Aug 1, 2016

கள்ளம்

நேற்று சென்னையில் இருந்தேன். அது பெரிய விஷயமில்லை. திரும்பி வரும் போது முந்நூற்று அறுபது ரூபாய் கொடுத்து சொகுசுப் பேருந்தில் அமர்ந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்துகளைப் பொறுத்தவரைக்கும் வெளியில்தான் அப்படி எழுதி வைத்திருப்பார்கள். பெரும்பாலான இருக்கைகளில் ஜன்னலை மூட முடியாது. மூடினால் திறக்க முடியாது. ஒருவேளை சிரமமில்லாமல் மூடிவிட்டால் கால் மணி நேரத்துக்கு ஒரு முறை அதுவாகவே திறந்து கொள்ளும். பெங்களூர் வருவதற்கு மொத்தம் ஏழு மணி நேரம் ஆகும் என்றால் மணிக்கு நான்கு முறை வீதம் இருபத்தெட்டு முறை கண்களை விழித்து ஜன்னலை மூட வேண்டும். மழை வந்துவிட்டால் கேட்கவே வேண்டியதில்லை. ‘தண்ணி ஒழுகுது சார்’ என்று பக்கத்து இருக்கைக்காரர் குறுகி நெளிந்து கடைசியில் நம் மடியில் அமர்ந்து கொள்வார் அல்லது நாம் அவர் மடியில் அமர்ந்து கொள்வோம். நல்லவேளையாக நேற்று மழை இல்லை. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ இருக்கை மட்டும் சரியில்லை. நிமிர்த்தவும் முடியவில்லை. படுக்க வைக்கவும் முடியவில்லை. 

அதிர்ஷ்டம் என ஏன் சொல்கிறேன் என்றால் முந்தின இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளது கையில் அலைபேசி இருந்தது. அதில் வாட்ஸப் திறந்திருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் பொழுது போய்விடும் என்ற நம்பிக்கைதான். 

கருந்தேள் ராஜேஷின் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் ‘உங்களுக்கு படிக்கிறதுல இண்ட்ரஸ்ட்டா?’ என்றார். 

அவருக்கு அநேகமாக ராஜேஷைத் தெரியக் கூடும் என்ற நினைப்பில் ‘ஆமாங்க’ என்றேன். 

‘உங்களுக்கு?’ - பதில் கேள்வி கேட்காவிட்டால் நன்றாக இருக்காது அல்லவா?

‘பொன்னியின் செல்வன் எல்லாம் படிச்சிருக்கேன்’. காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இந்திராகாந்தி ஆட்சியை இழந்துவிட்டார். நரசிம்மராவ் பொருளாதார தாராளமயமாக்கலை அறிவித்திருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு மெல்ல ஞாபகத்திற்கு வந்து போயின. ‘அதற்கு அப்புறம் வேற எதெல்லாம் படிச்சிருக்கீங்க?’ என்றேன். 

‘அவ்வளவுதான் சார்...டைம் இல்ல’

மென்பொருள் துறையில் இருக்கிறாராம். பெங்களூர்வாசி. அதன் பிறகு அந்த ஆளுடன் பேசுவதற்கான ஆர்வம் எதுவுமில்லை. அவரும் முந்தின இருக்கை மொபைல் மீது என்னைவிட அதிகமாக கவனமாக இருந்தார். எனக்கும் அவருக்கும் இருந்த ஆர்வத்தில் பத்து சதவீதம் கூட அந்தப் பெண்ணுக்கு அருகில் அமர்ந்திருந்தவனுக்கு இல்லை. ஆச்சரியமாக இருந்தது. அவன் தானுண்டு தன் மொபைல் உண்டு என ஓர் அலைபேசியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். 

அவள் யாரோ ஒருவனுக்கு காதல் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். நம்ப முடியவில்லை அல்லவா? அதே அதிர்ச்சிதான் எனக்கும்.

அவள் அவ்வளவு விரைவாக தட்டச்சு செய்து அனுப்பிக் கொண்டிருந்தாள். காதலும் முத்தங்களும் காமமுமாக அந்த டிஜிட்டல் எழுத்துக்கள் மின்னின. ஓரளவுக்கு மேல் அதைப் பின் தொடர்வதற்குச் சலிப்பாக இருந்தது. அவள் தனியாகவோ அல்லது வேறொரு பெண்ணுடனோ அமர்ந்து இந்தச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தாள் எனக்கும் கிளர்ச்சியாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒரு ஆடவனை அருகில் வைத்துக் கொண்டு அவனுடன் அவ்வப்பொழுது பேசிக் கொண்டு அதே சமயத்தில் அவனுக்குத் தெரியாமல் இன்னொருவனுடன் கசமுசாவாக பேசுவதற்கான துணிச்சலும் குருட்டு தைரியமும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கிளுகிளுப்பாக இல்லை. 

கையடக்கக் கருவிகள் கட்டடற்ற சுதந்திரத்தை நமக்கு வழங்குகின்றன. நமக்கான சுதந்திரத்தைப் பெறுவதைவிடவும் அதை எப்படிக் கையாள்வது என்பதில்தான் அதிகபட்ச கவனம் தேவையாக இருக்கிறது. தூங்கிவிட்டேன். வேலூருக்கு சற்று முன்பாக முந்தின இருக்கையிலிருந்து சலனம் கிளம்பியது. தூக்கம் கலைய வெகுநேரம் பிடிக்கவில்லை. அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை ஆரம்பமாகியிருந்தது. எனது பக்கத்து இருக்கை பொன்னியின் செல்வனும் உறங்கியிருந்தார். ஆரம்பத்தில் குசுகுசுவென சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களின் ரத்தக் கொதிப்பு எகிறிக் கொண்டே போக அவன் அவளை முதலில் ஓங்கி அறைந்தான். அவள் அழத் தொடங்கியதும் பேருந்தில் இருந்தவர்கள் விழித்தார்கள். அதே அழுகையுடன் அவள் ‘நீ மட்டும் யோக்கியமா?’ என்று கத்தினாள். அப்பொழுதும் வண்டி ஓடிக் கொண்டேயிருந்தது. யாரும் என்ன பிரச்சினை என்று கேட்கவில்லை. எனக்கு என்ன பிரச்சினையென்று தெரியுமென்றாலும் அந்த இடத்தில் வாயைத் திறப்பது இங்கிதம் இல்லை. 

பொன்னியின் செல்வன் என்னிடம் ‘என்னாச்சு சார்?’ என்றார். எனக்கு காதில் புகை வந்தது. அப்பாவியாம்.

‘தெரியல’ என்றேன். அதற்குள் நடத்துநர் வந்து சேர்ந்தார். சமாதானப்படுத்த முயன்றார். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர எதுவும் பேசவில்லை. பெங்களூர் மத்தியதரத் தமிழர்களின் அக்மார்க் மனநிலை அது. அவர்களின் சண்டை உச்சத்தை அடையவும் விசிலடித்து ‘வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்க’ என்று ஓட்டுநருக்கு கட்டளையிட்டார். அதன் பிறகுதான் அந்தப் பெண்ணும் ஆணும் மெல்ல அமைதிக்கு வந்தார்கள். இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். மீண்டும் விளக்குகள் அணைக்கப்பட்டன. மெல்ல பேசத் தொடங்கினார்கள். இப்பொழுது ஏனோ அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலை இல்லை. ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டேன். காற்று சப்தத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. 

அவன் எழுந்து சென்று வண்டியின் முன்புறமாக அமர்ந்திருந்த நடத்துநரிடம் பேசிவிட்டு வந்து அமர்ந்தான். அதன் பிறகும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். வேலூர் பேருந்து நிலையம் வந்தது. இருவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கினார்கள். என்ன பேசினார்கள்? ஏன் இறங்கிக் கொண்டார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பாக கூட இத்தகைய சம்பவங்களை எதிர்பார்த்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. தொழில்நுட்பம் உறவுகளுக்கிடையில் உருவாக்குகிற சிக்கல்களின் பரிமாணங்கள் விதவிதமான நிறங்களைக் காட்டி பல்லிளிக்கின்றன.

பொன்னியின் செல்வன் ‘ஏன் சார் இங்கேயே இறங்கிட்டாங்க?’ என்றார். எதுவுமே சொல்லாமல் ஜன்னலை சாத்திவிட்டு கண்களை மூடிக் கொண்டேன். அவர் வேறு ஏதாவதொரு கேள்வியைக் கேட்டிருந்தால் நானும் வேலூரிலேயே இறங்கிவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஏனோ கேட்கவில்லை.

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

பொன்னியின் செல்வன் ‘ஏன் சார் இங்கேயே இறங்கிட்டாங்க?’ என்றார். எதுவுமே சொல்லாமல் ஜன்னலை சாத்திவிட்டு கண்களை மூடிக் கொண்டேன். அவர் வேறு ஏதாவதொரு கேள்வியைக் கேட்டிருந்தால் நானும் வேலூரிலேயே இறங்கிவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஏனோ கேட்கவில்லை. Nice climax.

Paramasivam said...

இது போன்ற அனுபவம் எனக்கும் சென்ற மாதம் ஏற்பட்டது சார். எனது பயணம் மாறுபட்ட ஒன்று. சென்னையில் ஒரு வைபவத்திற்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு KPN மூலம். KPNல் ஓரொரு சமயம் தி.நகர் பனகல் பார்க் வரை KPN அழைத்து செல்லும். ஆகவே அதையே பயன்படுத்துகிறோம்.

இன்றைய இளைஞர்கள் போக்கு பற்றி உங்களைப் போலவே மனம் வெறுத்து தான் போகிறது. என்ன செய்வது? நாங்கள் படிக்கும் சமயம் "நீதி போதனை" என்றே தினமும் ஒரு மணி நேர வகுப்பு, கணித வகுப்பிற்கு முன்பு. சமயங்களில் ஊரில் உள்ள பெரியவர்கள் (அனைத்து மத தலைவர்களும் கூட)வருவார்கள்.

இன்று எல்லாமே வேக வேகம். தேர்வில் மதிப்பெண், பின் வேலை, இரவு பகல் உழைப்பு, சரியாக சாப்பிட நேரமில்லை, உடனடி திருமணம் தவிர்த்து நண்பர் நண்பியர் குழு பொழுது போக்கு என மேற்கத்திய (அப்படியா?) பழக்கங்கள் அதிகம் ஆகின்றன.

Aravind said...

i still doubt whether that fight is due to that man discovering her whatsapp forgery or not?
if you were awake through out that journey then, you could have figured how it started and what and how he found out.

Unknown said...

இவைகளுக்கெல்லாம் காரணம் திராவிட கருத்தியலே ஒழிய
தொழில்நுட்பம் அல்ல. தமிழ் சமூகத்தை பொருத்தவரை
இத்தகைய கலாசார கேடுகள் அனைத்திற்கும் மூலம்
திராவிட கருத்தியலே. வீண் விவாதங்களை கைவிட்டு
சிந்தித்தால் இது புரியும். மற்ற சமூகங்களை பற்றி
எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் சமூகத்தை பொருத்தவரை
இத்தகைய கலாசார கேடுகள் அனைத்திற்கும் மூலம்
திராவிட கருத்தியலே.
இதை விட அதிக தொழில்நுட்ப நுகர்சி கொண்ட
சமூகங்கள் கூட தங்கள் வேரை விடாமல் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் சமூகத்தில் இருக்கும் மூடதனஙகளை
ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழ் கலாசாரத்தின் முகத்தையே
சிதைதது விட்டது திராவிட கருத்தியல். புற்றுநோயை அழிக்கிறேன் என சொல்லி
நல்ல செல்களைெல்லாம் அழித்து விட்டது. புற்றுநோயும்
குணமாகவில்லை எனபதுதான் கொடுமை.

Vinoth Subramanian said...

இந்த பதிவ அந்த பொன்னியின் செல்வன் படிக்க கூடாதுனு அத்தன சாமியையும் வேண்டிக்கங்க. இல்லாட்டி, “அப்பொ அத்தனதடவ கேட்டும்கூட அந்த பக்கத்துல இருந்தவரு தெரியலனு சொல்லிட்டாரே” (உங்களதான்) திட்டிக்கிட்டே இருப்பாரு.

செ. அன்புச்செல்வன் said...

ஹா ஹா.. கதை எப்படியிருந்தாலும் பொன்னியின்செல்வன்தான் நினைவில் நிற்கிறார்!! கிராமங்களில் இருந்து மென்பொருள் நிறுவனங்களுக்குச் சென்று வேலைபார்க்கின்றவர்களில் கணிசமானவர்கள் கதைகளும், இதுபோன்ற சண்டைகளும் இப்போது உள்ளூரில் மலிந்து கிடக்கின்றன. அருகிருந்து பார்த்ததைப்போல உணர்கிறேன் சார் !! பாராட்டுகள் ங்க !!

சேக்காளி said...

ரொம்ப லேட்டு
//தமிழ் சமூகத்தில் இருக்கும் மூடதனஙகளை
ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழ் கலாசாரத்தின் முகத்தையே
சிதைதது விட்டது திராவிட கருத்தியல்//
இன்னும் மார்பு மேல சீலை இல்லாமலேயே நடமாடிக் கொண்டிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ?
வட போச்சே!!!!!