Aug 16, 2016

நா.முத்துக்குமார்



கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்த போது விழாவொன்றுக்கு நா.முத்துக்குமாரை அழைத்திருந்தார்கள். முந்தின நாள் இரவே சேலத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார். வாசிப்பில் ஆர்வமிக்கவன் என்கிற அடிப்படையில் முத்துக்குமாரை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதுதான் அவருடனான முதல் அறிமுகம். 

சேலம் கேஸில் என்கிற ஹோட்டல் அறையில் இருந்தார். ‘என்ன சார் சாப்பிடுறீங்க?’ என்று கேட்டுவிட்டு அவர் விரும்பிய  சப்பாத்தியும் சிக்கனும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த போதே கையோடு அதுவரையிலும் நான் எழுதியிருந்த கவிதைகளை எல்லாம் எடுத்துச் சென்றிருந்தேன். வலது கையில் சப்பாத்தியை உண்டபடியே இடது கையில் கவிதைகளைப் புரட்டிவிட்டு கவிதை பற்றி எதுவுமே சொல்லாமல் ‘கலாப்ரியா கவிதை படிச்சிருக்கீங்களா?’ என்றார். அந்தப் பெயரை அப்பொழுதுதான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். ‘தமிழில் முக்கியமான கவிஞர்கள்ன்னு ஒரு லிஸ்ட் இருக்கு..அவங்களை எல்லாம் படிங்க...கொஞ்ச நாள் கழிச்சு எழுதுங்க’ என்றார் முத்துக்குமார். ‘நீ எழுதியிருப்பதெல்லாம் தேறாது’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தார் - அவ்வளவு நாசூக்காக. அடுத்த நாள் மாலையில் அவர் சென்னைக்கு கிளம்பும் வரையில் அடிக்கடி சந்தித்து ஏதாவது தேவைப்படுகிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அது என்னுடைய கடமையாக இருந்தது. கிளம்பும் போது திருவள்ளுவபுரம் சூளைமேட்டு வீட்டு முகவரி அச்சிடப்பட்டிருந்த அவரது விசிட்டிங் கார்ட் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டேன். 

சில நாட்கள் கழித்து அவருடைய அலைபேசி எண்ணில் அழைத்து என்னைப் பற்றி நினைவூட்டினேன். அவருக்கு ஞாபகமிருந்தது. ஆனால் வேறு என்ன பேசுவதென்று தெரியவில்லை. இணைப்பைத் துண்டித்துக் கொண்டோம். எம்.டெக் படிப்பதற்காகச் சென்னை வந்த போதுதான் சந்தித்துப் பேச முடிந்தது. ஓர் அதிகாலையில் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அவரது வீட்டுக்குச் சென்றேன். அவருடைய பாட்டியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். மிகச் சிறிய வீடு அது. என்ன காரணத்தினாலோ அவர் அதைச் சங்கடமாக உணர்ந்ததாக மனதுக்குப் பட்டது. பிறகு அவரது வீட்டுக்குச் செல்வதற்கு மனம் வரவில்லை. ஆனால் அவ்வப்பொழுது அவரைத் தொடர்பு கொள்வதைக் கைவிடவில்லை. என்னுடைய சுயநலமான தொடர்பு அது. திரையிசைக்கு பாடல் எழுத வேண்டும் என்கிற அந்தக் காலத்திய ஆசைக்கு அவர் உதவக் கூடும் என்கிற எண்ணத்திலேயே தொடர்பில் இருந்தேன். எனது ஆசை வடிய வடிய அவருடனான தொடர்பு மெல்ல அறுபட்டது. 

தனது எளிமையான குடும்பப் பின்னணி, அப்பாவின் தமிழ் ஆர்வம், தனது கிராமம் சார்ந்த பால்யம், பச்சையப்பா கல்லூரி நினைவுகள், பாலுமகேதிராவிடம் உதவியாளராகச் சேர்ந்தது என்று ஆரம்பித்து தனது பாடல் வரிகளை மேற்கோள்காட்டி கல்லூரியில் பேசிய பேச்சு இன்னமும் நினைவில் இருக்கிறது. இவற்றைத்தான் பல முறை அவரிடம் திரும்பப் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசும் போதெல்லாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாகத் தோன்றும். ஏதோவொரு வகையில் ஆயிரக்கணக்கான கனவுகளைச் சுமந்து திரியும் இளைஞர்களுக்கான ரோல் மாடலாகியிருந்தார் என்பதை மறுக்கவியலாது.

சினிமாவில் திறமையாளன் மட்டும் வென்றுவிடுவதில்லை. அதைத் தாண்டியும் நிறைய சூட்சமங்கள் இருக்கின்றன. நண்பர்களைப் பேணத் தெரிய வேண்டும். தனது இடத்தை ஸ்திரமாக்கிக் கொள்கிற வித்தை தெரிந்திருக்க வேண்டும். தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இவை அத்தனையும் முத்துக்குமாருக்கு வசமாகியிருந்தது. இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறவர்கள், சினிமாவில் இருக்கிறவர்கள் என கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் ‘முத்துக்குமாரும் நானும்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அதில் பெரும்பாலும் பொய் இருக்காது. ஏதாவதொருவிதத்தில் அல்லது ஏதாவதொரு இடத்தில் முத்துக்குமார் அவர்களை எதிர்கொண்டிருப்பார். அவ்வளவு தொடர்புகள் அவருக்கு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது புத்தகங்களுக்கு என்று தனியாக அரங்கு இருக்கும். இளம் எழுத்தாளர்கள் யாருமே தமது புத்தகத்திற்கென ஒரு பதிப்பகம் தொடங்கி புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துக் கொள்வதில்லை. முத்துக்குமார் செய்தார். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரியின் தொடக்கத்திலோ கடந்த ஆண்டு முத்துக்குமார் எழுதிய பாடல்கள் என்று ஒரு பட்டியல் வரும். ‘இந்த ஆளால எப்படி இவ்வளவு எழுத முடியுது?’ என்று தலை கிறு கிறுத்துப் போகும். அதில் ஏகப்பட்டவை ஹிட்டடித்த பாடல்களாகவும் இருக்கும். அந்தப் பட்டியலைப் பார்க்கும் எந்தவொரு இயக்குநரும் தன்னுடைய படத்தில் குறிப்பிட்ட பாடலை முத்துக்குமார்தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொள்வார். இப்படி எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்த கவிஞன் தனது மரணத்தில் மெத்தனமாக இருந்ததுதான் துயரம்.

குடியால் இறந்தார்; நோயால் இறந்தார் என்றெல்லாம் பேசுகிறார்கள். அவரவர் வாழ்க்கை. அவரவர் முடிவு. நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்துக்கு அதற்கேற்ற விளைவு உண்டு என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்துதான் வைத்திருக்கிறான். அறிவுரை சொல்வதும் ‘என்னாச்சு பார்த்தியா?’ என்று இன்னொருவனைப் பார்த்துக் கேள்வி கேட்பதும் அவசியமற்றது என நினைக்கிறேன். ஆயினும் அவர் இன்னமும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று மனம் விரும்புவதைத் தவிர்க்க முடிவதில்லை.

கவிதைக்காக இல்லையென்றாலும் பாடலாசிரியன் என்கிறவகையில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எந்தவிதத்திலும் நிராகரிக்கவே முடியாது. திரையிசைப் பாடல்களைக் கேட்க விரும்பிய பல இரவுகளில் ‘Muthukumar lyrics' என்று தானாகக் கைகள் தட்டச்சு செய்யும். நெகிழச் செய்கிற வரிகள் அவருடைய பாடல்கள். வித்தைக்காரன் என்று தயங்காமல் சொல்லலாம். 

திரையிசைப் பாடல்களில் நா.முத்துக்குமாரின் திறமை குறித்துத் தனியாக எழுத வேண்டியதில்லை. பத்து அல்லது பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக வேறொரு சினிமா பாடலாசிரியருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போது ‘கடந்த ஆண்டு பா.விஜய்யின் பொங்கல்; இந்த ஆண்டு முத்துக்குமாரின் பொங்கல்; அடுத்த ஆண்டு உங்கள் பொங்கலாக இருக்கட்டும்’ என்று வாழ்த்து அனுப்பியது ஞாபகமிருக்கிறது. அந்த வாழ்த்து பலிக்கவேயில்லை. தமிழ் சினிமாவின் பாடல்களைப் பொறுத்த வரைக்கும் கடந்த பத்தாண்டுகளாகவே ஒவ்வொரு வருடமும் முத்துக்குமாரின் பொங்கலாகத்தான் இருந்தது. வெற்றியின் உச்சத்தை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் சாதிக்க இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. தமிழ் பாடலாசிரியர்களில் கண்ணதாசன் - வைரமுத்து என்கிற வரிசையில் அடுத்த இடத்தைப் பிடிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் கொண்டிருந்த பாடலாசிரியர் முத்துக்குமார். இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருந்து சில ஆயிரம் பாடல்களைச் சேர்த்திருந்தால் அந்த வரிசையில் உறுதியான இடத்தை பிடித்திருப்பார். கண்ணதாசன் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பாடல்களை எழுதியிருக்கிறார். வைரமுத்து ஆறாயிரம் பாடல்களை எழுதியிருக்கிறார். எண்ணிக்கை முக்கியமில்லை என்று வாதிட்டாலும் எண்ணிக்கைக்கான இடம் ஒன்று இருக்கிறது. அதை முத்துக்குமார் தவறவிட்டிருக்கிறார். ஆன போதிலும்  அவரது அற்புதமான பாடல் வரிகள் இனி எல்லாக் காலத்திலும் காற்றில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். 

அவரது மரணச் செய்தியைக் கேட்டதிலிருந்து ஏதேதோ சஞ்சலங்கள் தூங்கவிடாமல் அலை கழித்துக் கொண்டேயிருக்கின்றன. அதிகாலை மூன்று மணிக்கு இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்’ என்ற அந்தக் கவிஞனுடைய பாடல்வரிகள் பெண்ணொருத்தியின் குரல் வழியாக கசிந்து கொண்டிருக்கிறது. முத்துக்குமாரே அருகில் இருந்து பேசுவது போல இருக்கிறது. அவனது பாடல்களைக் கேட்கும் இந்த இரவில் அழுகை கண்களுக்குள் தேங்கி நிற்கிறது. அவனது குடும்ப நிழற்படத்தைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்து இசையோடு கோர்த்த அந்த தாடிக்காரன் இன்னும் சில வருடங்களாவது வாழ்ந்திருக்கலாம்- அவனது பிள்ளைகளுக்காகவாவது.

8 எதிர் சப்தங்கள்:

பாலு said...

அதிலும் முத்துக்குமார் அவர்கள் சிகிச்சைக்குப் பணம் இன்றி மரணம் அடைந்ததாக வரும் செய்திகள் கலக்கமடையச் செய்கின்றன. ஏமாத்துக்கார திருவாய்த்தான்கள் ஒழுங்காக அந்தக் குடும்பத்திற்குண்டான பணத்தைக் கொடுத்துவிடுங்கப்பா! இன்னும் பத்து வருடம் கழித்து அவரின் பிள்ளைகள் எங்கேயாவது சிறு குறு வேலைகள் செய்து பிழைக்கும் காட்சி வந்தால் தாங்க முடியாது. தயோளி! எல்லாரையும் தூங்க விடாம பண்ணிட்டு அவம் பாட்டுக்குப் போய்ச் சேந்துட்டான்.

செ. அன்புச்செல்வன் said...

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெகுநேரம் கழித்துத்தான் இணையம் மூலமாக இந்தத் துயரச்செய்தி எனக்குக் கிடைத்தது. அவரின் எல்லாப் பாடல்களும் எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும் அவரின் "அணிலாடும் முன்றில்" தான் அவரை, அவரின் எழுத்தை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்கள் மெதுவாகச் சமைத்து முகநூல் பார்த்துக்கொண்டே உண்ணலாம் என்பதற்காகக் கணினியருகே எடுத்துச்சென்று இணையத்தைத் திறந்தால் இடிபோன்றதொருச் செய்தியைக் கண்டு நம்பஇயலாமல் வருந்தினேன். அன்று மாலைவரை எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. வீட்டில் யாருமில்லையாதலால் கிட்டத்தட்ட அழுதுக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே தமிழுலகுக்கு ஒரு பேரிழப்பாகக் கருதுகிறேன். உங்கள் வரிகள் என்னை அவரிடமே அழைத்துச்சென்றுவந்ததைப்போல உணர்கிறேன். பாராட்டுகள் ங்க மணிகண்டன் சார் !!

viswa said...

இணையத்தில் அவர் தன் மகனுக்கு எழுதிய கடைசி கடிதம் வந்தது கண்ணீர் பெருகாமல் வாசிக்க முடியவில்லை

விஸ்வநாதன்

Vinoth Subramanian said...

Yes sir. He could have lived some years. God has no mercy.

சேக்காளி said...

நா.முத்துக்குமார் என்றதும் ராஜாவின் கரகர குரலில் ஆரம்பிக்கும்
"பறவையே எங்கு இருக்கிறாய்"
தான் தொண்டையை அறுக்கிறது.

Vaa.Manikandan said...

இணையத்தில் வெளியானது அவர் மகனுக்கு எழுதிய கடிதம் இல்லை. அந்த வரிகள் விகடனில் வெளியான அணிலாடும் முன்றில் தொடரில் இருக்கின்ற வரிகள்தான்.

viswa said...

நன்றி

விஸ்வநாதன்

ADMIN said...

அவரது பாடல்கள் மறக்க முடியாதவை.