Oct 5, 2016

பயணங்கள் முடிவதில்லை

கடந்த ஆண்டு (2015-16) ஆம் ஆண்டு நிசப்தம் அறக்கட்டளைக்கு எவ்வளவு நிதி வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கிட்டத்தட்ட அறுபத்தொன்பது லட்சம். துல்லியமாகச் சொன்னால் ரூ.68,97,459 (அறுபத்தெட்டு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நானூற்றைம்பது ரூபாய்). பெரிய அறக்கட்டளை என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. கடலூர், சென்னை வெள்ளத்தின் காரணமாகக் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள். தமிழ்நாடு தத்தளித்த போது உணர்ச்சிவேகத்தில் இருந்தவர்களில் நிறையப் பேருக்கு யாருக்கு பணத்தை அனுப்புவது என்றே தெரிந்திருக்காது. யாராவது சிபாரிசு செய்திருப்பார்கள். அந்தச் சமயத்தில் பணம் அனுப்பியவர்கள் பெரும்பாலானவர்களுக்கு நிசப்தம் பற்றி முன்பும் தெரிந்திருக்காது. அனுப்பிய பிறகும் தொடர்பு கொள்ளவேயில்லை. சிலரின் மின்னஞ்சல் முகவரியைக் கண்டறிந்து 'PAN நெம்பர் அனுப்பி வைங்க’ என்று கோரிய போது பதில் கூடச் சொல்லாதவர்கள்தான் அதிகம். 

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது எதிர்பாராத தொகை. பத்து அல்லது பதினைந்து லட்சத்திற்குள்தான் அறக்கட்டளை இயங்கிக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுதான் அளவும் கூட. ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. ஓடுகிற நதி போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுது நடந்து கொண்டேயிருக்கும். மாற்றுவதற்கு நம்மிடம் எதுவுமில்லை.

வருமான வரித்துறையின் விதிகளின்படி நன்கொடையாக வந்த தொகையில் 85% தொகையை செலவு செய்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஐம்பத்து ஒன்பது லட்ச ரூபாயை செலவு செய்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட நாற்பத்து ஆறு லட்சம் ரூபாயைச் செலவு செய்திருக்கிறோம், 

கல்வி உதவி    :       ரூ. 2,85,110
மருத்துவ உதவி :       ரூ 6,97,700
வெள்ள நிவாரண உதவி: ரூ. 36,56,551

ஐம்பத்தெட்டு லட்சத்தில் இந்த நாற்பத்து ஆறு லட்சம் போக கிட்டத்தட்ட பனிரெண்டு லட்ச ரூபாய் பாக்கியிருக்கிறது. இதற்கு வரி கட்டினால் லட்சக்கணக்கில் கட்ட வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காக ஓர் உபாயம் சொல்லியிருக்கிறார்கள். தொகையை நிரந்தர வைப்பு நிதியில் வைத்து எதிர்வரும் மார்ச் 31 க்குள் அந்தத் தொகையை நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்துவிடுவதாக வருமான வரித்துறையிடம் உறுதியளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த ஒவ்வொரு ரூபாயும் நல்லவர்களின் கடின உழைப்பில் வந்த பணம். இந்தப் பணத்தை வைத்து யாரும் லாபம் பார்ப்பதுமில்லை. அதனால் வரி கட்ட வேண்டியதில்லை என்று நம்புகிறேன்.

பரோடா வங்கியிடம் பதினேழு லட்ச ரூபாயை நிரந்தர வைப்பு நிதிக்கு மாற்றச் சொல்லி இன்று மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அவர்கள் ரசீது தந்தவுடன் மேற்சொன்ன உறுதிமொழிக் கடிதத்தை வருமான வரித்துறையிடம் சமர்பிக்க வேண்டும். அதோடு 2015-16க்கான வரவு செலவுக் கணக்குத் தாக்கல் வேலைகள் முடிந்துவிடும். இதைச் செய்துவிட்டால் அறக்கட்டளையின் வருமான வரி சார்ந்த செயல்பாடு பெருமளவில் ஒழுங்கு செய்யப்பட்டுவிடும். எனக்கும் நடைமுறைச் சிக்கல்கள், அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் ஓரளவுக்கு புரிந்திருக்கிறது. இனிமேல் ஒவ்வோராண்டும் கடைசித் தருணத்தில் விவரங்களைச் சேகரிப்பது, ரசீதுகளைத் தொகுப்பது போன்ற சுமைகளைத் தவிர்த்துவிட முடியும். அவ்வப்பொழுது ஒழுங்குபடுத்தி ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையிருக்கிறது.

பதினேழு லட்ச ரூபாய் எதற்காக நிரந்தர வைப்பு நிதிக்கு மாற்றப்பட்டது என்று யாருக்கும் கேள்வி எழக் கூடாது என்பதற்காக இன்றே இதையெல்லாம் எழுதியிருக்கிறேன்.

நேற்று பட்டயக் கணக்கரிடம் விவரங்களை வாங்கிய போதுதான் எவ்வளவு பணம் நன்கொடையாக வந்திருக்கிறது அதில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று துல்லியமாகத் தெரிந்தது. மலைப்பாகவும், பிரமிப்பாகவும்தான் இருக்கிறது. தனியொருவனாகச் செய்வது போலத் தோற்றம் இருந்தாலும் அப்படி எதுவுமில்லை. Honestly, I dont want any credit out of this activity but that is inevitable என்பது புரிகிறது. 

ஏகப்பட்ட நண்பர்களின் உதவி இருக்கிறது. சென்னையில் சுந்தர், மாதவன் மதுரையில் மணிகண்டன், கோவையில் சுந்தர், கடலூரில் சக்தி சரவணன் மற்றும அவரது அணி, அச்சிறுபாக்கத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரமேஷ் பழனிசாமி, அரசு தாமசு என்று பெரிய கூட்டமே உதவியிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. நம்பிக்கை வைத்து அறக்கட்டளைக்கு பணம் அனுப்பிய அனுப்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனைகளும். ‘நான் உங்க கூட சேர்ந்து வேலை செய்யறேன்’ என்று முன்வரும் ஒவ்வொரு யுவனும் யுவதியும் நமக்கான உற்சாகக் டானிக்குகள். இவர்களை இன்னமும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தன்னார்வலரை நியமித்து அவர்கள் மூலமாக பயனாளிகளைக் கண்டறிதல், விவரங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட வேலைகளைக் கொடுக்கும் திட்டமிருக்கிறது. பார்க்கலாம்.

வருமான வரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறார்கள். 

2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதராகத் தேர்ந்தெடுத்த ஆனந்த விகடன், வெள்ள நிவாரணப் பணிகளை கவனித்து நேர்காணல் நடத்தி தமிழகம் முழுவதும் நிசப்தம் என்ற பெயரைக் கொண்டு சேர்த்த தினகரன் வசந்தம், கே.என்.சிவராமன், யுவகிருஷ்ணா, விரிவான நேர்காணலைப் பிரசுரம் செய்த அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் இதழ், தட்ஸ்தமிழ் ஆகிய ஊடகங்களுக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும். நிசப்தம் அறக்கட்டளை மீதும் எனது செயல்பாடுகளின் மீதும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியவர்கள் இவர்கள்.

எப்பொழுதும் போல நிசப்தம்.காம் தளத்தை தொடர்ந்து வாசித்து உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். 

அத்தனை பேரின் பங்களிப்புமில்லாமல் இவையெதுவும் சாத்தியமேயில்லை.  

பெயர் தெரியாத, முகம் தெரியாத நூற்றுக்கணக்கான எளிய மனிதர்களின் வாழ்வில் சிறு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தொடர்ந்து செய்வோம். தொடர்ந்து பயணிப்போம்.

7 எதிர் சப்தங்கள்:

ABELIA said...

நிசப்தம் நிசப்தமாய் தன்னுடைய பணியை தொடரட்டும்.! வாழ்த்துகள். !

www.rasanai.blogspot.com said...

Honestly, I dont want any credit out of this activity but that is inevitable என்பது புரிகிறது. # modesty and simplicity, Value added Life.


அத்தனை பேரின் பங்களிப்புமில்லாமல் இவையெதுவும் சாத்தியமேயில்லை. # True but nisaptham vandikku neenga thaane achanni.

பெயர் தெரியாத, முகம் தெரியாத நூற்றுக்கணக்கான எளிய மனிதர்களின் வாழ்வில் சிறு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தொடர்ந்து செய்வோம். தொடர்ந்து பயணிப்போம். # the lovely typical nisaptham motto. yeah nisaptham shall focus more on education and medical help. anbin mani, use the reserve FD more for such activities to Avoid Tax. try to build up more volunteers to serve more beneficiaries.

anbudan
sundar g

Paramasivam said...

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

கிட்டத் தட்ட கடந்த மூன்று வருடங்களாக உங்களை தொடர்கிறேன் மணி.அறக்கட்டளை ஆரம்பித்ததிலிருந்து தெரியும்.இதுவரை ஏதும் பங்களிப்பு செய்யவில்லை. வருத்தம் தான்.பரவாயில்லை வாய்ப்பு வரும் போது செய்யலாம்.நான் கடந்த மாதமே இதை பற்றி யோசித்தேன்.நீங்கள் உயர்மனதோடு மறுத்தாலும் இது மிகப்பெரிய தனி மனித சாதனைதான்.www.rasanai.blogspot.com சொன்னது போல் நீங்கள் தான் அச்சாணி.சில சமயம் அக்கம் பக்கங்களில் நடப்பதை பா(ர்)த்து, கேட்டு என்னடா உலகம் இது,எல்லாம் பணம் பணம் என்றாகி விட்டதே என்ற எண்ணம் தோன்றும் போது அந்த எண்ணத்தை இப்போதெல்லாம் தகர்ப்பது நிச்சயமாய் மணியும்,அவரின் கூட்டமும் தான்.பணத்தை தாண்டி நேர்மைக்கும்,மனித நேயத்திற்கும் மதிப்பளிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் கூட்டம்.வாழ்த்துக்கள் குரூப்ஸ்.அம்மிணி வேணி உனக்கும் வாழ்த்துக்கள் மற்றும் SALUTE.ஏனென்றால் உன் ஒத்துழைப்பில்லாமல் இது மணிக்கு சாத்தியமே இல்லை.
(இதையெல்லாம் இந்த பதிவின் இந்த கமெண்ட் பாக்ஸ் ல் சொல்லாமல் வேறு எங்கு சொல்வதாம்).
அந்த அமெரிக்க சனாதிபதி பதவி என்னாச்சு ன்னு #சதுரங்கன் கேக்குறாப்டி.

அன்பே சிவம் said...

ஐயா சேக்காளி ஏன் அமேரிக்க ஜனாதிபதின் கூவுறீங்க நம்ம லெவலுக்கு ஐநா சப தலைவர் பதவியே தானா வரும்

Aravind said...

nice to hear sir. money always flows towards good people who want to spend for great purposes.
i'm a bank of baroda officer only.
if you have any trouble in depositing money then you can contact me and i will enquire and give you correct directions

Unknown said...

may your noble effort pay rich dividend....
all knowledgeable people believe chennai is at risk stage geographically...
so your huge effort is still expected...