Jun 8, 2016

இஸபெல்லும் சில்க் ஸ்மிதாவும்

அர்ஜெண்டினாக்காரர் ஒருவர் வந்திருக்கிறார். என்னைவிடவும் வயது குறைவுதான். சினிமாப் பிரியன். ‘ஏதாச்சும் படத்துக்கு போலாமா?’ என்றான். மனைவியுடன் படம் பார்த்தே வெகு காலம் ஆகிறது. வெளிநாட்டுக்காரனுடன் அதுவும் ஒரு ஆணுடன் படத்துக்குச் சென்றான் என்று தெரிந்தால் என்னவாகும்? நைச்சியமாக மறுத்துவிட்டேன். வெளிநாட்டுக்காரன் அதுவும் விவரமான ஆளாக இருந்தால் இந்த ஊரில் பொழுது போக்க அத்தனை அம்சங்கள் இருக்கின்றன. அம்சங்கள் என்றாலே மனக்கணக்கு கோக்குமாக்காக போகும் என்பதால் அம்சங்கள் என்பதற்கு பதிலாக வாய்ப்புகள் இருக்கின்றன என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மீறி நேரமிருந்தால் பார்க்கச் சொல்லி சில படங்களைக் கொடுத்திருந்தேன். 

மூன்றாம் பிறையும் ஒன்று. சில்க் ஸ்மிதாவை பார்த்துவிட்டு புளகாங்கிதம் அடைந்துவிட்டான். ‘அந்தப் படத்துல அதைத் தாண்டி நிறைய இருக்கேடா’ என்று சொல்லியெல்லாம் புரியவைக்க முடியவில்லை. பொன்மேனி உருகக் கிடந்தான். இவன் என்ன மாதிரியான சினிமாப்பிரியன் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ‘இஸபெல் சர்லி (Isabel Sarli) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்றான். ம்ஹூம். அவர்களின் சில்க் ஸ்மிதாவாம். ரொம்ப சீனியர். 1955 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி. என் அப்பாவுக்கே அப்பொழுது ஏழு வயதுதான்.

‘Feugoன்னு ஒரு படம் இருக்கு. யூடியூபிலேயே கிடைக்கும் பாருங்க’ என்றான். 

இந்த மாதிரி சதிகாரர்களால்தான் என் பிஞ்சு மனம் அழுக்காகிறது. இப்படித்தான் ‘Deep Throat படம் பாருங்க பாஸ்..செமத்தியா இருக்கும்’ என்று வேறொருவன் உசுப்பேற்றிவிட்டான். அதைத் தேடிக் கண்டுபிடித்து பாதிப்படம் பார்த்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. Deep throat படத்தைத்தான் அநேகமாக முதல் நீலப்படம் என்கிறார்கள். கதையை விலாவாரியாகவெல்லாம் சொல்லிச் சிக்கிக் கொள்ள முடியாது. 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டும் கமுக்கமாகத் தேடிப் பார்த்துக் கொள்ளவும். விருப்பமில்லாதவர்கள் விக்கிப்பீடியாவில் படம் குறித்தான விவரங்களைத் தேடி பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். எதைச் செய்தாலும் சரி- ‘என் சுய அறிவின்படியே செய்கிறேன் என்றும் மணிகண்டன் மீது பழி போடமாட்டேன்’என்றும் மனப்பூர்வமாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இதையெல்லாம் செய்யவும். பழிபோடுவதாக இருந்தால்  சொல்லிவிடுங்கள். இனிமேல் இதையெல்லாம் சொல்லித் தராமல் எனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறேன்.

Feugo பற்றி அர்ஜெண்டினாக்காரன் சொன்னவுடன் ‘ச்சே ச்சே இதெல்லாம் பார்க்க மாட்டேன்’ என்றேன். உங்களைப் போலவே அவனும் என்னை நல்லவன் என்று நம்பிக் கொண்டான். Feugo என்றால் நெருப்பு. 1969ல் வந்த படம். அத்தனை விவரங்களையும் திரட்டி வைத்துக் கொண்டேன். சமீபத்தில்தான் வீட்டில் படம் பார்க்கவென்று தனியாக ஒரு இடம் தயார் செய்து வைத்திருக்கிறேன். Deep Throat மாதிரியான படங்களின் விளைவுதான். முன்பெல்லாம் கணினித் திரையில் வரக் கூடிய வெளிச்சத்தில் வீட்டில் உள்ளவர்களின் தூக்கம் கெட்டு ஒரே அக்கப்போர். இந்த மாதிரியான காரணங்களினால்தான் எப்பொழுதும் நல்ல படங்களாகவே பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருந்தேன். இப்பொழுது நிலைமை கொஞ்சம் தேறியிருக்கிறது. 

இஸபெல்லைச் சமீபத்தில்தான் அர்ஜெண்டினாவின் கலைத் தூதராகவெல்லாம் நியமித்திருக்கிறார்களாம். அதுவா முக்கியம்? ஏகப்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். அத்தனையும் மாணிக்கக் கற்கள் என்றான் அர்ஜெண்டினாக்காரன். படம் தொடங்கி ஐந்தாவது நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது. இதற்குமேல் ஏதாவது எழுதினால் பெண்ணியவாதிகள் பெல்ட்டைச் சுழற்றுவார்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம். அருமையான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. சற்றே இழுவைதான். ஆனால் இஸபெல்லுக்காக பார்க்கலாம். 

இஸபெல்லை அறிமுகப்படுத்துவதற்காகவோ அல்லது படங்களை அறிமுகப்படுத்துவதற்காகவோ இதை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.

அர்ஜெண்டினாக்காரன் சொன்னவையும் அவை உருவாக்கிய ஈர்ப்பும் யோசிக்கச் செய்கின்றன. எல்லாக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு பெண் கலக்கிக் கொண்டேயிருக்கிறாள். அவளது உடலை நோக்கி ஆண்களின் மனம் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பெண் ஆணின் மனதினை சமநிலையாக்குகிறார்களா? அல்லது சமநிலையைக் குலையச் செய்கிறார்களா? ஒரே க்ளிக்கில் ஆயிரம் நீலப்படங்களைப் பார்த்து முடிகிற காலத்திலும் ஏன் ஏதோவொரு பெண் மட்டும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கிறாள்? 

புரியாத புதிர் இது. 

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஹிட் அடித்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் நிச்சயமாக ஸ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த ஷகிலாவின் சுயசரிதை இடம் பெறக் கூடும். ஏகப்பட்ட பேர் வாங்குகிறார்கள். ஷகிலாவின் உடல் தாண்டிய ஏதோ ஒரு ஈர்ப்பு நமக்கு உருவாகிறது. அவரது அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியவில்லை.  நிச்சயமாக அதற்கப்பாலும் ஏதோவொன்றிருக்கிறது. பெண் மீதான இந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். இணையமும் எளிதாகக் கிடைக்கும் பாலியல் படங்களும் எந்தவிதத்திலும் குறைத்துவிடுவதில்லை. சில்க் ஸ்மிதாவின் உடலைத் தாண்டியும் அவரை ஏதோவொரு வகையில் நேசிக்கிறோம். சன்னி லியோனை அப்பட்டமாகத் துகிலுரித்தாலும் அவர் ஒரு கூட்டத்தையே ஈர்க்கிறார். 

பெண்ணை நோக்கிய- குறிப்பாகச் சொன்னால் பெண்ணின் உடல் நோக்கிய இந்த வேதியியல் ஈர்ப்புதான் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் புழங்கும் தொழிலாகியிருக்கிறது. தீரவே தீராத மனித மனங்களின் ஆசைக்குத் தீனியை வீசிக் கொண்டேயிருக்கிறது. 

கவர்ச்சி, பெண்ணுடல், ஈர்ப்பு என்றெல்லாம் பேசும் போது perverted mind என்று யாராவது சொன்னால் பதில் சொல்லத் தெரிவதில்லை. அந்தச் சொல்லுக்கான பொருளும் முழுமையாகத் தெரியவில்லை. ஆணின் உலகம் அப்படித்தானே இயங்குகிறது? பாலியல் ஈர்ப்புக்கும் பாலியல் மனப்பிறழ்வுக்குமான வேறுபாடுகளைத் துல்லியமாகப் புரிந்து கொள்கிற ஆண்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. சத்தியமாக எனக்குத் தெரியாது. நாமாக புரிந்து வைத்திருக்கும் அரைவேக்காட்டுத்தனமான அளவுகோல்கள்தான். இங்கே திரும்பிய பக்கமெல்லாம் தட்டிக் கீழே தள்ளி விடுகிற வாய்ப்புகள்தான் அதிகம். காமத்தைப் பொறுத்தவரையிலும் தன்னியல்பிலிருந்து விலகுவதும் மீண்டும் பாதையில் இணைய முயல்வதுமான போராட்டம் எல்லாக் காலத்திற்குமானது. எல்லா வயதுக்குமானது.

இஸெபெல்லும், சில்க் ஸ்மிதாவும், ஷகிலாவும் புரட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இருப்பார்கள். காலாகாலத்துக்கும்.

2 எதிர் சப்தங்கள்:

மகேஸ் said...

Nice post, one of the good post after a long time, thx

சேக்காளி said...

//அம்சங்கள் என்பதற்கு பதிலாக வாய்ப்புகள் இருக்கின்றன என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்//
அத மொதல்லயே நீங்க மாற்றி எழுதுனா என்ன ராசா பெரச்னை?