Oct 6, 2016

சித்த மருத்துவக் குறிப்புகள்

அன்புள்ள மணிகண்டன்,

சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் பற்றி நீங்கள் எழுதுவது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 72 வயதாகிறது. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். சித்த மருத்துவத்திலும் நாட்டு வைத்தியத்திலும் சுய ஆர்வம் காரணமாக கற்று வைத்திருக்கிறேன். இது கடல். எனக்கு கையளவு தெரியும். யாருக்கும் மருத்துவம் பார்ப்பதில்லை. தேர்ந்த வல்லுநர்கள் மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். என்னைப் போன்று சுயமாகக் கற்றவர்கள் உணவுப் பொருட்களின் வழியாகவே நோய் தீர்க்கும் வழிகளைப் பற்றி பேசினால் தவறில்லை. 

சில நாட்களுக்கு முன்பாக நீங்கள் எழுதியிருந்த கட்டுரையில் கழற்சிகாய் பற்றி எழுதியிருந்தீர்கள்- பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில் inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் பயன் தரக் கூடியது.  கழற்சி நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும். ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும். சமீபத்திய கட்டுரையொன்றில் ஏதோவொரு குழந்தைக்கு தலையில் கட்டி என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா? அந்தக் குழந்தையின் பெற்றவர்களிடம் சொல்லி இதை முயற்சித்து பார்க்கச் சொல்லுங்கள். நிச்சயமாக நன்மை கிடைக்கும்.

இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர் உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன் தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப் பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம். 

நிறைய மருத்துவக் குறிப்புகளைத் தர விரும்பினாலும் கூட அனுபவப்பூர்வமாக உணர்ந்தவற்றை மட்டுமே எழுத விரும்புகிறேன்.

எனக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று உண்டாகும். சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால் லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். ஒருவேளை சிறுநீர் பரிசோதனையில் கிருமி எதுவுமில்லை என்றாலும் தொடர்ந்து எரிச்சல் ஏற்பட்டால் உடற்சூடுதான் முக்கியக் காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டைத் தணிக்க இது நல்ல வழி. கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களைப் போட்டு கூடவே குருமிளகு ஆறு சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால்களிலும் கட்டைவிரலில் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும். 

சித்த அல்லது நாட்டு வைத்தியத்தில் மருந்தாக இல்லாமல் food compliment ஆகவே பல நோய்களைச் சீராக்க முடியும். மேற்சொன்னவை போல food compliment நிறைய இருக்கின்றன. பின்விளைவுகளும் இல்லாதவை. அலோபதி, ஓமியோபதி என்ற எந்த மருத்துவத்தைப் பின்பற்றினாலும் இவற்றை உடலில் சேர்த்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை, மஞ்சள், மிளகு, பூண்டு என நாம் தினசரி பயன்படுத்துகிற உணவுப் பொருட்களே பல வியாதிகளுக்கு எதிராக வேலை செய்யக் கூடியவை. ‘உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வாழ்வியல் முறை. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிறழத் தொடங்கிய போது நிறைய நோய்கள் வந்து நம்மை ஒட்டிக் கொண்டன. உங்களைப் போன்ற அடுத்த தலைமுறையினர் இத்தகைய உணவு முறைகள் குறித்தும் மருந்துகள் குறித்தும் பேசுவதன் மூலமாக பரவலாகச் செய்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்புகிறேன்.

நீங்கள் எழுதிய கட்டுரைகள் நம்பிக்கையளிக்க கூடியதாக இருந்தன. நினைவுக்கு வரக் கூடிய குறிப்புகளை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நன்றி. 

அன்புடன்,
சண்முகம்.

(ஆங்கிலத்திலிருந்த கடிதத்தை மொழிபெயர்த்திருக்கிறேன்)

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அந்த சித்த மருத்துவரின் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருந்தால் நன்றாக இருக்குமே.

Vaa.Manikandan said...

நானும் நினைத்தேன். வயதை மனதில் வைத்துக் கொண்டு இணைக்கவில்லை. பேராசிரியர் வெற்றிவேல் அலைபேசி எண்ணைக் கேட்டே இதுவரை நூறு மின்னஞ்சல்களாவது வந்திருக்கின்றன. திரு.சண்முகம் அவர்களைத் தொந்தரவு செய்வது போல ஆகிவிடக் கூடாது என்றுதான்....அவராக குறிப்புகள் அனுப்பும் போது பிரசுரம் செய்துவிடுகிறேன்.

ர. சோமேஸ்வரன் said...

நல்ல பயனுள்ள செய்தி சார், இதை எடுத்து எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.

சேக்காளி said...

//திரு.சண்முகம் அவர்களைத் தொந்தரவு செய்வது போல ஆகிவிடக் கூடாது//

சக்திவேல் said...

http://siragu.com/?p=9093

இதில் இருப்பவை முற்றிலும் உண்மை, குறிப்பாக ஆவரம் பூவை என் அம்மாவிர்கு சர்கரை அ௱வு அதிகம் ஆனபோது, இதை கொதிக்க வைத்து குடித்தார். 15 நாட்களிள் சர்கரை குறைந்து விட்டது.