அரசுப் பள்ளிகள்தான் பாவம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைவிடவும் பாவப்பட்ட பள்ளிகள் என்றால் உதவி பெறும் பள்ளிகள்தான். வெகு காலத்திற்கு முன்பாக ‘சம்பளத்தை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். பிற தேவைகளை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்பட்ட இவை திணறிக் கொண்டிருக்கின்றன. நிதி ஆதாரம் இல்லாமல் பழுதடைந்த கட்டிடங்கள், கழிப்பறை வசதியின்மை, குடிநீர் பிரச்சினைகள் என்று அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே பல உதவி பெறும் பள்ளிகள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகள் ஏதேனும் உதவி வேண்டும் என்று கேட்டால் துணிந்து செய்யலாம்- ஒன்றை மட்டும் கூர்நோக்க வேண்டியிருக்கிறது. பள்ளியின் தலைமையாசிரியர் உண்மையிலேயே ஆர்வமும், அர்பணிப்பும் உள்ளவராக இருக்கிறாரா?
சில உதவி பெறும் பள்ளிகளிடமிருந்து ஒரு கோரிக்கை திரும்பத் திரும்ப வருகிறது - ஸ்மார்ட் க்ளாஸ் அமைத்துத் தரச் சொல்கிறார்கள்.
பல அரசாங்கப் பள்ளிகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துவிட்டார்கள். உதவி பெறும் பள்ளிகள் ‘எங்களுக்கும் உதவ முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். சோதனை அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளில் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தொடர்ந்து கண்காணிப்பதற்கு வாய்ப்புடைய பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அதனை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதையெல்லாம் அணுக்கமாக அலசிய பிறகு மேற்கொண்டு இதே உதவிகளைச் செய்யலாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சில பள்ளிகளுக்கு நூலகங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அநேகமாக சிலருக்கு ஞாபகம் இருக்கக் கூடும். அந்தப் பள்ளிகளைத் தொடர்பு கொண்டு நூலகங்களின் பயன்பாடு எப்படி இருக்கிறது? குழந்தைகளுக்கு புத்தகங்கள் சரியாகக் கிடைத்தனவா என்பதை சரிபார்த்ததில் ஐம்பது சதவீதப் பள்ளிகள்தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. பல பள்ளிகளில் புத்தகங்களை ஆசிரியர்களே எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்பொழுது நிறையப் புத்தகங்கள் இல்லை. நேரடியாகச் சென்று பார்ப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய திட்டங்களின் குறைகளையும் நிறைகளையும் கண்டு கொள்வது அடுத்தடுத்த திட்டங்களை மேற்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும்.
சமூக நோக்கோடு செய்கிற வேலைகளில் நிறையப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மெல்ல மெல்லத்தான் அனுபவம் சேகரமாகிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்வதைவிடவும் மெல்ல மெல்ல எட்டி வைக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன அவசரம்? ஒரே வருடத்தில் உலகத்தை புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை. சிறு சிறு சலனங்களைச் செய்து கொண்டிருக்கலாம். அந்தச் சலனங்களின் விளைவுகளைப் பார்த்து நீட்டிப்பது குறித்தும் திசை மாறுவது குறித்தும் முடிவு செய்யலாம்.
இப்பொழுது ஒரு உதவி தேவைப்படுகிறது-
ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான விலைப்புள்ளியைக் கோரலாம். அறையைப் பள்ளி ஒதுக்கித் தந்துவிடும். அந்த அறையில் என்ன பொருட்கள் தேவை, அவற்றுக்கான விலை என்ன, அதை அமைத்துத் தருவதற்கான மொத்தச் செலவு என்கிற விவரங்களை அடக்கிய விலைப்புள்ளியை (Quotation) அனுப்பி வைக்கவும். இலாபம் இல்லாமல் இதைச் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் இலாபத்தின் அளவை முடிந்தவரையில் குறைத்துக் கொள்ள இயலுமா என்று பாருங்கள். ஆரம்ப அல்லது நடுநிலைப்பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்த உதவியைச் செய்யப் போகிறோம். நாம் செய்யப் போகிற உதவியினால் அந்தக் குழந்தைகளுக்கு என்னவிதமான நல்லதைச் செய்ய முடியும் என்று பரிசோதித்துப் பார்க்கலாம். இதுவொரு தொடர்ச்சியான பயணம். நாமும் கைகோர்க்கிறோம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் விலைப்புள்ளியை அனுப்பி வைக்கவும். பரிசீலித்து முடிவு செய்வோம்.
vaamanikandan@gmail.com
1 எதிர் சப்தங்கள்:
என் கடமையை செய்ததற்கு இத்தனை கரங்கள் என்னை ஊக்கப்படுத்துவதைக் காணும் பொழுது இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.எனது பள்ளிக் குழந்தைகள் ஒரு பின்தங்கிய கிராமப்புற பள்ளியில் படிப்பதால் எதையும் இழந்தோம் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது. நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் கிடைக்கும் ஏன் அதை விட அதிகமாகவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் அனுபவம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறேன்.அதை நோக்கியே எனது அடுத்த செயல்பாடுகள் இருக்கும்.
அரசுப்பள்ளிகளின் தரம் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புகளில் (infrastructure)மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டுமென்பது அதிமுக்கியம் ஆகும்.அதற்கு அரசையே நம்பி இருந்தால் கால விரயம் தான் ஏற்படும்.
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.உங்களுள் பலருக்கு தகுதியானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.இல்லாவிடில் அவ்வாறு உதவும் நபர்களையோ,வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களையோ (trust,lions,rotary,jc etc.,) நீங்கள் அறிந்திருக்கலாம்.உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்களுக்கு எங்களைப் போன்ற பள்ளியை அடையாளம் காட்டுங்கள்.நீங்கள் அளிக்கும் ஒரு கல்வி குறுந்தகடு கூட எங்களுக்கு பொக்கிஷம்.அரசுப்பள்ளிகளின் தரத்தைப் பற்றி மட்டும் விவாதிக்காமல் தரத்தை மேலும் உயர்த்த விரும்பும் எங்களைப்போன்றோருக்கு உதவுவது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புங்கள் .தங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் ..
பள்ளிக்கு தேவையான சிலவற்றை தங்களுடன்
பகிர்ந்துகொள்கிறேன்!
*சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி.
* வட்ட மேசைகள், நாற்காலிகள்.
* உணவு உண்ணுமிடம்.
*தட்டுகள்
*அற்புதமான கழிப்பறை வசதி.
*வகுப்பறையின் ஒரு சுவர் முழுதும் சிறந்த வடிவமைப்பு கொண்ட அடுக்குகளில் புத்தகங்கள்.
*விளையாட்டு உபகரணங்கள்.
*உலகின் சிறந்த வகுப்பறைகள் போன்ற உள் வடிவமைப்பு.
*மிகச்சிறந்த சீருடை.
*புத்தகச் சுமையைக் குறைக்க மேலை நாடுகள் போல பள்ளியிலேயே லாக்கர் வசதி.
*LED TV.
*அறிவியல் உபகரணங்கள்.
*இசைக்கருவிகள்.
*சுற்றுச் சுவர்.
* கணினி அறை.
* மொழி ஆய்வகம்.
எந்த வசதிகள் இருந்தாலும் ஆசிரியர் மாணவர் உறவு என்பது இல்லையென்றால் எதுவும் பயனில்லை..வகுப்பறைக்கு வெளியிலும் ஆசிரியரின் பணிகள் ஏராளமாக இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுபவர்களாலேயே சமூகத்தை மாற்ற இயலும்!
நானும் அவ்வழியே பயணித்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்! மாற்றம் ஒன்றே மாறாதது!
தொடர்புக்கு,
வசந்த்.
ஆசிரியர்.கீழப்பாலையூர்.
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
9786060665
Post a Comment