Aug 2, 2016

உடல்

மாற்று மருத்துவம் பற்றிய கட்டுரை எழுதிய பிறகு ஒரு சித்த வைத்தியர் அழைத்திருந்தார். அவருக்குக் கடும் கோபம். ‘காலங்காலமா இங்க இருக்கிற சித்த வைத்தியத்தை எப்படி மாற்று மருத்துவம்ன்னு எழுதுவீங்க? மற்ற மருத்துவங்கள்தான் மாற்று’ என்றார். இப்படியெல்லாம் வம்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னவோ சொல்லி சமாளித்து இணைப்பைத் துண்டித்தேன். நாட்டு வைத்தியர் ஒருவரும் பேசினார். ‘அது இதுன்னு கண்டபக்கம் போய்ட்டு கடைசியில முடியாத கட்டத்துக்குத்தான் எங்ககிட்ட வர்றாங்க....பாதி கேஸூ தோல்வியில்தான் முடிகிறது..அப்புறம் எப்படி எங்களால் நிரூபிக்க முடியும்?’ என்றார். அவரவருக்கு அவரவர் பிரச்சினை.

சித்த மருத்துவத்தையும் நாட்டு மருத்துவத்தையும் நாடி மக்கள் வருவதில்லை என்பதைக் குறையாகச் சொல்ல முடியாது. சித்த மருத்துவத்தை எப்படி முழுமையாக நம்புவது? நிறைய ஒழுங்கீனங்கள் இருக்கின்றன. மருத்துவத்தில் ஒழுங்கு இல்லை என்று சொல்லவில்லை. இங்கே செயல்படுகிற மருத்துவ முறையில் ஒழுங்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மருந்து கொடுக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் மருந்து தயாரிக்கிறார்கள். பாதி சித்த மருத்துவ சிரோண்மணிகள் கேப்சூல்களில் அலோபதி மருத்துவப் பொடிகளைத்தான் நிரப்பி சித்த மருந்து என்ற பெயரில் விற்பதாகச் சொல்கிறார்கள். 

கண் எரிச்சலில் ஆரம்பித்து, ஞாபக மறதி, கனவு மூலம் விந்து வெளியேறுதல், சிறுத்த உறுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தளர்ந்த உறுப்பு என சகலத்திற்கும் அமுக்கிரா கிழங்கு என்ற ஒரேயொரு மருத்துவக் குணம் கொண்ட கிழங்கைக் கொடுத்து வியாபாரத்தை விஸ்தாரமாக்கி தொலைக்காட்சி, ஃஎப்.எம் என சகலத்திலும் இடம் பிடித்து பல நூறு கோடி ரூபாய்க்கு முதலாளிகள் ஆகிவிட்ட சித்த மருத்துவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

பெங்களூரில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஓய்வு பெற்ற விஞ்ஞானி. வெகு நாட்களாக ஒரு மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். இப்பொழுது அந்த மரத்தின் இலையை பொடி செய்து நோயாளிகளுக்குக் கொடுக்கிறார். ஒரு மாதத்திற்கான பொட்டலம் ஆயிரத்து இருநூறு ரூபாய். ஒரு நாளைக்கு குறைந்தது இருபது பொட்டலங்கள் விற்கிறார். பல கொடூர நோய்களுக்கான மருந்து. பக்க விளைவு இல்லாதது என்கிறார். எவ்வளவு தூரம் உண்மை என்றெல்லாம் தெரியாது. மக்கள் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். 

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வைத்தியர்கள் இருக்கிறார்கள். இதில் யாரை நம்பி மருத்துவத்தைப் பின்பற்றுவது என்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. 

கேன்சருக்கு மருந்து இருக்கிறது; எய்ட்ஸூக்கு மருந்து இருக்கிறது என அத்தனை விதமான நோய்களுக்கும் மருந்து இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர சமகாலத்தில் நிரூபணம் செய்யப்பட்ட தரவுகளை முன் வைப்பதில்லை. இங்கே அதுதான் பிரச்சினை. அலோபதி மருத்துவத்தை படித்தவர்கள் மட்டும்தான் கொடுக்க முடியும். ஆனால் சித்த மற்றும் நாட்டு வைத்தியத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்காக BSMS முடித்தவர்கள்தான் சித்த மருத்துவத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அது ஒரு காமெடி. சமீபத்தில் சித்த வைத்தியப் படிப்பை முடித்த ஒரு மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கு அப்துல்லா சாஹிப் பெயரோ அல்லது பலராமைய்யா பெயரோ கூடத் தெரிந்திருக்கவில்லை. பட்டம் படித்தவருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகள் தெரிவதில்லை. படிக்காதவர்களை அனுமதித்தால் கேடிகளும் தில்லாலங்கடிகளும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள்.

BSMS படித்தவர்கள் மட்டும்தான் சித்த வைத்தியர்கள் என்று அறிவித்தால் மெல்ல மெல்ல சித்த வைத்தியம் அழிந்து போகும். பாரம்பரிய வைத்தியர்கள் என்ற பெயரில் கண்டவர்களையெல்லாம் அனுமதித்தாலும் சித்த வைத்தியம் அழிந்து போகும். பாம்பும் சாகாமல் தடியும் முறியாமல் அடிக்கின்ற வித்தைதான் அது. அரசாங்கம்தான் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்திற்கு இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? 

இதெல்லாம்தான் ஒரு சாமானியனாக சித்த மருத்துவத்தைப் பின்பற்றுவதில் எனக்கும் என்னைப் போன்ற ஏகப்பட்ட பேர்களுக்கும் இருக்கக் கூடிய பிரச்சினை. ஸ்டீராய்டு கலந்திருக்குமோ? இவரை நம்பலமா? நம்பி தின்றால் ஏதாவது வினையாகிவிடாதா என்று ஏகப்பட்ட கேள்விகள். மருத்துவர்கள் மீதும் அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் மீதும்தான் சந்தேகமே தவிர மருத்துவத்தை முழுமையாக நம்புகிறேன். 

பனிரெண்டாம் வகுப்பிலிருந்தே வாயில் அடிக்கடி புண் வரும். பார்க்காத மருத்துவர்கள் இல்லை. பி வைட்டமின் குறைவாக இருக்கிறது என்று மருந்து எழுதித் தருவார்கள். மாத்திரைகளை விழுங்கச் சொல்வார்கள். ஆனால் கர்ண கொடூரமாக ஆடிவிட்டுத்தான் போகும். காரணமே தெரியாது. தேர்வுகளின் போதெல்லாம் புண் வரும். வேலைக்கான நேர்காணல்களின் சமயத்தில் புண் வரும். மிகச் சமீபத்தில்தான் யாரோ ஒரு நல்ல மருத்துவர் இதை ‘ஸ்டெரஸ் அல்சர்’ என்று கண்டுபிடித்துச் சொன்னார். மன அழுத்தத்தினால் வரக் கூடிய புண். வரும் போதெல்லாம் TESS என்கிற களிம்பைப் பூசினால் விரைவில் குணமாகிவிடும். இல்லையென்றால் ஏழெட்டு நாட்கள் ரணகளம்தான். இனி காலம் பூராவும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்த போது ‘அதிமதுரப் பொடியை ஒரு ஸ்பூன் அள்ளிப் போடு’ என்றார்கள். வெளியிடங்களில் எண்ணெய் பதார்த்தங்களைத் தின்றால் நெஞ்சு எரியும் அல்லவா? அது கூட வருவதில்லை.  

மருத்துவம் இரண்டாம்பட்சம். வாழ்வியல் முறைகளில் கொஞ்சமேனும் மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தலையில் dove ஷாம்பூவைப் போட்டுக் குளித்தால் உள்நாக்கில் கசப்பு இறங்கும். உடல் எப்படித் தாங்கும்? தின்பதிலிருந்து குளிப்பது வரை அத்தனையும் வேதிப்பொருட்கள்தான். கொஞ்சமாவது விலகலாம். விலக விரும்பினால் இயற்கையாகவே ஏகப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. முயற்சித்துப் பார்க்கலாம். நோய் நாடி நோய் முதல் நாடி என்பதில்தான் முதல் கவனம் வேண்டியதாக இருக்கிறது. எப்படி நோய் வரக் கூடும் என்பதைப் பற்றி யோசிக்காமல் நோய் வந்த பிறகு பதறுகிற சூழல்தான் நம் அத்தனை பேருக்குமே இருக்கிறது. அவசர காலம்.

மாற்று மருத்துவம் என்ற பெயரில் எல்லாவற்றுக்கும் சித்த மருத்துவம் மட்டும்தான் சிறந்த மருத்துவம் என்று குருட்டாம்போக்கில் கத்தவில்லை. ஒரே மருத்துவ முறையே சகலரோக நிவாரணியாக இருக்கும் என்றும் நம்பவில்லை. ஆனால் முயற்சித்துப் பார்க்க வேண்டும். முன்னோர்கள் ஏகப்பட்ட விஷயங்களைப் பேசி வைத்திருக்கிறார்கள். முயற்சித்திருக்கிறார்கள். அதைப் பின்பற்றிச் செல்வதில் தவறு ஏதுமில்லை. இதைத்தான் நாம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. நம் ஒவ்வொருவரின் உடலையும் வைத்து மருத்துவம் மருந்து என்ற பெயரில் நடைபெறும் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப் புரிவதுதான் மிக முக்கியமான மனித குல விடுதலையாக இருக்கும். 

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ரொம்ப சத்தம் போட்டு பேசாதீங்க. அப்புறம் சல்லிக்கட்டு க்கு தடை விதிச்சா மா(தி)ரி சித்த மருத்துவத்துக்கும் தடை விதிச்சிர போறாங்க.

சேக்காளி said...

//‘அதிமதுரப் பொடியை ஒரு ஸ்பூன் அள்ளிப் போடு’ என்றார்கள்//
விடியக்காலத்துல பொட்டுக்கடலையை சாப்புட்டுட்டு தண்ணி குடிச்சா ஏதோ ஒரு பிரச்னை தீரும் னு எழுதியிருந்தீங்க.(என்னப் பிரச்னை என்பது மறந்து போச்சு.)

Muthu said...

இவை ஒவ்வொன்றும் மற்றதன் இடைவெளியை நிரப்புபவை என்பது புரியாததால்தான் பிரச்சினைகள்.

உதாரணமாக அலோபதி பல்லாண்டுகளு பிடிக்கும் கடுமையான பரிசோதனை (க்ளினிகல் ட்ரைய்ல் கேள்விப்பட்டிருப்பீர்கள்) மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் தரப்படுத்தப்பட்டது. அதுபோன்ற எதுவும் பாரம்பரிய மருத்துவத்துக்குண்டா என்றே தெரியவில்லை.

இந்த விஞ்ஞான பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு இரண்டு முறைமைகளையும் பாரம்பரிய மருத்துவத்துக்கு பொருத்திப்பார்க்க இயலுமா என்று பார்க்கவேண்டும்.

சேக்காளி - பொட்டுக்கடலை அல்சருக்கு நல்ல மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Ravi said...

http://www.nisaptham.com/2014/05/blog-post_22.html?m=1

Sundar Kannan said...

Not Sure how much my comment is related to Mani's Article.

But, below given content will tell you an another face of Alopathy treatment in India.

The Drugs and Cosmetics Act 1940 என்று ஒரு சட்டம் உண்டு. இந்திய அரசு இயற்றிய அந்தச் சட்டத்தை மெடிகல் கௌன்ஸில் ஆஃப் இந்தியாவும், மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆண்டுக்கு ஆண்டு அச்சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, சீர் செய்யவும் படுகிறது. அதன்படி, 51 வகையான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம், வராமல் தடுக்கிறோம், குணப்படுத்துகிறோம் என்று சொன்னால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்! அந்த லிஸ்ட்டுக்கு ஷெட்யூல் ஜே (Schedule J) என்று பெயர். அந்த நோய்களின் வரிசை இதோ:



1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி (angina pectoris)

3. அப்பென்டிசைட்டிஸ் (appendicitis) என்னும் குடல் வால் நோய்

4. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு (arteriosclerosis)

5. தலை வழுக்கை

6. கண்பார்வையின்மை

7. ஆஸ்துமா

8. கட்டிகள் முதல் புற்று நோய் வரை

9. கண் புரை (cataract)

10. தலை முடி வளர, நரை அகற்ற

11. கருவில் உள்ள குழந்தையை பால் மாற்றம் செய்வோம் என்று சொல்வது

12. பிறவிக் கோளாறுகள்

13. செவிட்டுத்தன்மை

14. நீரிழிவு நோய் (diabetes)

15. கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகள்

16. வலிப்பு மற்றும் மனநோய்கள்

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் கருப்பு நிறத்தை மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சி

20. புரையோடிய புண் (gangrene)

21. மரபணு நோய்கள்

22. க்ளாக்கோமா எனப்படும் கண் நோய்

23. தைராய்டு (கழுத்து) வீக்கம்

24. ஹெர்னியா (குடலிறக்கம்)

25. அதிக மற்றும் குறைவான ரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, அது தொடர்பானவை

29. குழந்தையின் உயரம் கூட்டுதல்

30. கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலியவை

31. ஆணுறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்துதல்

33. மஞ்சள் காமாலை

34. ரத்தப் புற்றுநோய்

35. வெண்குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்கவாதம்

41. நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்ஸன்ஸ் (Parkinson’s disease)

42. மூல நோய், பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. இளவயதில் முதுமைத் தோற்றம்

45. இளநரை

46. ருமாட்டிக் இருய நோய்

47. விரைவில் ஸ்கலிதம்

48. முதுகுத்தண்டில் ஏற்படும் வலிகள்

49. திக்குவாய்

50. சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள்

51. காலில் ரத்த நாளங்கள் வீக்கம், புடைத்தல்

அப்பாடா, லிஸ்ட் முடிந்துவிட்டது. நாம் எந்தெந்த நோய்களுக்காக அலோபதி டாக்டர்களையும் மருத்துவமனைகளையும் அனுதினமும் அணுகிக் கொண்டிருக்கிறோமோ அந்த நோய்களைத்தான் ஷெட்யூல் ஜெ வரிசைப்படுத்திக் கூறுகிறது! நாம் எவ்வளவு முட்டாளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறதா?!

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஸ்கேன் மையங்களிலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றம் என்று போர்டு வைக்கிறார்கள் அல்லவா? ஆனால், ஷெட்யூல் ஜெ-யை ஏன் வைப்பதில்லை?

‘‘ஆங்கில மருத்துவம் ஒரு பிணம் தின்னும் மருத்துவம்” என்றும் ‘‘ஆடு, மாடு, கழுதைகள், குரங்குகள் போன்ற மிருகங்களும் மனிதர்களும் ஒன்றுதான் என்ற அளவில் வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்தும் ஆங்கில மருத்துவம்தான்” என்றும் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் சொல்வது உண்மையில் குரலாக ஒலிக்கிறதா? சிந்தியுங்கள்.

http://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2016/07/25/18.-%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE---3/article3537264.ece

Unknown said...

bro how is it that no siddha homeopathy ayurvrdic eminent doctors
come forward to treat our c.m
why tamil nadu govt does not take this option...
why VIPS are treated only by ALLOPATHY treatment
any answer