May 5, 2016

படம்

பதில் சொல்வதற்குச் சிக்கலான கேள்விகள் என்று பத்துக் கேள்விகளை வரிசைப்படுத்தினால் ‘உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்குது?’ என்ற கேள்வியை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கிடைக்கிறது. அவ்வளவுதான். ஏன்? எப்படி? என்று சாக்ரடீஸாக மாறிக் கொண்டிருந்தால் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது மாதிரிதான். நாம் யோசிக்கிற பதிலே நம்மைக் குழப்பி சோம்பேறி ஆக்கிவிடும். எதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற தெளிவு மட்டும் இருந்தால் போதும். நேரம் தானாக அமைந்துவிடும். ஆறு மணி நேரத்தைத் தூக்கத்துக்கு ஒதுக்கிவிட்டால் மீதமிருக்கிற நேரம் முழுமையும் நமக்குத்தானே? மனமிருந்தால் மார்க்கபந்து. 

சமீபத்தில் ஒரு படம் பார்க்க முடிந்தது. தி சர்க்கிள். ஈரானியப் படம். ஈரானில் இந்தப் படத்தை தடை செய்திருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு முன்பாக இந்த விவரமெல்லாம் தெரியாது. ‘full movie with english subtitle' என்று தேடிய போது யூடியூப்பில் சிக்கியது. அறிவுப்பசியை அடக்குவதாக நினைத்து ‘கொரியன்’ என்று தேடினால் வந்து விழுகிறது பாருங்கள். நடு ராத்திரியில் யாராவது பார்த்துவிட்டால் மானமே போய்விடும். கண்ட பசி கிளம்பிவிடும். அதனால்தான் கொரியன் என்ற வார்த்தையைக் கத்தரித்துவிட்டுத் தேடினேன். தி சர்க்கிள் மாட்டியது. 

திரைக்கதை எழுதுவது பற்றிய புத்தகங்களையும் குறிப்புகளையும் தேடினால் எந்தவொரு பாத்திரத்தையும் அந்தரத்தில் விட்டுவிடக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கதையில் ஒரு பாத்திரம் இடம் பெற்றால் அது தனக்கான வேலையைச் செய்துவிட்டு தர்க்க ரீதியாக முடிவுற வேண்டும் என்று சொல்வார்கள். ஜாபர் பனாஹிக்கு- தி சர்க்கிள் படத்தின் இயக்குநர்- அப்படியெல்லாம் எந்த விதிமுறையுமில்லை. படம் நெடுகவும் பெண்கள்தான் பாத்திரங்கள். முதல் காட்சியில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அவளது அம்மா அவளுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்தாள். ஸ்கேன் செய்யும் போது கூட பையன் என்றுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டது. இனி அவளது கணவன் அவளை விவாகரத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கச் சொல்லி ஒரு பெண்ணை அனுப்புகிறாள். தகவல் சொல்லச் செல்கிறவளை மூன்று பெண்கள் டெலிபோன் பூத்தில் எதிர்கொள்கிறார்கள்.

இப்பொழுது கதை குழந்தை பிறந்த பெண்ணை விட்டுவிட்டு இந்த மூன்று பெண்ளைத் தொடர்கிறது. மூவரில் ஒருத்தியை போலீஸார் பிடித்துச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் இருவரைத் தொடர்ந்து கதை நகர்கிறது. நர்கீஸ் தன்னுடைய மலைக் கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்கிறாள். அவளுடைய தோழி அரிஜூ ஒரு ஆடவனுடன் சென்று பணம் வாங்கி வருகிறாள். அந்தப் பணத்தை வைத்து நர்கீஸூக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டு ‘நீ போ..நான் இப்போ வரலை’ என்று சொல்லிவிட்டு கதையிலிருந்து அவள் விடுபடுகிறாள். நர்கீஸ் பேருந்தைத் தவறவிட்டு தனது தோழி பாரியைப் பார்க்கப் போகிறாள். கதை நர்கீஸையும் விட்டுவிட்டு பாரிக்குத் தாவுகிறது. 

கதையில் வரும் அத்தனை பெண்களும் சிறையில் இருந்தவர்கள். அது மட்டும்தான் இணைப்புக் கோடு. ஆனால் கதை ஒருத்தியிலிருந்து இன்னொருத்திக்கு மாறிக் கொண்டேயிருக்கிறது. கதையில் கடைசியாக வரக் கூடியவளை சிறையில் அமர வைக்கிறார்கள். அறைக்கு வெளியில் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறவன் ‘சல்மாஸ் கொலாமின்னு யாராச்சும் இருக்கீங்களா?’ என்கிறான்.  அங்கே அந்தப் பெயரில் யாருமில்லை. முதல் காட்சியில் குழந்தை பிறந்தது அல்லவா? அந்தப் பெண்மணியின் பெயர் சல்மாஸ் கொலாமி. கதை தொடங்கிய இடத்தில் முடிகிறது. The Circle. 

முன்னாள் சிறைவாசிகளான இந்தப் பெண்களில் சிலர் தப்பித்து வந்தவர்கள். எப்படித் தப்பித்தார்கள் என்பது பற்றியெல்லாம் விவரம் இல்லை. வசனத்தில் ‘தப்பிச்சு வந்துட்டோம்’ என்று முடித்துவிடுகிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்வியெல்லாம் இங்கும் இல்லை. நம் ஊரில் அஜீத், விஜய் படத்தில் இப்படியெல்லாம் வசனம் வைத்துவிட்டு ஊரில் சுற்றிக் கொண்டிருப்பதாக காட்சிகளில் காட்டினால் விடுவார்களா? 

படம் ஏன் தடை செய்யப்பட்டது என்றால் இந்தப் பெண்களை வைத்துக் கொண்டு ஈரானில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்கள் மீதான அழுத்தங்கள், கத்தரிக்கப்பட்ட சுதந்திரங்கள், ஆணாதிக்கம் என எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

சாலையில் தனியாக நிற்கும் பெண்களைப் பார்த்து ‘வர்றியா?’ என்று ஆண்கள் கேட்கிறார்கள். ஆண் குழந்தை பெற்றுத் தராததால் விவாகரத்து செய்துவிடுவார்கள் என்கிறார்கள். உடலை மறைக்கச் சொல்கிறார்கள். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனம் தானாக நம்மூர் பெண்களுக்கான பிரச்சினைகளை யோசிக்கத் தொடங்கிவிட்டது. நம்மூரிலும்தான் பெண்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அதை அப்பட்டமாகக் காட்டாமல் பூச்சு பூசி வணிகமயமாக்கிவிடுகிறார்கள். அந்த ஊரில் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். சாலையில் கிண்டலடிப்பவனைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிறார்கள். இப்படி நம்மூரில் பெண்கள் சாதாரணமாகச் செய்ய முடியாத காரியங்களும் படத்தில் உண்டு.

படத்தில் நடித்தவர்களில் ஒன்றிரண்டு பேர்களைத் தவிர யாருமே தொழில்முறை நடிகர்கள் இல்லை என்ற ஒரு குறிப்பை வாசித்தேன். தன்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடிவிடுகிற அம்மாவைக் கேட்டு அழும் குழந்தையின் குரலும் நடிப்பும் மட்டும் போதும். கண்ணீர் கசிந்துவிட்டது. சரி- திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதற்காக இதை எழுதவில்லை. அது எனக்கான வேலையுமில்லை. ஒரு படத்தைப் பார்த்து பிடித்துவிட்டால் நண்பர்களிடம் சொல்வோம் அல்லவா? அப்படித்தான். அதுவும் யூடியூப்பிலேயே இருக்கிறது. ஒன்றரை மணி நேரப் படம்தான். நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள்.

சினிமாவைப் பற்றிச் சொல்லும் போது இன்னொரு சினிமாச் செய்தியையும் சொல்லிவிடுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு கதை விவாதத்துக்காகச் சென்னை சென்று கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அது இந்தப் படத்துக்காகத்தான். இப்போதைக்கு கதை விவாதத்தில் இருக்கிறேன். அடுத்து எனக்கான வேலை என்னவாக இருக்கும் என்று இப்போதைக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவுடன் சொல்கிறேன்.


4 எதிர் சப்தங்கள்:

நேத்தா கார்த்திக் said...

👍 வாழ்த்துக்கள்

Jaypon , Canada said...

Mani Anna,

Best wishes. Money and fame are luring baits. Careful Anna.

Unknown said...

All the best Bro...!

சேக்காளி said...

WILL BE SEEN FOR THE
1st TIME