Jun 8, 2016

காலைச் சுற்றிய பாம்பு

வெள்ளாளக் கவுண்டர் ஒருவர் தன் குழந்தைக்கு வைப்பதற்காக நாயன்மார்கள் பெயர் ஒன்றைக் கேட்டிருந்தார். உள்ளூர்காரர். எனக்கு கண்ணப்பநாயனார் கதை பிடிக்கும். கண்ணப்பன் பெயரில் ஏதாவது மாற்றம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். பதறிப் போனவராக ‘அவர் வேட்டுவக்கவுண்டர் இல்லையா?’ என்றார். கண்ணப்ப நாயனார் வேடர். அதுவரைக்கும் சரிதான். வேட்டைக்குச் சென்றதாலோ என்னவோ வேட்டுவக்கவுண்டர் ஆக்கிவிட்டார்கள். தீரன் சின்னமலையை வெள்ளாளக் கவுண்டர்களும், வ.உ.சியை பிள்ளைமார்களும் இன்னும் பிற தலைவர்களை தத்தம் சாதிக்கு அடையாளப்படுத்துவது போல கண்ணப்பரையும் அடையாளப்படுத்திவிட்டார்கள். 

அவர் கேட்ட கேள்விக்கு ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று நாசூக்காகத்தான் பதில் சொன்னேன். விடாப்பிடியாக ‘வரலாறு தெரியாம எப்படி புக் எல்லாம் எழுதறீங்க?’ என்கிறார். ஒரே அடிதான். திரும்பப் பேசவே முடியாது. அமைதியாகிக் கொண்டேன். கடந்த தலைமுறையில் கூட எங்கள் பகுதியில் பிற சாதியினர் கண்ணப்பன் என்ற பெயரை வைத்திருந்தார்கள். திடீரென்று இருபத்தைந்தாண்டுகளில் பெயருக்கு சாதி பிரித்து ஒதுக்கிவிட்டார்கள். அவரது பதற்றத்திற்கு பிறகு விசாரித்தால் எங்கள் ஊர்ப்பக்கத்தில் தீரன் கார்த்திக், தீரன் பிரனேஷ் என்ற பெயர்கள் எல்லாம் வெள்ளாளக் கவுண்டர்களுக்கு அடையாளம் என்றால் அபினவ் காமராஜ் என்றால் இந்து நாடார் என்பதற்கான அடையாளம். பிரின்ஸ் காமராஜ் என்றால் கிறித்துவ நாடாருக்கான அடையாளம். இப்படியே பெரும் பட்டியல் நீள்கிறது. மகிழ் கண்ணப்பன், சஞ்சய் கண்ணப்பன் என்றால் வேட்டுவக் கவுண்டர்களுக்கான அடையாளம்.  இப்படி பாவப்பட்ட பெருமனிதர்களின் பெயர் வழியாகச் சாதியை அடையாளப்படுத்துவது சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற ஊர்களில் எப்படியென்று தெரியவில்லை. ஐயமார்களுக்கு பாரதி, பிள்ளைமார்களுக்கு சிதம்பரம் என்று அடித்து நொறுக்கிறார்கள். நல்லவேளையாக ராமசாமியை மட்டும் நாயக்கமார்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.

‘முன்ன மாதிரியெல்லாம் இப்போ சாதி இல்லை’ என்பதெல்லாம் வெற்றுப் பேச்சுதான். முன்பு பெயருக்குப் பின்னால் அப்பட்டமாக கவுண்டரும், நாடாரும், தேவரும் பின்னொட்டாக இருந்தன. இப்பொழுது கண்ணப்பனும், காமராஜூம், பசும்பொன்னும் முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருக்கிறார்கள். இங்கே அரசியல்வாதிகளிடம் சாதி இருக்கிறது. சினிமாக்காரர்களிடம் சாதி இருக்கிறது. சமூகத்தையே புரட்டிப் போடுகிறோம் என்று புருடா விடுகிற எழுத்தாளர்களிடமும் சாதி இருக்கிறது. இல்லையென்று பேசுவதெல்லாம் வெட்டி ஜம்பம். அத்தனை பக்கமும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. சாதி இல்லையென்று சொன்னால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம்.

சாதியின் சிக்கல்களும் அதன் தாக்கமும் முன் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. துண்டைப் போட்டு வேண்டுமானாலும் சத்தியம் செய்யலாம்.

எல்லாவற்றிலும் சாதியும் அது சார்ந்த அடையாளமும் துருத்திக் கொண்டு நிற்கின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், கல்வி என எந்தத் துறையிலும் இதுதான் நிலைமை. ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யச் சொல்லி குரல் கொடுத்தால் அவன் சார்ந்திருக்கும் சாதியின் ஆதி அந்தமெல்லாம் தேடுகிறார்கள். நல்ல காரியத்தைச் செய்தாலும் சாதிய அடையாளத்தைத் தேடுவார்கள். கெட்டதைச் செய்தாலும் சாதிய அடையாளத்தைத் தேடுவார்கள். கருத்துச் சொன்னாலும் கூட அதைத்தான் தேடுகிறார்கள். நாகரிகமும் அறிவும் வளர வளர சாதியத்தை அடையாளப்படுத்துவதற்கான உத்வேகம்தான் இங்கே அதிகமாக இருக்கிறதே தவிர மட்டுப்படுத்தும் ஆர்வம் எதுவும் தென்படுவதில்லை. தமிழகத்தில் சாதிய அடையாளப்படுத்துதலுக்கு உள்ளாகாத ஒரு பிரபலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கஷ்டம்தான். பிரபலங்கள் சாதியைப் பிடித்திருக்கிறார்களோ இல்லையோ- இந்தச் சமூகம் அணிவித்திருக்கிறது. ‘இவன் இன்ன சாதியைச் சார்ந்தவன்’ என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். 

உண்மையில் இதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. நகரமயமாக்கலும் மக்களின் கல்வியும் சாதியை கரைத்துவிடும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதே வளர்ச்சியும் தொழில் நுட்பமும்தான் சாதியின் இண்டு இடுக்குகளையெல்லாம் விஸ்தாரமாக்கிக் கொண்டிருக்கின்றன. எந்தச் சாதியின் பெயரை சமூக ஊடகங்களில் தேடினாலும் வெறியெடுத்த வார்த்தைகள் வந்து விழுகின்றன. சாதிய உணர்வோடு எழுதப்படுகிற பதிவுகளுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆதரவைத் தருகிறார்கள். எழுதுகிறவர்களில் முக்கால்வாசிப்பேர் விடலைகள். தங்களின் சாதிய அடையாளத்தோடு ஒரு துண்டைத் தோளில் போட்டு நிழற் படமெடுத்து ஃபேஸ்புக்கில் முகப்புப்படமாக வைத்திருக்கிறார்கள் அல்லது தங்கள் சாதிக்கட்சியின் கொடியோடு புன்னகைக்கிறார்கள். அந்தப் புன்னகைகளில் விஷமேறிய பற்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன என்பதை வெளியில் நின்று பார்க்கும் போது உணர முடியும்.

கடந்த பத்தாண்டுகளில் சாதிய வெறியேறிய கூட்டம் நம்மைச் சுற்றி பெருகிக் கொண்டேயிருக்கிறது. இந்தச் சாதி அந்தச் சாதி என்றெல்லாம் பாகுபடுத்த வேண்டியதில்லை. எல்லாச் சாதியிலும் இதுதான் நிலைமை. என்னை இரண்டு மூன்று வாட்ஸப் குழுக்களில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். சுய சாதிக் குழுக்கள். குழுவை விட்டு வெளியில் சென்றால் மீண்டும் இழுத்துவிடுகிறார்கள். சொந்தக்காரன், பங்காளி, மச்சான் என்று பெரும்பாலான தெரிந்த முகங்கள். சுயசாதி பெருமையைத் தவிர எதுவுமில்லாத வெற்றுச் சலம்பல்கள். பதினெட்டு வயது இருபது வயதுப் பையனெல்லாம் வெறியெடுத்த மாதிரி எழுதுகிறான். ‘போலீஸ் வருகிறது’ என்றால் வாலைச் சுருட்டிக் கொள்வார்கள் என்றாலும் கூட உள்ளுக்குள் எப்படி இவ்வளவு வெறியேறிக் கிடக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கே சாதி சார்ந்த பிரச்சினை இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தீர்வு என்று எதை முன் வைப்பது? சாதியைச் சார்ந்து எப்படி பேசினாலும் தாக்குவார்கள். சாதி குறித்தான விவாதங்கள் நடப்பதற்கான இடமே இல்லை. ‘பேசினால் பாராட்டி பேசு...விமர்சனம் செய்வதாக இருந்தால் அடி விழும்’ என்கிற சூழலில் எந்த விவாதம் நடத்தி எதை மாற்றப் போகிறோம்? விவாதம் நிகழாமல் எந்தவிதமான புரிதலும் ஏற்பட வாய்ப்பேயில்லை. நம் மனதுக்குள் இலைமறை காய்மறையாக ஒளிந்திருக்கும் சுயசாதிப் பெருமிதத்தின் உருவம் அழியாமல் சாதியின் பிடியிலிருந்து விலகுவதற்கான சாத்தியங்களே இல்லை. அது எப்படி அழியும்? பேசித்தான் தீர வேண்டும். ஆனால் பேசவே முடிவதில்லையே. 

கண்ணப்ப நாயனாரின் சாதி குறித்துப் பேசியவர் நன்றாகப் படித்தவர். பெங்களூரில் வேலையில் இருக்கிறார். மகனின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்து பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருப்பதாக அழைத்துச் சொன்னார். வாழ்த்துக்களைத் தவிர வேறு என்ன சொல்வது?

படித்தவன், நல்ல வேலையில் இருப்பவன், அறிவாளி என்று நினைப்பவர்கள் கூட தமது சாதியின் வழியாகவே ஒன்று திரள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த ஒன்று திரளலில் இன்னொரு சாதியைச் சீண்ட வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்தும் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் விடுவதில்லை. நாம் அறிவிற் சிறந்த சமூகம்தான். நம்மால் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடிகிறது. ஆனால் சில பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது கண்ணுக்கெட்டிய தூரத்திற்குத் தெரியாது. சாதியும் கூட அப்படியான பிரச்சினைதான் என்றுதான் தோன்றுகிறது. காலைச் சுற்றிய பாம்பு அது!

5 எதிர் சப்தங்கள்:

Muthu said...

நகர்மயமாதலால் பல்வேறு நிலஉடமை சமுதாய காரணிகள் நீர்த்துப்போகும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு. அதில் மிகமுக்கியமான ஒன்று சாதி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது அசுரத்தனமாக கிளைவிட்டெழுந்திருக்கிறது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இலைமறை காய்மறையாய் இருந்த சாதியை முச்சந்தியில் நிறுத்தி அரசியல் செய்து பெருத்த - கொழுத்த லாபத்தை அறுவடை செய்த மருத்துவர் மாலடிமை ஏற்படுத்திய புகைச்சலும், கொடுத்த தைரியமுமே இதற்குக்காரணம் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

// பிரின்ஸ் காமராஜ் என்றால் கிறித்துவ நாடாருக்கான அடையாளம். //

சாதிக்கொடுமையால்தான் மதம் மாறுகிறோம் என்று சொல்பவர்கள் எதற்கு கிறித்துவத்துக்கும் சாதியை கொண்டு செல்கிறார்கள் ? இந்த கேவலத்தை - பம்மாத்தை முதலில் ஒழிக்கவேண்டும்.

// படித்தவன், நல்ல வேலையில் இருப்பவன், அறிவாளி என்று நினைப்பவர்கள் கூட //

பிரச்சினை என்னவென்றால் நாம் படித்தவர்கள் அல்ல, பணம் சம்பாதிப்பதற்கான தொழிற்பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ; அந்த பிரக்ஞையற்று தம்மை “எஜுகேடட்” என்று பிழையாக நம்பி மயங்குபவர்கள் என்பதே.

Kannan said...

இன்னொரு பார்வை. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குணம் உண்டு. பெயரை வைத்து அதை புரிந்துகொள்ளும் பொழுது முடிவு செய்வது எளிது. மனிதர்களும் தாவரங்கள் போல. சில உயிரை காப்பாற்றும், சில உயிரை குடிக்கும். அனைத்திலும் ஒரு சில விதி விலக்கு உண்டு (there are very rare exceptions but majority are same )

ADMIN said...

சரிதான்.

Dev said...

VEட்டை ஆடுன வேட்டுவ கவுண்டர் . மீன் புடிச்சா மீனவ கவுண்டர். செறுப்பு தச்சா தையல். .. அவரு எல்லாரையும் ஒன்னா ஒரு குடையின் கீழ கொண்டு வந்துன்ட்ட நீங்க நெனச்சது நடந்தாசே

இவனுங்க மாதிரி ஆளெல்லாம் அடி பட்டு கெடந்தா அதே ஜாதி ரத்தத்த குடுக்க சொல்லணும். அப்பா தான் மனுஷ ஜாதிக்கு 8 வகை ப்லட் மட்டுமே இருக்குதுன்னு உறைக்கும். This country is run by its constitution. Above that no mayiran.

On a more serious note, per my analysis, the whole India or the so called upper caste or whatever you call are deeply hurt or influenced by british colonialosm and enjoyed the slavery pushed on them. Hence we think discriminating a fellow human being is to prove ones power. Alas, i dont know when we can come out of this inferiority complex, the British inflicted on us. Pathetic. With six senses but behaving like having no sense.

I have seen many like your mate. Ask him to come out of his inferiority complex.

cpveeramuthu said...

Enjoyed reading it Sir. Well written deep analysis. The caste system is here to stay sir. It is there even if you cross borders.