அதெப்படி ஒரே ஒரு வரியை மட்டும் சரியா புடிக்கறீங்க?
சார் பெங்களூரில் ஆன்-லைன் காபி கடைகள் உள்ளன. உங்களுக்கு கவலை இல்லை.
"அங்கேயுமா"
என கமெண்டு போட நினைத்து பொட்டியை திறந்தால்
//சுந்தர் கண்ணன் - அதெப்படி ஒரே ஒரு வரியை மட்டும் சரியா புடிக்கறீங்க?//
ன்னு இருக்கு.
இப்ப வேற ஒரு கமெண்டு பத்தி யோசிக்கணும்.
//என் கையில் ஒரு ஐநூறு ரூபாய் இருக்கிறது. உண்மையாகவே அது மட்டும்தான் இருக்கிறது. எப்படியாவது மாற்றினால் ஒரு காபி குடித்துவிடுவேன்.//
அப்ப வெரலு இல்லியா?. வெரலு இருந்தா தான் மை வைக்க முடியும்.மை வச்சா தான் (ஓவாவை) மாற்ற முடியும்.மாற்றினால் தான் காபி குடிக்க முடியும். அதனால போயி மொதல்ல கையில வெரலை மாட்டிட்டு வாங்க.
#சதுரங்கன் : யோவ் சேக்காளி! எங்காளு மணி இருவத்தொண்ணாம் வெரலுல மை வச்சுக்குவாரு.
//எங்கய்யா பணத்தை வெச்சிருக்கீங்க?//
எங்கய்யா இருவத்தொண்ணாம் வெரல வச்சிருக்கீங்க?
Post a Comment