Jun 29, 2016

கொங்குச் சொலவடைகள்

வாட்ஸப்பில் நம்ம ஊர்ச் சொலவடைகள் என்ற குழு ஒன்றிருக்கிறது. முரளி, ஈரோடு கதிர், சத்திய மூர்த்தி, செங்கதிர் உள்ளிட்ட பத்துப் பேருக்குள்தான் உறுப்பினர்கள். அத்தனை பேரும் பெருந்தலைகள். தங்களுக்குத் தெரிந்த கொங்குச் சொலவடைகளை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முன்பொரு சமயத்தில் கொங்குச் சொலவடைகளைத் நிசப்தம் தளத்தில் தொகுத்துக் கொண்டிருந்தேன். இந்தக் குழுமத்தின் சொலவடைகளையும் நிசப்தத்தில் தொகுத்து வைக்கிறேன் என்று முரளியிடம் கேட்டிருந்தேன்.

‘சொலவடைகள் எல்லாம் எசகு பிசகாக இருக்குது..உங்களுக்கு பிரச்சினையில்லைன்னா செய்யுங்க’ என்றார்.

சொலவடை என்றாலே அப்படித்தான் இருக்கும். நாம்தான் நாகரிகம் என்ற பெயரில் நிறைய வட்டாரச் சொற்களை இழந்து விட்டோம். சொற்றொடர்களை இழந்திருக்கிறோம். சொலவடைகளை இழந்து கொண்டிருக்கிறோம். எங்கள் தாத்தா ‘செருப்பைத் தொட்டுக்க’ என்றுதான் சொல்வார். அது தவறு என்று அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுத்தார்கள். ‘செருப்பு போட்டுக்கிறேன்’ என்று மாறிவிட்டேன். ‘ஒரட்டாங்கை’ என்றுதான் முந்தைய தலைமுறையில் சொன்னார்கள். இந்தத் தலைமுறையினர் ‘இடது கை’ என்று சொல்கிறார்கள். ‘சோறு உண்ணுட்டு போ’ என்பது ‘சாப்பிட்டு போடா’ என்று மாறியிருக்கிறது. வேலூரிலும் அப்படித்தான் சொல்கிறார்கள். மதுரையிலும் அப்படித்தான் சொல்கிறார்கள். கோவையிலும் அப்படித்தான். வட்டாரத்திற்கான பண்பாடு, மொழி என்பதையெல்லாம் சிறுகச் சிறுக இழந்து மொத்தமாக உலகமயமாகிக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறையில் முற்றாக இழந்துவிடக் கூடும். 

வெட்கம் பாராமல் சேகரித்து வைப்போம். முதல் தொகுப்புதான் இது. வாட்ஸப் குழுமத்திலேயே இன்னமும் நிறையச் சொலவடைகள் இருக்கின்றன. அவ்வப்போது தொகுத்து எழுதுகிறேன். குழுவினருக்கு நன்றி.

1. ஆட மாட்டாத தேவடியாளுக்கு வீதி கோணையாம்
அவளுக்கு ஆடத் தெரியாது. ஆனால் நிலம் கோணலாக இருக்கிறது என்றாளாம்

2. அவ அத்தனையும் தின்ன ஆராயி...விதைக் கம்பையும் தின்ன வீராயி
விதைக்கு வைத்திருந்த கம்பையும் தின்றுவிட்ட வீராயி- அவ்வளவு விவரமான பெண்மணி.
3. குருவி குடிச்சா குளம் வத்தி தீரப் போகுது?

4. எச்சைய முழுங்கியா தாகம் தீரப் போகுது?

5. அப்பங்கிட்ட அவுசாரி போன பாவம் அழுது அழுது தீருமா?

6. பொழப்பத்த தட்டான் பொண்டாட்டிய தராசுல வெச்சு நிறுத்தானாம்
பொழப்பத்த- பிழைப்பு இல்லாத

7. கல்யாண வூட்டுலயே கட்டிப்புடிச்சு அழுவானாம்...எழவூட்ல சொல்லவா வேணும்?
எழவூடு- மரணம் சம்பவித்த வீடு

8. பந்தகாலுக்கெல்லாம் சாமி வந்தா எந்த காலைத்தான் புடிக்கிறது
பந்தக்கால் - பந்தல் அமைப்பதற்காக நட்டப்படும் தாங்கு கோல்கள்.

9. அப்பக் காணோம் இப்பக் காணோம் அப்பஞ் செத்த எழவுல காணோம்...இன்னைக்கி எழையறானுக
எப்பவுமே வராதவர்கள் இன்று வந்து குழாவுகிறார்கள்

10. சாணிச்சட்டியும் சருவச் சட்டியும் ஒண்ணாயிருமா?

11. சயனஞ் சொல்லுற பல்லி சாணிச்சட்டியில விழுந்த கணக்கா..
சயனம் - சகுனம்

12. ஆசை இருக்குதாம் தாசில் பண்ண...அம்சம் இருக்குதாம் கழுதை மேய்க்க

13. வீம்புக்கு சூரிக்கத்தியை முழுங்குனா பொச்சக் கிழிச்சுட்டுத்தான் வெளிய வரும்
சூரிக்கத்தி- கூரான கத்தி

14. கொழுத்துப் போயி கொசத்திகிட்ட போனா இழுத்து வெச்சு சூளையிலதான் வெப்பா

15. கோவணத்துல ரெண்டு காசு இருந்தா கோழி கூப்புட பாட்டு வரும்

16. மூக்கு மசிரைப் புடுங்கி வீசிட்டா பாரம் கொறையுமா?

17. குத்தாலத்துல குளிக்கப் போறதுக்கு கும்பகோணத்துலேயே துணிய அவுக்குறானாம்

18. சொப்பனத்துல கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?

19. தீ தீயா திங்கறவன் கரி கரியாத்தான் பேளுவான்

20. பாம்பு திங்குற ஊர்ல சிக்குனா நடுத்துண்டு நமக்குன்னுதான் திங்கணும்

21. ஆனை மேல ஏறி பாறையை உழுவன மாதிரி...நாய் மேல ஏறி பீயை உழுவுன மாதிரி

22. ராவுத்தரே புள்ளு திங்கறானாம்...குதிரைக்கு கோதுமை ரொட்டி கேக்குதா?

23. அவசரக்கார மாமியா கோழிச்சாத்துல சூத்து கழுவுன மாதிரி

24. கேழ்வரகுல நெய்வடியுதுன்னா கேட்கிறவனுக்கு புத்தி எங்க போச்சு?

25. கட்டுச் சோத்து மூட்டையில பெருச்சாளியை வெச்சு கட்டுன மாதிரி..
கட்டுச் சோத்து மூட்டை- புளிசாதம் மாதிரி விரைவில் கெட்டுப் போகாத உணவுப்பண்டங்களைக் கட்டி எடுத்துக் கொண்டு பயணம் செல்வார்கள். 

26. இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை புடிக்கிறானாமா

27. ஊருக்கு போறவன் வேலை சொல்லிட்டு போனா ஊரே சேர்ந்து செஞ்சாலும் அவன் வர்றதுக்குள்ள வேலை முடியாது

28. பந்திலயே இடமில்லையாமா..ஆனா இலை ஓட்டைன்னு ஒப்பாரி வெச்சானாமா...

கொங்குச் சொலவடைகள் முந்தைய பதிவு: இணைப்பு

13 எதிர் சப்தங்கள்:

Praba said...

நடக்க முடியாதவன் சித்தப்பன் வீட்ல பொண்ணு கட்டின மாதிரி

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா

Ram said...

All adults only சொலவடைகள் ஒரே கிளுகிளுப்பு.

19ம் சொலவடை சொல்லும் அர்த்தம் என்ன? அர்த்தம் புரியாவிட்டாலும் அது தான் வின்னர்! :-) closely followed by 16 and 17.

அன்புடன் அருண் said...

கொளத்துட்ட கோவிச்சுட்டு குண்டி கழுவாம போனா யாருக்கு நட்டம்?

ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம்! (aunty அல்ல)

dhana said...

நக்கறது நாய்ப்பீயாம; நாக்கு வழிக்கரது தங்கத் தகுடாம.

Unknown said...

* நாய் பொச்சில தேன் வந்தா நமக்கு என்ன ஆகப்போகுது

* குதிரை வயிறு காய்ஞ்சா தானா வைக்கபுல்ல திங்கும்

* பழைய முறத்துக்கு சாணி போடணும் , கிழடுக்கு சட்டி நிறைய சோறு போடணும்

* எலி ஏன் அம்மணமா போகுது ?

* வந்தா செலவுல வை, வரலைனா வரவுல வை ( உறவினர்கள் வீட்டு விஷேஷத்திற்கு மொய் செய்வது பற்றி )

* மூக்கு குத்தியிருந்தால் அவன் பெயர் குப்பன்,

* நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரம் இல்ல

Unknown said...

பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய சிரைச்ச மாதிரி.

அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம்.

Ponchandar said...

”சருவ சட்டி” - எங்கூருல இன்னும் பயன்பாட்டில் இருக்கு.

குண்டி காய்ஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்.

நாய்க்கு பீங்காட காமிச்ச மாதிரி

பன்னியோட சேர்ந்த நாயும் பீ திங்கும்


dhana said...

* பையன பெத்தவ பாவி ; புள்ளய பெத்தவ புண்ணியவதி .
* அன்னப்பொன்னக்கா தண்ணிக்கு போயி அன்னையித்த பொழுது அங்கயே போச்சாம் .
* வேலியில மேயிரத எடுத்து வேட்டிகுள்ள விட்டுட்டு , அப்புறம் குத்துது , கொடையுதுங்கறது .
* நாயினஞ்சாவுகாசம் சீலய கிழிக்கும்.
* பேண்டவன விட்டுட்டு பீய வெட்டுன கதயா.
* பட்டா தான் தெரியும் பள்ளனுக்கு ; சுட்டா தான் தெரியும் பறையனுக்கு .

சேக்காளி said...

பெண்: கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற ஏ(ம்)மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
ஆண் : கோவணமுமில்ல கையில் காசுமில்ல பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலை போல உன்ன கண்டதால் ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள.

Soundar said...

வித்தார வள்ளி முள்ளு பொருக்க போனா, கத்தால முள்ளு கொத்தோட ஏறுச்சாம்

Jaypon , Canada said...

This post stinks a lot 😊

அன்புடன் அருண் said...

சுண்டக்கா காப்பணம் சொம கூலி முக்கா பணம்.

ஒரு சொல்லு வெல்லும். ஒரு சொல்லு கொல்லும்

Saravana Kumar N said...

பேண்ட பக்கம் பொச்ச வச்சிட்டு வர பய...