பிறந்த பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனையில் பார்க்கும் போதெல்லாம் விபரீத அலையொன்று உருவாகும். குழந்தை மாறிவிடுவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லையா? மகி பிறந்த உடன் கொஞ்ச நேரம் இன்குபேட்டரில் வைத்திருக்க வேண்டும் என்றார்கள். ‘இவனுட எவ்வளவு குழந்தைகளை வைத்திருப்பீர்கள்? அடையாளம் என்ன வெச்சுக்குவீங்க? மச்சம் ஏதாவது அடையாளம் பார்த்துக் கொள்ளட்டுமா?’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒன்றைக் கூடக் கேட்கவில்லை. அவன் வைக்கப்பட்டிருந்த இன்குபேட்டர் வெளியிலிருந்து எட்டிப் பார்த்தால் கண்ணாடிக் கதவின் வழியாகத் தெரியும். அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் வரியில் சொன்ன அந்த சந்தேகம்தான் காரணம்.
இந்த கூர்கெட்ட எண்ணம் எப்பொழுதிருந்து உருவானது என்று யோசித்ததுண்டு. பள்ளிப் பருவத்தில் செய்த ஏதோவொரு லோலாயத்துக்காக ‘த்தூ இவன் எம்பையனே இல்ல’ என்று அம்மா திட்டிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆயா சும்மா இருக்கமாட்டாமல் ‘சீதாலட்சுமி ஆஸ்பத்திரியில மாத்திட்டாங்களாட்ட இருக்குது’ என்றார். திக்கென்றிருந்தது. ஆனால் அதுதான் ஆழப் பதிந்து போனது. ஒருவேளை உண்மையிலேயே மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காதுதான்.
ஒருவேளை அப்படி மாறியிருந்து அந்த உண்மை இப்பொழுது தெரிந்தால்? நம் மனம் என்னவெல்லாம் சஞ்சலப்படும்? நம் உறவுகளின் மனம் எதையெல்லாம் நினைக்கும்? வளர்த்தவர்கள் முக்கியமா? பெற்றவர்கள் முக்கியமா? ஆயிரம் கேள்விகள்.
அப்படியொரு படம் இருக்கிறது. The Other Son
யூடியூப்பில் அட்டகாசமான பிரிண்ட் கிடைக்கிறது. ப்ரெஞ்ச் பெற்றோர். அம்மாவுக்கும் A- ரத்த வகை. அப்பாவுக்கும் A- ரத்த வகை. ஆனால் பையனுக்கு A+. அப்பனுக்கு அம்மா மீது சந்தேகம் கூட வருகிறது. ‘பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு வேற ஆள் இருந்தான்னு நினைக்கிறியா?’ என்று அம்மா கேட்கிறாள். ஆனால் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அவர்களுக்குப் பிறந்த மகன் பாலஸ்தீன தம்பதிகளுக்கு மகனாக வளர்கிறான். இவன் இங்கே யூதனாக வளர்க்கப்பட்டிருக்கிறான். இரு மகன்களும் மருத்துவமனையில் மாறிப் போனவர்கள். படத்தின் முதல் அரை மணி நேரத்தில் இதெல்லாம் நடந்துவிடுகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் உணர்வுப்பூர்வமாக கதை நகர்கிறது. அத்தனை பேரும் நடிப்பில் தூள் கிளப்பியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு என எல்லாவற்றிலுமே பாதித்த படம் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். விஷயம் தெரிந்தவுடன் அப்பாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள், அம்மாக்கள் எப்படி துணிவார்கள், மகன்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்- இயக்குநர் ஒரு ரத்தினம்.
வார இறுதியில் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
சில நாட்களுக்கு முன்பாக Blood Relationships are such a precious thing என்று நண்பர் ஒருவர் சொன்னார். சரிதான். ஆனால் அதில் ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டும். ரத்த பந்தம் என்றில்லை. எந்தவொரு பந்தமுமே வெறும் மனம் சம்பந்தப்பட்டது மட்டும்தான். தசை, சதை என்பதெல்லாம் கிட்டத்தட்ட பம்மாத்துதான். இளம்பிராயத்திலிருந்தே ‘இந்த பந்தம் உன்னதமானது’ என்று மனம் பிம்பப்படுத்திக் கொள்கிறது. அந்தந்த பந்தத்திற்குரிய நெருக்கத்தையும் இடைவெளியையும் கொடுத்து காலங்கள் நகர்கின்றன. கீறல் விழாத வரைக்கும் எதுவுமில்லை. ஒருவேளை கீறல் விழுந்துவிட்டால் அது கடந்த காலத்தில் எவ்வளவுதான் அற்புதமான உறவாக இருந்தாலும் வெளியே தள்ளித் துப்புவதற்கு மனம் தயங்குவதேயில்லை. மனம் மட்டுமே பிரதானம்.
நமக்குத் தெரிந்து அம்மாவையும் அப்பாவையும் துரத்திவிட்டவர்கள் எத்தனை பேர்? அக்கா மடியில்தான் தூங்குவேன் என்று கொஞ்சிக் குழாவிக் கொண்டிருந்த தம்பிகள் பல வருடங்களாக அக்காக்களுடன் பேச்சுவார்த்தையில்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? வெகு காலமாக நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்ளவே விரும்பாத அண்ணன்களும் தம்பிகளும் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். எங்கே போனது ரத்தமும் சதையும்?
உறவுகள் விசித்திரமானவை. புரிந்து கொள்ளவே முடியாத கண்ணாடிப்பாத்திரங்கள் அவை. நாம் புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் பெரும்பாலும் பாவனைதான். எந்த நேரத்திலும் கை தவறி விழக் கூடிய கண்ணாடிப் பாத்திரம் அது.
ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? யாரோ ஒரு மனிதனுடன் வரக் கூடிய பகைமையில் அவ்வளவு வலிமையும் வன்மமும் இருப்பதில்லை. நெருங்கிய உறவொன்றுடன் வரக் கூடிய விரிசல்தான் மிக வீரியமானதாக இருக்கிறது. அந்த உறவின் வழியாக விழக் கூடிய அடிதான் பலமானதாக இருக்கிறது. இனி எந்தக் காலத்திலும் அவசியமில்லை என்று உடைத்துவிட்டு வருகிறோம்.
பிடிக்காமல் போய்விட்டால் அவ்வளவுதான். எல்லாமும் மனம் சம்பந்தப்பட்டது.
இதற்கு நேர்மாறாக- மனதுக்கு நெருக்கமான உறவுக்கு துன்பம் வரும் போது மனம் துடிதுடித்துப் போகிறது. ஒரு கணமும் பிரியாத வரத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. விமானநிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள்ளும் உறவுகளும் ஜன்னல் வழியாகக் கையசைத்துக் கொண்டேயிருப்பவர்களும் எதை உணர்த்துகிறார்கள்?
உறவுகளின் இந்த விசித்திரமான சித்திரங்களைத்தான் படம் முடிந்து யோசித்துக் கொண்டிருந்தேன். மனித மனம் ஏதாவதொரு பற்றுக் கோலுக்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பற்றுக்கோல் ஏதாவதொரு உறவின் வடிவில் அமைகிறது. உருவாகிய உறவுடனான உணர்வுப்பூர்வமான பந்தமும் உறவுகளுக்கிடையில் எழக் கூடிய சிக்கல்களும் நம்மை சந்தோஷத்திற்கும் துக்கத்திற்குமிடையில் அலைகழித்துக் கொண்டேயிருக்கிறன. இந்தச் சந்தோஷத்திற்கும் துக்கத்திற்குமான அலைவுறுதலில்தான் வாழ்வு அர்த்தம் பெறுகிறது.
இல்லையா?
3 எதிர் சப்தங்கள்:
//உறவுகள் விசித்திரமானவை. புரிந்து கொள்ளவே முடியாத கண்ணாடிப்பாத்திரங்கள் அவை. நாம் புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் பெரும்பாலும் பாவனைதான். எந்த நேரத்திலும் கை தவறி விழக் கூடும் அந்தக் கண்ணாடிப் பாத்திரம் அது.
ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? யாரோ ஒரு மனிதனுடன் வரக் கூடிய பகைமையில் அவ்வளவு வலிமையும் வன்மமும் இருப்பதில்லை. நெருங்கிய உறவொன்றுடன் வரக் கூடிய விரிசல்தான் மிக வீரியமானதாக இருக்கிறது. அந்த உறவின் வழியாக விழக் கூடிய அடிதான் பலமானதாக இருக்கிறது. இனி எந்தக் காலத்திலும் அவசியமில்லை என்று உடைத்துவிட்டு வருகிறோம்.
// true...
யோவ், என்னய்யா ஆச்சு உனக்கு தினகும் அருமையான பதிவா போட்டுத் தாக்குற. Expecting more like this.
படம் மிக நன்றாக உள்ளது. இதனை பரிந்துரைத்த உங்களுக்கு தான் எல்லா புகழும்.
Post a Comment