Aug 14, 2016

ஈரோடு புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி தூள் கிளப்புகிற புத்தகக் கண்காட்சி என்றால் ஈரோடுதான். ஒற்றை மனிதர்தான் கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் குணசேகரன். ஒரு முறை அவரை சம்பத் நகர் அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறேன். மிக எளிமையாக பேசினார். அப்பொழுதே நன்கொடைகள் அவருக்கு போதுமானதாக இல்லை என்றுதான் சொன்னார்கள். நிலைமை இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. ஆனாலும் மனிதர் சலிப்பதேயில்லை. 


மக்கள் சிந்தனைப் பேரவை என்பது பபாஸி போன்ற குழுமம் இல்லை. தனிமனிதரால் நடத்தப்படுகிற அமைப்பு. அத்தகையதொரு அமைப்பு பிரமாண்டமான புத்தகக் கண்காட்சியை ஒவ்வொரு வருடமும் மெருகூட்டிக் கொண்டே போவது சிறப்புதான். அதற்காகவே ஸ்டாலின் குணசேகரனுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். ஈரோட்டில் வாசிக்கிறவர்கள் இல்லை; புத்தகங்கள் விற்பனை ஆகாது என்று 2005 ஆம் ஆண்டு வாக்கில் கேட்ட வாசகங்களை எல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஈரோடு புத்தகக் கண்காட்சி ஓர் உதாரணம்.

வழக்கம் போலவே இந்த வருடம் நிறையக் கடைகள். சென்றிருந்த போது கூட்டம் திமிலோகப்பட்டது. பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். மாணவர்கள் இருநூற்றைம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் ‘புத்தக ஆர்வலர்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். சான்றிதழ் வாங்குவதற்கென்றே தனிக்கூட்டம் நின்றது. சில கடைக்காரர்களிடம் பேசிய போது ‘பசங்க வர்றது நல்ல விஷயம்தான்...நிறைய புத்தகத்தை லவட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள்’ என்றார்கள். அந்த வயதுக்குரிய சேஷ்டை அது. கவனமாக இருந்து கொள்ள வேண்டியதுதான். அதற்காகத் தடையெதுவும் கொண்டு வந்துவிடக் கூடாது. பள்ளி, கல்லூரிக் காலம்தான் புத்தக அறிமுகத்துக்கு சரியான பருவம். அறிமுகம் ஆகட்டும்.

ஈரோடு மாவட்ட எழுத்தாளர்கள் என்று ஒரு அரங்கம் வைத்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நபரின் புத்தகம் இருக்குமா என்று துழாவிப் பார்த்தேன். குப்பை படிந்து கிடந்த புத்தக வரிசையில் கூடக் காணவில்லை. கடன்காரனைக் கண்டால் தலையில் துண்டைப் போட்டு நழுவுவதைப் போல கர்ச்சீப்பை போட்டு நழுவிவிட்டேன். ‘உனக்கு எதுக்குடா இந்த வெட்டி எதிர்பார்ப்பு?’ என்று யாரோ பொடனியில் அடித்துக் கேட்டது மாதிரி தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை.

காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, சாகித்ய அகாடமி மாதிரி விருப்பமான புத்தகக் கடைகள் இருந்தன. மூன்று மணி நேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். பொதுவாக புத்தகக் கண்காட்சிகள் எழுதுகிறவனுக்கான ஆய்வுக்களம். புத்தகங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்தப் புத்தகத்தை வாசகர்கள் விரும்புகிறார்கள் ஏன் அவற்றுக்கான முக்கியத்துவம் இருக்கின்றன என்பதையெல்லாம் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில்தான் புரிந்து கொள்ள முடியும். எப்பொழுதுமே உணவு, உடல்நிலை பற்றிய புத்தகங்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும். அது வாஸ்தவம்தான். ஆனால் பேலியோ டயட் புத்தகத்துக்கு இருக்கும் வரவேற்பு உண்மையிலேயே திகிலடையச் செய்கிறது. ஏகப்பட்ட கடைகளில் அந்தப் புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பேலியோ டயட்தான் டாப் செல்லர். அநேகமாக எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் பேசுகிற பேச்சைப் பார்த்தால் நியாண்டர் செல்வனை மிகப்பெரிய ஐகானாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது. சாமியார்களின் படங்களுக்கு பதிலாக அவர் படம் இடம் பெறக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று மட்டும் உணர முடிகிறது. ஆகட்டும். ஆகட்டும். 

பிற ஊர் புத்தகக் கண்காட்சிகளைவிடவும் ஈரோட்டு புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் - பேச்சாளர்கள். பேச்சாளர்களின் பேச்சைக் கேட்பதற்கென்றே தனிக் கூட்டம் கூடுகிறது. மாலை ஆறு மணிக்கு பேசத் தொடங்கிவிடுகிறார்கள். பெரும்பாலும் பிரபல முகங்களைத்தான் அழைத்து வருகிறார்கள். காசு கொடுத்து பேச்சாளர்களை அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை- ஏற்கனவே எழுதியிருக்கிறேன் - வணிகரீதியான நிகழ்ச்சிகளுக்கு காசு வாங்கிக் கொண்டு வந்தால் பரவாயில்லை. ஆனால், புத்தகக் கண்காட்சி மாதிரியான நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு லட்சக்கணக்கில் காசு வாங்குவது அசிங்கம். ஆனால் அப்படித்தான் இருக்கிறார்கள். தொலையட்டும். பிச்சைக்கார சிந்தனையாளர்கள்.

புத்தகக் கண்காட்சியில் இவ்வளவு அரங்கங்கள், இத்தனை பேச்சாளர்கள், பதாகைகள், மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், துண்டுச்சீட்டு விநியோகம், அரங்க அமைப்பு என ஏகப்பட்ட ஏற்பாடுகள்- எப்படிச் சமாளிக்கிறார்கள்? ஸ்டாலின் குணசேகரனுடன் வேலை செய்வதற்கென்றே ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட நானூறு இளைஞர்கள் சேர்ந்துவிடுகிறார்கள். சம்பளம் எதுவுமில்லை. தன்னார்வலர்கள். கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்கிறவர்கள் என கலந்து கட்டி அடிக்கிறார்கள். இத்தனை பேர்களைத் திரட்டி, ஒருங்கிணைத்து, அட்டகாசமாக புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். திறமை என்பதைவிடவும் ஆளுமை. அத்தகைய ஆளுமைதான் ஸ்டாலின் குணசேகரன். 

உள்ளபடியே, இவர் போன்ற மனிதர்கள் ஏன் அரசியல் அதிகாரங்களைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஈரோட்டு மக்கள் இவரை மேயராக்கிவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். ஆனால் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். கை தட்டுவார்கள். கடைசியில் ஓட்டுப் போடுகிற இடத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டுத்தான் குத்துவார்கள். பியூட்டி பார்லர் நடத்தி அரசியலில் கால் பதித்தவர், டாஸ்மாக்கில் சைட் டிஷ் கடை நடத்துகிறவர், வட்டிக்கு விடுகிறவர்கள், கட்டப்பஞ்சாயத்துக்காரர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமையும் செல்ல வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டில் லோலாயம் பேசுவார்கள். அடுத்த வருடம் பார்க்கலாம் என்று கிளம்பி வந்துவிட்டேன். 

சொன்னால் நம்ப மாட்டீர்கள்-


வீட்டுக்கு வருவதற்காக கோபி பேருந்து ஏறியவுடன் வாட்ஸப்பில் ஒரு நிழற்படம் வந்திருந்தது. ‘உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை’ என்று ஒரு மகராசன் அனுப்பி வைத்திருந்தார். என்னையெல்லாம் அடையாளம் கண்டுகொள்ள ஆள் இருக்கிறது என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். தெரிந்திருந்தால் ஈரோட்டிலிருந்து தலைகீழாகவே நடந்து வந்திருப்பேன். வந்து பேசியிருந்தால் ஆகாதா? ம்ஹூம். இத்தனைக்கும் தன்னந்தனியாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். அவரது செய்தியை இன்னொரு முறை படியுங்கள். ஒருவேளை கலாய்க்கிறாரோ? இருந்தாலும் இருக்கும். என் டிசைன் அப்படி.

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

ஒரு குறிப்பிட்ட நபரின் புத்தகம் இருக்குமா என்று துழாவிப் பார்த்தேன். குப்பை படிந்து கிடந்த புத்தக வரிசையில் கூடக் காணவில்லை. ....mm?...??..... Who is that blacksheep?..

TK said...

அந்த குறிப்பிட்ட நபரின் புத்தகங்கள் எல்லாம் விற்று தீர்ந்து இருக்கும்... அதன் ஆசிரியரே அதை தேடுவானேன்? நீங்க தனி ஆள் இல்ல, உங்களுக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு பாஸ்; சந்தேகம் இருந்தால், மேல உள்ள போட்டோவை பார்க்கவும்.

RAGHU said...

ada perumalae!!!