அன்புள்ள மணிகண்டன்,
உங்கள் அறக்கட்டளை தொடர்பாக சில எண்ணங்கள் தோன்றியது. சொல்லலாம் என்று நினைக்கிறேன். அறக்கட்டளையை ஒரு NGO போல் ஆக்காமல் ஆனால் அவை செய்யும் சிலவற்றை நீங்கள் செய்யலாம் என்று தோன்றியது.
இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று சமூக சேவை படித்தவர்கள் (Social work) படித்தவர்களை முழு நேர அல்லது பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கலாம். படித்து முடிக்கும் இளைஞர்களை கல்லூரியில் நேர்காணல் வைத்து தேர்வு செய்யலாம். ஒரு சிறிய அறையை அலுவலகம் ஆக்கலாம். உங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் (இதற்காக ஒரு இணையதளம் உருவாக்கலாம்) - அதில் தேவைப்படுவோர் அல்லது தேவைப்படுவோருக்காக பரிந்துரைப்போர் - விவரங்களை முழுவதுமாக கொடுக்கலாம், இணையதளத்தை பயன்படுத்த முடியாதவர்கள் இந்த பணியாளர்களிடம் தெரிவித்தால் இவர்கள் அதை இணையதளத்தில் ஏற்றலாம். இதில் முகவரி, புகைப்படங்கள் போன்றவை எல்லோரும் பார்க்கும் வகையில் இல்லாமல் செய்யலாம், மற்ற விவரங்கள் பொதுவில் இருக்கலாம்.
அனைத்து விண்ணப்பங்களும்,அமைப்பு சார்ந்த உதவிகளும் இணையதளத்தில் எல்லோர் பார்வைக்கும் இருக்கும்படி செய்யலாம். இதில் பணியாளர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலித்து தேவையானவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டுவரலாம். பிறகு அதே பணியாளர்கள் அல்லது நீங்கள் அல்லது அருகில் இருப்போர் உண்மை நிலவரத்தை பரிசீலித்து இணையதளத்தில் அந்த விண்ணப்பத்தில் பதிவேற்றலாம். உதவி செய்யலாம் என்கிற நிலையில் அதை தொடரலாம்.
நீங்கள் இவை எல்லாவற்றையும் இப்போது மின்னஞ்சல் வழி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதை சற்று அமைப்பு ரீதியில் மாற்றலாம் என்று எனக்கு தோன்றியது.
தனிமனிதர்களால் தொடங்கப்படும் பெருஞ்செயல்கள் காலப்போக்கில் அமைப்பாக்கம் பெறுவது தவிர்க்க இயலாதது. நிரந்தர அல்லது பகுதி நேர பணியாளர்கள், அலுவலக வேலை செய்பவர்கள், அறை வாடகை, கணினி இவற்றுக்கு பணம் தேவை. அதை அறக்கட்டளை பணத்திலிருந்து தான் எடுக்க முடியும்.அது சரியா, அறமா என்றால் அது ஒரு தேர்வு மட்டுமே.
உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் சமூக சேவை மாணவர்கள் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் ஒரு வருடம் மேல் இருக்க மாட்டார்கள். மாறிக்கொண்டே இருப்பார்கள்.
நதியின் ஓட்டத்தை படித்துறையிலிருந்து பார்க்கலாம், படகில் சென்றும் பார்க்கலாம். அனுபவம் வித்யாசப்படும். எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
நன்றி
சர்வோத்தமன்.
அன்புள்ள சர்வோத்தமன்,
இதே மாதிரியான கருத்தை திரு.பத்ரி சேஷாத்ரியும் சொல்லியிருந்தார். இன்னும் சில நண்பர்களும் நேர் பேச்சின் போது சொல்லியிருக்கிறார்கள்.
அலுவலகம் அமைத்து ஒருவரை உதவியாளராக வைத்துக் கொண்டு காரியங்களை நெறிப்படுத்துவது என்பது ஒரு வகையில் சரியானதுதான். ஆனால் இப்பொழுது அவசியமா என்று தெரியவில்லை. கடந்த ஆண்டில் நன்கொடையாகப் பெறப்பட்ட அறுபத்தொன்பது லட்சம் என்பது பெரிய தொகைதான். குருவி தலையில் பனம்பழத்தை வைத்த மாதிரிதான். ஆனால் ஒவ்வொரு வருடமும் இவ்வளவு பெருந்தொகை வந்து சேரும் என்று நம்ப வேண்டியதில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பல லட்ச ரூபாய் அறக்கட்டளைக்கு வந்து சேர்திருக்கிறது. நிசப்தம் பற்றியும் என்னைப் பற்றியும் தெரியாதவர்களும் கூட பணம் அனுப்பியிருந்தார்கள். அதில் ஏகப்பட்ட பேர் பணம் அனுப்புவதற்கு முன்பாகவும் சரி, அனுப்பிய பிறகும் சரி- ஒரு முறை கூட நிசப்தம் தளத்தை வாசித்திருக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எதற்காகச் சொல்கிறேன் என்றால் இவ்வளவு பெரும் தொகை இனி வருடா வருடம் வந்து சேரும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதற்காக.
கடந்த ஆண்டுக்கான வருமான வரித்தாக்கலை கவனித்தால் நன்கொடையாக அறுபத்தொன்பது லட்ச ரூபாய் வந்திருந்தது. அதில் முப்பத்தாறு லட்ச ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்டது. பெரும் பகுதி அதற்குத்தான். மருத்துவ உதவியாக ஏழு லட்ச ரூபாய்களும், கல்வி உதவியாக மூன்று லட்ச ரூபாய்களும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய்க்கான வேலை என்பது என்னால் செய்யக் கூடியதுதான். ஒருவேளை தொகை அதிகமானால் திணறக் கூடும்.
அறக்கட்டளையின் வட்டம் மிகச் சிறியது. வாசிக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். வாசிக்கிறவர்கள் மட்டுமே கொடுக்கிறார்கள் என்பது இன்னமும் சரியாக இருக்கும். என்னுடைய அனுமானத்தின் படி வருடத்திற்கு பத்து முதல் பதினைந்து லட்ச ரூபாய் என்பதுதான் சராசரியான நன்கொடை வரவாக இருக்கக் கூடும். இது பெரிய தொகை இல்லை. இப்போதைக்கு ஒவ்வொரு வார இறுதியையும் அறக்கட்டளை வேலைக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். சில தன்னார்வலர்கள் உதவுகிறார்கள். சமாளித்துவிட முடியும்.
அலுவலகம், பணியாளர்கள் என்ற அமைப்பு என்பது தேவையில்லை எனத் தயங்குவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இன்றைய தினம் வரைக்கும் பயனாளிகளை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களோடு பேசு முடிகிறது. சரியான மனிதர்களுக்கு உதவுகிறோம் என்கிற திருப்தி கிடைக்கிறது. ஒருவேளை ஆள் ஒருவரை நியமித்தால் ‘நீங்க ஃபர்ஸ்ட் ரவுண்ட் சரி பார்த்துடுங்க’ என்று சொல்லத் தோன்றக் கூடும். பிறகு ‘நீங்களே நேரில் பார்த்துட்டு வந்துடுங்க’ என்றும் நான் அவரைப் பணிக்கக் கூடும். இன்றைக்கு ‘ச்சே..ச்சே..நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்’ என்று சொல்லலாம்தான். ஆனால் மனித மனம் எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும்?
எந்தவிதத்திலும் அறக்கட்டளையின் செயல்பாடுகளிலிருந்து சற்று தூரமாக நகர்ந்துவிடக் கூடாது என்றுதான் தயக்கமாக இருக்கிறது. தோரணை வந்துவிடக் கூடாது.
அவசரப்படாமல் ஓரிரு வருடங்கள் பார்க்கலாம். பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்கிற அளவில் அறக்கட்டளை செயல்படுமானால் இப்படியே தொடர்ந்துவிடலாம். சிரமம் எதுவுமில்லை. மேலே சொன்னது போல தொகையின் அளவு அதிகமாகி சமாளிக்கத் திணறுகிற போது வேண்டுமானால் மேற்சொன்ன யோசனையை பரிசீலிக்கலாம்.
தங்களின் ஆலோசனைக்கு மனப்பூர்வமான நன்றி. இத்தகைய ஆலோசனைகளும் கருத்துகளும் அவ்வப்போது தேவையானவையாக இருக்கின்றன. கவனிக்கிறார்கள் என்பதைவிடவும் நம் மீது அக்கறை கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது ஒரு வகையிலான உந்துசக்தியாக இருக்கிறது.
நன்றி.
அன்புடன்,
மணிகண்டன்
6 எதிர் சப்தங்கள்:
//கவனிக்கிறார்கள் என்பதைவிடவும் நம் மீது அக்கறை கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது ஒரு வகையிலான உந்துசக்தியாக இருக்கிறது.//
True words, this is the main reason that backs us to do more selfless work to the betterment of helpless people and for our satisfaction.
ரொம்ப சரி. நம்மால் தூக்குமளவுக்கு சுமை இருந்தால் தூக்கி சும்பபது ஒன்றும் பெரிய காரியமில்லை. முடியாத போதுதான் ஆள் உதவி தேவைபடும். வெளிப்படைத்தன்மை, உண்மையை ஆய்ந்தறிந்து செயல்படுதுவதுதான் நிசப்தம் அறக்கட்டளையின் வெற்றி. வாழ்த்துக்கள் மணிகண்டன் சார். மேலும் சிறப்புற செயல்பட இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
உங்கள் எண்ணங்களுடன் நானும் உடன்படுகிறேன். நான் பணம் அனுப்பியதும் வெள்ளம் வந்த சமயம் தான். ஆனால், அதன்பின் நிசப்தம் வாசகனாகவே மாறி விட்டேன். அலுவலக உதவி தேவைப் படினும் இலவசமாகவே செய்ய உறுதியாய் உள்ளேன் (பெங்களூரில்)
//அவசரப்படாமல் ஓரிரு வருடங்கள் பார்க்கலாம். பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்கிற அளவில் அறக்கட்டளை செயல்படுமானால் இப்படியே தொடர்ந்துவிடலாம். சிரமம் எதுவுமில்லை. மேலே சொன்னது போல தொகையின் அளவு அதிகமாகி சமாளிக்கத் திணறுகிற போது வேண்டுமானால் மேற்சொன்ன யோசனையை பரிசீலிக்கலாம்//
நல்லதொரு தீர்மானம்.
போதும் என்பது உணவில் மட்டுமே சொல்லத்தக்கது. எல்லோருக்கும் பிறர் குறித்த அக்கறை இராது.
அன்பு மணிகண்டன் ,
வணக்கம் .தங்களை போல் களப்பணியாளர் அல்ல நான் . ஆனால் ஒரு அறக்கட்டளை நிர்வாகம் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு சிங்கையிலிருந்து அனுபவம் உண்டு . நான் டிசம்பர் 17 , 18 சென்னையில் இருப்பேன் . வாய்ப்பு இருப்பின் நிச்சயம் சந்திப்போம் .
முடிவு எடுக்கும் குழு நிர்வாகத்திலிருந்து எப்பெடி விலகியிருக்க வேண்டும் ,
வரவு செலவு அக்கௌன்ட் எப்படி இருக்கவேண்டும்
வார ,மாத ,3 மாத , வருட கணக்கு வழக்கு எது தேவை , என்ன முடிவுகள் , எது மூல ஆவணம் (சார்ட்டர் டாக்குமெண்ட்) -உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகத்துடன் பேச முடியும் .
மணிகண்டன் என்னை போல் ஆயிரம் கணக்கர்கள் கிடைக்கலாம் . உங்களை போல் எண்ணம் மற்றும் செயலூக்கம் கொண்டவர்கள் அரிது .
அன்பு மற்றும் பிரமிப்புடன்
முரளி நடராஜன்
சிங்கை
Post a Comment