கர்ணன் வாத்தியாருக்கு ஒரு செல்லப்பிள்ளை இருந்தான். அப்புராஜ். கர்ணன் வாத்தியார் பற்றித் தெரியாதவர்கள் பர்தேசி கட்டுரையை ஒருக்கா வாசித்துவிடவும். அப்புராஜ் வெள்ளை வெளேரென்று இருப்பான். தூரத்துப் பெருங்கடலின் அமைதி. போதாக்குறைக்கு படிப்பாளி வேறு. எனக்குத் தெரிந்தே ஏழெட்டு பெண்கள் சைட் அடித்தார்கள். பயாலஜி ட்யூஷனில் அடி வாங்காத இரண்டு மூன்று ஆட்களைத் தேர்ந்தெடுத்தால் அவன் முதல் இடத்தில் இருப்பான். எந்தக் கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருந்த படிப்புச் சித்தன். கோபியில் அந்தச் சமயத்தில் ப்ளஸ் டூ படித்த அத்தனை மாணவர்களுக்கும் அநேகமாக அப்புராஜைத் தெரியும். அவ்வளவு பிரபல்யம்.
என்னைத்தான் கர்ணன் வாத்தியார் ஒன்றரையாவது மாதத்திற்குள்ளாகவே ‘பர்தேசி..வெளிய போடா’ என்று அடித்துத் துரத்தியிருந்தார். துரத்தப்பட்ட விவகாரம் வீட்டிற்குத் தெரியாது. அப்பொழுது ஒரு பாடத்துக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ கட்டித்தான் கர்ணனிடம் தனிப்பயிற்சியில் சேர்த்துவிட்டிருந்தார்கள். வாத்தியார் துரத்திவிட்டுவிட்டார் என்று சொன்னால் அம்மா அழுதே ஆர்ப்பாட்டம் செய்துவிடுவார். அம்மாவின் அழுகையை எதிர்கொள்வதைவிட கர்ணன் வாத்தியாரின் உதையையே எதிர்கொண்டுவிடலாம். கர்ணனின் உதையை எதிர்கொண்டுவிடலாம் என்று சொல்வதற்கும் எழுதுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கும்- ஆனால் கர்ணனின் அடியைத் தாங்குவதெல்லாம் சாத்தியமேயில்லை. அவர் இருந்த உருவத்துக்கு என்னையெல்லாம் உதைத்தால் ரொனால்டோவும் மெஸ்ஸியும் சேர்ந்து உதைக்கும் கால்பந்து மாதிரிதான்.
ட்யூஷனுக்குள்ளும் போக முடியாது. வீட்டிற்கும் செல்ல முடியாது. ஒன்றரை மணி நேரத்தை ஓட்டியாக வேண்டும். வேறு வழியே இல்லை. பக்கத்திலிருக்கும் தனம் டீச்சர் ட்யூஷனுக்கு வரும் பெண்களை நோட்டம் விடுவதை ஒன்றரை மணி நேரத் தொழிலாக மாற்றியிருந்தேன். அங்கு பத்தாம் வகுப்புப் பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவருமே திரும்பிப் பார்த்ததாக நினைவில்லை என்றாலும் அவர்களை காதல் பார்வை பார்த்து என் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தேன். சந்தோஷமாகத்தான் இருந்தது. பொழப்பு இப்படியே போய்க் கொண்டிருந்தது அல்லவா? அரையாண்டுத் தேர்வில் இயற்பியலில் அறுபது மதிப்பெண்களும், வேதியியலில் நாற்பது சொச்சங்களும், கணிதத்தில் பதினேழுமாக வாங்கி வீட்டிற்கு பெருமை சேர்த்தேன். நூற்றுக்கு அறுபது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இதெல்லாம் இருநூறுக்கு. ஆனால் பனிரெண்டாம் வகுப்பில் வகுப்புத் தலைவனாக இருந்ததால் இந்தத் தகவல்கள் எல்லாம் வீட்டிற்கே செல்லாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. தகுதிப் பட்டியலை ஆசிரியர் கொடுத்து அனுப்புவார். எல்லோரும் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் அதைச் சரிபார்த்து அடுக்கி ஆசிரியரிடம் கொடுப்பது வகுப்புத் தலைவனின் வேலை. முடிந்த தகிடுதத்தங்களையெல்லாம் செய்து வீட்டில் தப்பித்துக் கொண்டிருந்தேன்.
‘என்ன ஸ்கூலோ, என்ன வாத்தியாரோ...ரேங்க் சீட் கூட கொடுக்க ஒழுங்கா மாட்டேங்குறாங்க’ என்ற கரிச்சுக் கொட்டுவதோடு அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் தப்பித்துவிட்டேன். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு என்பது மாதிரி அதன் பிறகு சில நாட்கள் கழித்து வேறொரு விவகாரத்தின் வழியாக வீட்டில் எசகு பிசகாக மாட்டி, அம்மா அழுது, அப்பா அடித்து நொறுக்கி, வேறு ட்யூஷன் வாத்தியாரிடம் அனுப்பி, அவர் ‘உங்க பையன் பாஸ் பண்ணினாவே பெரிய விஷயம்’ என்று பற்ற வைத்து, அம்மா இரண்டு மூன்று நாட்கள் சோறு தண்ணியில்லாமல் கிடந்து ‘ஆத்தா மகமாயி மேல சத்தியமா நான் ஆயிரம் மதிப்பெண்களைத் தாண்டிவிடுவேன்’ என்று சூடமேற்றியதெல்லாம் வேறு ட்ராக். அதையெல்லாம் தனியாக எழுத வேண்டும்.
அப்புராஜ் பற்றி ஆரம்பித்துவிட்டு என் புஜபல பராக்கிரமங்களை ஏன் விவரிக்கிறேன் என்றால் இந்த லட்சணத்தில் எப்படி நுழைவுத்தேர்வை எழுதியிருப்பேன் என்று யூகித்துக் கொள்ளலாம். பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிப்பது பெரிய காரியமாகவே தெரியவில்லை. வீட்டில் சத்தியம் செய்து கொடுத்த பிறகு இரவு நேரப் படிப்பில் விடிய விடிய உருப்போட்டுவிட்டேன். பெரும்பாலான பாடங்களை நெட்டுருவேற்றியிருந்தேன். கணக்குகள் கூட விடைகளோடு மனனமாகியிருந்தது. ஆனால் நுழைவுத் தேர்வு இருக்கிறதே! மிச்சமிருந்த இருந்த அவகாசத்தில் அத்தனை பாடங்களையும் புரிந்து கொள்வது சாத்தியமாகப்படவில்லை. நுழைவுத்தேர்வுக்கான மாதிரி வினாவிடைகள் கைவசம் இருந்தன. ஆனால் எந்தக் கேள்விக்கும் பதில் தெரியவில்லை. இந்தக் கருமாந்திரத்தையே எழுதாமல் விட்டுவிட்டு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்த தருணம் அது. ஆனால் விடுவார்களா? திரும்பிய பக்கமெல்லாம் பொறியாளர்களைக் கல்லூரிகள் குட்டி போடத் தொடங்கியிருந்தன. ‘மருத்துவம் லட்சியம்; பொறியியல் நிச்சயம்’ என்று அம்மாவும் அப்பாவும் கங்கணம் கட்டியிருந்தார்கள். அவர்களுக்கென்ன கட்டிவிடுவார்கள். அகப்பட்டவன் நானல்லவோ?
இருக்கன்குடி மாரியம்மன்தான் ஒரே கதி. பள்ளிக்குச் செல்லும் போதும் வரும் போதும் மிதிவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று நெக்குருகி வேண்டிக் கொள்வேன். ஆனாலும் நுழைவுத் தேர்வு குறித்து நம்பிக்கையே வரவில்லை. பொதுத்தேர்வு முடிந்து நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக அந்தியூர் ஐடியல் பள்ளியில் ஆட்டுமந்தைக் கணக்காகச் சேர்ந்த போது அங்கே அவர்கள் மைக் செட் கட்டி பெருங்கூட்டத்துக்கு பாடம் நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் படித்து தேர்வெழுதி- அது சரி. ‘இனி நுழைவுத் தேர்வும் நமக்கும் சாத்தியமேயில்லை’ என்ற முடிவுக்கு இறுதியாக வந்து சேர்ந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்குமாக படிப்பது போல உருட்டி நடிக்க வேண்டியிருந்தது.
ஹால் டிக்கெட் வந்து சேர்ந்தது. கல்லூரியொன்றில்தான் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. வெட்டக் கொண்டு போகிற ஆடுவொன்றின் மனநிலைதான் இருந்தது. வெள்ளை நிற நடராஜ் ரப்பர் ஒன்றை வாங்கிச் சதுரமாகக் கத்தரித்து நான்கு பக்கமும் 1,2,3,4 என்று எழுதி வைத்திருந்தேன். குலுக்கி வீசும் போது வருகிற விடையைத் தேர்ந்தெடுத்துவிடலாம் என்கிற முடிவுதான். இப்படித்தான் இருக்கன்குடி மாரியம்மன் காப்பாற்றிவிடுவார் என்று நம்பியிருந்தேன்.
மணியடித்து ஒவ்வொருவராக வரிசையாக அமர்ந்த போதுதான் இருக்கன்குடி மாரியம்மன் வேறொரு வகையில் கை கொடுக்கிறார் என்று தெரிந்தது. முந்தின வரிசையில் அப்புராஜைக் கொண்டு வந்து அமர வைத்திருந்தார். சில வினாடிகளுக்கு மின்னலடித்து நெஞ்சுக்குள் ஆனந்தத் தாண்டவமெல்லாம் நிகழ்ந்தது. சாமிக்கு நன்றி சொல்லிவிட்டு ‘அப்பு நீ காட்ட வேண்டாம்...ஆனா தயவு செஞ்சு விடைகளை மறைச்சு மட்டும் வெச்சுடாத’ என்று சொன்ன போது தலையாட்டிக் கொண்டான். அவ்வளவுதான். தலையைத் தூக்குவது, அல்லையில் பார்ப்பது, விடைத்தாள் தெரியாத போது ‘இஸ்க்கு இஸ்க்கு’ என்று சமிக்ஞை செய்வது என்று செய்யாத பிரயத்தனங்கள் இல்லை. அதே அறையில் தேர்வெழுதிய மற்ற நண்பர்கள் ‘டேய் க.வா....டாக்டராகிடுவே போலிருக்கே’ என்று உசுப்பேற்றினார்கள். க.வா என்பது இனிஷியல். பள்ளியிலும் கல்லூரியிலும் க.வா என்று நண்பர்கள் அழைப்பார்கள். வேலூர், அரக்கோணத்தில் சாக்கடையைக் காவா என்று அழைப்பார்கள் என்று தெரிந்த பிறகு இனிஷியலில் இருந்த ‘க’வை வெட்டி வெறும் ‘வா’ என்று செக்ஸியாக வைத்துக் கொண்டேன்.
எப்படியும் மருத்துவராகிவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கும் வந்திருந்தது. அப்படி மருத்துவராகி பொதெக்கென்று ஊசி குத்த வேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றவா முடியும் என்று பந்தாவாக நண்பர்களுக்கு பதிலும் சொன்னேன். தேர்வுகள் முடிந்த போது கன சந்தோஷம். உற்சாகம் பிடிபடவில்லை. கலர் கலர் கனவுகளுடன் சுற்றிக் கொண்டிருந்தேன். நுழைவுத் தேர்வு முடிவு வரும் போது கூட பெரிய பயமில்லை. அந்த வருடம் 288 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு மருத்துவம் கிடைத்தது. நான் 283 மதிப்பெண்களைத் தொட்டிருந்தேன். ஃபெயிலாகக் கிடந்தவன் இத்தனை மதிப்பெண்கள் வாங்கியதே வீட்டில் இருந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம். அத்தோடு விட்டுவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன்.
‘போச்சாது சாமீ...இன்னொருக்கா இம்ப்ரூவ்மெண்ட் எழுதி டாக்டராகிடலாம்’ என்று குண்டு போட்டார்கள்.
‘ஆளை விடுங்கடங்கய்யா ங்கொப்புறானே’ என்று தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
மதிப்பெண் ஊரை ஏமாற்றுவதற்காக வாங்கியது. நம் தகுதி நமக்குத் தெரியுமல்லவா? அரை மருத்துவன் ஆகிறேன் என்ற பெயரில் ஆயிரம் பேரைக் கொல்கிற அவசியம் எனக்கில்லை என்று கித்தாப்பாகச் சொல்லிவிட்டு எல்லோரும் குதித்த பொறியியல் குட்டையிலேயே குதித்து தம் கட்டித் தப்பிவிட்டேன். அநேகமாக இதெல்லாம் அப்புராஜூவுக்கே மறந்திருக்கக் கூடும். நுழைவுத் தேர்வு அறையில் சந்தித்த அப்புராஜை நேற்றுதான் கோபியில் சந்தித்தேன். பதினேழு வருடங்கள் ஆகிவிட்டது. MBBS.,MD.,Dch என்று பெயர்ப்பலகை இருந்தது. அவனுக்கு அது தகுதியான படிப்புதான். தலையை எட்டிப் பார்த்து ‘நல்லா இருக்கியா?’ என்றேன். அப்புராஜுவுக்கும் என்னை ஞாபகம் இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
நேற்றிரவு ஊருக்கு வரும் வழி முழுவதும் இந்த நினைப்புதான் ஓடிக் கொண்டிருந்தது. ஓடையில் அடித்து வரப்படும் இலையின் போக்கை ஒவ்வொரு சிறு கல்லும் கரையோரம் தட்டுப்படும் சிறு புல்லும் கூட தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கும். நமக்கும் அப்படித்தான். நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவதொரு வகையில் திசைமாற்றிகளாக இருந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால் வேறொரிடத்தில் வேறொரு மாதிரி இருந்திருப்போம்.
நேற்றிரவு ஊருக்கு வரும் வழி முழுவதும் இந்த நினைப்புதான் ஓடிக் கொண்டிருந்தது. ஓடையில் அடித்து வரப்படும் இலையின் போக்கை ஒவ்வொரு சிறு கல்லும் கரையோரம் தட்டுப்படும் சிறு புல்லும் கூட தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கும். நமக்கும் அப்படித்தான். நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவதொரு வகையில் திசைமாற்றிகளாக இருந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால் வேறொரிடத்தில் வேறொரு மாதிரி இருந்திருப்போம்.
5 எதிர் சப்தங்கள்:
ஓடையில் அடித்து வரப்படும் இலையின் போக்கை ஒவ்வொரு சிறு கல்லும் கரையோரம் தட்டுப்படும் சிறு புல்லும் கூட தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கும். நமக்கும் அப்படித்தான். நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவதொரு வகையில் திசைமாற்றிகளாக இருந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால் வேறொரிடத்தில் வேறொரு மாதிரி இருந்திருப்போம். ****
WOW... Correct boss..
//ரப்பர் ஒன்றை வாங்கிச் சதுரமாகக் கத்தரித்து நான்கு பக்கமும் 1,2,3,4 என்று எழுதி வைத்திருந்தேன். குலுக்கி வீசும் போது வருகிற விடையைத் தேர்ந்தெடுத்துவிடலாம் என்கிற முடிவுதான்//
மிடில மணி.(உண்மையிலேயே இது நடந்திருந்தா) இதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என யோசித்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை.
//‘படிச்சு டாக்டர் ஆகுறதுக்கு பதிலா படிக்காமலேயே இஞ்சினியரிங் சேர்ந்துடலாம் விடுறா’ என்றேன்.//
அப்புராஜூ உடனான சந்திப்பும், அவர் தொடர்பான பள்ளிக்கால நினைவுகளை வெளிப்படுத்திய விதமும் அருமை. வாழ்த்துகள் மணிகண்டன் சார்.
இயல்பான வரிகள்...
வாழ்வில் நம்மை செதுக்குபவர்களைப் போல், நமது திசையினை மாற்றுபவர்களும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள் என்பதை மிக எளிதான உரைநடையில் எழுதி உள்ளீர்கள்.
மகிழ்ச்சி...
Post a Comment