Jun 17, 2016

மிரட்டல்

ஓர் அழைப்பு வந்தது. கட்டைக் குரல். அழுத்தமாக வணக்கம் சொல்லி ஆரம்பித்தார்.  தன்னை அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ‘தம்பி...நாலஞ்சு பேர் விவரங்களை அனுப்பி வைக்கிறேன். ஃபீஸ் கட்ட முடியுமா?’ என்றார். அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாகச் செய்ய முடியும் என்றேன். அரசு கல்லூரிதானே என்று கேட்ட போது அவருடைய குரல் சற்றே மாறியது. தெரியாது என்றும் விசாரித்துச் சொல்வதாகவும் சொன்னார். 

‘அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். குறைந்தபட்சம் படித்ததாவது அரசுப் பள்ளியாக இருக்கட்டும். இல்லையென்றால் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்றேன். எல்லோரிடமும் சொல்வதுதான். 

‘அப்படின்னா...செய்ய முடியாதா?’ என்றார். 

‘இப்பவே உறுதி கொடுக்க முடியாது...நிறைய இருக்கு...கிடைக்கிற தகவல்களைக் கொண்டு பயனாளிகளைப் பத்தி விசாரிப்போம். வறுமையான குடும்பம், படிக்க வைக்க முடியாத சூழலில்தான் இருக்கிறார்களா? என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் பரிசீலிக்க முடியும்’ என்றவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. யாரோ எண் கொடுத்திருக்கிறார்கள். தான் கை காட்டும் ஆட்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி அழைத்திருக்கிறார். ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டவுடன் அவருக்கு ஈகோ எட்டிப்பார்த்துவிட்டது.

இதுதான் பிரச்சினை. இப்பொழுது வைத்திருக்கும் அலைபேசி எண்ணையே தூக்கி வீசிவிடலாமா என்று யோசிக்கிறேன். சம்பந்தமேயில்லாதவர்களிடமெல்லாம் கிடைத்திருக்கிறது. தாளிக்கிறார்கள்.

அறக்கட்டளை என்ற பெயரிலான செயல்பாடு மிக எளிமையானது. பணம் வருகிறது. யாரோ ஒரு மனிதர் பயனாளிக்கும் எனக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறவருக்கு அறக்கட்டளையின் செயல்பாடு தெரிந்திருக்கிறது. நாம் சொல்லுகிற பதிலை பயனாளியிடம் சொல்லிவிடுகிறார். இதில் பிரச்சினையே இல்லை. வேறு சிலர் இருக்கிறார்கள். ‘உங்க நெம்பரை அவர்கிட்ட கொடுத்துட்டேன். அவர் பேசுவார்’  என்கிற வகையறா. பிரச்சினையே அவர்களால்தான் வருகிறது. இவர்கள் வெள்ளை வேட்டி மைனர்கள். அலைபேசி எண்ணை வாங்கிக் கொடுப்பதையே மிகப்பெரிய காரியமாக நினைத்துக் கொள்கிறவர்கள். ‘உங்க நெம்பர் கிடைக்குமா?’ என்று கேட்கும் போது யதார்த்தமாக எண்ணைக் கொடுத்தால் இப்படிக் கோர்த்துவிட்டுவிடுகிறார்கள். கண்டவன் வாயில் விழ வேண்டியிருக்கிறது.

மிரட்டத் தொடங்கிவிட்டார். வாழ்க்கையில் எவ்வளவோ அறக்கட்டளைகளைப் பார்த்திருக்கிறாராம். தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றார். அதுவரை பொறுமையாகத்தான் இருந்தேன். ‘அறக்கட்டளைங்கிற பேர்ல உங்களை மாதிரி ஆளுங்க என்ன பண்ணுறீங்க தெரியாதா?’ என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது? இத்தகைய மனிதர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்ததுதான். பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட வேண்டுமா அல்லது பேச்சை வளர்க்க வேண்டுமா என்றுதான் தெரியவில்லை.

‘முடியாதுன்னு சொல்லலை...விசாரிக்கிறேன்னுதான் சொன்னேன்’ என்றேன்.

‘நான் சொல்லுற ஆளுங்களுக்கு செய்யணும்’ - அதில் ஒரு கட்டளை இருந்தது.

கடுப்பில் ‘இப்படியெல்லாம் பேசறவரு...பேசாம நீங்களே கொடுத்துட வேண்டியதுதானே?’ என்றேன்.

‘உங்களை மாதிரி ஆளுங்களை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரியும்’ என்று மிரட்டுகிற தொனியில் சொன்னார். 

‘ஆனதைப் பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தேன்.

அடுத்தவர்கள் கைகாட்டுகிற ஆட்களுக்கு மனசாட்சிக்கு விரோதமாக ஒரேயொரு ரூபாயைக் கொடுக்க வேண்டிய சூழலும் அழுத்தமும் வருமானால் மொத்தப் பணத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பயந்தும் வளைந்தும் குழைந்தும் அறக்கட்டளை நடத்த வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. அறக்கட்டளை நடத்துவது எனக்குத் தொழில் இல்லை. இதில் சம்பாதித்துத்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்றோ அல்லது குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. 

இந்தப் பதிவில் யாரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று அந்த மனிதரிடம் என்னுடைய அலைபேசி எண்ணைக் கொடுத்தவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்தால் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். எனக்கு எவனைப் பார்த்தும் பயமில்லை. ஆமாம், எவனைப் பார்த்தும்தான். தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அத்தனை விவரங்களும் நிசப்தம் தளத்தில்தான் இருக்கிறது.  

மடியில் துளி கூட கனமில்லை. ‘போடா ______’ என்று திட்ட ஒரு வினாடி கூடத் தேவைப்படாது. சலசலப்புக்கும் அலட்டலுக்கும் அஞ்சுவேன் என்று நினைத்து அடுத்த முறை அழைத்தால் காறித் துப்பிவிட்டு பெயர் முகவரியோடு அத்தனை விவரங்களையும் பொதுவில் எழுதி நாறடித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவின் கதவைத் தட்டுவது வரைக்கும் என்னால் செய்ய முடியும். நம்பிக்கையில்லையென்றால் முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

21 எதிர் சப்தங்கள்:

rameshrkpm said...

இது...இதுதான்... இங்க பிரச்சனையே ... ஒருத்தன் செய்றத பாராட்ட வேண்டாம்.. அவனை தொந்தரவு செய்யாமலாவது இருக்கலாம்... அவ்வளவு அதப்பு இருக்கறவன் அவனே உதவ வேண்டியதுதானே .. வருத்தங்கள் !!! எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!!

Dev said...

மணி -னா என்ன கழுத்துல ருத்ராட்ச மாலை போட்டுக்கிட்டு, ஜபம் சொல்லிக்கிட்டு, டோய்-நு கத்திட்டா பயந்துடுவான்னு பாத்தியா.. மணிகண்டன்-டா... சாது மிரண்டால் ...

Dev said...

Pl publish my previous comment. We don't want let this go just like this. Evana irrunthaalum oru kai paathudalam. He need not help you but we will see to that he won't harm you.

kailash said...

when third parties contact ask them to send the details in email and cut the call , don't talk to them in detail .You have to first ask them how they were aware of trust.

V.RAMACHANDRAN said...

Don't worry go ahead

Unknown said...

Really Sad. Only few peoples always like this. You are doing great. Please go-ahead. Because of this reason don't get upset. God is always behind you. However please take care, don't give your mobile number to anyone, all trust related communications, prefer by email. So you can avoid this kind of peoples. They can not stop your efforts, but they will spoil your one day mood. God bless.

Prapakaran SP said...

No need to get anger and tense. Simply ignore these people and move forward.

கொமுரு said...

அன்பு மணிகண்டன் ,
இந்த தார்மீக கோபத்தை கடைசி வரை கைவிடாதீர்கள் , உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்

Paramasivam said...

இப்படி தான் சிலர், தானும் செய்யாமல் செய்பவர்களையும் கெடுப்பவர்கள். இவர்கள் பெயர் ஊர் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு, பின்னர் தான் பேசவே ஆரம்பிக்க வேண்டும். மிரட்டினார்கள் எனில் நீங்கள் கூறியது போல் செய்யாமல், ஒரு FIR பதிவு செய்துவிட வேண்டும். நீங்கள் தனி ஆளில்லை என்பது நன்கு உரைக்கும் வண்ணம் பாடம் புகட்ட வேண்டும்.

சேக்காளி said...

டேய்! அடேய்!! அடடடேய்களா!!! ஏண்டா எங்க மணி கூட அப்பப்ப இப்பிடி ஒரண்டய இழுக்கிறீங்க?

shrkalidoss said...

மணி நெருப்புடா! யாருகிட்ட!!

ADMIN said...

’ஹா...ஹா.. யாருகிட்ட..!
சொல்லி அடிச்சா கில்லி மாதிரிடா..’ ன்னு சொல்லாம சொல்லிட்டீங்க...!

உண்மையா நடந்துகிட்டா
யாருக்கும் பயபட்ட வேண்டிய
அவசியம் இல்ல..!

Vinoth Subramanian said...

Don't lose hope mani sir... These people want you and this trust to become more popular. But, doing in another way. It will hurt. But, don't worry. You have faced a lot. Moreover, don't hesitate to disclose these kinds of wickeds' phone number in your webcite. neenga ethukku sir mobile thookki eriyanum? avanungaloda mobile number ah public ah podunga. aduthanalu avan antha number ah vechirukkamattan. ivanungalukkellam warning kudukka koodathu. kovam, kettavangalukku irukkanumo illayo, nallavangalukku nichayama irukkanum.

ANAND said...

மணி வாய்ஸ் மெயில் ACTIVATE பண்ணுங்கள் .தெரிந்த நம்பர் என்றால் மட்டும் போன எடுங்கள் தெரியாத எண்கள் என்றால் தொலை பேசியை எடுக்காதிர்கள் முழு விவெரங்களுடன் அவர்களின் தொலைபேசி எண்ணையும் வாய்ஸ் மெயிலில் சொல்ல சொல்லுங்கள்.வாய்ஸ் மெயில் விட்டதும் அதை உடனடியாய் கேளுங்கள் .EMERGENCY , NON EMERGENCY என்று பிரித்து கொள்ளுங்கள் .EMERGENCY என்றால் உடனடியே தொடர்பு கொள்ளுங்கள் .NON - EMERGENCY என்றால் ஒரு நாளில் ஒரு குறிபிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்களை திரும்ப அழையுங்கள். வெவரங்களை கேட்டு இது ஆகாது என் தெரிந்தால் மீண்டும் அவர்களின் அழைப்பை ஏற்கவேண்டிய அவசியம் இல்லை.அநாகரிகமாக பேசுபவர்களின் பேச்சு பதிவு செய்யபடுகிறது பின்பு அவர்கள் எல்லை மீறும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பயன்படும்.

திருமூர்த்தி. சி said...

Kolaikura naai kadikaathu.
Kavalaiyai vidungal.

Venky said...

இதை மாதிரி விஷயங்களை எழுதும் போது, அழைத்தவருடைய நம்பரோட எழுதினீங்கன்னா , எங்களை போல உள்ளவங்க 'பெருசா' 'பலமா' ஏதாவது அவருக்கு செய்வோம். அதுக்கப்புறம் இதுபோல யாரையும் தொந்தரவு செய்யமாட்டார். நா உதவிய சொன்னேன்...

Bala said...

Just publish his phone number. All followers can call him continuously at a particular time frame and convey a simple message in a good way which Mani can decide. By doing this, the person will know the strength of Nisaptham

Siva said...

Mani sir, Mr.anand gave nice idea. We can follow that know ?

www.rasanai.blogspot.com said...

dear Mani

that politician you had mentioned in " velicham " dt 22.12.2015 ?? is that the same guy. sometimes, we have to answer them in the language they can understand. on the other hand, he may be a good person but unknown about nisaptham activities too ?? in that case, we can clarify him in a polite manner and if at all, the beneficiaries are eligible as per our norms, then we can do the needful, but whatever be the reason, the way he talks and expects us as his slave is definitely condemnable. # supporting you

anbudan
sundar g chennai

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு நன்றி. அவருக்கு ஒருவேளை நிசப்தம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். எடுத்த உடனேயே ஒரு மனிதரின் அலைபேசி எண்ணை எழுதி மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால் வெளியிடவில்லை. இன்னொரு முறை இப்படி நடக்காது என்று நம்பலாம். நன்றி :)

Unknown said...

bro such people are in large numbers here..
once during a marriage reception of a vip one middle aged man was circulating a book and getting money simultaneously
my turn came
he said that he would be building a NEW KRISHNA TEMPLE so donation
i firmly refused to pay anything
i also told him to give all details about the temple and that i would enquire through my intelligence source
immedeiately he turned pale and left the place
my friends who had paid him in hundreds looked at me as a hero