Jul 1, 2016

வருமான வரி மற்றும் ஜூன்’2016

நிசப்தம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு இந்த ஜூலை மாதத்தில் இரண்டு வருடங்கள் முடிகிறது. முதல் வருடத்திற்கான வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. 2014-15 ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரம் இது. கடைசியில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டியதாகிவிட்டது.

வருமான வரித்துறை விதியின்படி அறக்கட்டளைக்கு ஒவ்வோர் ஆண்டும் வருகிற தொகையில் குறிப்பிட்ட தொகையை செலவு செய்திருக்க வேண்டும். செலவு என்பது உதவித் தொகை மட்டும்தான் என்றில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அலுவலக பராமரிப்புச் செலவு, ஊழியர் சம்பளம், போக்குவரத்துச் செலவு என எதை வேண்டுமானாலும் கணக்குக் காட்டிக் கொள்ளலாம். நமக்கு அந்தச் செலவுகள் எதுவுமில்லை என்பதால் உதவித் தொகையாக வழங்குவது மட்டும்தான் ஒரே செலவு. எழுபது அல்லது எண்பது சதவீதத் தொகையைச் செலவு செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் கிடைக்கிற ஆட்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. விசாரித்துத்தான் செய்ய முடியும். 


ஆனால் இப்படி செலவு செய்யப்படாத தொகைக்கு வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க இரண்டு உபாயங்கள் இருக்கின்றன. 

முதலாவது வழி- மிச்சமிருக்கிற தொகையை நிரந்தர வைப்பு நிதியாகக் காட்டி வருமான வரித்துறையில் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். அவர்களது அனுமதியை வாங்கிவிட்டால் அந்தத் தொகைக்கு வரி கட்ட வேண்டியதில்லை. 2015-16க்கான தொகைக்கு இப்படி அனுமதி வாங்கித் தப்பித்துவிட முடியும். ஆனால் 2014-15க்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. முன்பிருந்த ஆடிட்டர்கள் 2015-16 ஆண்டு வருமான வரித்தாக்கலோடு சேர்ந்து 2014-15க்கும் தாக்கல் செய்தால் போதும் என்று சொல்லியிருந்தார்கள். எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் அனுபவமில்லை. வரி வந்து சேர்ந்துவிட்டது.

இன்னொரு உபாயம் - நன்கொடையாளர்களை அணுகி ‘இந்தத் தொகையை கார்ப்பஸ் நிதியாக அளிக்கிறேன்’ என்று முன் தேதியிட்ட கடிதமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். Corpus நிதி என்று காட்டினால் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. நன்கொடை வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது அவர்களை அணுகி முன்தேதியிட்ட கடிதம் வாங்குவது சரியானதாகப் படவில்லை. அதனால் துல்லியமாகவே கணக்குப் போட்டுத் தருமாறு ஆடிட்டரிடம் கேட்டிருந்தேன். இருபத்தைந்தாயிரம் வரியாகச் செல்கிறது. 

பண விவகாரத்தில் வெளிப்படையாக இருப்பதைப் போலவே சரியாகவும் இருந்துவிட வேண்டும். ஓட்டைகளில் புகுந்து வெளிவருவதற்கான எத்தனிப்புகள் இருக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகிவிடும். நிதியைப் பொறுத்த வரைக்கும் ஏதாவதொரு ஓட்டையைக் கண்டுபிடிப்பதுதான் தவறுகளின் தொடக்கம். எந்தவொரு சலனத்துக்கும் இடம் கொடுக்க வேண்டியதில்லை என்பதால்தான் முன் தேதியிட்ட கடிதம் என்பதையெல்லாம் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.

வரியாகச் செல்லும் இருபத்தைந்தாயிரத்தை ஏதாவதொரு மாணவனின் கல்வித் தொகையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது மட்டும்தான் வருத்தம். ஆனால் பைசா மிச்சமில்லாமல் கணக்கு வழக்குத் துல்லியமாக இருக்கிறது என்ற வகையில் முழுத் திருப்தி. ஒவ்வொரு மாதத்திற்கான வங்கிக் கணக்கு விவரம், பயனாளிகள் குறித்தான தகவல்கள், வருமான வரித்தாக்கல் விவரம் என அத்தனையும் இங்கே இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு வரி கட்டாமல் இருக்க முறையான வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

ஜூன் மாத வரவு செலவுக் கணக்கு இது- வரிசை எண் 09- சபரிநாதன் என்கிற குழந்தையின் சிகிச்சைக்காக திருநெல்வேலி மையோபதி மருத்துவமனைக்கு முப்பதாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். சபரியின் தந்தை விமல் அழைத்திருந்தார். சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும் சொன்னார்.

வரிசை எண் 15- பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை என்கிற கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக சுடர் என்கிற அமைப்பினர் ஒரு பள்ளிக் கூடம் நடத்துகிறார்கள். அந்தப் பள்ளிக்கான நூலகங்கள் வாங்குவதற்காக பாரதி புத்தகாலயத்தின் பெயரில் காசோலை வழங்கப்பட்டது. சுடர் அமைப்பினர் பாரதி புத்தாகலயத்திற்குச் சென்று பத்தாயிரம் ரூபாய்க்குத் தேவையான புத்தகங்களை நேரடியாக வாங்கிக் கொண்டார்கள். 

வரிசை எண் 28- ராஜேந்திரன் என்கிற மாணவர் எம்.எஸ்.ஸி வேதியியல் படிப்பில் சேர்வதற்காக வழங்கப்பட்ட தொகை.

வரிசை எண் 29- Legal Tax Advisors என்கிற ஆடிட்டர் நிறுவனம்தான் அறக்கட்டளையின் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்கிறார்கள். வரிப்பணம் இருபத்து ஐந்தாயிரத்துக்கான காசோலை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்த வேலைகளை அவர்கள் இலவசமாகச் செய்துக் கொடுக்கிறார்கள். வருமான வரித்துறையின் இணை ஆணையராக இருக்கும் திரு.முரளிதான் அறக்கட்டளை குறித்து ஆடிட்டரிடம் பேசி தொகை பெற்றுக் கொள்ளாமல் செய்து தரச் சொல்லியிருக்கிறார். எங்கேயிருந்து எந்தவிதத்தில் உதவி வரும் என்றே தெரியாது. ஆனால் வந்து கொண்டேயிருக்கும் என்பதற்கு முரளி, ஆடிட்டர் தீபக் போன்றவர்கள் உதாரணங்கள்.

ஜூன் மாதத்தின் பிற அனைத்து உதவித் தொகைகளும் நிகழ்ச்சியொன்றில் வழங்கப்பட்டது. யாருக்கான உதவிகள் இவை, எவ்வளவு தொகை என்பது குறித்தான விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன.

ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருப்பின் கேட்கலாம். அறக்கட்டளை குறித்து யாருமே எதுவுமே கேட்பதில்லை என்பதற்காகச் சந்தோஷப்படுவதா அல்லது கண்டுகொள்ளாமல் விடுகிறார்களே என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. 

6 எதிர் சப்தங்கள்:

சூர்யா said...

ஏதோ என்னால் முடிந்தது...

http://www.jeyamohan.in/88624#.V3YXePmLSVM

www.rasanai.blogspot.com said...

Anbin Mani

பண விவகாரத்தில் வெளிப்படையாக இருப்பதைப் போலவே சரியாகவும் இருந்துவிட வேண்டும். ஓட்டைகளில் புகுந்து வெளிவருவதற்கான எத்தனிப்புகள் இருக்கக் கூடாது. பிறகு அதுவே பழக்கமாகிவிடும். நிதியைப் பொறுத்த வரைக்கும் ஏதாவதொரு ஓட்டையைக் கண்டுபிடிப்பதுதான் தவறுகளின் தொடக்கம். எந்தவொரு சலனத்துக்கும் இடம் கொடுக்க வேண்டியதில்லை # True. This is what Income Tax expects. # transparency. Also, the payment of Tax Rs. 25000/- shall be considered for nations growth ( may be infrastructure, education, health etc... ) we have to take that in a positive manner for our personal satisfaction. from this year onwards, investment in FD is a good option.

வரிசை எண் 15- பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை என்கிற கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக சுடர் என்கிற அமைப்பினர் ஒரு பள்ளிக் கூடம் நடத்துகிறார்கள். mani, i would like to volunteer ( personality Development ) for these kind of hilly gullible people, though it is far away from chennai, let me make a try. pl inbox me the contact details of " Sudar" in sundarind75@gmail.com for coordination.

accounts are transparent and clear as usual. keep it up.
anbudan
Sundar G Chennai

viswa said...

கேள்வி கேட்பதற்கு ஒரு அருகதை வேண்டாமா?

R.Subramanian@R.S.Mani said...

It seems due to the delayed submission of the IT Returns, not only the Income tax is payable, but it seems interest is also levied on the payable Income Tx.; Otherwise, I feel you might have saved another about Rs.5,000/- But I am not very clear about this; you can refer your Auditors whetehr what I stated is correct or not?

Subramanian said...

Mr.Manikandan,

Not sure if I should think of advising you. Try to disburse all the amounts and keep what is in the account to only around 1 lakh. When people see such a large amount in the account remaining unused it gets all unwanted attraction.Please dont feel offended by my comment.

NAGARATHAN said...

என்னாச்சு, ஒரு வாரமா சத்தத்தையே காணோம்