Oct 4, 2016

இரத்தம்

நம்பியூரில் குருதிக்கொடை நிகழ்ச்சி. சனிக்கிழமையன்று வீட்டுக்கு வந்த நண்பர் ‘நாளைக்கு நேரமிருந்தா வாங்க’ என்றார். வீட்டில் என்ன வேலை? வெட்டியாகத்தான் இருந்தேன். ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் குளித்து சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன். இரத்த தானம் செய்கிற எண்ணம் எதுவுமில்லை. வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிடுவதாகத்தான் யோசனை. மதியம் பெங்களூரு கிளம்ப வேண்டும். அதுவும் மகிழ்வுந்திலேயே செல்வதாகத்தான் திட்டம். கிட்டத்தட்ட முந்நூறு கிலோமீட்டர் வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். கர்நாடகாவுக்குள்ளும் தமிழ்நாட்டுக்குள்ளும் வண்டியை எரிக்கிறார்களோ இல்லையோ- எல்லையில் நிற்கிற காக்கிச்சட்டை அணிந்த எல்லைச்சாமிகள்தான் வண்டிகளை வடிகட்டுகிறார்கள். தமிழ்நாட்டு வண்டிகளை கர்நாடகாவிற்குள் அனுமதிப்பதில்லை. கர்நாடக வண்டிகளை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை. 

சிலர் பதிவு எண்களை மாற்றி ஓட்டுகிறார்கள். தனியார் பேருந்துகளின் பதிவு எண்களின் மீது தற்காலிகமான ஆந்திர, கேரள, பாண்டிச்சேரி பதிவு எண்களைப் பார்க்கலாம். யாரும் எதுவும் கண்டுகொள்வதில்லை. இவர்களையெல்லாம் விட நாம் அறிவாளி என்கிற நினைப்பில் முன்னும் பின்னும் பதிவு எண்களையே கழற்றி எடுத்துவிட்டு ஓட்டி வந்தேன். ஓசூர் வரும் வரைக்கும் பிரச்சினையில்லை. ஓசூர் வந்த பிறகு கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. ஒருவேளை உள்ளே விடவில்லையென்றால் ஓசூர் நண்பர்கள் யாராவது ஒருவரது வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு எல்லையை நடந்து தாண்டி பேருந்து பிடித்துவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம். இதற்கெல்லாம் உடலில் தெம்பு வேண்டாமா? அதனால்தான் அவ்வளாவு தயக்கம்.

காலையில் பதினொன்றரை மணிக்கு நம்பியூர் சென்ற போது ஐம்பது பேர்கள் குருதி வழங்கியிருந்தார்கள். உள்ளூர் அரிமா சங்கம்தான் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஏற்பாட்டாளர்களுக்கு வெகு சந்தோஷம். இன்னமும் பத்து அல்லது இருபது பேராவது வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். கமுக்கமாக அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்துவிட்டு ஒன்றிரண்டு நண்பர்களுக்கு பவ்யமாக வணக்கம் சொல்லியபடியே கிளம்ப எத்தனித்த போது ‘நேரமிருந்தா வாங்க’ என்று அழைத்தவர் வந்துவிட்டார். சிரித்தேன். 

‘என்ன சார் ரத்தம் கொடுத்தாச்சா?’ என்றார். வடிவேலு கணக்காக அதிர்ச்சியடைந்து ‘ரத்தமா?’ என்று மனதுக்குள்ளேயே கத்தினேன். 

‘நான் பெங்களூரு போகோணுங்க...நேரமாகுங்களா?’ என்றேன். அங்கே அடுத்தடுத்து ரத்தம் கொடுப்பதற்காக வரிசையாக நின்றிருந்தார்கள். எப்படியும் நேரம் ஆகிவிடும் என்றுதான் சொல்வார்கள் என்பதால் தப்பித்துவிடலாம் என்று மனம் கணக்குப் போட்டிருந்தது. ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லீங்..நீங்க வாங்க’ என்று அணுகுண்டு வைத்தார். கையில் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்கள். எழுதுவதற்காக எழுதுகோலைத் தேடுவதற்குள் இழுத்துச் சென்றவரே விண்ணப்பத்தை வாங்கி என்னுடைய பெயரையும் எழுதிக் கொடுத்துவிட்டார். அவ்வளவுதான். இனி தப்பிக்க வாய்ப்பில்லை.

‘ரத்தம் என்ன க்ரூப்பு?’

‘பி பாஸிட்டிவ்’

‘முக்காவாசிப்பேருக்கு இந்த க்ரூப்புதான்’ என்றார். அப்புறம் ஏன் என்கிட்டயும் கேட்கறீங்க என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். யாருக்கும் காதில் விழவில்லை. 

கல்லூரியில் படிக்கும் போது முதன் முறையாக ரத்தம் கொடுக்க அழைத்துச் சென்றார்கள். விடுதியில் அன்றைய தினம் வெண்பொங்கல் என்பதால் காலையில் வறப்பட்டினி. ‘சாப்பிட்டியா?’ என்றார்கள். ஆமாம் என்றேன். எடை பார்த்தார்கள். ஐம்பத்து ஒன்று. ஐம்பதுக்கு மேல் இருந்தால் உறிஞ்சிவிடலாம் என்று மல்லாக்கப்படுக்கப்போட்டு ஊசியைச் செருகினார்கள். அரை பாக்கெட் கூட நிரம்பவில்லை. பக்கெட் இல்லை- பாக்கெட்தான். ‘இதுக்கு மேல வராது’ என்று ஊசியை உருவிவிட்டு அனுப்பி வைத்தார்கள். மதியம் கடையொன்றில் சாப்பிட்டுவிட்டு வந்து ஏழு மணி வரைக்கும் தூங்கினேன். அதன் பிறகு ஒன்றிரண்டு முறை கொடுத்திருக்கிறேன். ஆனால் பெரிய பிரச்சினையில்லை.

இந்த முறை எடை கூடியிருந்தது. அறுபது கிலோ. விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்த நண்பரே எனக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்தவர்களிடமெல்லாம் ‘இவுரு பெரிய அப்பாடக்கரு...பெங்களூரு போவோணும்..முன்னாடி அனுப்பலாங்களா?’ என்று கேட்டார். வரிசையில் நின்றிருந்தவர்கள் வழிவிட்டுவிட்டார்கள். ஊசியைக் குத்துவதற்கு முன்பாகவே கையில் ஒரு மாம்பழச்சாறு புட்டியையும் கொடுத்திருந்தார்கள். 

அது பள்ளிக்கூடம். வகுப்பறையொன்றில் இரும்பு டேபிள் மீது படுக்கை விரிப்பை விரித்திருந்தார்கள். எனக்கு முன்பாக ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவர் எழுந்துவிட்டார். இடம் காலியானது. 

‘இடது கையில் எடுக்கலாமா? வலது கையில் எடுக்கலாமா?’ என்றார்கள்.

‘எந்தக் கையில் எடுத்தால் வலி குறைவாக இருக்கும்?’ என்ற கேள்வி உள்ளே சுழன்றது. கேட்டால் சிரிப்பார்கள் என்று ‘இடது கை’ என்றேன்.

குத்தும் போது வலித்தது. அதன் பிறகு வலி இல்லை. ‘நேரமிருந்தா வாங்க’ நண்பர் அருகிலேயே நின்றிருந்தார். அவ்வப்போது கீழே குனிந்து பார்த்தவர் ஓடிப் போய் ஊசி குத்தியவரை அழைத்து வந்தார். ரத்தம் நிரம்பிவிட்டது என்றுதான் நினைத்தேன். 

‘ஆச்சுங்களா’ என்றதற்கு ‘இல்லைங்க’ என்றார்.

அதுக்குள் என்ன ஆராய்ச்சி என்று புரியவில்லை. ‘என்னாச்சுங்க’ என்றேன். அறுபது மில்லிதான் இறங்கியிருக்கிறது. கால் மணி நேரம் ஆகியிருந்தது. 

‘இன்னும் எவ்வளவுங்க வேணும்’ என்றேன். 

‘முந்நூறுதாங்க’ என்றார். முந்நூறுதாங்கவா? இன்னும் இருநூற்று நாற்பது மில்லி. எவ்வளவு நேரம் ஆகும் என்று மனம் கணக்குப் போட்டது. அடங்கொக்கமக்கா என்றிருந்தது.

மேலே எழுந்தார்கள். மீண்டும் கீழே அமர்ந்தார்கள். ஊசியை அசைத்தார்கள். கையைக் கொஞ்சம் தட்டினார்கள். ம்ஹூம்.

‘உங்களுக்கு நரம்பு சிறுசா இருக்கு..கையை மாத்திக் குத்திக்கலாமா?’ என்றார். 

‘இந்தக் கையில் மட்டும் பெருசுங்களா?’ என்றேன். அவர் சிரித்தார். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.

திரும்பிப்படுத்தேன். மீண்டும் அதே வைபவம். தட்டித் தட்டி நரம்பை எழுப்பினார். 

‘பெருசுங்களா?’ என்றேன். அவர் எதுவுமே சொல்லவில்லை. குத்தினார்.

‘நேரமிருந்தா வாங்க’ நண்பருக்கு முகத்தில் ஆசுவாசம் தெரிந்தது. ‘இப்போ செம ஸ்பீடுங்க’ என்றார். ரத்தம் இறங்குவதை ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தார். 

‘எவ்வளவு ஆச்சுங்க?’ என்று பத்துத் தடவையாவது கேட்டிருப்பேன்.

‘நூற்றுப் பத்து’ என்பார். அதையே ஏழெட்டு தடவை சொல்வார். பிறகுதான் புரிந்தது- அவரைப் பொறுத்தவரைக்கும் ‘நூற்றியொன்றும் நூற்றுப் பத்துதான்’ ‘நூற்றியொன்பதும் நூற்றுப் பத்துதான்’ அடுத்த கால் மணி நேரம் இப்படியே படுத்திருந்தேன். மூச்சை இழுத்து வேகமாக விட்டால் இரத்தம் வெளியேறுவது வேகமாகக் கூடும் என்று நம்பி இழுத்து விட்டுப் பார்த்தேன். பலனில்லை. கால்களை மடக்கி வைத்தால் ரத்த ஓட்டம் கைகளுக்கு அதிகமாகக் கூடும் என்று செய்து பார்த்தேன். பலனில்லை. ஊசி குத்தியவர் அருகில் வந்து அமர்ந்தார். எழுந்தார். கையைத் தட்டினார்.

கடைசியில் ‘போதுங்க’ என்று ஊசியை எடுத்துவிட்டார். ‘எவ்வளவு ஆச்சுங்க’ என்றேன். 

‘இருநூற்று இருபது’ - உடலில் ரத்தமே இல்லை போலிருக்கிறது. ‘நேரமிருந்தா வாங்க’ நண்பர் அருகில் வந்து ‘உங்க ரத்தம் நல்லாத்தாங்க இருக்கு’ என்றார். கண்களிலேயே லேபரட்டரி வைத்திருப்பார் போலிருக்கிறது. நாலே முக்காலிலிருந்து ஐந்தரை லிட்டர் வரைக்கும் ரத்தம் இருக்கும் என்று சொல்வார்கள். நம் உடலில் ஒன்றேகால் லிட்டர்தான் இருக்குமோ என்று குழப்பமாக இருந்தது. இதே போன்ற அனுபவம் முன்பும் ஏற்பட்டிருந்ததால் பயமாகவும் இருந்தது.

மாம்பழச்சாறைக் குடித்தேன். குட்-டே பிஸ்கட் இரண்டு விழுங்கினேன். கீழே விழாமல் வீடு போய்ச் சேர வேண்டும் என்று மாரியம்மனை வேண்டிக் கொண்டு வண்டியைக் கிளப்பினேன். நல்லவேளையாக கிறுகிறுவென்று தலை சுற்றவில்லை. 

மருத்துவர் சிவசங்கரிடம் சென்றுதான் வண்டி நின்றது. அநேகமாக என் முகம் பேயறைந்தது போல இருந்திருக்கக் கூடும். அமரச் சொன்னார். அமர்வது முக்கியமாகத் தெரியவில்லை. 

‘டாக்டர், இந்தக் கைல குத்துனாங்க..அறுபது மில்லிதான் வந்துச்சு...கையை மாத்திக் குத்தினாங்க...வெகு நேரம் ஆச்சு...அப்பவும் பாக்கெட் நம்பவே இல்ல’ என்றேன். மீண்டு அமரச் சொன்னார். 

‘பரவால்ல சொல்லுங்க’ என்றேன்.

‘முந்நூறு மில்லி எல்லா உடம்புல இருந்தும் எடுத்துட முடியும்...வெயின் தப்பா குத்தியிருப்பாங்க’ என்றார். இந்தக் கடவுள் என்னை மட்டுமேதான் செய்வார். அந்த முகாமில் அத்தனை பேருக்குக் குத்தினார்கள். சரியாகத்தான் குத்தியிருக்கிறார்கள். எனக்கு மட்டும் எப்படி தவறாகக் குத்துவார்கள்? அதுவும் இரண்டு கையிலும் தவறாகக் குத்துவார்களா? 

சந்தேகம் தீரவே இல்லை. ‘ஒண்ணும் பிரச்சினை இருக்காதுங்களா?’ என்றேன்.

‘நம்பிக்கையில்லைன்னா ஜி.ஹெச் வர்றீங்களா...இன்னொருக்கா எடுத்துக் காட்டுறேன்’ என்றார். அவர் எடுத்தாலும் எடுத்துவிடுவார். ஆளைவிடுங்க சாமீ என்று ஒரே ஓட்டம். பெங்களூர் வந்துதான் நின்றேன். வரும் வழி முழுவதும் எடையைக் கூட்டுவது பற்றிய யோசனைதான். இனிமேலாவது ஜிம்முக்குச் சென்று எட்டு பேக் வைத்தாக வேண்டும். ஜெய் ஆஞ்சநேயா.

4 எதிர் சப்தங்கள்:

Unknown said...

// ‘இன்னும் எவ்வளவுங்க வேணும்’ என்றேன்.

//‘முந்நூறுதாங்க’ என்றார். முந்நூறுதாங்கவா?
..
படித்துகொண்டிருந்தேன்.. உங்க பாரின்மசாஜ் நோவு கட்டுரை படிச்ச ஞாபகம் வந்தது. முழுசா படிக்கவே முடில, தனியா சிரிக்கவும் முடில, அவ்ளோ களேபரம். ஆபிஸ்ல என் பக்கத்துல இருக்குறவங்க யார பத்தியோ தமாஷ் பண்ணாங்க இதான் சாக்குன்னு சிரிச்சி tally பண்ணிகிட்டேன். ஹஹாஹ்

அன்பே சிவம் said...

ம்ஹும் இந்த என்பு தோல் போர்த்திய தேகத்தில்! 220ml குருதி எடுத்தவர்தான் பெரிய அப்பாடக்கராக்கும்.

ADMIN said...

உடம்புல இருக்கிறதுதானே வரும். பரவால்ல விடுங்க..!

The Unprejudiced Observer said...

dont encourage blood donation.
blodd donation is big business
this is not for poor people.
more dispute with warrant balaw
http://sithanmathi.blogspot.in/2013/01/blog-post_13.html

anyway blood is a forign body to another man